ஒரு சிறிய நகரத்துக்கு பிராமணன் ஒருவன் வந்தான்.
அந்த நகரத்தில் இருந்த பெரிய வணிகனை தெரிந்து கொண்டு, அவனிடம் சென்றான் பிராமணன்.
“வணிகப் பிரபுவே! நான் சாஸ்திரங்கள் கற்ற புரோகிதன். புனிதப் பயணம் மேற்கொண்டு, ஊர் ஊராகச் சென்று, பச்சை நெல்லும், உணவுப் பொருள்களும் சேகரித்து, நூறாவது நாளில் கங்கைக் கரையில், உலக நன்மையைக் கருதி, ஒரு யாகம் நடத்தி, ஆயிரம் ஏழைகளுக்கு உணவு அளிக்க விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்த நல்ல காரியத்துக்கு தாங்களும் உதவி, மற்றவர்களையும் உதவச் செய்ய வேண்டும், இந்த ஏற்பாட்டுக்குத் தாங்கள் தலைவர் என்று மிகவும் பணிவோடு கூறினான் புரோகிதன்.
அவன் கூறியதை நம்பிய வணிகன், அவனை ஒரு பிராமணன் வீட்டில் தங்கச் செய்தான், அதோடு நெல்லும், உணவுப் பொருள்களையும் கொடுத்தான்.
மற்றவர்களையும் கொடுக்கும்படி கூறினான். அவற்றை எல்லாம் கொண்டுபோய் அடுத்த ஊரில் விற்று ஆயிரம் பொன்வரை சேர்த்து விட்டான். அதைக் கொண்டு போய் தொலைவில் உள்ள மரத்தடியில் புதைத்து வைத்துவிட்டான் புரோகிதப் பிராமணன்.
“உணவுப் பொருள்கள் எல்லாம் எங்கே?” என்று விசாரித்தான் வணிகன். “சேரச் சேர , அவற்றை கங்கைக் கரைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன்” என்றான் புரோகிதன்.
தினமும் காட்டுக்குப் போய் தான் புதைத்து வந்த பொன் இருக்கிறதா, என்று பார்த்து வந்தான் புரோகிதன்.
வழக்கம் போல், அவன் போய் பார்க்கும் போது, புதைத்து வைத்த பொன் காணாமல் போனதை அறிந்து, அலறி அடித்து ஓடி வந்து வணிகனிடமும், தான் தங்கியிருந்த வீட்டுப் பிராமணனிடம், பறிகொடுத்ததைச் சொல்லி அழலானான்.
அவனுக்கு உதவி செய்த வணிகன், “பொருள் நிலையில்லாதது. மேகம் போல் வந்து, மறைந்து விடும் தன்மை உடையது தானே, மேலும், நீ உழைத்துச் சம்பாதித்தது இல்லையே, ஊராரை ஏமாற்றி சேர்த்தது தானே?” என்றான்.
புரோகிதன் ஆறுதல் அடையாமல், ஒரு கோயிலில் போய் “உண்ணாவிரதம் இருந்து, உயிரை விடப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். புரோகிதனின் உண்ணாவிரத தற்கொலை செய்தி அந்த நகரத்து அரசனுக்கு எட்டியது. புரோகிதனை அழைத்து வரச் செய்து, “இந்த ஆயிரம் பொன் உனக்கு எப்படி வந்தது?” என்று கேட்டான் அரசன்.
புரோகிதன், தான் பொய் சொல்லி, மக்களை ஏமாற்றி, கிடைத்த பொருள்களை விற்றுச் சேர்த்த பொன்” என்று உண்மையை ஒப்புக் கொண்டான்.
”ஒவ்வொருவீடாகச் சென்று, ஆயிரம் பொன், எந்த வீட்டில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்குமாறு, காவலர்களுக்கு உத்தரவிட்டான் அரசன் அவர்கள் சோதனை செய்ததில், வணிகனுடைய வேலையாள் வீட்டில் பொன் அகப்பட்டது.
அவனை அழைத்து வரச் செய்து, விசாரித்தான் அரசன். ”புரோகிதன் ஊராரிடம் சேகரித்த பொருள்களை, கங்கைக் கரைக்கு அனுப்பாமல் அடுத்த ஊரில் விற்றதையும், அதை மரத்தடியில் புதைத்து வைத்ததையும், புரோகிதனுக்குத் தெரியாமல் உளவுபார்த்து, அதை எடுத்து வந்தேன்” என்றான் வணிகனின் வேலையாள்.
“புரோகிதனின் மோசடியை, உளவு பார்த்து மரத்தடியில் புதைத்திருந்ததை எடுத்த ஆயிரம் பொன்னையும் அரசாங்கத்தில் ஒப்படைக்காதது என் குற்றம். என்றாலும், புரோகிதனின் மோசடியை ஊரார் அறியச் செய்ததால், உனக்குத் தண்டனை விதிக்காமல் விடுவிக்கிறேன்” என்றான் அரசன்.
அதன்பின் “யாகம் என்றும், ஆயிரம் ஏழைகளுக்கு உணவு அளிப்பதாகவும் ஊராரை ஏமாற்றியதோடு, உண்ணாவிரதம் இருந்து உயிர்விடப் போவதாக, பயமுறுத்தியதற்காகவும் ஒரு வருடம் சிறை தண்டனை புரோகிதனுக்கு விதித்தான் அரசன்.
அந்த ஆயிரம் பொன்னுக்கும், உணவுப் பொருள்களை வாங்கி, ஆயிரம் ஏழைகளுக்கு, உணவு அளிக்குமாறு வணிகனுக்கு உத்தரவிட்டான் அரசன்.
யாகம், அன்னதானம் என்று சொல்லி மோசடி செய்கிறவர்கள் பலர் இன்றும் காணப்படுகின்றனர்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்