இளைஞனும் பெரியவரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 20, 2024
பார்வையிட்டோர்: 204 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

இளைஞன் சாலை வழியாகப் பாடிக் கொண்டே சென்றான். அவன் குரல் இனிமையாக இருந்தது. ஆனால், அவன் பாடிய பாட் டென்னவோ நன்றாயில்லை. அதில் பொருளும் இல்லை அழகும் இல்லை. வழியில் ஒரு பெரியவர் எதிர்ப்பட்டார். “தம்பி, இந்தப் பாட்டெல்லாம் ஏன் பாடுகிறாய்? உன் குரலே நன்றாயிருக்கிறது. இசையை மட்டும் உன் வாய் அசை போட்டாலே அழகாக இருக்கும். இந்தப் பாட்டைப் பாடி ஏன் உன் குரல் அழகையும் பாழ்படுத்திக் கொள்கிறாய்?” என்று கேட்டார் பெரியவர். 
அவன் அவர் அறிவுரையை இலட்சியம் செய்ய வில்லை. தன் போக்கில் பாடிக்கொண்டே. சென்றான். நேராகச் சூதாடும் இடத்திற்குச் சென்றான். கையில் இருந்த பொருளையெல்லாம் சூதாடித் தோற்றுவிட்டு இளைஞன் திரும்பி வந்தான். திரும்பி வரும்போது அவன் பாடிக் கொண்டு வரவில்லை. வழியில் இருந்த மரத்தடியில் களைப்பாற உட்கார்ந்தான். 

அதே மரத்தடியில் அந்தப் பெரியவர் ஒரு புறத்தில் இருந்தார். இளைஞன் கவனிக்கவில்லை. 

சிறிது நேரத்தில் மற்றொரு மனிதன் அவவழியாக வந்தான். அவனும் களைப்பாறுவதற்காக மரத்தடிக்கு வந்தான். இளைஞன் அருகில் வந்து உட்கார்ந்தான். 

இளைஞனுக்கு அந்த மனிதனைப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது. அவன் தன் அருகில் வந்து உட்கார்ந்ததும் இளைஞனுக்குக் கோபம் வந்தது. “உயர்ந்த சாதியான் நான். என்னருகில் நீ எப்படி வந்து உட்காரலாம்?” என்று கேட்டான். 

இச்சொற்கள் பெரியவர் காதில் விழுந்தன. “உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளுவதைவிட ஒழுக்கமாய் இருப்பது சிறந்தது” என்று கூறினார். 

இளைஞன் கோபத்தோடு எழுந்து நடந்தான். பெரியவர் பின்தொடர்ந்தார். வழியில் ஒருவன் இளைஞனை மறித்துத் தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டான். “நடுப்பாதையில் நீ எப்படி என்னைக் கடன் கேட்கலாம்” என்று இளைஞன் அவனை அடிக்கக் கையை ஓங்கினான். அவனும் பதிலுக்குக் கையை ஓங்கவே இளைஞன் பயந்து ஓடிவிட்டான். 

“வீண் வீரம் பேசுவதைவிட விடா நோயுடன் இருப்பது நல்லது” என்றார் பெரியவர். அவன் சென்ற வழியே சென்றார். 

இளைஞன் வீடு சென்றான். வாசலில் நின்ற மனைவி தெருவிலேயே அவனோடு சண்டை போட்டாள். அவனை வைதாள். இதைக் கண்ட பெரியவர், “பழிக்கஞ்சாத மனைவியுடன் வாழ்வதை விடத் தனியாய் இருப்பது நல்லது” என்று சொல்லி விட்டு வழிநடந்தார். 

கருத்துரை:- பிழையற்ற பாட்டும், ஒழுக்கஞ் சேர்ந்த குடிப்பிறப்பும், அஞ்சாத வீரமும், நெஞ்சில் அன்புடைய மனைவியும் வாழ்விற்கு இன்பமாகும். 

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *