வழக்கமாகப் பள்ளிக்கூடம் விட்டவுடன் மான்குட்டி ராணி, வீட்டை நோக்கித் துள்ளலாக ஓடும். ஆனால், இன்றைக்கு அது அவ்வாறு போகவில்லை. நீதிபோதனை வகுப்பில் ஆசிரியை, “நீங்கள் அன்பைத் தேடிப் போக வேண்டும்” என்றார். அன்பைத் தேடுவது என ராணி முடிவுசெய்தது.
பையைத் தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தது. சிறிது தூரம் சென்றிருக்கும். ஒரு மரத்தில் தாய்க் காகம் தனது குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதைப் பார்த்தது. அந்தக் காகத்திடம் “இங்கே அன்பு இருக்கிறதா?” என்று கேட்டது.
“அன்பு யார்? உனது தோழியா?” எனக் கேட்டது தாய்க் காகம்.
“இல்லை! இது வேற அன்பு” என்ற ராணியை மேலும் கீழும் பார்த்த தாய்க் காகம், “நீ தேடும் அன்பு இங்கே இல்லை. போய் வா!” என்றது.
ராணி தொடர்ந்து நடந்தது. வழியில் ஒரு பட்டாம்பூச்சி, பூக்களின் மீது மாறி மாறி அமர்ந்துகொண்டிருந்தது. அதனிடம், “நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டது.
“தேன் குடிக்கிறேன்” என்றது பட்டாம்பூச்சி.
“இங்கே அன்பு இருக்கிறதா?” என்று கேட்ட ராணியை உற்றுப்பார்த்த பட்டாம்பூச்சி, ஒன்றும் சொல்லாமல் பறந்துபோய்விட்டது.
ராணி மான்குட்டி தொடர்ந்து சென்றது. நீர்த்தேக்கம் ஒன்றில் ஆமை ஒன்று கரையை நோக்கி நீந்தி வருவதைக் கவனித்தது. அதன் முதுகில் பறவைக்குஞ்சு ஒன்று இருந்தது. கரைக்கு வந்த அந்த ஆமை, பறவையை இறக்கிவிட்டது.
“நீ என்ன செய்யறே?” எனக் கேட்டது ராணி மான்குட்டி.
“இந்தப் பறவை தண்ணியில் விழுந்து தத்தளிச்சுக்கிட்டு இருந்துச்சு. அதான் காப்பாத்தினேன்” என்றது ஆமை.
“இங்கே அன்பு இருக்கிறதா?” எனக் கேட்டது ராணி.
ஆமைக்கு 100 வயது இருக்கும். அது அர்த்தம் நிறைந்த புன்னகையுடன் பார்த்துவிட்டு, தண்ணீருக்குள் நீந்திச் சென்றது.
மான்குட்டி தன் வழியில் தொடர்ந்து சென்றது. வழியில், ஒரு மரத்தைச் சுற்றி நிறைய தேனீக்கள் பறந்துகொண்டிருப்பதைப் பார்த்து, “இங்கே அன்பு இருக்கிறதா?” எனக் கேட்டது.
“இன்று இரவுக்குள் இந்தத் தேனடையை நிரப்பியாகணும். அதுக்காகத்தான் நாங்க சுறுசுறுப்பா வேலை பாத்துக்கிட்டிருக்கோம். தொந்தரவு செய்யாதே” என்றன அந்தத் தேனீக்கள். ராணி அங்கிருந்து நகர்ந்துவிட்டது.
வழியில் மரங்கொத்திப் பறவையைப் பார்த்தது. அந்த மரங்கொத்தி, மரத்தின் மீது ஏறிவந்த ஒரு பாம்புடன் சண்டையில் இருந்தது. மரத்தின் பொந்தில் அச்சத்துடன் மரங்கொத்தியின் குஞ்சுகள் இருந்தன. ஆக்ரோஷமான சண்டையின் முடிவில், மரங்கொத்தியே வென்றது. பாம்பு அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டது.
ராணி மான்குட்டி, ‘இங்கே அன்பு இருக்கிறதா?’ எனக் கேட்க நினைத்தது. ஆனால், நடந்த சண்டையைப் பார்த்து நடுக்கம் வந்துவிட்டது. ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நழுவியது.
இனி யாரிடம் கேட்டும் புண்ணியமில்லை என நேராக வீட்டுக்கு வந்து அம்மாவிடம், ‘‘அன்புங்குறது கிடைக்கிறதுக்கு ரொம்பக் கஷ்டமான விஷயமா அம்மா?” எனக் கேட்டது.
“என்ன திடீர்னு இப்படி ஒரு கேள்வி கேட்கிறே?” என்றது அம்மா மான்.
“எங்க டீச்சர் அன்பைத் தேடிப் போகணும்னு சொன்னாங்க. பள்ளிக்கூடம் விட்டு வர்ற வழியில நான் அன்பைத் தேடினேன்’’ என்ற மான்குட்டி, நடந்த சம்பவங்களைச் சொன்னது.
குட்டி சொன்னதைக் கேட்ட அம்மா மான் சிரித்துக்கொண்டது. ‘‘நீ பார்த்த எல்லாச் சம்பவத்திலும் அன்பு இருக்கே’’ என்றது.
“எப்படி?” – இது மான்குட்டி ராணி.
“அந்தக் காகக்குஞ்சுகளால் தானாகவே இரையத் தேடிக்க முடியாது. அதனால், தாய்க் காகம் உணவைத் தேடிக்கொண்டு வந்து கொடுக்குது. இது, கடமையில் விளைந்த அன்பு. அதுபோல, செடிகளால் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர முடியாது. பூக்கள், பட்டாம்பூச்சிகளுக்குத் தேனை உணவாகக் கொடுக்குது. பதிலுக்குப் பட்டாம்பூச்சிகள், பூக்களோட மகரந்தச் சேர்க்கைக்கு உதவி பண்ணுது. இதனால செடி வளருது. இது நன்றியில் விளைந்த அன்பு” என்றது அம்மா.
“புரிஞ்சது! ஒரு பறவையை ஆமை காப்பாற்றியது, உதவும் பரிவில் வந்த அன்பு. சரிதானே?” என்றது மான்குட்டி.
“சபாஷ், அதே மாதிரி தேன், கரடிக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. மனிதர்களும் பார்த்ததும் தூக்கிட்டுப் போய்டுவாங்க. இழக்கப்போறது உறுதி எனத் தெரிஞ்சும்’ தங்கள் கடமையை விடாமல் செஞ்சது, தேனீக்களின் தியாகத்தில் விளைந்த அன்பு” என்றது அம்மா மான்.
“மரங்கொத்திப் பறவை பாம்போடு சண்டை போட்டதில் அன்பு இருக்கா?’’- ராணி.
“அப்படிச் சண்டை போடாமல் இருந்திருந்தால், குஞ்சுகளைப் பாம்பு விழுங்கி இருக்கும். தன்னை நம்பியவர்களைக் காப்பாற்றுவது வீரத்தில் விளைந்த அன்பு’’ என்றது அம்மா மான்.
அம்மா மான் சற்று இடைவெளிவிட்டுப் பேசியது… ‘அன்புங்கிறது மனத்தில் கசியும் ஓர் உணர்வு. அது வெளியில் கிடைக்கிற பண்டமோ, பொருளோ கிடையாது. அன்பினால்தான் உலகம் இயங்குது. அன்பு இல்லைன்னா இந்த உலகம் இல்லை. இப்பப் புரிஞ்சதா ஏன் உங்க டீச்சர் அன்பைத் தேடிப் போகணும்னு சொன்னாங்கன்னு?” என்றது அம்மா மான்.
“நல்லா புரிஞ்சதுமா” என்ற மான்குட்டி, அம்மாவை அன்போடு அணைத்து முத்தமழை பொழிந்தது.
– ஜனவரி 2017