(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த வீட்டுத் திண்ணையின் ஒரு மூலையிலே ஒரு பூனை சாவகாசமாகப் படுத்திருந்தது. கறுப்பு நிறம். நடுத்தர வயதையுடையது. காற்று நிரப்பிய பலூனைப் போல பருத்துக் கொழுத்திருந்தது. அதன் விழிகளோ அகலத் திறந்திருந்தன. அப்போது திண்ணையுள் திடீரென்று நுழைந்த ஒரு நாய் அந்தப் பூனையின் பக்கமாகப் பாய்ந்து உறுமியவாறு அதனை நெருங்கி நின்று கொண்டது. அதனைக் கவனித்த மறுகணமே பக்கென் றெழுந்து நின்ற அந்தப் பூனையோ மேனியைச் சிலிர்த் துக் கொண்டு சுற்று முற்றும் ஒரு முறை தன் விழி களைச் சுழல விட்டது. தப்பி ஓடிக்கொள்ளவும் வழி யில்லை. எதிர் பாராத இந்த நிகழ்ச்சியினால் அதிர்ந்து போன அந்தப் பூனை அப்படியே நின்றது. சிலவினாடி களின் பின் அது தன்னை சுதாகரித்துக் கொண்டு தலை நிமிர்ந்தது.
“ஐயா பெரியவரே. இதோ… நீங்கள் நிற்கும் நிலையைப் பார்த்தால் இப்போதும் என்னைக் கடிக்கத் தான் போகிறீர்கள் போல் தெரிகிறது. தயவுசெய்து இனி என்னைக் கடிக்காதீர்கள். நான் இங்கு வந்த நாள் முதல் நீங்கள் என்னைக் கண்ட போதெல்லாம் கடித்து வருத்தி வருகின்றீர்கள். அவ்வாறு நீங்கள் கடிக்கும் போதெல்லாம் இத்தோடு விட்டுவிடுவீர்கள், இத்தோடு விட்டுவிடுவீர்கள்… தான் பிரச்சினையைக் கூட்டிக் கொள்ளக்கூடாது…. என்ற எண்ணத்தினாலே நான் சும்மா இருந்து வந்தேன். ஆனால் நீங்களோ, என்னை விட்டு விலகுவதாகத் தெரிய வில்லையே… மீண்டு மொரு முறை சொல்கிறேன்… என்னைத் துன்பம் செய்ய வேண்டாம் என்று அந்தப் பூனை நாயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.
“பெரிய ஆள்போல கதை ஒரு மாதிரியாய்ப் போகிறது…சீ… பொடிப்பயலே..’ என்றவாறு அந்த நாய், பூனையைக் கெளவி உதறி எறிந்து விடுகிறது.
தரையிலே சரிந்து விழுந்த பூனை இப்போதும் பொறுமை இழக்கவில்லை. மீண்டும் எழுந்து நின்று மிக்க விநயத்தோடு விளம்புகிறது:
“பெரியவரே… நானும் உன்னைப்போல் ஒரு ஜீவன்தானே, என்னை ஏன் வீணாகக் கஷ்டப்படுத்து கிறாய்… நான் உனக்கு என்ன செய்கிறேன். தானுண்டு தன் கருமமுண்டு என்றுதானே நான் வாழ்ந்து வருகிறேன்” அந்தப் பூனை தன் இமைகளைப் படபடவென்று அடித்துக் கொள்கிறது.
”பயலே, நீ எப்போது பார்த்தாலும் சுறுசுறுப்பின்றி சவம்போலக் காட்சி தருகின்றாய்… உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கோபம் கோபமாக வருகிறது நீ எனக்கு முன்னே நின்றால் எப்போதும் இந்தப் பரிசு தான் உனக்குக் கிடைக்கும்”
நாயின் வதனத்தில் எள்ளும் கொள்ளும் பொரி கின்றன.
“எனது சுறுசுறுப்பை, வீரத்தை யெல்லாம் நான் உன்னிடம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள வேண்டுமா என்ன? நான் அதிக பரபரப் பின்றி அடக்கத்தோடு வாழவே விரும்புகிறேன். நான் அத்தியாவசிய காரியங்களை நிறை வேற்றிக் கொள்ள முனையும் போது அவை தாமாகவே வெளிப்படும். சும்மா காலங்களில் நான் பார்க்கச் சவம் போலவேதான் தெரிவேன். என்னைப் பார்த்தால் தங்களுக்குக் கோபம் வருகிற தென்றால் நீங்கள் என்னைப் பார்க்காமலிருந்தால் சரிதானே… என்ன?”
அந்தப் பூனை கம்பீரமாய் நின்றிருந்தது.
“அடே பயலே, என்ன சொன்னாய்…” என்றவாறு அந்த நாய் மீண்டும் பூனையைக் கௌவி உதறிவிடுகிறது.
நாயின் பிடியிலிருந்து விடுபட்ட பூனை தன் மேனி யிலே ஏற்பட்ட காயத்தை நக்கிவிட்டுக்கொண்டு நிமிர்கிறது. இப்பொழுது அந்தப் பூனையின் நெஞ்சிலே தன்மான உணர்வு விழித்துக் கொள்ள, கோபமும் கூடவே கொப் பளிக்கிறது.
மறுவினாடி அந்தப் பூனையோ, தன் செவிகளை மேலே உயர்த்தி மிக்க சினத்தோடு நாயை நோக்குகிறது. அவ்வளவுதான் தாமதம் அந்த நாய் பாய்ந்து பூனையைக் கௌவிக் கொள்கிறது. ஓரிரு கணங்களில் நாயின் பிடியி லிருந்து தன்னை ஒருவாறு மீட்டுக்கொண்ட அந்தப் பூனை சீறிப்பாய்ந்து பலங்கொண்ட மட்டும் தன் கால்களால் அந்த நாயைத் தாக்கியதோடு, இடையிடையே கடித்து விட்டுக் கொண்டிருந்தது.
நாயும் விடாது பாய்ந்து பாய்ந்து தன் வாயினால் அந்தப் பூனையைக் கெளவிக் கடித்துக் கொண்டிருந்தது. இவ்வாறாக அவ்விரண்டுக்குமிடையே சற்று நேரம் உக்கிரமான போர். பின் இரண்டும் களைத்துத் தாமா கவே கலைந்து இரு திக்குகளிலே சென்று நின்று கொண்டன. அவை இரண்டினதும் வதனத்திலும், மேனியிலும் ஏற்பட்டிருந்த காயங்களிலிருந்து குருதி கசிந்து கொண்டிருந்தது.
விநாடிகள் சில விடை பெற்றன.
ப்பொழுது பூனை தன் மேனியிலே பட்ட காயங் களை மெல்ல நக்கிவிட்டுக் கொள்ள நாயோ, பூனை தன்மீது பிரயோகித்த பலம்மிக்க தாக்குதலை எண்ணி யெண்ணி அதிர்ச்சியடைகிறது.
அடுத்த நாள் காலை.
அந்த வீட்டு முற்றத்திலே, அந்தப் பூனை தன் பார்வையை எதிரே விரித்துவிட்டு காலை வெயிலின் இதமான சுகத்தை அநுபவித்தவாறு படுத்திருந்தது. அவ்வேளை அங்கு வந்த அந்த நாய், பூனையைக் கண்டதும் தன் வீரம் வேகமெல்லாம் அடங்கிப்போய் அதன் பக்க மாக மிக்க மரியாதையோடு நடந்து அதனைக் கடக்கிறது. அப்போது அதன் பார்வையோ பூனையை நோக்கி பின் வருமாறு பகர்வது போன்றிருந்தது.
“அடக்க முடையோரெல்லாம் பலவீனர்களென்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்த காரணத்தினாலேயே நான் விடயத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள முயலாமல் தங்கள் வாழ்க்கையிலே வீணாகக் குறுக்கிட்டுத் தங்களை மிக மிகச் சிரமப்படுத்தி விட்டேன். இறுதியாகத் தங்கள் நிலைபற்றி மிகவும் தெளிவாக நீங்கள் எடுத்துக் கூறியுங் கூட அதனையும் நான் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் நேற்று நமக்கிடையே நடந்த மோதலின் பின்புதான், நாம் ஓரிடத்திலே வாழ்ந்த குறுகியகாலப் பகுதிக் குள்ளேயே தாங்கள் கூறியது போல, தங்கள் போக்கு. அமைந்து விட்டிருந்ததை நான் உணர்ந்து கொண்டதோடு, அடக்கமானவர் களெல்லாம் பலவீனர்களல்ல, அவர்களிலே பலமானவர்களும் இருக்கிறார்கள் என்ற ஓர் உண்மையினையும் என்னால் அறிந்து கொள்ளமுடிந்தது. இனி நான் தங்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கையிலும் வீணாகக் குறுக்கிட மாட்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்”
வெகு சொகுசாகப் படுத்திருந்த பூனை, நாயின் இந்தப் பார்வையையும் போக்கையும் ஊன்றி அவதானித்து விட்டு, புன் சிரிப்பொன்றை மட்டுமே உதிர்த்து விட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து உறக்கம் அதன் விழி களைச் சுயாதீனமாகத் தழுவிக் கொள்கிறது.
– தினகரன் வார மஞ்சரி – 1984.10.07.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.