கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்  
கதைப்பதிவு: November 9, 2024
பார்வையிட்டோர்: 2,551 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஈக்கள் கூட்டம் நீர்நிலை ஒன்றின் அருகாமையில் வசித்து வந்தது. அந்த ஈக்கள் கூட்டம் அருகிலிருந்த குடியிருப்புப் பகுதியின் வீடுகளில் தங்களுக்குத் தேவையான உணவை உண்டு வாழ்ந்தது. ஈக்களுக்குத் தேவையான உணவு ஒரு குறிப்பிட்ட வீட்டிலேயே போதுமான அளவு கிடைத்ததால் ஈக்கள் அந்த வீட்டிற்குச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. அந்தப் பகுதியின் மற்ற வீடுகளை அவை அதிகம் அண்டுவதில்லை. அந்தக் குறிப்பிட்ட வீட்டின் இல்லத் தலைவி சுத்தத்தில் அதிக அக்கறை காட்டமாட்டார்.

சமைத்த உணவுப் பண்டங்களை மூடி வைக்காமல் அப்படியே திறந்து போட்டு விடுவார். பத்துப் பாத்திரங்களை உடனுக்குடன் கழுவி சுத்தம் செய்யாமல் மொத்தமாய் ஊறப் போட்டு விடுவார். இதனால், அந்தப் பகுதியே துர் நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும். தேவையற்ற குப்பைக் கூளங்கள் உணவுப் பொருட்களின் எஞ்சிய துணுக்குகள் போன்றவை வீடெங்கும் சிதறிக் கிடக்கும். அவற்றை எல்லாம் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார். எந்நேரமும் தொலைக்காட்சியில் ஏதேனும் சீரியல் ஒன்றைப் பார்த்தபடியே சோம்பலாய் இருப்பதில் அலாதி சுகம் அவருக்கு.

அன்றைக்கும் அப்படித்தான். ஈக்கள் கூட்டம் உள்ளே நுழைந்த போது நடுக்கூடத்தில் காய்கறிக் கழிவுகள் இறைந்து கிடந்தது. காய்கறிகள் நறுக்கி நீண்ட நேரம் ஆகியிருக்க வேண்டும். அந்தக் கழிவுகள் ஏதோ சுரப்புக்களைச் சுரந்தபடி அழுகத் தொடங்கியிருந்தது. ஈக்களுக்கு அது தானே வேண்டும்? சந்தோஷத்துடன் கூட்டமாய் போய் அவற்றை மொய்க்கத் தொடங்கின. அப்போது, அந்தக் கழிவுகளின் நாற்றத்தையும் மீறி வேறொரு கவர்ந்திழுக்கும் வாசனையை ஒரு பெரிய ஈ சட்டென்று கண்டுபிடித்துச் சொன்னது.

“உணவு மேஜைல இருந்துதான் வருது! பலாப்பழ வாசனை!”- முக்கனிகளில் ஒன்று; தித்திக்கும் தீஞ்சுவை அல்லவா பலாப்பழங்கள்? ஈக்கள் காய்கறிக் கழிவுகளை விட்டு விட்டு பலாச்சுளைகளை மொய்க்க ஆரம்பித்தன. அப்போது விடுமுறைக் காலம். விளையாடிக் கொண்டிருந்த அந்த இல்லத்தரசியின் குழந்தைகள் இருவரும் வீட்டிற்குள் வந்தனர். அந்தக் குழந்தைகள் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு படித்தனர். அவர்கள், அம்மாவிடம் “பசிக்குதுமா! ஏதாவது சாப்பிடக் கொடும்மா!” என்று கேட்டார்கள்.

“பலாச்சுளை கிண்ணத்துல இருக்குப் பாருங்க! போய் எடுத்துச் சாப்பிடுங்க! உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமேன்னு கொட்டை எடுத்து போட்டு வைச்சிருக்கேன், வேணும்ங்குறத எடுத்துக்கோங்க!”- குழந்தைகள் இருவரும் சுளைகளை எடுத்து உண்ண ஆரம்பித்தனர். குழந்தைகள் சுளைகள் எடுக்க வரும் போது விலகுவதும், பின்னர் அமர்ந்து மொய்ப்பதுமாய் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த ஈக்களுக்கு உள்ளூர ஒரே பதட்டம். ஒரு ஈ சொன்னது.

“நாம கண்ட இடத்துலயும் உக்காந்து வந்திருக்கோம்! நம்ம கால்ல இருந்த நோய்க் கிருமியெல்லாம் இப்ப பலாப் பழத்துல கலந்திருக்கும். அதுவுமில்லாம நாம இப்ப சாப்பிட்ட காய்கறி கழிவுகளை வேற இப்ப இந்தப் பழத்து மேல துப்பி வைச்சிருக்கோம்! இந்தப் பலாச்சுளையச் சாப்பிடுகிற குழந்தைங்களுக்கு உடம்புக்கு ஏதும் வந்துரக் கூடாது!” – ஈக்கள் கவலைப்பட்டன.

“சுளையப் போட்டு வைச்சிருக்கிற கிண்ணத்த ஒரு தட்டுப் போட்டு மூடி வைச்சிருக்கலாம். இந்தக் குழந்தைங்களோட அம்மா அதச் செய்யல! அதுக்காக சுளைய சாப்பிட விடாம நாம் குழந்தைங்கள தடுக்கவா முடியும்? மொய்க்குறது மட்டும்தான் நம்ம வேலை, பேசாம வேலையைப் பாருங்க!” -அந்தப் பெரிய ஈ அதட்டுப் போட மற்ற ஈக்கள் அடங்கின. மாலை வரை அங்கிருந்து மொய்த்துவிட்டு அவை தங்கள் இருப்பிடம் திரும்பின.

ஈக்கள் பயந்த மாதிரியே ஆகிவிட்டது. அன்றிரவே அந்தக் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்துவிட்டது. தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படவே மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்கள். உடம்பில் நீர்ச்சத்து வற்றி விட்டதால் குழந்தைகளை உள்ளே அனுமதிக்கும் படி ஆகி விட்டது.

“ஏதாவது ஈ மொச்ச பண்டத்த வாங்கிக் கொடுத்துருப்பீங்க! அதான் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்துருச்சு!” என்று அந்த டாக்டர் குழந்தைகளின் பெற்றோர்களை கடுமையாகத் திட்டி விட்டார். அந்த வீட்டிற்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் பேசிக் கொண்டதை வைத்து ஈக்கள் நடந்ததைப் புரிந்து கொண்டன. அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவமனையே கதி என்று கிடந்த தால் நான்கு நாட்கள் அந்த வீட்டுக் கதவு திறக்கப்படாமல் அடைத்தே கிடந்தது.

இதனால், தங்களுக்கு வழக்கமாய் விருந்து வைக்கும் அந்த வீட்டில் உணவு கிடைக்காமல் ஈக்கள் ரொம்பவே தவித்துப் போய்விட்டன. ஆடு, மாடுகளின் சாணம், செடி, கொடிகளின் கழிவுகள் என்று கிடைத்ததை வைத்து ஈக்கள் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தன.

ஐந்தாம் நாள் காலையில் அந்த வீடு திறந்திருந்ததைக் கண்டு ஈக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆரவாரக் கூச்சலுடன் பலமாய் இரைந்தபடி படையாய் உள்ளே நுழைந்த அவற்றிற்கு அங்கே ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. தங்களுக்குத் தேவையான உணவைத் தேடி ஈக்கள் சமையலறை, நடுக்கூடம், படுக்கையறை என்று வீட்டைச் சுற்றி சுற்றி வந்தன. வழக்கமாய் நமக்கு விருந்து வைத்த அதே வீடுதானா என்று அவற்றிற்கு சந்தேகம் வந்துவிட்டது. நிலைவாசல் கதவில் அமர்ந்து வெளியே பராக்குப் பராத்துக் கொண்டிருந்த பெரிய ஈயிடம் வந்து முறையிட்டன.

“அண்ணே! மோசம் போயிட்டோம்ணே! வீட்டையே தலைகீழா மாத்தி வைச்சிருக்காங்கண்ணே!”

“என்ன ஆச்சு? ஏன் பதட்டப் படுறீங்க?” – பெரிய ஈ கேட்டது.

“சாப்பாட்டு அயிட்டங்களைப் பூரா தட்டுப் போட்டு மூடி வைச்சிருக்காங்க. சிங்க்ல ஒரு பத்துப் பாத்திரம் இல்ல! எல்லாத்தையும் கழுவி கவுத்தி காய வைச்சிருக்காங்க! குப்பைக் கூடைப் பக்கம் போயி மொய்க்கலாம்னு பார்த்தா குப்பை எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு கூடையே காலியா கிடக்கு!” -ஒரு ஈ புலம்பியது.

“முன்னாடில்லாம் பச்சைத் தண்ணிதான் குடிப்பாங்க. தண்ணிக்குடம் திறந்தே கிடக்கும். இப்ப என்னடானா, குடிக்குறதுக்கு வெந்நீர் காய வைச்சிருக்காங்க!” -மற்றொரு ஈ சொன்னது.

“இதாவது பரவாயில்ல! தரைய ஏதோ கிருமி நாசினி போட்டுத் துடைச்சிருப்பாங்க போல, நெடி தாங்கல! தரையில உக்காரவே முடியல!” – மற்றொரு ஈ கவலைப்பட்டது.

“பாத்ரூம் பக்கம் போயி பாக்க வேண்டியதுதான?” பெரிய ஈ கேட்டது.

“அங்கேயும் போயி பாத்துட்டோம்! முன்னாடி இருந்த அடைசல்களை எல்லாம் காலி பண்ணிட்டு தண்ணிபிடிக்க ஒரு வாளியும், கப்பும் மட்டும் போட்டு வெச்சிருக்காங்க! அதை விட முக்கியமா ஒரு பொட்டு ஈரம் இல்லாம காஞ்சு போயி கிடக்கு!”

“அப்படியா?” “என்று ஆச்சரியப்பட்ட பெரிய ஈ தானும் ஒருமுறை சுற்றிப்பார்த்து விட்டு வந்து சொன்னது.

“சுத்தமா இருக்க முயற்சி பண்றதுதான் ஆரோக்கியத்தோட முதல்படி. குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியாமப் போனதுல இந்த வீட்டம்மா பாடம் படிச்சிட்டாங்க போல! இந்த வீட்டுல சுத்தத்துக்கான முயற்சி ஆரம்பமாயிருச்சு! அதுக்கு மரியாதைக் கொடுத்து நாம் இடத்த காலி பண்ணிப் போறதுதான் நல்லது. நமக்குனு வேற ஓர் அழுக்கான இடம் கிடைக்காமலா போயிரும்? வாங்க போகலாம்! ” – என்றது. உடனே, மற்ற ஈக்கள் எல்லாம் புறப்பட்டன. அப்போது, அந்தக் குழந்தைகள் இருவரும் வாசலில் எதிர்பட்டனர். தங்களுக்கு உணவு கிடைக்காவிட்டாலும், உடல் நலம் தேறி பழைய நிலைக்கு மீண்டு உற்சாகமாய் ஓடி ஆடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைகளைக் கண்டு ஈக்களுக்குச் சந்தோஷம்தான்.

– ஜோதிடர் வரதன் சிறுகதைப் போட்டி ரூ.500 பரிசுக் கதை.

– தினமணி, சிறுவர்மணி, 02-06-2007.

எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *