தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: இளம் எழுத்தாளர்கள் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 249,775 
 
 

ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு நல்ல நீதிக் கதைகளைக் கூறி வளர்த்து வந்தார். அந்தத் தாய், கஷ்டப்பட்டாலும் தனது மகன் நல்லவனாக பிற்காலத்தில் வாழ்ந்து சிறப்புப் பெற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாள்.

உண்மைஅதனால் அவனுக்குத் தீய பழக்கங்கள், தீய நண்பர்கள் சேர்ந்துவிடாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.

அவன் வாலிபனான். வேலைக்குச் சென்றால்தான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

வேறு ஒரு ஊருக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. தாயைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற வருத்தம் இருந்தாலும், நன்கு வேலை பார்த்துத் தாயைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஊரை விட்டுக் கிளம்பினான்.

அவன் ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தாய் மிகுந்த அக்கறையுடன் செய்து முடித்தாள். அவன் கிளம்பும் நாள் வந்த போது தாய் அவனிடம் –

“மகனே! உனக்கு என்ன நேர்ந்தாலும் உண்மை பேசுவதை மட்டும் விட்டுவிடாதே! எங்கும் எப்போதும் யாரிடத்திலும் உண்மையை மட்டுமே நீ பேச வேண்டும். இதை மட்டும் மறக்காதே!’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.

அக்காலத்தில் எங்கு சென்றாலும் நடைப் பயணம்தான். வாகன வசதிகள் கிடையாது. ஆகவே, அந்த வாலிபன் ஒரு கூட்டாத்தாருடன் சேர்ந்து தனது பயணத்தைத் துவக்கினான்.

செல்லும் வழியில் சில கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தை வழிமறித்தனர். கூட்டத்தினரிடம் இருந்த பொருள்களையெல்லாம் பறித்தனர்.

அந்த வாலிபனிடம் ஒரு கொள்ளையன் வந்து, “உன்னிடம் என்ன உள்ளது?’ என்று கேட்டான்.

அப்போது, அந்த வாலிபன் தனது தாய் சொன்னது போல, மறைக்காமல் உண்மையைக் கூறினான் –

“என்னிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே உள்ளன…’

கொள்ளையர்கள் அவனைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஆச்சரியமைடந்தனர். அவன் சொன்னது போலவே அவனிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே இருந்தன.

கொள்ளையர்களின் தலைவன் அசந்து போனான்.

அந்த சிறிய வாலிபனிடம் இருந்த உண்மை பேசும் குணம் கொள்ளையனின் மனதைக் கரைத்தது.

ஆபத்திலும் இவ்வளவு நேர்மை, உண்மை ஒரு மனிதனிடம் காணப்பட்டதைக் கண்டு மனம் மாறினான்.

அன்றே தனது திருட்டுத் தொழிலை விட்டுவிட முடிவெடுத்தான். அவர்களிடமிருந்து திருடிய பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்ல மனிதனாக மாறி உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பிச் சென்றான், தனது கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு!

– முஜ்ஜம்மில் (மார்ச் 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *