ஆற்றின் கரையில், ஒருவன் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அதுவே அவனுடைய தொழில், அவனுடைய முதுகு சிறிது வளைந்து இருந்தது.
அந்தப் பக்கமாகச் செல்லும் சிறுவர்கள், அவனைக் கூனன் என்று சொல்லி, கேலி செய்வார்கள். அதற்காக அவன் வருத்தப்படவில்லை. சிறுவர்களின் பேச்சைக் காதில் வாங்காமல், தன் காரியத்திலேயே கண்ணாக இருந்தான்.
ஒரு நாள் சிறுவர்கள் சிலர் கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன், ஆற்றில் குளித்தான். சிறிது தூரத்தில் இருந்த சுழலில் அவன் சிக்கிக் கொண்டு தவித்தான். அவனுக்கு நீச்சல் தெரியாது. மற்ற சிறுவர்களுக்கும் நீச்சல் தெரியாது. எதுவும் செய்ய முடியாமல் கூச்சலிட்டனர்.
அவர்கள் போட்ட கூச்சலைக் கேட்ட கூனன், வேகமாக ஓடி ஆற்றில் குதித்து, மூழ்கிக் கொண்டிருந்த சிறுவனைப் பிடித்து இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்தான்.
சிறுவன் குடித்திருந்த நீரை வெளியேற்றினான். அவன் உயிர் பிழைத்துக் கொண்டான்.
சிறுவர்கள் கூனனிடம் நன்றி கூறி, தங்களை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டனர். அது முதல் கூனன் என்று கேலி செய்வது இல்லை .
எவரையும் கேலியாகப் பேசக் கூடாது.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.