உண்மையான பக்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 24, 2024
பார்வையிட்டோர்: 184 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாரத முனிவர், கடவுள் பக்தியில் தனக்கு மேற்பட்டவர் யாரும் இல்லை என்று ஒரு சமயம் நினைத்துக் கொண்டார். கடவுள் அவரு டைய எண்ணத்தை அறிந்தார். அவருடைய நினைப்புச் சரியல்ல என்பதை அவருக்கு உணர்த்த எண்ணினார் இறைவன். 

ஒருநாள் இறைவன் நாரதரை அழைத்தார். “நாரதரே, பூவுலகில் ஓர் இடத்தில் என்பக்தன் ஒருவன் இருக்கிறான். அவனைப் போய்ப் பார்த்து விட்டு வாரும்” என்றார் கடவுள். 

அந்த மனிதன் இருக்கும் இடத்தைக் கேட்டுக் கொண்டு நாரதர் அவனிடம் சென்றார். ஒரு நாள் முழுவதும் அவனுட னேயே இருந்தார். அவன் என்ன செய்கி றான் என்பதைக் கவனித்தார். 

அந்த மனிதன் ஒரு குடியானவன். அவன் காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருந் தான். எழுந்தவுடன் “ஸ்ரீஹரி” என்று ஒரு முறை கூறினான். கலப்பையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டான். தொழு வத்தில் சென்று மாடுகளை அவிழ்த்தான். அவற்றை ஓட்டிக் கொண்டு வயலுக்குச் சென் றான். நாள் முழுவதும் வயலை உழுதான். இருட்டிய பிறகு வீட்டிற்கு வந்தான். கை கால் முகம் கழுவிக் கொண்டான். மனைவி படைத்த சோற்றை யுண்டான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு பாயை விரித்துப் படுத்துக் கொண்டான். படுக்கும் போது ஒரு முறை “ஸ்ரீஹரி” என்று சொன்னான். பிறகு நன்கு அயர்ந்து தூங்கி விட்டான். 

அவன் செயல்களை யெல்லாம் கூடவே யிருந்து கவனித்த நாரதர் வைகுண்டத்திற்குத் திரும்பினார். கடவுள் இருக்குமிடம் நோக்கிச் சென்றார். 

“இறைவா, அந்தப் பட்டிக்காட்டானைப், போய் தங்கள் பக்தன் என்று சொன்னீர்களே. அவன் தன் வேலை ஒன்றையே கவனிக்கிறான். 

தங்களைப்பற்றி அவன் நினைக்கவேயில்லையே. கோயிலுக்குப் போகின்றானா? தங்களைப் பாடித் தொழுகிறானா? தங்களுக்கு அருச்சனை புரிகின்றானா? தங்கள் பெயரால் தருமம் செய்கின்றானா? தங்கள் அடியார்களைப் போற்றுகின்றானா? அல்லும் பகலும் தங்கள் நினைவாகவே யிருக்கின்றானா? ஒன்றும் இல்லை. அவனைத் தாங்கள் பக்தன் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது” என்றார். 

“அதெல்லாம் இருக்கட்டும் நாரதரே, இப் பொழுது உமக்கு ஒரு வேலை தருகிறேன். அதை ஒழுங்காகச் செய்கிறீரா பார்க்கலாம்” என்றார் இறைவன். 

“தேவதேவா தங்கள் ஆணைக்குக் காத்திருக்கிறேன்” என்றார் நாரத முனிவர். 

கடவுள் ஒரு கிண்ணத்தை எடுத்தார். அதன் மேல் விளிம்புவரை நிறையும்படி அதில் எண்ணெயை ஊற்றினார். நாரதரை நோக்கி, பக்தி மிக்க நாரதரே. இந்த எண்ணெய்க் கிண்ணத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும். இதோ கீழே தெரிகிறதே பட்டணம் அதற்குச் செல்லும். அந்தப் பட்டணத்தை ஒரு முறை சுற்றி வாரும். அப்படிச் சுற்றி வரும்போது, இந்த எண்ணெயில் ஒரு துளிகூடக் கீழே சிந்தலாகாது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புறப்படலாம்” என்றார் கடவுள். 

நாரதர் எண்ணெய்க் கிண்ணத்தை வாங் கிக் கொண்டார். எண்ணெய் சிந்தாதவாறு அதையே ஊன்றிக் கவனித்துக் கொண்டு வைகுண்டத்திலிருந்து கீழே இறங்கினார். கடவுள் சுட்டிக் காட்டிய பட்டணத்தை அடைந்தார். அதன் எல்லையோரங்களில் இருந்த பாதை வழியாக நடந்தார். மிகவும் எச்சரிக்கையாக கிண்ணம் கைநழுவி விடாம் லும், எண்ணெய் தழும்பாமலும் அவ்வளவு இலாவகமாகப் பிடித்துக் கொண்டு பட்டணத்தைச் சுற்றினார். வெற்றிகரமாகத் திரும்பினார் வைகுண்டத்துக்கு. 

“இறைவா, தங்கள் ஆணையைச் சிறிதும் வழுவாமல் நிறைவேற்றி விட்டேன்” என்றார் நாரதர். 

இறைவன் குறுநகை புரிந்தார். 

“முனிவரே, இங்கிருந்து புறப்பட்டுப் பட்டணத்தைச் சுற்றி விட்டுத் திரும்பிவரும் வரையில் என்னை எத்தனை முறை நினைத் துக் கொண்டீர்?” என்று கேட்டார் எல்லாம் வல்ல பெருமான். 

“கடவுளே, ஒரு தடவை கூட நான் தங் களை நினைக்கவில்லை” என்றார் நாரதர். 

“ஏன்?” இது கடவுளின் கேள்வி. 

“பெருமானே, எண்ணெய் சிந்திவிடக் கூடாதே என்ற கவலையோடு அதே எண்ணத் தில் நான் சுற்றி வந்ததால், தங்களை என்னால் நினைக்க முடியவில்லை” என்றார் நாரதர். 

“பார்த்தீரா நாரதரே!ஒருதுளி எண்ணெய் சிந்திவிடக் கூடாது என்ற கவலையில் நீர் முற் றிலும் கடவுளை மறந்துவிட்டீர். ஆனால், தன் குடும்பத்திற்கு ஒரு குறையும் வந்து விடக் கூடாது என்ற கருத்துடன் உழைக்கும் அந்தக் குடியானவன், நாள்தோறும் மறவாமல் என்னை இரண்டு முறை நினைத்துக் கொள்ளுகிறான். நீர் சுமந்தது ஒரு கிண்ணம் எண்ணெய்தான். அவன் சுமப்பதோ ஒரு பெரும் குடும்பபாரம்! அத்தனை தொல்லை நிறைந்த வாழ்க்கையிலும் அவன் என்னை மறவாதிருக்கின்றானே! அவன் தானே உயர்ந்த பக்தன்!” என்று கேட்டார் இறைவன். 

நாரதர் தலைகுனிந்தார். தன்னைக் காட்டிலும் பெரிய பக்தன் இல்லை என்ற வீண் இறுமாப்பை அன்றே விட்டுவிட்டார். 

இறைவனிடம் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரும் சிறந்த பக்தரே என்பதை அவர் உணர்ந்தார். 

உண்மையான பக்தி எதுவென்று உணர்ந்த நாரதரை இறைவன் வாழ்த்தி யனுப்பினார். 

– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *