கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 8, 2024
பார்வையிட்டோர்: 697 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தென்னந் தோட்டம். மத்தியில் நாட்டோடுகளால் வேயப்பட்ட பழமை வாய்ந்த ஒரு வீடு. தோட்டத்தைச் சுற்றி முட்கம்பிகளினால் எல்லையிடப்பட்டிருந்தது. அத் தோட்டத்தின் ஒரு கோடியிலே, ஒரு குப்பை மேடு. அங்கே இரு பேட்டுக் கோழிகள் இரை பொறுக்கிக் கொண்டிருந்தன. ஒன்று சாம்பல் நிறமானது. மற்றையது. வெள்ளை நிறங் கொண்டது. அவைகளுக்குச் சற்றுத் தொலைவிலே ஒரு தென்னையின் அருகே ஒரு சேவல், கரப்பான் பூச்சியொன்றை ‘டக் டக்’ என்று கொத்திச் சுவைத்துக் கொண்டிருந்தது. 

வெள்ளை நிறமான அச் சேவல், நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்டது. கரப்பான் பூச்சியைக் கொத்துகின்ற ஒவ்வொரு தடவையும், அதன் தலையிலே சரிந்து கிடந்த பூ இலாவகமாய் அசைந்து கொடுத்தது. அவ்வேளையிலே, தோட்டத்தின் தெற்குப் புறமாய் இருந்த பக்கத்து வீட்டிலிருந்தும் ஒரு சேவல் தோட்டத்திற்குள் பிரவேசித்து கோழிகள் இரை பொறுக்கும் பக்கமாய் மெல்ல நடந்து வந்தது. தேன் நிறமான அந்தச் சேவல் வெள்ளைச் சேவலைப் போலவே தோற்றமும் பருமனும் கொண்டது 

வெள்ளை நிறமான அச்சேவல், தான் பற்றிய இரையை, முற்றாக உண்டு விட்டுத் தலை நிமிர்ந்த போது, தேன் வண்ணச் சேவல், அதன் முன்னே குறுக்கிட்டது. உடனே வெள்ளைச் சேவல், அதனை ஒரு முறை ஊன்றி அவதானித்தது. 

“ஏய் என்னப்பா இங்கே?” என்றது. 

அதற்குத் தேன் வண்ணச் சேவல், 

“பெரிய ஆள் போல பெரிய அதிகாரமாயிருக்கிறதே.. இதெல்லாம் உனக்கெதற்கு.போடா..”என்று விட்டு அதன் முகத்திலே பாய்ந்து பலமாய் ஒரு கொத்துக் கொத்தியது. இத் திடீர்த் தாக்குதல், ‘இதற்கு முன் நான் தங்களை இப் பக்கமாகப் பார்த்ததில்லை. அதனாலேயே சும்மா வழமையான பாணியில் விசாரித்தேன். வேறு வித்தியாசமாக ஒன்றுமில்லை’ என்று தனது நிலையை விளக்கவிருந்த வெள்ளைச் சேவலை நிலைகுலைய வைத்தது. ஓரிரு கணங் களில் அது தான் எண்ணிய வார்த்தைகளை, அப்படியே தனக்குள் ஜீரணித்துக் கொண்டு, தேன் நிறமான அச் சேவலைப் பதிலுக்குத் தாக்கியது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தேன் வண்ணச் சேவல் தாக்க சண்டை வலுத்தது. 

சண்டையின் ஆரம்பத்திலேயே, குப்பை மேட்டில் இரை பொறுக்கிக் கொண்டிருந்த இரு பேடுகளும், அங்கு வந்து சேர்ந்து விட்டன. அதே வேளை, தோட்டத்தின் வடக்குப் புறமாய், மூன்று நான்கு வீடுகளுக்கு அப்பா லுள்ள ஒரு வீட்டிலிருந்து ஒரு கறுத்தப் பேடும், தற்செயலாக அங்கு வந்திருந்தது. என்றாலும், அவைகளில் எதுவும், சண்டையை விலக்கும் வகையிலோ அல்லது ஆதரவு நல்கும் வகையிலோ, சம்பந்தப்படாது ஒதுங்கி நின்று அவதானித்துக் கொண்டிருந்தன. ஆனால், சேவல்கள் இரண்டும் தமக்கு அண்மையில் நின்ற பேடுகளைச் சற்றும் அவதானிக்கக் அவகாசமின்றி அதி தீவிரமாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. 

நான்கு ஐந்து நிமிடங்களின் பின் வெள்ளைச் சேவல் தம் பலமெல்லாம் ஒன்று திரட்டி, உக்கிரமமாய்த் தாக்கத் தொடங்கியது. 

இப்போது வெள்ளைச் சேவலின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாது தேன் நிறச் சேவல், தள்ளாடியது. இந் நிலையிலே வெள்ளைச் சேவலின் கொத்துக்கள் தேன் நிறச் சேவலின் முகம், பூ, தலை யாவற்றிலும் ‘டக் டக்’ கென்று சரமாரியாய்ப் பொழியவே அது கீழே சரிந்து விழுந்தது. “ஐயோ” என்று முக்கி முனகியது. இதனை அவதானித்த வெள்ளைச் சேவல், “உன்னை இனி நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. பார்க்கப் பரிதாபமாகவும் இருக்கிறது. பிழைத்துப் போ” என்று கூறி விட்டு சற்று நகர்ந்து நின்று கொண்டது. 

சில நிமிடங்களின் பின் நிலத்திலே விழுந்து கிடந்த தேன் நிறச் சேவல் மெல்ல எழுந்து வந்த வழியில், திரும்பி நடந்தது. முகம், தலை, பூவெல்லாம் இரத்தத்தின் கசிவு. 

அச் சேவல் வேலியைத் தாண்டியதும், அதுவரை தான் நின்ற இடத்திலேயே அசையாது நின்றிருந்த மூன்று பேடுகளும், இப்போது வெள்ளைச் சேவலின் அருகே விரைந்தன. 

“எப்படி உங்களுக்குள் இந்தச் சண்டை மூண்டது?’ என்று வினவ எண்ணி அதன் வதனத்தை நோக்கின. வெள்ளைச் சேவல், பேடுகளின் முகங்களிலிருந்து விடயத்தை அறிந்து கொண்டதோ என்னவோ தெரியாது. அவை வாய் திறப்பதற்கு முன்னமேயே அறிய விரும்பிய விடயத்தை அப்படியே வெளியில் பிட்டு வைத்தது. அதன் பின், தான் இரை பொறுக்கிய மரத்தின் பக்கமாய் மீண்டும் விரைந்தது. அதன் வதனத்திலும் இரண்டு மூன்று இரத்தக் காயங்கள் இருந்தன. 

இப்போது அங்கு நின்றிருந்த மூன்று பேடுகளும் தங்களுக்குள் சில கருத்துகளைப் பரிமாற்றம் செய்து கொண்டன. 

கறுத்தப்பேடு ஏனைய இரு பேடுகளிடம் தமக்கு எதிரே சற்றுத் தொலைவில் இரை பொறுக்கிக் கொண் டிருந்த அந்த வெள்ளைச் சேவலை முகத்தினால் சுட்டிக் காட்டிய வண்ணம் பின்வருமாறு பகர்ந்தது: 

“இவரோடு போரிட்ட மற்றவரையும் எனக்கு நன்கு தெரியும். அவரும் ஒரு சாதாரணமானவரல்லர். மிகவும் பலம் பொருந்திய ஒருவர்தான். அப்படியான ஒருவரையே இவர் மிகவும் சாதாரணமாக மோதி வீழ்த்தி விட்டாரே… இவர் சற்று அனுதாபம் காட்டாமலிருந்திருந்தால் அவர் உயிரையே இழக்க வேண்டி வந்திருக்குமே” 

“ஆம்…ஆம்… நீங்கள் சொல்வது சரிதான். என்ன வீரம், என்ன வீரம். இவரின் வீரத்தை இன்றுதான் என்னால் நன்கு அறிய முடிந்தது. இவரின் தாக்குதல் உண்மையிலேயே எனக்கு மயிர்க்கூச் செறியச் செய்தது” இவ்வாறு கூறியது வெள்ளைப்பேடு. இதனைச் செவி மடுத்த கறுத்தப் பேடு மிக்க பூரிப்போடு மௌனமானது. 

ஓரிரு கணங்களின் பின் சாம்பற் பேடு தனக்கு வலது புறமாய் நின்றிருந்த கறுத்தப் பேட்டைப் பார்த்தது; குறு நகை ஒன்றையும் உதிர்த்து விட்டுக் கொண்டது 

“இப்போது இங்கு நிகழ்ந்த போரிலே வெற்றி பெற்ற வீரன் எனக்கு அண்ணன். இது உங்களுக்குத் தெரியுமோ என்னவோ தெரியாது” என்றது. 

அதனைக் கேட்டதும் கறுத்தப் பேடு விழிகளை அகல விரித்துக் கொண்டு பார்த்தது. உறவு முறை பற்றி தன்னுள் எழுந்த சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள் வதற்காய் ‘அண்ணனா” என்றது. 

“ஆம்… ஆம்… எனது அண்ணன்தான். தூரத்து உறவுமல்ல. எனது உடன் பிறப்பு” உறுதியாகவும் விளக்க மாகவும் கூறியது சாம்பற் பேடு. 

”ஆம்… ஆம்… சரிதான்” அங்கு நின்றிருந்த வெள்ளைப் பேடும் அதனை உறுதிப்படுத்தியது. 

சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட கறுத்தப் பேடு மீண்டும் சாம்பற் பேட்டை நோக்கியது. 

“ஆ அப்படியா சரி, அதிருக்கட்டும், இன்று பெரும் வெற்றி பெற்ற இவர், இற்றைக்கு மூன்று நான்கு மாதங் களுக்கு முன்பு இதே இடத்தில், அதாவது அந்தக் குப்பை மேட்டிற்கு அண்மையிலே வைத்து வேறொருவரோடு போரிட்டார். அதிலே இவர், மிகவும் கடுமையான தாக்கு தலுக்குள்ளாகி படு தோல்வி கண்டதோடு, புற முதுகு காட்டியும் ஓடினார். அன்றும் தற்செயலாய் இங்கு வந்தி ருந்த நான், தங்களோடு சேர்ந்து கொண்டு ஆரம்பம் முதல் அக் காட்சியை அலதானித்து வந்தேன். இறுதியில் நான் அன்று தோல்வி அடைந்த இவரைச் சுட்டிக் காட்டி ‘இவர் யார்?’ என்று தங்களிடம் வினவினேன். அதற்கு நீங்கள் ‘இவர் யாரோ தெரியாது’ என்று விட்டு அங்கி ருந்து போய விட்டீர்கள். இது தங்களுக்கு நினைவிருக்கிறதா” என்றது. 

அவ் வார்த்தைகளைச் செவி மடுத்த, சாம்பற் பேட்டிற்கு பளீரென்று கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. பட்டென்று அது, அதனைக் காட்டிக் கொள்ளாத வகையில் முகத்தைத் தனது வழமையான நிலைக்கு மாற்றிக் கொண்டது. 

“நீங்கள் கூறியபடி ஒரு சம்பவம் நடந்தது உண்மை தான். ஆனால் நான் எனது அண்ணனை இவர் யாரோ தெரியாது என்று கூறியிருக்க மாட்டேன். நான் அப்படிச் சொன்னேனா?” என்றது. 

“சொல்லாமல் வேறு என்ன. சரியான ஆசாமிதான் நீ” என்றது கறுத்தப் பேடு. அதன் பிறகு. சாம்பற் பேட்டினால் எதுவுமே பேச முடியாமற் போய் விட்டது; கையும், மெய்யுமாகப் பிடிபட்ட கள்வனைப் போல் விழித்தது. நிலைமையைச் சமாளிப்பதற்காக, 

“போன விஷயத்தையெல்லாம் கிண்டிக் கொண்டு நிற்காமல், விட்டெறிந்து லிட்டு வேறு வேலையைப் பாருங்கள்” என்றது. 

இப்போது கறுத்தப் பேடு சிந்தனையுள் பிரவேசித்தது. அது சில வினாடிகளில், ‘தான் அவ்வாறு கூறியது உண்மை என்பதைச் சாம்பற் பேடு உள்ளூர ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அதனைப் பகிரங்கத்திலே ஏற்றுக் கொள்வது தான் அதற்குச் சங்கடமாய் இருக்கிறது’ என்று உணர்ந்து கொண்டது. 

மறுகணம் கறுத்தப் பேடு, சாம்பற் பேட்டுடன் தொடர்பான பழைய விடயத்தை நிறுத்திக் கொண்டு, தற்போது இங்கு நிலவும் நிதர்சனமான நிலையை எடுத்து விளக்கியது: 

“தோழி, உங்களைக் குறித்து நான் இதைச் சொல்ல வில்லை. பொதுவாகவே நமது சுபாவம் இப்படித்தான் இருக்கிறது. 

ஒருவர் சிறப்பான ஒரு கருமத்தைச் செய்து விட்டால், உறவு முறை இல்லாதவர்களுங் கூட இவர் எங்களுடைய முன்னம்மாவின் மகன் அல்லது பெரியம்மாவின் மகன் அல்லது மச்சான் என்று இவ்வாறு உறவு முறை சொல்லிக் கொண்டு முன்னே குதிப்பார்கள். குறைந்தது எங்கள் குடும்பம் என்றாவது சொல்லிக் கொண்டு நெருங்கி வருவார்கள். அதே வேளை, இழிவான அல்லது குறைவான கருமத்தை ஒருவர் செய்து விட்டால் அவரது உடன் பிறப் புகள் கூட, இவரை எனக்குத் தெரியாதே, இவர் யாரோ என்று மெல்லத் தலையைப் பின்னே இழுத்துக் கொள்ளு வார்கள். அல்லது தங்களைக் காட்டிக் கொள்ளாது மெல்ல மறைந்து விடுவார்கள்”

”ஆம்..ஆம். நீங்கள் சொல்வது மிகவும் வாஸ்தவம்” இது வெள்ளைப் பேடு. 

இப்போது சாம்பற் பேடோ, தலையைத் தொங்க விட்டிருந்தது. 

– தினகரன் வார மஞ்சரி 1990.06.03.

– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.

உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *