சக்கரவர்த்தி அக்பருக்கு அமைச்சர் பீர்பாலிடம் எவ்வளவு மதிப்பும் பிரியமும் உண்டோ அதேபோல் கோபமும் அவரிடம் உண்டாகும். பிறகு சாமாதானம் ஏற்படும், இவ்வாறு அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமானது.
ஒரு நாள் அக்பர் பீர்பால் மீது கோபம் கொண்டு, உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டு விட்டார்.
பீர்பாலும் அரசரின் உத்தரவுக்குப் பணிந்து, தம்முடைய விசுவாசமுள்ள பணியாளுடன் நாட்டை விட்டுப் புறப்பட்டார். வழியில் வேறு ஒரு நாட்டை அடைந்து அங்கே தங்கினார்கள்.
அந்நாட்டின் கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்து வர பீர்பால் பணியாளுடன் புறப்பட்டார்.
கடைத் தெருவில் நடைபாதையில் ஒருவன் உட்கார்ந்து கொண்டு, தெருவில், போவோர் வருவோரைப் பார்த்து, ‘ஒரு உபதேசத்துக்கு ஆயிரம் ரூபாய்; நான்கு உபதேச மொழிகள் எம்மிடம் உள்ளன. அதற்கு நான்கு ஆயிரம் ரூபாய்கள்!’ என்று விலை கூறிக்கொண்டிருந்தான்.
ஆயிரம் ரூபாய் பெருமானமுள்ள உபதேசமொழி என்னவென்றுதான் கேட்டுப் பார்ப்போமே என்று பீர்பாலுக்கு ஒரு ஆசை உண்டாயிற்று.
அவனிடம் சென்று, ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு உபதேச மொழியைச் சொல்லும்படி கேட்டார் பீர்பால்.
ரூபாயைப் பெற்றுக் கொண்டு அவன்:
“சிறிது பெரிதானாலும் அதைச் சிறிது என்று எண்ணி விடக் கூடாது!” என்று பகர்ந்தான் – இது முதல் உபதேச மொழி!
பீர்பால் மறுபடியும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, இரண்டாவது உபதேச மொழியையும் கேட்க ஆவலாக இருந்தார்.
மறுபடியும் ரூபாயைப் பெற்றுக்கொண்டு அவன்:
“யாரிடமாவது குற்றம் கண்டால் அதை வெளிப்படுத்தக் கூடாது!” என்று கூறினான் – இது இரண்டாவது உபதேச மொழி!
மறுபடியும் ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து மூன்றாவது பொன்மொழிகயைக் கேட்கத் தயாரானார் பீர்பால்.
மூன்றாவதாக ஆயிரம் ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு அவன்:
“யாராயினும் விருந்துக்கு அழைத்தால், எத்தகைய அலுவல் இருந்தாலும் அதை விடுத்து விருந்துக்குச் செல்ல வேண்டும்” என்று மொழிந்தான் – இது மூன்றாவது உபதேச மொழி!
இன்னும் ஒன்றுதானே, அதையும் கேட்டுவிடுவோமே என்ற ஆவலில் மீண்டும் ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து விட்டார் பீர்பால்.
நான்காவதாக, ஆயிரம் ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு அவன்:
“யாரிடமும் ஊழியம் செய்யக்கூடாது!” என்றான். – இது நான்காவது உபதேச மொழி!
இப்படியாக நான்கு ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து நான்கு உபதேச மொழிகளையும் அறிந்து கொண்டார்.
அந்த நாட்டிலேயே பீர்பால் சில காலம் தங்கலானார்.
சில நாட்களில் அவருடைய ஊழியன் அவரை விட்டு விலகி விட்டான்.
பீர்பால் தனியாகக் காலம் கழிக்க வேண்டியதாயிற்று. கொண்டு சென்ற ரூபாய்கள் முழுதும் செலவழிந்து விட்டன. கடைசியில் சிரமத்துடன் போராடினார். வறுமையால் துன்புற்று, பசியோடு ஒரு மரத்தின் நிழலில் படுத்து உறங்கினார்.
முன்பு அக்பர் அரண்மனையில் ஊழியம் புரிந்த ஒருவன் அந்நகருக்கு அதிபதியாயிருந்தான். அவன் நகர்வலம் வரும்பொழுது மரநிழலில் படுத்திருந்த பீர்பாலை அடையாளம் கண்டு கொண்டு, அவரை சபைக்கு அழைத்து வரும்படி சேவகனை அனுப்பினான்.
சபையில் வந்து நின்ற பீர்பாலைப் பார்த்து, ‘என்னைத் தெரிகிறதா? நான் யார்?’ என்று கேட்டான்.
‘நீங்கள் இந்நாட்டின் அதிபதி’ என்றார் பீர்பால்.
தம்மை இந்நாட்டின் அதிபதி என்று கூறியதும், தம்மை இன்னார் என்று அறிந்து கொள்ளாததும் மட்டற்ற மகிழ்ச்சியாயிருந்தது அதிபதிக்கு. ஆகவே, உடனே தனக்கு அமைச்சராக் இருக்கும்படி பீர்பாலைக் கேட்டுக் கொண்டார். பீர்பாலும் தம்முடைய அப்போதைய நிலைமையைக் கருதிச் சம்மதித்தார்.
சில நாட்கள் சென்றன!
அரசாங்க அலுவல் காரணமாக, பீர்பால் அந்தப்புரத்துக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அப்பொழுது, காவல் அதிகாரி ஒருவனும் பணிப்பெண் ஒருத்தியும் குடிவெறியில் சுயநினைவற்று, ஆடைகள் இன்றி அலங்கோலமான நிலையில் காணப்பட்டனர். அதைக் கண்ணுற்ற பீர்பால், தம்முடைய சால்வையை எடுத்து அவர்கள் மீது போர்த்தி விட்டு அப்பால் சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து, காவல் அதிகாரி எழுந்து பார்த்தான்; வெட்கக்கேடான நிலையை உணர்ந்து அங்கிருந்து ஓடிவிட்டான். அடுத்து எழுந்த பணிப்பெண், முன்ஜாக்கிரதையாக அரசனிடம் சென்று, அமைச்சர் பீர்பால் தன்னை மானபங்கம் செய்துவிட்டதாகவும் அதற்கு அத்தாட்சி, இதோ அவருடைய சால்வை என்றும் காண்பித்து முறையிட்டாள்.
சாட்சியத்தோடு கூறிய அந்தப் பணிப்பெண்ணின் சொல்லை நம்பிய அரசன் பீர்பால் மீது கோபம் கொண்டான். மேற்கொண்டு விசாரணை எதுவும் செய்ய விரும்பவில்லை. ஆனால், தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டான்.
அவசரமாக ஒரு கடிதம் எழுதி, அதைப் பீர்பாலிடம் கொடுத்து, இந்த ரகசிய கடிதத்தை உடனே சென்று, சேனாதிபதியிடம் சேர்ப்பிக்கும்படி கூறினான் அரசன்.
கடிதத்தைப் பெற்றுக்கொண்ட பீர்பால் சேனாதிபதியை நோக்கி விரைந்தார்.
நகரத்துப் பெரியவியாபாரி ஒருவர் வழியிலேயே பீர்பாலை நிறுத்தி, என் வீட்டில் ஒரு விருந்து, சிறிது நேரம் வந்து கலந்து கொண்டு செல்லலாம் என மிகவும் வற்புறுத்தினார். தான் ஒரு அவசர காரியமாக சேனாதிபதியைக் காணச் செல்வதாகவும் திரும்பி வரும்பொழுது கலந்து கொள்வதாகவும் கூறினார் பீர்பால். வியாபாரி அவரை விடுவதாக இல்லை. கடமையில் கருத்துடைய பீர்பால் வியாபாரியின் வேண்டுகாளை ஏற்று, அவர் வீட்டுக்குச் சென்று விருந்தில் கலந்து கொண்டார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பழைய காவல் அதிகாரி பீர்பாலை வணங்கி, நட்புக்கு இணங்குவதே பெருமை. நீங்கள் கொடுக்க வேண்டிய கடிதத்தைப் பத்திரமாகவும் அவசரமாகவும் சேனாதிபதியிடம் நான் கொடுத்துவிட்டு வருகிறேன். என்னை நம்பி ஒப்படையுங்கள் என்று வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுதலுக்கு இசைந்து, அவனிடம் கடிதத்தைக் கொடுத்தார் பீர்பால்.
விருந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
கடிதம் கொண்டு சென்ற காவல் அதிகாரியின் தலைவெட்டப்பட்டு ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு அவ்வழியாக வந்து கொண்டிருக்கிறார் சேனாதிபதி!
“இக்கடிதத்தைக் கொண்டு வருபவனின் தலையை உடனே வெட்டி தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு வரவும்” – இதுவே அந்தக் கடிதத்தில் அரசன் எழுதியிருந்த வாசகம்.
கடிதத்தைப் பீர்பாலிடமிருந்து வற்புறுத்தி வாங்கிச் சென்றவன் காவல் அதிகாரி.
சேனாதிபதியிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டு அரசனிடம் சென்றார் பீர்பால். அதைக் கண்ட அரசன் பிரமித்துப் போனான்.
“உம்முடைய தலையை அல்லவா வெட்டும்படி எழுதியிருந்தேன். காவல் அதிகாரி தலை வெட்டுண்ட மர்மம் என்ன?” என்று பீர்பாலிடம் கேட்டான் அரசன்.
“இதுதான், இறைவன் கட்டளை!” உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான்” என்று கூறி, தான் நாட்டை விட்டு வெளியேறி வந்தது முதல், அதுவரை நடந்தவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி விவரித்தார் பீர்பால். “இனி இங்கு இருப்பது முறையல்ல, எனக்கு உற்ற நண்பரும் அரசர் பெருந்தகையுமான அக்பரிடம் நான் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பீர்பாலை விட்டுப் பிரிய மனம் இல்லாத அரசன், விடை கொடுக்க மறுத்து, அங்கேயே தங்கும்படி வற்புறுத்தினான்.
நாலாயிரம் ரூபாய்கள் கொடுத்து தான் பெற்ற நான்கு உபதேச மொழிகளின் விவரத்தைக்கூறி, அவற்றில் மூன்றின் உண்மை சேதனை செய்யப்பட்டு விளங்கிவிட்டது. நான்காவது உபதேச மொழியான “யாரிடமும் ஊழியம் செய்யக்கூடாது” என்பதை நினைவு படுத்தி, இனி தன்னால் ஊழியம் புரிய இயலாது என்பதையும் எடுத்துக் கூறினார் பீர்பால்.
அரசனுக்கும் தன்னுடைய பழைய நிலைமை நினைவுக்கு வந்து வெட்கப்பட்டான். பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவரை மரியாதையுடன் அனுப்பிவைக்க முற்பட்டான்.
இதன் மத்தியில், அக்பருக்கு பீர்பால் இல்லாத குறை, பெருங்குறையாகத் தோன்றியது. நாடெங்கும் பீர்பாலைத் தேடிக்கண்டு பிடித்து வருமாறு ஆட்களை அனுப்பி வைத்தார்.
அக்பருடைய சேவகர்கள், பீர்பாலை வழியில் சந்தித்து, அரசரின் கட்டளையைத் தெரிவித்தார்கள். அவர்களுடன் சக்கரவர்த்தி அக்பரைக் காணப் புறப்பட்டார் பீர்பால்.
நெடுநாள் பிரிந்திருந்த பீர்பாலைக் கண்டதும் அக்பர், ‘நான் இழந்த ரத்தினத்தை மீண்டும் பெற்றேன்’ என்று மனமாரக் கூறி, பீர்பாலைக் கட்டித் தழுவி வரவேற்றார்.
தான் கற்றுக்கொண்ட நான்கு உபதேச மொழிகளையும் அக்பரிடம் விவரித்துக் கூறினார் பீர்பால்.
நீரே மகா புத்திசாலி, உமக்கு வேறு உபதேச மொழிகள் தேவையா?’ எனக் கூறிப் புகழ்ந்தார் அக்பர்.