(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு பருந்து எலி ஒன்றைத் தூக்கிக் கொண்டு சென்றது. அந்த எலி எப்படியோ வளைந்து நெளிந்து அந்தப் பருந்தின் வாயிலிருந்து தப்பிக் கீழே விழுந்தது. கீழே வந்து கொண்டிருந்த எலி முனிவருடைய கையில் வந்து தொப்பென்று விழுந்தது.
தியானம் கலைந்து கண் விழித்த முனிவர் தன் கையில் விழுந்த எலியைக் கூர்ந்து நோக்கினார் தன் தவ வலிமையினால் ஒரு மந்திரம் கூறி அப்போதே அந்த எலியை ஓர் அழகிய பெண்ணாக மாற்றினார். தன் மனைவியிடம் கொடுத்து நன்றாக வளர்க்கும்படி கூறினார். அவ்வாறே முனிவர் மனைவி அந்த அழகிய பெண்ணை வளர்த்துப் பெரியவளாக்கினாள்.
பெரியவளாகிய அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டிய பருவம் வந்தது. அந்தப் பெண்ணை உலகத்தில் பெரிய பலவான் ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று முனிவர் விரும்பினார். பெரிய பலவான் யாரென்று யோசித்த போது சூரியன் தான் என்று அவருக்குத் தோன்றியது. உடனே அவர் தன் தவ சக்தியினால், சூரியனைத் தன் முன் வரும்படி கட்டளையிட்டார்.
அவனிடம், “ நீ இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்” என்று கூறினார்.
அதற்குச் சூரியன், ‘முனிவரே என்னைக் காட்டிலும் பலவான் என்னை மறைக்கும் மேகம் தான் அவனுக்குக் கட்டிக் கொடுப்பதுதான் சிறப்பு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
முனிவர் மேகத்தை அழைத்தார்.
மேகம் வந்து ‘ஐயா, முனிவரே என்னைக் காட்டிலும் பலவான், என்னைத் தூள்தூளாகப் பறக்கச் செய்யும் காற்றுதான். காற்றுக்கே கல்யாணம் செய்து வையுங்கள்” என்று சொல்லி விட்டுப் போனான்.
காற்றை அழைத்து முனிவர் தம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்.
‘என்னை மறைத்துத் தடுத்து விடும் சக்தி பெற்ற மலையைக் காட்டிலும் நான் பலவான் அல்ல! அந்த மலைக்கே உங்கள் பெண்ணைக் கொடுப்பது தான் பொருந்தும்’ என்று சொல்லி விட்டுப்போய் விட்டான் காற்று.
மலையரசனை அழைத்துத் தன் மகளை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார் முனிவர்.
‘உலகத்தில் நான் என்ன பலவானா? என்னை அறுத்தெடுக்கும் எலியே பலவான். எலியரசனுக்கே இவள் ஏற்றவள்’ என்று ஆலோசனை கூறி விட்டு அகன்றான் மலையரசன்.
முனிவர் எலியரசனை யழைத்தார்.
எலியரசன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கவில்லை.
முனிவரே, இவள் என் வளைக்குள் வந்தால் நான் இவளை மணம் புரிந்து கொள்கிறேன்’ என்றான் எலியரசன்.
பெண் எப்படி வளைக்குள் போகமுடியும்? ஆகையால் மறுபடியும் எலியாக்கி வளைக்குள் அனுப்பினார் முனிவர்.
பெண்ணாக மாறிய எலி மீண்டும் எலியாகவே ஆகி விட்டது.
எலியரசன் அதை மணம் புரிந்துகொண்டான். இன்பமாக அந்தப் பெண்ணெலியுடன் வாழ்ந்து வந்தான்.
செயற்கையில் தன் நிலையை யாரும் உயர்த்திக் கொள்ள முடியாது.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 3 – அடுத்துக் கெடுத்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.