உண்மை ஒரு நாளைக்கு வெளிப்படும்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 20,266 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில் இக் கதைகள் தமிழில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

I

சுந்தரேசன் சந்தைக்குச் செல்லல்

பார்வதி புரத்தில் சுந்தரேசன் செட்டி சிறந்த வியாபாரி. அவனுக்கு அவ்வூரில் இரண்டு கடைகளும் ஒரு வீடும் உண்டு; கையில் சிறிது ரொக்கமும் நிலமும் உண்டு. அவ்வூரில் அவன் மிகவும் நல்லவன் என்று பேர் பெற்றவன். அவன் இளமையில் தீயவர் சிலர் கூட்டுறவால் சிறிது குடிப்பழக்கத்துக்கு உட்பட்டிருந்தான். அவனுக்குத் திருமண மாகி மனைவி வீட்டிற்கு வந்த பின்பு, அந்தக் கெட்ட பழக்கம் அவனை விட்டு அறவே ஒழிந் தது. மற்ற வியாபாரிகளைப்போல எப்பொழு தும் பணமே குறி என்று அதில் மட்டும் கருத் தைச் செலுத்தாமல், அவன் தன் அறிவைப் பல விதங்களிலும் வளர்த்து வந்தான்; புதிது புதிதாக வெளி வரும் நல்ல நூல்களை வாங்கி வாசிப்பான்; தினசரிப் பத்திரிகைகளை வாங்கி வாசிப்பான். இசையிலும் அவனுக்குச் சிறந்த ஞானம் உண்டு. அவன் நல்ல குரற்செல்வ மும் பெற்றவன். பத்தி கனிந்த பாடல்களைத் தன் இன்னிசைக் குரலில் அவன் பாடுகையில், எவர் மனமும் உருகாமல் இராது. சுந்தரேசன் வேடிக்கையான பேர்வழி; யாரிடமும் கலகல வென்று இனிமையாகப் பேசுவான். அவனி டம் எல்லாரும் அன்பு கொண்டனர். அவ் வூரில் அவன் மதிப்புக்குரியவனாய் விளங் கினான்.

பார்வதிபுரத்திலிருந்து ஐம்பது கல்லுக்கு அப்பாலுள்ள முருகனூர் என்னும் ஊரில் சுந்தரேசன் தன் சரக்குகளைக் கொண்டுபோய் விற்று வருவது வழக்கம். அவன் ஒரு நாள் அவ்வாறு போக எண்ணித் தன் மனைவியிடம் விடை கேட்டான். அப்பொழுது அவன் மனைவி, “நாதரே, இன்று நீங்கள் புறப்பட வேண்டா. நேற்றிரவு நான் ஒரு கொடிய கனவு கண்டேன். நீங்கள் பட்டணத்திலிருந்து திரும்பிவரும்பொழுது உங்களது தலை நரைத்திருந்தது. நீங்கள் கிழப்பருவமெய்தியிருந்தீர்கள். இதனால் உங்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமோ என்று என் மனம் பதறுகிறது! நான் உங்களைத் தடை செய்ததாக எண்ணா தீர்கள். இன்று நீங்கள் போக வேண்டா” என்றாள்.

இதைக்கேட்ட சுந்தரேசன் கொல்லென்று சிரித்தான்; “அடி பைத்தியமே, உன் கனவி னால் எனக்கு நன்மையே உண்டாகப் போகி றது. தலை நரைத்தது நான் மிகுந்த செல்வத்துடன் திரும்பி வருவேன் என்பதற்கு அறிகுறியே தவிர, வேறன்று. என் சரக்குகள் முழுமையும் நல்ல விலைக்கு விற்கும். நான் மிகுந்த இலாபம் அடைவேன். திரும்பி வரும் பொழுது உனக்கு நல்ல ஆடைகளையும் அணி களையும் நான் வாங்கி வருகிறேனா இல்லையா பார்! இது உண்மை. நீ கவலைப்பட வேண்டா. மகிழ்வுடன் இரு. விரைவில் திரும்பிவிடுவேன்” என்று சொல்லி, அவளைச் சமாதானப்படுத்தி, அவளிடம் விடை பெற்றுக் கொண்டான்.

சுந்தரேசன் சாமான்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு முருகனூருக்குப் பயணம் ஆனான்; போகும் வழியில் தனக்கு அறிமுக மான வேறொரு வியாபாரியைச் சந்தித்தான். இருவரும் சேர்ந்தே பயணம் செய்தனர். சித்தன் பட்டி என்னும் ஊரை அடைந்ததும் இருட்டிவிட்டது. அந்த ஊரிலுள்ள விடுதி யிலேயே இருவரும் அன்றிரவு தங்கினர். இரவு சாப்பாடானதும் சுந்தரேசனும் அந்த வியாபாரியும் வெவ்வேறு அறைகளில் படுத்துறங்கினார்கள்.

சுந்தரேசன், அதிகாலையிலே எழுந்திருக் கும் வழக்கமுள்ளவன்; வெயிலின் கொடுமைக்கு உள்ளாகாமல் சீக்கிரம் ஊர் போய்ச் சேரலாமென்ற எண்ணத்துடன், அன்று விடியற்காலம் மிக விரைவாய் எழுந்துவிட்டான்; விடுதிக்காரனுக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி வண்டியைக் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.

II

எதிர்பாராத தொல்லை

சுந்தரேசன் சுமார் பத்து மணிக்கு வழியிலுள்ள தங்கும் விடுதியில் தன் சாமான்களை இறக்கி வைத்துவிட்டுச் சிறிது இளைப்பாறினான்; பின்னர்க் களிப்புடன் பாடிக்கொண்டிருந்தான். அப்பொழுது விடுதியின் வாயிலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. அதிலிருந்து போலீஸ் அலுவலர் ஒருவரும், இரண்டு சிப்பாய்களும் இறங்கினார்கள். அந்த அலுவலர் நேரே சுந்தரேசனை அணுகி, அவன் பக்கத்தில் உட்கார்ந்து, “நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றார்.

சு : ஐயா, என் பெயர் சுந்தரேசன் செட்டி. நான் பார்வதி புரத்திலிருந்து வருகிறேன்.

அ: நேற்றிரவு நீர் எங்குத் தங்கினீர்?

சு: வரும் வழியில் சித்தன் பட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கினேன்.

அ : உம்முடன் வேறு யாராவது வந் திருந்தனரா, அல்லது நீர் மட்டுந்தான் அங்குத் தங்கியிருந்தீரர்?

சு: என் நண்பர் ஒரு வியாபாரியுங்கூட வந்திருந்தார்.

அ: இன்று காலையில் உம் நண்பரைப் பார்த்தீரா?

சு: நான் பார்க்கவில்லை.

அ : எல்லாரும் எழுந்திருப்பதற்கு முன்னரே அதிகாலையிலேயே நீர் விடுதியிலிருந்து வருவதற்குக் காரணம் என்ன?

இந்தமாதிரிக் கேள்விகள் சுந்தரேசனுக்கு மிகவும் வியப்பை உண்டாக்கின.

சு: இதென்ன! நீங்கள் ஒரு கைதியைக் குறுக்கு விசாரணை செய்வதுபோல என்னிடம் கேள்விகள் கேட்கிறீர்களே! நான் என்ன திருடனா, அல்லது கொலைக்குற்றம் செய்தேனா? ஏனையா, இம்மாதிரி வேண்டாக் கேள்விகள் கேட்கிறீர்கள்? நான் ஒரு வியாபாரி. என் சரக்குகளை விற்பதற்காக முருகனூர் போகிறேன்.

அலுவலர், “ஐயா, நான் போலீஸ் அலுவலன். உம்முடன் இரவில் விடுதியில் தங்கியிருந்த வியாபாரி இன்று விடியற்காலம் படுக்கையிலே கொலையுண்டிருக்கிறார். உம்மீது எங்களுக்கு ஐயம் இருக்கிறது. ஆகையால், உம் சாமான்களைச் சோதனை செய்யப்போகிறோம்” என்றார்.

அந்த அலுவலரும் அவருடைய சேவகர் களும் சுந்தரேசன் மூட்டை முடிச்சுக்களை யெல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்த்து, சோதனை செய்தார்கள். இரண்டு நிமிடங்களுக்குள் அந்தப் போலீஸார் ஒரு மூட்டையிலிருந்து ஒரு கத்தியை உருவினார். அதில் இரத்தம் தோய்ந்திருந்தது.

“ஐயா, கையும் மெய்யுமாக அகப்பட்டுக்கொண்டீரே! இந்தக் கத்தி யாருடையது? இதில் இரத்தக் கறை ஏற்பட்ட காரணம் என்ன? மிகுந்த யோக்கியர் போலச் சில நாழிகைக்கு முன்பு நடித்தீரே! என்ன திருதிருவென்று விழிக்கிறீர்!” என்றார் அலுவலர்.

தன் மூட்டையிலிருந்து ஒரு கத்தியை அந்த அலுவலர் எடுத்ததையும், அதில் இரத் தக் கறை ஏற்பட்டிருந்ததையும் பார்த்த சுந்தரேசன், மிகுந்த திகிலடைந்தான். அவன் உடம்பு பதறிற்று; கண்கள் சுழன்றன; உலகம் இருண்டது போலத் தோன்றிற்று; பேச நா எழவில்லை . அவன், “எ-ன-க்-கு-த் தெ-ரி-யா-து” என்று நாக்குழறத் தழுதழுத்த குரலில் பதில் உரைத்தான்.

அலுவலர், “உம்மைத் தவிர வேறு ஒரு வரும் அந்த அறையில் இல்லை. அறையோ, உட்பக்கம் தாழ் இடப்பட்டிருந்தது. எல்லாருக்கும் முன்பாகவே நீர் எழுந்து போய் விட்டீர். உம் மூட்டையிலிருந்துதான் நான் கத்தியை எடுத்தேன். நீர் இதை அறிவீர். கத்தியிலும் இரத்தக் கறை இருக்கின்றது. ஆகையால், வியாபாரியைக் கொலை செய்தவர் உம்மைத் தவிர வேறு யாருமில்லை. இதற்கு வேறு சாட்சி வேண்டுமா? அந்த வியாபாரி யிடமிருந்து எவ்வளவு பணம் கவர்ந்தீர்? உண்மையைச் சொல்லிவிடும்! இனி நடந்ததை மறைப்பதில் பயன் இல்லை,” என்றார்.

சுந்தரேசனுக்கு இன்னது செய்வது என்பது தெரியவில்லை. “என் மனைவி மக்கள் பேரில் ஆணையிட்டுச் சொல்லுகிறேன்! இஃது உண்மை. இந்தக் கத்தி என்னுடையதன்று. நான் கொண்டு வந்த பணத்தைத் தவிர, என்னிடம் வேறு பணம் இல்லை. இரவில் சாப்பாட்டிற்குப் பிறகு நான் அந்த வியாபாரியைப் பார்க்கவும் இல்லை. நான் பணத்திற்கு ஆசைப்பட்டவன் அல்லேன். நான் கொலை செய்யவுமில்லை. குற்றமற்ற என்மீது வீண் பழி சுமத்தாதீர்கள்?” என்று சுந்தரேசன் சொன்னான். அவன் பேசின மாதிரியும், அவனுடைய முகக் குறிகளும் அவன் ஒரு குற்றவாளியே என்று அந்த அலுவலரை நினைக்கச் செய்தன.

சுந்தரேசன் கைகளில் விலங்கு மாட்டப்பட்டது. அவனை வண்டியில் ஏற்றி அடுத்த பட்டணத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு போனார்கள். சுந்தரேசன் மனம் அனலிடைப் பட்ட மெழுகாய் உருகிற்று. “நான் ஒரு குற்றமும் செய்தறியேன்! என்னை ஏன் இந்த வீண் பழி வந்து சூழ்ந்துகொண்டது! கடவுளே, இதுவும் உன் செயலோ!” என்று கடவுளைத் துதித்தான்.

III

சிறை வாழ்வும் மனைவியின் வருகையும்

விசாரணை நாளும் வந்தது. பார்வதி புரத்தில் சுந்தரேசனைப் பற்றிப் பலரிடத் திலும் விசாரித்தார்கள். “இளமையில் குடிப் பழக்கத்துக்கு ஆட்பட்டிருந்தானே தவிர, அவ னிடம் வேறு ஒரு தீய பண்பும் இல்லை. அவன் மிகவும் நல்லவன்,” என்று எல்லாரும் ஒரு முகமாகவே கூறினர். யார் சொல்லி என்ன பயன்! விதியை யாரே வெல்ல வல்லவர் ? சுந்தரேசனுக்கு மாறாகச் சாட்சிகள் அமைந் தன. ஆகையால், சுந்தரேசன் குற்றவாளியே என்று தீர்ப்புச் சொல்லப்பட்டு, தண்டிக்கப் பட்டான். தான் குற்றவாளி அல்லவென்று அவன் எவ்வளவோ மன்றாடினான். ஒன்றும் பயன்படவில்லை.

சுந்தரேசனிடமிருந்து பணமும் சாமான் களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவன் கைதிக்குரிய உடையுடன் சிறையிலிருந்தான்.

தன் கணவன் கொலைக்குற்றம் செய்ததற்குச் சிறையில் இருக்கிறானென்பதைக் கேள்வி யுற்ற சுந்தரேசன் மனைவி தூண்டிலில் அகப்பட்ட மீன் போலத் துடித்தாள்; தன் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு சுந்தரேசனிருக்கும் பட்டணத்துக்கு வந்தாள்; சிறை அதிகாரிகளி டம் தன் கணவனைக் காண உத்தரவு பெற்று அவன் இருக்குமிடம் வந்தாள். ஒருவரை யொருவர் கண்டதும் துயரம் நெஞ்சைப் பிளக்க இருவரும் ‘கோ’வென்று அழுதனர்; சிறிது நேரம் பேச்சற்று இருந்தனர். “நீங்கள் கைதி உடையில் இங்கிருக்கும் கோலத்தைக் காண என் மனம் பொறுக்கவில்லையே! நான் அன்று உங்களைப் புறப்பட வேண்டா என்றேனே! அதை மீறி வந்தீர்களே! இனி நான் என்ன செய்வது! நான் திக்கற்றவள் ஆனேனே! ஐயோ! எனக்கு வேறு கதி ஏது?” என்று மேலும் மேலும் கூறி அழுதாள் மனைவி.

“குற்றமற்ற என்னை இவ்விதம் தண்டிப்பது நியாயமன்று. விடுதலை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டுப்பார். அழுவதாற்பயனென்ன? நோவதாற்பயன் என்ன? பங்கயத்தோன் எழுதாப்படி வருமோ? சலியாதிரு! மனத்தைத் தேற்றிக் கொள்!” என்றான் சுந்தரேசன்.

“நாதரே, நான் அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லையே! நீங்கள் ஏன் இந்தச் செயலைச் செய்யத் துணிந்தீர்கள்? உண்மையாகவே நீங்கள் கொலை செய்யவில்லையா? என்னிடம் ஒளியாமல் சொல்லுங்கள்!” என்று கேட்டாள் அவன் மனைவி.

“ஆ! நீயுங்கூடவா என்னை ஐயுறுகிறாய்!” என்று சுந்தரேசன் சொல்லி வாய் மூடுமுன் ஒரு சிறை அதிகாரி அவ்விடம் வந்து, “நேரமாய்விட்டது. இனி நீங்கள் இங்குப் பேசிக்கொண்டிருக்க முடியாது” என்று சொல்லி இருவரையும் பிரித்துவிட்டான். சுந்தரேசன் மனைவி கணவனிடம் விடை பெற்றுக்கொண்டாள்.

“என் மனைவியுங்கூட அல்லவா என்னை ஐயுறுகிறாள்! இனி என்னை யார்தான் நம்பப் போகிறார் ! நான் சிறைத் துன்பத்திற்காக வருந்தவில்லை. என்னைக் கொலையாளி என்றல்லவா உலகம் எண்ணும்! உண்மையில் நான் குற்றவாளி அல்லேன் என்பதை உலகத்தாருக்கு எப்படி விளக்கப்போகின்றேன்! இது ஒன்றுதான் என் மனத்தைப் புண்படுத்துகிறது! நான் என்ன சொல்லியும் ஒருவரும் நம்பவில்லையே? இறைவனே, நான் குற்றமற்றவன் என்பது உனக்கு மட்டும் தெரியும். நீயே எனக்கு இனிப் புகலிடம். என்னுடைய குறைகளை மனிதர்களிடம் சொல்லித் தீர்த்துக் கொள்ள முயலுவது வீண். இனி எனக்கு நீயே கதி. உனது அருளே எனக்குப் புகலிடம். அதி காரிகளிடம் மனுச் செய்து கொள்வதைக் காட்டிலும் உன்னிடம் என் குறைகளைச் சொல்லித் தீர்த்துக்கொள்வதே சிறந்தவழி. எல்லாம் உன் பொறுப்பு! நீ விட்டதே வழி!” என்று எண்ணிக் கடவுளைத் துதித்திருந்தான்.

அன்று முதல் சுந்தரேசன் கடவுளின் கருணையில் நம்பிக்கை கொண்டான் ; அவரை வேண்டுவதிலேயே தன் காலத்தைக் கழித்தான். அவனிடம் முன் இருந்த மகிழ்ச்சி போய்விட்டது. அவன் யாருடனும் பேசுவதில்லை. பொறுமை அவனிடம் குடி கொண்டது. கடவுள் நினைவு அவனிடம் நிலை பெற்றது. சுந்தரேசன் ஒரு புதிய மனிதனாய்விட்டான்.

அவனைச் சிறைச்சாலை ஏவலர்கள் மிகவும் கொடுமையாக நடத்தினார்கள்; சவுக்கால் அவனைப் பலமாக அடித்தார்கள். அதனால் அவன் உடல் முழுவதும் புண்ணாகி, இரத்தம் பெருகும். அவன் வலி பொறுக்க முடியாமல், “ஐயோ! ஐயோ!” என்று கதறுவான். இவ்வாறு சில திங்கள் கழிந்த பின் அவன் வேறு சிறைக்கு மாற்றப்பட்டான்.

சிறையில் அவன் பல விதச் சாமான்கள் செய்யக் கற்றுக்கொண்டான்; கைத்தொழிலில் நல்ல தேர்ச்சிபெற்றான்; தான் செய்த சாமான் களை விற்று வரும் பணத்தால் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி போன்ற நூல்களை வாங்கினான்; சிறையில் வெளிச்சம் இருக்கும் பொழுது அவற்றை வாசிப்பான்; மற்ற நேரங்களில் கடவுளை நினைத்து வேண்டுவான். அவனுடைய பொறுமையையும், தெய்வ பத்தியை யும் கண்ட சிறை அதிகாரிகள், அவனிடம் நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள். சுந்தரேசன் தன்னுடனிருந்த கைதிகளிடம் அன்பு காட்டி, நீதி நெறிகளை அவர்களுக்குக் கற்பித்து, அவர்களைச் சீர்திருத்தினான். சுந்தரேசனிடம் பழகினது காரணமாக மற்றக் கைதிகளிடம் முன் இருந்த தீய குணங்கள் நீங்கின. தெய்வபத்தி, உண்மை, பொறுமை முதலிய குணங்கள் அவர்களிடம் வேரூன்றித் தழைக்க ஆரம்பித்தன. அவர்கள் மனம் முற்றிலும் மாறுபாட்டை அடைந்தது. அவர்கள் சுந்தரேசனைக் குருவாகக் கொண்டு ஒழுகினார்கள். சிறை அதிகாரிகளிடம் தங்கள் குறைகளைத் தெரிவிக்க வேண்டின் சுந்தரேசனைக் கொண்டே தெரியப்படுத்துவார்கள்; தங்கள் சச்சரவுகளை அவனிடம் முறையிட்டுத் தீர்த்துக்கொள்வார்கள்.

சுமார் இருபத்தாறு ஆண்டுகள் சுந்தரே சன் சிறையில் கைதியாய் வாழ்ந்துவந்தான். அவன் தலை நரைத்துவிட்டது; தாடி நீண்டு வளர்ந்திருந்தது. அவன் தொண்டு கிழவனைப் போலக் காணப்பட்டான். அவன் மக்களிடமிருந்து யாதொரு செய்தியும் அவனுக்குத் தெரியவில்லை.

IV

புதிய கைதி சுப்பன் வருகை

ஒரு நாள் சில புதிய கைதிகள் வந்தார் கள். மற்றக் கைதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் சிறைத் தண்டனை அடைந்த காரணத்தை வினவினார்கள். ஒவ்வொருவனும் அவனவன் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருந்தான். சுந்தரேசன் வாடிய முகத்துடன் தலை கவிழ்ந்து அவர்களருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான். புதியவர்களாய் வந்த கைதிகளுள் சுமார் ஐம்பது வயதுள்ளவனும், நல்ல பலமுடையவனும், கறுப்பு நிற முள்ளவனுமான ஒருவன் தான் தண்டனை யடைந்த வரலாற்றைக் கூறும்போது, “நம்முடைய போலீஸ் நியாயத்தை என்னென்று சொல்வது! அவர்கள் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தண்டிப்பதைப் பார்த்தால், எனக்கு ஒரு பக்கம் சிரிப்பும், மற்றொரு பக்கம் கோபமும் வருகின்றன. நான் இப்பொழுது ஒரு குற்றமும் செய்யவில்லை. நான் திருடினதாகப் பொய்க் குற்றம் சாட்டி, அதற்குப் பல சாட்சிகளையும் கொண்டு வந்து, என்னை இங்கே உள்ளே தள்ளிவிட்டார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் உண்மையிலேயே நான் ஒரு பெரிய குற்றம் செய்தேன். அந்தக் குற்றத்தை இன்னும் இந்தப் போலீஸார்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் அந்தக் குற்றத்துக்காகத் தண்டனை அடைய வேண்டியவன். இப்பொழுது குற்றம் செய்யாதிருக்கையில் எனக்குத் தண்டனை கிடைத்திருக்கின்றது” என்றான்.

“அண்ணே, உன் பெயரென்ன? நீ எந்த ஊர்?” என்று அவனை மற்றவர்கள் கேட்டார்கள்.

“என் பெயர் சுப்பன். என் ஊர் பார்வதிபுரம். என் மனைவி மக்கள் எல்லாரும் அங்கே தான் இருக்கிறார்கள்” என்றான் புதுக் கைதி.

தன் ஊர்ப்பெயரைக் கேட்டதும் சுந்தரேசன் தலை நிமிர்ந்து சுப்பன் பக்கம் திரும்பினான். “சுப்பா, பார்வதிபுரத்தில் சுந்தரேசன் செட்டியாரை உனக்குத் தெரியுமா? அவர் வியாபாரம் எப்படியிருக்கிறது? அவர் குடும்ப நலத்தைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான் சுந்தரேசன்.

“தெரியாமலென்ன? நன்றாய்த் தெரியும். சுந்தரேசன் செட்டியார் பெரிய பணக்காரர். அவ்வூரிலும் அவருக்கு நல்ல பெயர்தான். ஆனால், அவர் ஏதோ கொலை செய்தாரென்று அவரைத் தண்டித்துவிட்டார்களாம். அவரும் நம்மைப்போல அரசினர் விருந்தாளியாய்த் தான் இருக்கிறாராம். உம்மைப் பார்த்தால் நல்லவர் போலத் தோற்றுகிறதே! உமக்கு இந்தக் கதி வந்ததன் காரணம் யாதோ?” என்று சுந்தரேசனைக் கேட்டான் சுப்பன்.

சுந்தரேசன் சிறிது நேரம் பேசாதிருந்தான்; பின்பு, “நான் செய்த பாவத்தை அனுபவிக்கிறேன்! சுமார் இருபத்தாறு ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறேன்!” என்று கூறினான். “நீர் அப்படி என்ன குற்றஞ் செய்துவிட்டீர்?” என்று மறுபடியும் சுப்பன் வினவ, சுந்தரேசன், “நான் கொடியவன். இந்தத் தண்டனை எனக்கு நியாயமே” என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்தான். இதைத்தவிர வேறொன்றும் அவன் சொல்ல வில்லை.

ஆனால், மற்றக் கைதிகள் சுந்தரேசன் வரலாற்றைச் சுப்பனுக்குத் தெரிவித்தார்கள்; “யாரோ ஒரு படுபாவி ஒரு வியாபாரியைக் கொன்றுவிட்டு அந்தக் கத்தியைச் சுந்தரேசர் மூட்டையில் வைத்துவிட்டுத் தப்பிவிட்டான். அதற்காகச் சுந்தரேசரே கொலை செய்தார் என்று அதிகாரிகள் அவரைத் தண்டித்திருக்கிறார்கள்,” என்றார்கள்.

திடீரெனச் சுப்பன் முகத்தோற்றம் மாறியது. அவன் தேகம் நடுங்கிற்று. அவன் பிறர் தன்னைச் சந்தேகிக்கா வண்ணம் ஒரு விதமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “என்ன ஆச்சரியம்! மிகவும் அழகாக இருக்கிறது இந்தச் சமாசாரம்! செட்டியாரே, நீர் இவ்வளவு சீக்கிரம் ஒரு பெரிய கிழவராய்விட்டீரே ! ஆச்சரியம்!” என்று சுந்தரேசனைப் பார்த்துச் சொன்னான். அவன் சொன்ன வார்த்தைகளிலிருந்து வியாபாரியைக் கொன்றவன் சுப்பனுக்குத் தெரிந்திருக்கலாமோ என்று சுந்தரேசன் சந்தேகித்தான். சுந்தரேசன் சுப்பனிடம், “இந்தக் கொலையைப்பற்றி நீ கேள்விப்பட்டிருக்கிறாயா? என்னைக்கூட உனக்குத் தெரியும் போலிருக்கிறதே! வியாபாரியைக் கொன்றவன் யாரென்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான். இந்தக் கேள்விகளைக் கேட்டதும் சுப்பன் சிரித்து, “நல்ல கேள்வி கேட்டீர்! யாருடைய பையில் கத்தி இருந்ததோ அவனே வியாபாரியைக் கொன்றிருக்க வேண்டும். மூட்டையைத் தலையணையாக வைத்துப் படுத்திருக்கும் பொழுது அதனுள் வேறொருவன் கத்தியை எவ்வாறு வைக்க முடியும்? அப்படியே வைத்தாலும், அப்பொழுது நீர் எழுந்து விடமாட்டீரோ?” என்றான். இவ்வார்த்தைகள் சுந்தரேசன் சுப்பனைப்பற்றிக் கொண்டிருந்த சந்தேகத்தைப் பலப்படுத்தின. அவன் சுப்பன் தான் வியாபாரியைக் கொன்றிருக்க வேண்டும் என்று நிச்சயித்தான். சுந்தரேசன் உடனே அவ் விடம் விட்டு அகன்றான்.

V

சுந்தரேசன் மனக்கலக்கம்

அன்று இரவெல்லாம் சுந்தரேசனுக்குத் தூக்கமில்லை. கடவுளை அடிக்கடி நினைத்தான்; வேண்டினான். மனத்தில் அமைதி ஏற்படவில்லை. தான் பார்வதிபுரத்தில் கவலையற்றுக் காலங்கழித்ததும், சந்தைக்குப் புறப்பட்ட அன்று தன் மனைவி தடுத்ததும், வரும் வழியிலுள்ள விடுதியில் தான் கைது செய்யப்பட்ட தும், சிறையில் மனைவி மக்களைச் சந்தித்த தும், கடைசியாக மனைவி சொன்ன வார்த் தைகளும், தான் கசையடி பட்டதும், இருபத்தாறு ஆண்டு சிறை வாழ்வும் ஒன்றன் பின் ஒன்றாக அவன் மனத்தில் தோன்றின. அவற்றை நினைக்க நினைக்க உலக வாழ்க்கை யிலும் வெறுப்புண்டாயிற்று. அவன் தற் கொலை செய்து கொள்ள எண்ணினான்; “எல் லாம் அந்தப் பாவி சுப்பனாலேயே நேர்ந்தன! அவனால் அல்லவா நான் இந்தக் கதிக்கு ஆளானேன்! அவனைப் பழிக்குப்பழி வாங்கியே தீரவேண்டும்!” என்று எண்ணினான். இரவு முழுவதும் இவ்வாறு கழிந்த போதிலும் அவன் மனக்கலக்கம் நீங்கவில்லை.

இவ்வாறு இரண்டு வாரங்கள் சென்றன. சுந்தரேசன் ஒரு நாள் தன் அறையில் ஏதோ நினைத்துக்கொண்டு இங்குமங்கும் உலாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது சுவரின் பக் கத்தில் பூமியின் அடியிலிருந்து மண் மேலே வந்து விழுந்து கொண்டிருப்பதைப் பார்த் தான் ; சிறிது நேரத்திற்கெல்லாம் பூமியின் அடியிலிருந்து சுப்பன் மேலே வந்து தன் முன் நிற்பதைக் கண்டான். அவனைக் கண்ட தும் சுந்தரேசனுக்குக் கோபமும் அச்சமும் உண்டாயின. அவன் வெறுப்புடன் மறுபக்கம் திரும்பிக்கொண்டான். ஆனால், சுப்பன் அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, “நான் தான் இவ்விதம் மறு அறையிலிருந்து நிலவறை தோண்டி இங்கு வந்தேன்; இந்த வேலையை ஒருவரும் அறியாதபடி சில நாளாகச் செய்து வருகிறேன்; அன்றன்று தோண்டும் பொழுது உண்டாகும் மண்ணை என் உடையினுள் மறைத்து வைத்திருந்து வேலை செய்ய வெளியே செல்லுகையில் அதைக் கொட்டிவிடுகிறேன். கிழவரே, இதைப்பற்றி நீர் யாரிடமும் சொல்லலாகாது. ஏதாவது சொன்னீரோ, பார்த்துக்கொள்ளும்! இந்த உண்மை அதிகாரிகளுக்குத் தெரிந்தால் என் உயிரை வாங்கிவிடுவார்கள்! ஆனால், முதலில் உம்மை எமனுலகுக்கு அனுப்பிவிடுவேன் என் பது நினைவிருக்கட்டும்!” என்று சுந்தரேசனைப் பயமுறுத்தினான்.

சுந்தரேசன், “உன்னிடமிருந்து தப்பித் துக்கொள்ள எனக்கு எண்ணமில்லை. என்னைப் பல ஆண்டுகளுக்கு முன்பே நீ கொன்றாய்விட்டதே! இனி என்ன என்னைக் கொல்லக்கிடக்கிறது? அதிகாரிகளிடம் நான் தெரிவிப்பதும், தெரிவியாமலிருப்பதும் என் விருப்பம். நான் கடவுள் இட்ட கட்டளைப்படி நடப்பேன்,” என்றான்.

VI

பகைவனிடம் பரிவு

அடுத்த நாள் கைதிகள் வேலைக்கு வெளியே வந்த பொழுது, ஒரு சிப்பாய், கைதிகளுள் ஒருவன் மண் கொட்டுவதைப் பார்த்து விட்டான். கைதிகளுடைய இருப்பிடத்தைச் சோதனை செய்தார்கள். நிலவறை தோண்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். எல்லாக் கைதிகளையும் கூப்பிட்டு, ‘ இதைச் செய்தவன் யார்?’ என்று அதிகாரி கேட்டார். எல்லாரும் தமக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டனர். சுப்பன் தான் செய்திருக்கிறான் என்பதை அறிந்துங்கூட மற்றக் கைதிகள் சொல்ல முன் வரவில்லை. சொல்லியிருந்தால், அன்று அவனுக்குப் பெருந்துன்பந்தான் ஏற்பட்டிருக்கும்! கடைசியாக அதிகாரி சுந்தரேசனே உண்மையை உரைக்கக் கூடுமென்று நம்பி, “சுந்தரேசரே, நீர் மிகவும் நல்லவர்; உண்மையை உரைப்பவர். நடந்ததைச் சொல்லும்,” என்று கேட்டார். சுப்பனோ, தான் ஒன்றும் அறியாதவன் போல இருந்தான்.

சுந்தரேசனுக்குத் தான் இன்னது செய்ய வேண்டுமென்பது தெரியவில்லை. அவன் கைகளும் உதடுகளும் நடுங்கின. நெடுநேரம் அவனால் பேசமுடியவில்லை. அவன் பின் வருமாறு எண்ணமிட்டான்: “என் வாழ்வைக் குலைத்தவனை, என் மனைவி மக்களை என்னிடமிருந்து பிரித்த கயவனை, எனக்குப் பெருந்தீங்கு செய்த பாவியை, என்னை வீண் பழிக்கு ஆளாக்கிக் கொலையாளி என்று உலகம் தூற்றும்படி செய்த தீயவனை நான் ஏன் தப்புவிக்க வேண்டும்! பழிக்குப் பழி வாங்க நல்ல தருணம் கிடைத்திருக்கிறது. நான் பட்ட துன்பம் கொஞ்சமா? அதற்கு இவனும் தகுந்த தண்டனையை அடையட்டுமே! சீச்சீ! என்ன கெட்ட எண்ணம் என் மனத்தில் தோன்றுகிறது! நான் உண்மையை உரைத்தால் – ஐயோ பாவம்!- இவன் உயிரை வாங்கிவிடுவார்கள்! ஒரு வேளை நான் நினைத்தபடி இவன் கொலைக் குற்றம் செய்யாதவனாயிருந்தாலோ, வீணில் ஒருவனைத் துன்பத்துக்கு ஆளாக்கினவனா வேன்! ஏற்கெனவே நான் முன் செய்த வினைக் குள்ள பயனை அனுபவித்தது போதாதா! இவனே வியாபாரியைக் கொன்றவனாய்த்தான் இருக்கட்டுமே! அதனால் நான் இவனுக்குப் பதிலுக்குப் பதில் தீங்கு செய்தல் முறையா? நாம் செய்த தீவினைப் பயனால் இத்துன்பம் நேர்ந்ததென்று தேர்ந்து அமைதியுடனிருப் பதே அறிவுடைமை. இவன் அறியாமையாற் செய்த பிழைக்கு நாம் இவனிடம் இரங்குவதே தகுதி. பகைவனிடத்திலும் நாம் இரக்கத் தையே காட்டவேண்டும்; பகைமை பாராட்டக் கூடாது. ‘எல்லா உயிர்களிடத்திலும் பகையில்லாதவனும், அவைகளிடத்தில் நட்பு உள்ளவனும், யான் எனது என்ற இறு மாப்பு நீங்கினவனும், இன்ப துன்பங்களில் பொது நோக்கு வைப்பவனும், எப்பொழுதும் பொறுமையும் மகிழ்ச்சியும் உள்ளவ னும், தன் உள்ளத்தையும் அறிவையும் என்னிடத்தில் நிலைநாட்டினவனும் எவனோ, அவனே என் அன்பன்; அவனே எனக்கு விருப்பமானவன்” என்று பகவான் கீதையில் அருளியிருப்பதை நான் வாசித்திருக்கிறேனே? எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே! கடவுளே, பகைவனிடமும் எனக்கு நட்பு ஏற்படும்படி அருள் செய்வாயாக!” என்று நான் அடிக்கடி கடவுளை வேண்டியிருக்கின்றேன். அனுபவந்தானே பெரிது? அதிலே தான் பேரின்பம் இருக்கிறது.

‘இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர் நாண
நன்னயஞ் செய்து விடல்.’

என்ற குறளை வாசித்திருக்கிறேன். அதன்படி நடக்க எனக்கு நல்ல தருணம் வாய்த்திருக்கிறது. ஆகையால், சுப்பனை நான் அதிகாரிகளிடம் காட்டிக்கொடுக்கப் போவதில்லை”‘ என்று தீர்மானித்தான்.

“என்ன! சுந்தரேசரே, ஏன் மௌனமாயிருக்கிறீர்? நிலவறையைத் தோண்டின வன் யாரென்பதைச் சொல்லும். நீர்தான் உண்மையைச் சொல்பவர்” என்று அதிகாரி சுந்தரேசனை மறுபடியும் கேட்டார். சுந்தரேசன், “என்னால் இதைச் சொல்லமுடியாது. இது கடவுள் கட்டளை. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்” என்றான். அதிகாரி எவ்வளவோ வற்புறுத்திக் கேட்ட போதிலும் சுந்தரேசன் ஒரே பிடிவாதமாக, தான் சொல்ல முடியாதென்று சொல்லி விட்டான்.

VII

உண்மை வெளிப்படல்

அன்றிரவு சுந்தரேசன் கண்ணயரப் போகும் நேரத்தில், யாரோ ஒருவன் அமைதியாய் வந்து தன் படுக்கையில் உட்காருவதைக் கண்டான். சுந்தரேசன் வந்தவனை உற்றுப் பார்த்தான். சுப்பனே மறுபடி வந்திருந்தான். “இன்னும் என்ன செய்ய வேண்டுமென்கிறாய் அப்பா? மறுபடியும் நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்க, சுப்பன் பதில் சொல்லவே இல்லை. சுந்தரேசன் எழுந்து உட்கார்ந்து கொண்டு, “நீ இவ்விடம் விட்டுப் போகிறாயா, காவலாளியைக் கூப்பிடட்டுமா?” என்று பயமுறுத்தினான். அப்பொழுது சுப்பன், “செட்டியாரவர்களே, நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்!” என்றான்.

சுந்தரேசன் : எதற்காக?

சுப்பன் : அந்த வியாபாரியைக் கொன்று அந்தக் கத்தியை உங்கள் சாமான்களோடு வைத்த பாவி நானே! நான் பெரும்பாவி. நான் உங்களையும் கொல்ல நினைத்தேன். அதற்குள் யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டதால் கத்தியை உங்கள் மூட்டையில் ஒளித்து வைத்துவிட்டு சன்னல் வழியாக வெளியேறித் தப்பினேன்.

சுந்தரேசன் மௌனமாயிருந்தான். சுப்பன், “நான் செய்த குற்றம் என் மனத்தைப் பிளக்கிறது. நான் இப்பொழுதே அதிகாரிகளிடம் சென்று குற்றத்தை ஒப்புக் கொள்ளப் போகின்றேன். நீங்கள் விடுதலையடைந்து வீட்டிற்குப் போகலாம். அப்பொழுது தான் என் மனத்திற்குச் சிறிதாவது அமைதி ஏற்படும். உங்களுக்குச் செய்த தீங்குக்காக நீங்கள் எனக்கு என்ன தண்டனை விதித்தாலும் நான் அனுபவிக்கச் சித்தமாயிருக்கிறேன். என்னை மன்னித்து அருள் செய்யுங்கள்,” என்று கண்ணீர் விட்டுக் கதறினான்.

சுந்தரேசன், “நான் இனி எங்குப் போவது? இருபத்தாறு ஆண்டுகள் சிறையில் கழித்தாய்விட்டது. என் மனைவி இறந்திருக்கலாம். என் மக்களும் என்னை மறந்திருப்பார்கள். எனக்கு இனி இச்சிறையைத் தவிரப் போக்கிடம் வேறு இல்லை” என்றான்.

சுப்பன் தன் இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. அவன் சுந்தரேசன் கால்கள் இரண்டையும் இறுகக் கட்டிக்கொண்டு, “நான் உங்களைப் பார்க்கும்பொழுதும், நான் செய்த பாவச் செயல்களை எண்ணும்பொழுதும் என் மனம் படும் வேதனைக்கு அளவில்லை. உங்களுடைய பெருந்தன்மை எங்கே, என்னுடைய அற்பக் குணம் எங்கே! நான் உங்களுடைய வாழ்வையே கெடுத்து உங்களுக்குப் பெருந்தீங்கு இழைத்திருந்தும், அதைப் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாரியிடம் என்னைக் காட்டிக்கொடாமல் காப்பாற்றிய உங்களுடைய தெய்விகக் குணத்தை நினைக் கையில் நான் அடையும் மனவேதனை பொறுக் கக் கூடியதன்று. ஆ!உங்களுடைய கரு ணையை என்னென்பேன்! பகைவனையும் நேசிக்கும் குணமுடைய உங்களை இவ்வளவு துன்பத்துக்கு ஆளாக்கினேனே! நான் பெரும்பாவி! மிகக் கொடியவன்! ஐயோ! ஐயோ!- செட்டியாரவர்களே, என்னை மன் னிக்கமாட்டீர்களா! உங்கள் வாயால் ‘மன்னித்தேன்’ என்று சொன்னால் உய்வேன்! எனக்கு வேறு கதியில்லை. என்னை மன்னியுங் கள்! மன்னியுங்கள்!” என்று சிறு குழந்தை போல விம்மி விம்மி அழலானான்.

சுந்தரேசனுக்கும் அழுகை வந்துவிட் டது. “அப்பா, சுப்பா, உன்னைக் கடவுள் மன்னிப்பார்! வருந்தாதே. எழுந்திரு,” என்றான் சுந்தரேசன்.

சுந்தரேசன் மனத்திலிருந்து ஒரு பெரிய சுமை நீங்கினது போலத் தோன்றிற்று; அமைதி உண்டாயிற்று. வீடு போக வேண்டு மென்ற எண்ணம் இல்லை. சிறைச்சாலையை விட்டுப் போகவும் விரும்பவில்லை. கடவுளுடைய திருவடி நிழலில் சேர்ந்துகொள்ளும் நாளைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தரேசன்.

சுந்தரேசன் எவ்வளவு சொல்லியும் கேளாமல் சுப்பன் அதிகாரிகளிடம் சென்று தான் அந்த வியாபாரியைக் கொன்று சுந்தரேசன் மூட்டையில் கத்தியை மறைத்து வைத்ததை விரிவாக உரைத்து, சுந்தரேசன் குற்றமற்றவன் என்பதையும் விளக்கினான்.

சுந்தரேசன் குற்றவாளி அல்லன் என்றும், அவனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் சிறை அதிகாரிக்கு உத்தரவு வந்தது. ஆனால், அதற்குள் சுந்தரேசன் மரணமடைந்தான்!

– டால்ஸ்டாய் சிறுகதைகள் (ஆறாம் வகுப்புக்குரியது), முதற் பதிப்பு: நவம்பர் 1960, எம்.எஸ்.சுப்பிரமணியம் பிரசுரம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *