உழைப்பினாலா? கருணையினாலா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 2,729 
 
 

ஒரு மளிகை வியாபாரியிடம் முஸ்லிம் இளைஞரும், கிறிஸ்துவ இளைஞரும் பணிபுரிந்து வந்தனர். வியாபாரி ஒரு நாள், பணப்பையை வீட்டுக்கு எடுத்துப் போக மறந்து கடையிலேயே வைத்து விட்டு, மறதியாகச் சென்று விட்டார்.

இரண்டு நாள் கழித்து கடைக்கு வந்தபோது, பணப்பை வைத்த இடத்திலேயே இருந்ததைக் கண்டார். பணமும் பையில் வைத்த படியே இருந்தது.

இரண்டு வேலையாட்களுமே யோக்கியமானவர்கள் என்று மகிழ்ச்சி அடைந்தார் வியாபாரி .

ஒருநாள், இரண்டு வேலையாட்களையும் கூப்பிட்டு, “நீங்கள் இருவரும் எதனால் வாழ்கிறீர்கள்?” என்று கேட்டார். “உழைப்பால் வாழ்கிறேன்” என்றான் முஸ்லிம் இளைஞன். “தங்கள் கருணையால் வாழ்கிறேன்” என்றான் கிறிஸ்துவ இளைஞன்.

சில நாட்களுக்குப்பிறகு, ஒரு பரங்கிக் காயை கிறிஸ்துவ இளைஞனுக்கும், மூன்று ரூபாயை முஸ்லீம் இளைஞனுக்கும் கொடுத்தார் வியாபாரி.

இருவரும் வீட்டுக்குச் செல்லும் போது , ” பரங்கிக்காய் என் கொல்லையில் இருக்கிறது. இதை நீ எடுத்துக் கொள்கிறாயா?” என்று கேட்டான் கிறிஸ்துவ இளைஞன்.

சரி என்று கூறி, அவனிடமிருந்து பரங்கிக் காயை வாங்கிக் கொண்டு அதற்குப் பதிலாக, மூன்று ரூபாயைக் கொடுத்தான் முஸ்லீம் இளைஞன். வீட்டுக்குச் சென்று, பரங்கிக் காயைக் கீறினான். அதில் ஒரு தங்க மோதிரம் இருப்பதைக் கண்டான். அந்த மோதிரத்தைக் கொண்டு போய் வியாபாரியான முதலாளியிடம் கொடுத்து, தாங்கள் இருவரும் இரவு போகும்போது, மாற்றிக் கொண்ட விவரத்தைக் கூறினான் முஸ்லீம் இளைஞன். வியாபாரி, “நீ உழைப்பினால் தான் வாழ்கிறாய்!” என்ற அவனைப் பாராட்டியதோடு, அந்த மோதிரத்தை நீயே என்னுடைய பரிசாக வைத்துக் கொள்” என்று கூறினார்.

அவர்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை சோதிக்கவே, பரங்கிக்காயினுள் மோதிரத்தை வைத்திருந்தார் முதலாளி.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *