எசமானனும் வேலைக்காரனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 5,279 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காலத்தில் தானியேல் என்று ஒரு வாலிபன் இருந்தான். அவனுடைய முழுப்பெயர் பில்லி மாக் தானியேல். அவன் குடிப்பதைத் தவிர வேறு வேலை எதுவும் செய்வதில்லை; மது வாங்கப் பணம் இருக்க வேண்டும். அவனுக்கு வேறு கவலையே கிடையாது. குடித்த பிறகு எவர்களுடனாவது கூடி வம்பளப்பது அவன் வழக்கம். குடி வெறியிலிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எவரையும் ஏசுவதும் பட்டென்று அடிப்பதும் அவன் கையாண்டு வந்த முறைகள். இந்த முறைகளால் அவன் எந்தச் சண்டையிலும் ஈடுபடுவான், எந்தச் சண்டையிலிருந்தும் வெளிவந்தும் விடுவான். தீய ஒழுக்கமுள்ள சிலர் அவனுக்குக் கூட்டாளி களாக இருந்து வந்தனர்.

ஒரு நாள், இரவில் பனி பெய்து குளிர் அதிகமா யிருக்கையில், அவன் எங்கிருந்தோ வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். வானில் வெண்மதி தண்ணொளி பரப்பிக்கொண்டிருந்தது. அவன் நிலவைப்பற்றி எண்ண வில்லை. இந்த நடுங்கும் குளிரில் உயர்ந்த சாராயமிருந்தால் ஆனந்தமாகக் குடிக்கலாமே! குடித்தால் இந்தக் குளிரெல்லாம் பறந்துவிடுமே! என்று அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

“நீ இரண்டாம் தடவை நினைப்பதற்குள் இதோ கொண்டுவந்திருக்கிறேன், தானியேல்!” என்று சொல்லிக் கொண்டே, குள்ளமான ஒரு மனிதன் ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் மதுவை அவனிடம் கொடுத்தான். அவன் ஏதோ பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவனைப் போலக் காணப்பட்டான். அவனுடைய உடைகளில் தங்கச்சரிகை வைத்துத் தைக்கப்பட்டிருந்தது. அவன் அளித்த மது முதல் தரமானது, எவரும் கண்டிராதது, எவரும் பருகியிராதது.

அவன் பெரிய இடத்துச் சீமானாகத் தோன்றிய போதிலும், தானியேல் வழக்கம் போல, “அன்புக் குள்ளனே, வெற்றி! உனக்கு நன்றி! காசு யார் கொடுத்தாலென்ன, இதோ, உன் நன்மைக்காக நான் குடிக்கிறேன் !” என்று கூறினான். உடனே, கிண்ணத்திலிருந்த மது அனைத்தையும், மூச்சுக்கூட விடாமல், அவன் உறிஞ்சிக் குடித்துவிட்டான்.

குள்ளன், “வெற்றி! தானியேல், உனக்கு நல்வரவு! ஆனால், நீ மற்றவர்களை ஏமாற்றுவது போல் என்னிடம் வைத்துக்கொள்ளாதே! காசைக் கீழே வைத்துவிட வேண்டும்! ஒரு கனவானைப் போல நீ முறையாக நடந்து கொள்வாயென்று நம்புகிறேன்!” என்று கூறினான்.

“நானாட உனக்குப் பணம் கொடுக்க வேண்டும்? உன்னையே தூக்கி என் சட்டைப்பையில் போட்டுக் கொண்டு போய்விடுவேன், எச்சரிக்கை!” என்றான், தானியேல்.

“தானியேல்! ஏழு வருடமும் ஒருநாளும் நீ என் வேலைக்காரனாயிருந்தால், நீ தர வேண்டிய பணத்தைக் கழித்துக்கொள்வேன். ஆகையால், பேசாமல் என்னுடன் வா!” என்று குள்ளன் கோபமாகப் பேசினான்.

இதைக் கேட்ட தானியேலுக்கு வருத்தம் அதிகமா யிற்று. இந்தக் குள்ளனிடம் நான் ஏன் கடுமையாகப் பேசினேன்!’ என்று அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான். எக்காரணத்தினாலோ குள்ளனுடன் செல்ல வேண்டியதுதான் என்று அவனுக்குத் தோன்றிற்று. அவனைத் தொடர்ந்து சென்றான். நடக்க நடக்க வழி தொலையவில்லை . இரவு முழுதும், மேடும் பள்ளமும், கோடும் குளமும், கரையும் கழனியுமாக அவர்கள் பல இடங்களைத் தாண்டிச் சென்றனர். இடையில் ஓய்வென்பதே இல்லை.

பொழுத புலரத் தொடங்கியதும், குள்ளன் பின்னால் திரும்பி, “தானியேல், இப்பொழுது நீ வீட்டுக்குப் போகலாம். ஆனால், இன்றிரவு நீ கோட்டை மைதானத்தில் என்னை வந்து சந்திக்க வேண்டும். தவறினால் என்ன நடக்கு மென்பதை நாளடைவில் நீயே தெரிந்துகொள்வாய். ஆனால், நீ நல்ல முறையில் என்னிடம் பணி செய்து வந்தால், நான் உனக்குத் தாராளமாக உதவிகள் செய்வேன்!” என்று கூறினான்.

தானியேல் வீடு வந்து சேர்ந்தான். அவன் களைத்துச் சோர்வுற்றிருந்த போதிலும், குள்ளனைப்பற்றிய நினைவு அகலாமலே இருந்ததால் அவனுக்குத் தூக்கமே வரவில்லை . ஆயினும், குள்ளனுடைய கட்டளையை மீறுவதற்கும் அவனுக்குத் தைரியம் வரவில்லை . ஆகவே, அந்தி மாலை யில் அவன் எழுந்திருந்து, நேராகக் கோட்டை மைதானத் திற்குச் சென்றான். அங்கே சிறிது நேரத்திலே குள்ளனும் வந்து சேர்ந்துகொண்டான்.

“தானியேல், இன்றிரவு நாம் நெடுந்தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால், என் குதிரைகளுள் ஒன்றுக்குச் சேணம் வைத்துத் தயாராக நிறுத்தி வை! நேற்றிரவு நீயும் நெடுந்தூரம் நடந்ததால் களைத்திருப்பாய்; ஆதலால், உனக்கும் ஒரு குதிரை தயாராயிருக்கட்டும்!” என்று கட்டளையிட்டான், குள்ளன்.

எசமானன் தன்னிடத்திலே காட்டிய பரிவுக்குத் தானியேல் நன்றி சொன்னான். “ஆனால், உங்களுடைய குதிரை லாயம் எங்கேயிருக்கிறது? இங்கே இந்தக் கோட்டை, மைதானம், இதன் ஓரத்திலே ஒரு முள்ளுமரம், அதோ ஒரு குன்று, குன்றின் அடியில் சதுப்பு நிலம் ஆகியவைகளைத் தவிர, வேறு எதையும் காணவில்லையே!” என்று கேட்டான்.

“என்னிடம் கேள்வியே கேட்கக்கூடாது? நேரே அந்தச் சதுப்பு நிலத்திற்குப் போய் முரட்டு நாணலாக இரண்டு நாணல் குச்சிகளைப் பறித்துக்கொண்டு வா!”

அவ்வாறே தானியேல் வாய் பேசாமல் போய், நீண்டு தடித்திருந்த இரண்டு நாணல்களைப் பறித்துக்கொண்டு வந்தான். குள்ளன் அவைகளை என்ன செய்யப் போகிறான் என்று அவனுக்கு விளங்கவில்லை.

அவைகளுள் ஒன்றைக் குள்ளன் வாங்கி, அதன் மேல் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, குதிரைமீது ஏறுவது போலப் பாவனை செய்தான். “நீயும் ஏறிக்கொள், தானியேல்!” என்று அவன் கூவினான்.

“ஐயா, நான் எதன்மீது ஏறிக்கொள்வது? ஒன்றும் புரிய வில்லையே!” என்றான், தானியேல்.

இறுமாப்புள்ள இளவரசி “எதில் ஏறுவதா? என்னைப் போல் குதிரைமீது ஏறிக்கொள்! இது தெரியவில்லையா உனக்கு?”

“நாணல் குச்சிமீது என்னை ஏறிக்கொள்ளும்படி சொல்லி என்னைப் பரிகாசம் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தக் குச்சிதான் குதிரை என்று என்னை நம்பச் சொல்லுகிறீர்களா?”

“வீண் வார்த்தைகள் வேண்டா ! ‘ஏறு’ என்றால் ஏறு!” என்று குள்ளன் வெகுண்டு கத்தினான்; “இதுவரை நீ ஏறிய குதிரைகளெல்லாம் இந்தக் குதிரையின் கால் தூசிக்கு இணையாக பாட்டா!”

எதோ குள்ளன் வேடிக்கை செய்கிறானென்றும், அவன் கட்டளையை மீறுவது குற்றமென்றும் கருதி, தானியேல் நாணலைக் குதிரை போல் முன்னால் நீட்டி வைத்து, அதன் மேல் காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டான்

குள்ளன், ‘பொர்ரம்! பொர்ரம்! பொர்ரம்!’ என்று மும்முறை கூவினான். தானியேலும் அவ்வாறே கூவினான். அந்தக் கணத்திலேயே நாணல்கள் இரண்டும் பருத்து வளர்ந்து இரண்டு வண்ணக் குதிரைகளாகிவிட்டன! இரண்டும் வேகமாகப் பாய்ந்து செல்லத் தொடங்கின. தானியேல், குள்ளனைப் பார்த்து, அவன் நாணலை வைத்துக்கொண்டது போல் வைத்துக்கொள்ளாமல், தன் நாணலைத் தலைமாற்றி வைத்திருந்ததால் அவனுடைய குதிரை புறப்படும்பொழுது அவன் குதிரையின் வாலைப் பார்த்து அமர்ந்திருந்தான். குதிரையை நிற்கச்செய்யவும் வழி தெரியவில்லை . எனவே, அவன் குனிந்து, அதன் வாலைப் பலமாகப் பிடித்துக்கொண்டு சென்றான்.

வெகுநேரம் பிரயாணம் செய்தபின் அவர்கள் ஓர் அழகான மாளிகை முன்பு வந்து நின்றனர். குள்ளன், “தானியேல், இனி நான் செய்கின்றவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டு நீயும் அதைப் போலச் செய்ய வேண்டும். என் பின்னால் தொடர்ந்து ஓடி வா! ஏற்கனவே உனக்குக் குதிரையின் வால் எது, தலை எது என்பதே தெரியவில்லை. இனியும் தலை கிறங்கிப்போய், நீ காலூன்றி நிற்கிறாயா, தலைகீழாக நிற்சிறாயா என்பது கூடத் தெரியாமற்போய்விடும். ஏனென்றால், நாள்பட்ட மது ஊமைப் பூனையைக்கூடப் பேச வைக்கும்; ஆனால், பேசும் மனிதனை ஊமையாக்கிவிடும்!” என்று அவனுக்கு எச்சரிக்கை செய்தான்.

பிறகு, அவன் ஏதோ பொருள் விளங்காத மந்திரச் சொற்களை ‘மளமள’ வென்று உச்சரித்தான். உடனே, தானியேலும் அவ்வாறே சொன்னான். மாளிகைக் கதவில் திறவுகோலுக்காக அமைந்த துவாரத்தின் வழியாக இருவரும் உள்ளே நுழைந்து சென்றனர். உள்ளேயிருந்த பல கதவுகளிலும் அவர்கள் அவ்வாறே நுழைந்து பாய்ந்தனர். கடைசியாக, ஒரு பெரிய கூடத்தை அடைந்தனர். அங்கே பல வகை மதுப்புட்டிகள் அடுக்கி வைக்கப்பெற்றிருந்தன. குள்ளன் ஒவ்வொரு புட்டியாக எடுத்துக் குடிக்கத் தொடங்கினான். தானியேலும் சிறிதும் சளைக்காமல், அவனைப் பின்பற்றிப் புட்டிபுட்டியாகக் காலி செய்தான். “உலகிலேயே தலைசிறந்த எசமானர் நீங்கள்தாம்! உங்களுக்கு ஈடும் கிடையாது, எடுப்பும் கிடையாது! குடிப்பதற்கு இப்படி மது வகைகள் மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தால், நான் உங்களுக்கே ஊழியம் செய்து கொண்டிருப்பேன்!” என்று கூறி, அவன் குள்ளனைப் போற்றிப் புகழ்ந்தான்.

“நான் உன்னிடத்தில் கபடமில்லாமல் தெளிவாகச் சொன்னபடி நீ வேலை செய்துவந்தால் தக்க பயன் கிடைக்கும். சரி, நேரமாகிவிட்டது! என்னுடன் கிளம்பி வா!” என்றான், குள்ளன்.

அவர்கள் மீண்டும் பல கதவுகளின் துவாரங்களின் வழியாக நுழைந்து வெளிவந்தார்கள். வெளியிலே வைத்திருந்த தங்கள் நாணல்களிலே ஏறிக்கொண்டு, அவர்கள் ‘பொர்ரம்! பொர்ரம்! பொர்ரம்!’ என்று கூவிய வுடன், இரண்டு குதிரைகளும் தோன்றி, வாயுவேகத்தில் பாயத் தொடங்கின. அந்த வேகத்தில் மேகங்களெல்லாம் பனிப் பந்துகளைப் போலச் சிதறி ஓடின.

அவர்கள் மீண்டும் கோட்டை மைதானத்தை அடைந்ததும் குள்ளன் தானியேலை வீட்டுக்கு அனுப்பி விட்டான். மறுநாள் அதே நேரத்தில் அதே இடத்திற்கு வந்து சந்திக்க வேண்டுமென்று அவன் ஆணையிட்டான்.

இவ்வாறு அவர்கள் ஒவ்வோர் இரவிலும் ஒவ்வொரு திசைக்குச் சென்று வந்தனர். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லாத் திசைகளிலும் சென்று, அயர்லாந்தி லுள்ள மதுக்கிடங்குகள் அனைத்தையும் அவர்கள் பார்த்து முடித்துவிட்டனர். எங்கு, என்ன வகை மது உண்டென்பதை அவர்களைப் போல வேறு எவரும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் உருசி பார்க்கவேண்டிய மதுவே பாக்கியில்லை.

ஒரு நாள் இரவில் தானியேல், கோட்டை மைதானத்தில் குள்ளனைக் கண்ட பொழுது, வழக்கம் போல் நாணல்கள் பறித்து வரப் புறப்பட்டான். அப்பொழுது குள்ளன், “தானியேல், இன்று கூடுதலாக ஒரு குதிரை இருந்தால் நலம்! திரும்பி வரும் பொழுது நம்முடன் வேறோர் ஆளும் வரக்கூடும்!” என்றான். தானியேல் ‘ஏன்? எதற்கு?’ என்று கேள்விகள் கேட்பதை முன்பே விட்டுவிட்டான், குள்ளன் சொல்வதைச் செய்வதே தன் கடனென்று அவன் எண்ணினான். சதுப்பு நிலத்திற்குப் போகும்பொழுது அவனாகச் சிந்தனை செய்து பார்த்தான். ஒருவேளை, எசமானன் கூடுதலாக மற்றொரு வேலை யாளைச் சேர்த்துவரக்கூடுமென்று அவன் எண்ணினான். ‘அப்படி ஒருவன் வந்து சேர்ந்தால், அவன் என் கையாளாக இருப்பான். ஒவ்வொரு நாளும் நானே போய்க் குதிரைகள் தயாரிக்கும் வேலையை இனி அவன் செய்வான். நானும் ஒரு கனவான்தானே! முதலாளியைவிட நான் எதிலே குறைந்தவன்?” என்றும் அவன் எண்ணமிட்டான்.

அவர்கள் இருவரும் குதிரைகள்மீது ஏறிக்கொண்டு புறப்பட்டனர். மூன்றாவது குதிரையின் கயிற்றையும் தானியேல் பற்றிக்கொண்டிருந்தான். இருவரும் வழியில் எங்கும் நிற்கவேயில்லை. லிமெரிக் தாலுகாவில் ஒரு குடியானவனுடைய வசதியான பெரிய வீட்டின் முன்பு சென்ற பிறகுதான் அவர்கள் குதிரைகளை நிறுத்தினார்கள். வீட்டினுள்ளே பலர் கூடிக் கும்மாளமடித்துக்கொண் டிருப்பதாகத் தெரிந்தது. இடையிடையே வாத்தியங்களின் இசையும் ஒலித்தது. குள்ளன் சிறிது நேரம் செவி கொடுத்து உள்ளே நடப்பதைக் கவனித்துவிட்டு, திடீரென்று தன் பணியாள் பக்கம் திரும்பி, “தானியேல், நாளையோடு எனக்கு ஆயிரம் ஆண்டுகள் பூர்த்தியாகின்றன!” என்றான்.

“கடவுள் நம்மை ஆசீர்வதிக்கட்டும், ஐயா!” என்றான், தானியேல்.

“அந்தப் பெயரை இனிமேல் ஒருகாலும் சொல்லி விடாதே, – தானியேல்! இல்லையென்றால், நீயே என் அழிவுக்குக் காரணமாவாய். நான் உலகிலே தோன்றி நாளையோடு வயது ஆயிரம் நிறைவேறுவதால் நான் திருமணம் செய்துகொள்வது நலமென்று கருதுகிறேன்!”

“நானும் யாதோர் ஐயமுமில்லாமல் அவ்விதமே எண்ணுகிறேன். தங்களுக்குத் திருமணத்தில் நாட்டமிருந் தால் போதும்!”

‘அதற்காகத்தான் நான் இந்தக் காரிகோகுன்னியெல் என்ற கிராமத்தை நோக்கி இவ்வளவு தூரம் வந்திருக் கிறேன். இங்கே, இந்த வீட்டில், இன்றிரவு இரைலீ என்ற பெண் உரூனே என்பவனை மணந்துகொள்ளப்போகிறாள். அவள் நல்ல உயரமும் அழகும் கொண்டவள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளை நானே மணந்து கொண்டு, அழைத்துச் செல்ல விரும்புகிறேன்!”

“அதற்கு அவள் என்ன சொல்லுவாளோ?”

குள்ளனின் முகம் கடுகடுத்தது. “பேசாதே! என்னிடம் கேள்விகள் கேட்பதற்காக உன்னை நான் என்னுடன் அழைத்து வரவில்லை” என்று சொல்லி அவன் அதட்டினான். மேற்கொண்டு விவாதம் செய்யாமல், அவன் வழக்கமான மந்திரச் சொற்களைச் சொல்லத் தொடங்கினான். தானியேலும் அவைகளைச் சொல்லிக் கொண்டான். காற்றைப் போல் திறவுகோல் துவாரத்தின் வழியாக எந்தக் கதவையும் தாண்டிச் செல்லும் ஆற்றலை அளிப்பவை அந்தச் சொற்கள். குள்ளன் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லியதில் தானியேல் தன்னை ஒரு மேதாவியென்று எண்ணிக்கொண்டான்.

இருவரும் உள்ளே சென்றதும், குள்ளன் கூடத்தி லிருந்த ஒரு விட்டத்தில் ஏறி அமர்ந்துகொண்டான். தானியேலும் அவனுக்கு எதிர்ப்புறத்தில் வேறொரு விட்டத்தில் அமர்ந்துகொண்டான். உயரே இருந்தால் கீழே நடப்பவைகளைக் கவனிக்க முடியும் என்பதற்காக அவர்கள் இப்படிச் செய்தனர். குள்ளன், ஒரு கிளையிலே குந்துவது போலத் தன் உடலையெல்லாம் சுருட்டி மடக்கிக்கொண்டு வசதியாக இருந்தான். ஆனால், தானியேலுக்கு இது வழக்கமில்லை. கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு, ஒரு கட்டையிலே உட்கார்ந்திருப்பதில் அவன் மிகவும் அவதிப்பட்டான்.

கடத்திலே நடந்த வேடிக்கைகளை அவர்கள் கவனித்தனர். ஒரு பக்கத்திலே மேளகாரர், அவர்களுக்கு அருகிலே பாதிரியார், இரைலீயின் தந்தை, மணமகன் உரேனேயின் இரு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் நின்றுகொண்டிருந்தனர். மற்றொரு பக்கத்திலே உரேனே யின் தந்தையும் தாயும், தாயின் சகோதரிகள் நால்வரும், சகோதரர்கள் மூவரும் உயர்ந்த ஆடைகளணிந்து மிடுக்குடன் நின்றுகொண்டிருந்தனர். மற்றும், மாமன்மார்கள், மாமியர்கள் முதலிய பலரும் உற்சாகமாகச் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். மேசைகளிலே பரிமாறப் பெற்றிருந்த உணவு வகைகளைப் பார்த்தால் வந்திருந்த விருந்தினர்களைப் போல இருமடங்குப் பேர்களுக்குப் போதுமானவை என்று தோன்றும்.

எல்லோரும் மேசைகளைச் சுற்றி நாற்காலிகளில் வந்து அமர்ந்தார்கள். மணமகனின் அன்னை திருமதி உரூனே எழுந்திருந்து, முதன் முதலாகப் பாதிரியாருடைய தட்டில் ஒரு பணியாரத்தை எடுத்து வைத்தாள். மங்கலமான அந்த வேளையில், சகுனத் தடை போல மணப்பெண் ஒரு தும்மல் தும்மினாள். அந்த மேசையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டுப்போயினர். ஆனால், ஒருவர்கூட அப்பொழுது ‘கடவுள் நம்மைக் காப்பாராக!’ என்று சொல்லவில்லை. எல்லோரும் பாதிரியாரே சொல்லி யிருப்பாரென்று எண்ணியிருந்தனர். ஆனால், அவரோ பணியாரத்திலேயே கவனமாயிருந்ததால், அச்சொற்கள் அவர் தொண்டையிலிருந்து வெளிவரவில்லை. ஒரு கணத்திற்குப் பின், ஆண்டவனின் அருளை வேண்டிக் கொள்ளாமலே, விருந்து தொடங்கிவிட்டது.

உயரே அந்தரத்தில் அமர்ந்திருந்த தானியேலும் அவனுடைய கூட்டாளியும் கீழே நடந்ததைக் கவனிக்காமலில்லை. குள்ளன் மகிழ்ச்சியோடு ஒரு காலைத் தொங்க விட்டுக்கொண்டான். அவனுடைய கண்களில் புதிய ஒளி வீசிற்று. அவன் மணமகளை ஒரு முறை ஆவலோடு பார்த்துக்கொண்டு, தானியேல் பக்கம் திரும்பி, “பாதி அளவுக்கு அவள் என்னுடையவளாகிவிட்டாள். இன்னும் இரண்டு முறை அவள் தும்மிவிட்டால், பிறகு அவள் முழுதும் என் மனைவியாகி விடுவாள்! பாதிரியார், அவருடைய வேத நூல், மணமகன் முதலிய யாரும், எதுவும் குறுக்கே நின்று தடுக்க முடியாது!” என்று சொன்னான்.

உடனே அழகி இரைலீ மறுபடி தும்மினாள்; அவள் தும்மியது பலருக்குத் தெரிந்திருக்க முடியாது. அவ்வளவு மெதுவாகவே தும்மினாள். ஆனால், குள்ளன் அதைக் கவனித்துவிட்டான். அப்பொழுது அங்கிருந்த எவரும், ‘கடவுள் நம்மைக் காப்பாராக!’ என்று சொல்லவேயில்லை.

அந்தச் சிந்தனையே ஒருவருக்கும் எழவில்லை.

தானியேல் நெடுநேரமாக மணமகள் இரைலீயைப் பற்றியே கவலை கொண்டிருந்தான். பத்தொன்பது வயதுள்ள அந்த மங்கையின் அழகும் கருநீலக் கண்களும் பளபளப்பான உடலும் சிவந்த கன்னங்களும் ஊக்கமும் உற்சாகமும் உயிர்த்துடிப்பும் எங்கே – ஆயிரம் வயதுக்கு ஒரு நாள் குறையுள்ள விகாரமான குள்ளன் எங்கே? ‘கூனிக் குறுகிக் கிடக்கும் இவனல்லவா அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்க எண்ணியிருக்கிறான்!’ என்று அவன் எண்ணினான்.

அந்த நேரத்தில் மணமகள் மூன்றாவது முறையாகத் தும்மிவிட்டாள். உடனே தானியேல், தன் முழு வல்லமை யையும் சேர்த்துக்கொண்டு, மிகவும் உரத்த குரலில், “கடவுள் நம்மைக் காப்பாராக! என்று கூவிவிட்டான். இது அவனுடைய சிந்தனையின் எதிரொலியாக ஏற்பட்டதா அல்லது அவனுடைய சுபாவத்தினால் ஏற்பட்டதா என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால், அந்தச் சொற்களைக் கேட்டவுடனே குள்ளனின் முகம் சிவந்துவிட்டது. கோபம் ஒரு புறம், ஏமாற்றம் ஒரு புறம் அவனை உலுக்கிவிட்டன. அவன் தன் விட்டத்திலே எழுந்து நின்றுகொண்டு, கீச்சுக் குரலில், “தானியேல், உன்னை என் வேலையிலிருந்து நீக்கியுள்ளேன்! உனக்குச் சம்பளம் இதுதான்!” என்று கூறிக்கொண்டே ஒரு காலால் தானியேலின் முதுகில் பலமாக உதைத்தான். அதனால் தானியேல் நிலை தடுமாறி விட்டத்திலிருந்து கீழே உணவு மேசைமீது தலைகுப்புற விழுந்தான். இந்த நிகழ்ச்சி அவனுக்கே ஆச்சரியமா யிருந்தது என்றால், அங்கே கூடியிருந்தவர்கள் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பார்கள்!

இழே விழுந்த தானியேல், நடந்த கதை முழுவதையும் கட்டத்திலிருந்த அனைவருக்கும் தெரிவித்தான். அதைக் கேட்ட பாதிரியார், கையிலிருந்த கத்தியையும் முள்ளையும் போட்டுவிட்டுத் திருமணச் சடங்கைத் தொடங்கி வைத்து வேகமாக முடித்துவிட்டார். பிறகு, நடனங்கள் நடந்தன. தானியேலும் சிறிது நேரம் ஆடினான். ஆனால், நடனத்தைக்காட்டிலும் அவன் விரும்பியது மதுவைத்தான். ஆதலால், அவன் ஆவலோடு மதுவருந்தத் தொடங்கி, அதிலேயே மூழ்கிவிட்டான்.

– இறுமாப்புள்ள இளவரசி (அயர்லாந்து நாட்டுக்கு கதைகள்), முதற் பதிப்பு: 14-11-1979 (குழந்தைகள் தின வெளியீடு), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *