தவளைக் கூட்டம் ஒன்று, அடர்ந்த காட்டில் பயணம் செய்து கொண்டிருந்தது. போகும் வழியில் ஏராளமான புதர்களும் குழிகளும் இருந்தன.
திடீரென்று ஓரிடத்திலிருந்த ஆழமான குழிக்குள், இரண்டு தவளைகள் தவறி விழுந்து விட்டன.
இதைக் கவனித்த மற்ற தவளைகள் அவற்றுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக, ‘உங்களால் இந்தக் குழிக்குள் இருந்து மீண்டு வரமுடியாது. ஆகவே உள்ளேயே, உங்கள் காலம் முடியும் வரை இருந்துவிடுங்கள். வீணாகத் தப்பிக்க முயற்சி செய்து களைத்துப்போய் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று அறிவுறுத்தின.
ஆனால், அந்தத் தவளைகள் மிகுந்த பதட்டத்துடன், குழிக்குள் இருந்து குதித்துக் குதித்துப் பார்த்தன. எப்படியாவது வெளியே வந்துவிட வேண்டும் என்று முயற்சித்தன.
இதைப் பார்த்த மற்ற தவளைகள், ‘குதிக்காதீர்கள், குதிக்காதீர்கள்… களைப்பில் உயிர் போய்விடும்’ என்று ஒரே குரலில் கத்தத் தொடங்கின.
இறுதியில் ஒரு தவளை குதித்துக் குதித்துக் களைத்துப் போய் தனது உயிரை விட்டது.
இன்னொரு தவளை இதைக் கண்டும், சிறிதும் பயப்படாமல் தனது முயற்சியைத் தொடர்ந்தது.
குழிக்கு மேலிருந்த தவளைகள், மீண்டும் உரத்த குரலில், ‘குதிக்காதே! குதிக்காதே!’ என்று அலறின.
ஆனால், தொடர்ந்த முயற்சித்த அந்தத் தவளை இறுதியில் தனது முழு மூச்சையும் இழுத்துப் பிடித்து ஒரே தாவாகத் தாவி, குழியைவிட்டு வெளியே வந்து குதித்தது!
இதைக் கண்ட மற்ற தவளைகள், மகிழ்ச்சியடைந்தாலும், ‘நீ, நாங்கள் சொன்னதைக் கேட்கவேயில்லையே, உனக்கு என்ன காது செவிடா?’ என்று கேட்டன.
அதற்கு அந்தத் தவளை, ‘நீங்கள்தானே என்னைக் குதி, குதி என்று ஊக்கப்படுத்தினீர்கள். அதனால்தான் நான் தப்பிக்க முடிந்தது!’ என்று கூறியது.
இதைக் கேட்ட பின்னர்தான் மற்ற தவளைகளுக்குப் புரிந்தது, அந்தத் தவளை உண்மையிலேயே செவிடு என்பது!
– முத்துக்கதை (அக்டோபர் 2011)