மச்சு ரொம்ப ரொம்ப குறும்புக்காரப் பையன். அதேசமயம் பயங்கர புத்திசாலி. பாரதி வித்யாலயாவுல லெவன்த் படிச்சுட்டிருந்தான். அவனோட ஃப்ரெண்ட் பிந்து.
இன்னும் ஒரு மாசத்தில் அவங்க ஸ்கூல்ல ஒரு பெரிய சயின்ஸ் எக்ஸிபிஷன் நடக்கப்போகுது. இந்தியா முழுவதிலும் இருந்து புதுப்புது கண்டு பிடிப்புகளோடு அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வெகுவேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
போட்டிக் கண்டுபிடிப்புகளைக் காட்சிப் பொருளாக வைக்கவேண்டியது பாரதி வித்யாலயாவில்தான். அதனால், ஒவ்வொரு ஸ்கூலிலிருந்தும் அவங்க மாணவர்கள் என்ன கண்டுபிடிப்பை வைக்கப் போறாங்கங்கற பட்டியலை அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் பாரதி வித்யாலயாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
பாரதி வித்யாலயா சார்பில் மிச்சுவும் பிந்துவும் கலந்துக்கறதா இருந்தாங்க. அவங்க எலெக்ட்ரானிக் பெல்ட் ஒண்ணு தயாரிக்கறதுல இருந்தாங்க. அது சாதாரண பெல்ட் இல்லை. அதில் ப்ரோக்ராம் செட் பண்ணினால், ஒரு இடத்தில் இருந்து ரொம்ப வேகமா இன்னொரு இடத்துக்கும் போக முடியும், அதுவும் யாரோட கண்களுக்கும் தெரியாமல்!
பெல்ட்டின் பக்கிள் பகுதி ஒரு மினி கம்ப்யூட்டராக வேலை பார்த்தது.
பெல்ட்டில் உள்ள பட்டன்கள் மூலம் போக வேண்டிய இடத்தை செட் செய்து, பக்கிளில் இருக்கும் சிவப்பு வண்ண பட்டனை அழுத்தினால், நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களது பார்வையிலிருந்து Ôஜூட்Õ விட்டு, நாம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்லலாம்.
இதற்காக இன்ஃப்ராரெட் கதிர்களை பெல்ட்டினுள் செலுத்திக் கொண்டிருந்தாள் பிந்து. அப்போது வேகமாக உள்ளே நுழைந்தான் மிச்சு.
“பிந்து, நம்மளோட கண்டுபிடிப்பு ப்ரைஸ் வாங்குமா?” என்றான்.
“கண்டிப்பா கிடைக்கும்…” என்றாள் பிந்து.
“இல்லே பிந்து! நமக்குப் போட்டியா வந்திருக்கிற கண்டுபிடிப்புகள்ல ரெண்டு என்னை ரொம்ப பய முறுத்துது… ஹைதராபாத்தில உள்ள மதர் தெரஸா ஸ்கூல், ஒரு சாட்டிலைட் எக்ஸிபிட் பண்ணுது!
கிட்டத்தட்ட மூணு கோடி ரூபா செலவழிச் சிருக்காங்க. நெனச்ச நேரத்தில் அதன் மூலமா எந்த காலேஜ்ல, ஸ்கூல்ல, நாட்டுல, வீட்டுல இருக்கிற எந்த சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்டா இருந்தாலும் உடனடியா வீடியோ கான்ஃப்ரென்ஸிங் மூலமா பாடம் நடத்துவாங்க. இதுமாதிரி இன்னும் நிறைய உபயோகம் இருக்கு அதுக்கு!
மும்பையின் மேத்தா ஃபவுண்டேஷன் ஸ்கூலோட கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? ஒரே ஒரு டம்ளர் தண்ணியை ரொட்டேட்டிங் வீலில் விட்டு, அதைப் படுவேகத்தில் சுழற்றி, அது மூலமா ஒரு தொழிற்சாலைக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்கிறது!ÕÕ மிச்சு சொன்னதைக் கேட்டு பிந்துவும் மிரண்டாள்.
போட்டி நாள். பிந்துவைக் காணவில்லை. பெல்ட் டையும் காணவில்லை! மிச்சுவுக்கு மட்டுமல்ல… அவங்க ஆசிரியருக்கும் அதில் பயங்கர வருத்தம். சாயந்திரம்தான் ஸ்டாஃப் ரூமுக்கு பிந்து வந்தாள்.
“நீ என்ன காரியம் பண்ணியிருக்கே, தெரியுமா?”னு மிச்சு கத்தினான். “தெரியும். அதுக்கு முன்னாடி, நீ என்ன செஞ்சேன்னு நினைச்சுப் பார். அந்த ரெண்டு கண்டுபிடிப்புகளையும் நாம கண்டுபிடிச்ச இந்த பெல்ட்டைப் போட்டுப் பாழாக்க முயற்சி செஞ்சே…
நேற்றிரவு இதைப் போட்டு, யார் கண்ணுக்கும் தெரியாமல் லாப்புக்கு வந்தே… ரெண்டுலயும் உள்ளே பேசிக் ப்ரோக்ராம்களில் மாற்றங்கள் செஞ்சே! இப்படி நீ மாத்தி வெச்சிருக்கிற குறை உள்ள கண்டுபிடிப்புகளோட நம்மளோடது போட்டி போட்டா, ஈஸியா ஜெயிச்சிருக்க முடியும்! எனக்கு அது பிடிக்கலை.
அதான் பெல்ட்டை உன்னிடமிருந்து எடுத்துட்டுப் போயிட்டேன். ஆனால், நான் இங்கே தானிருக்கேன். உன் கண்ணுக்குத் தெரியாம! நீ மனசு திருந்தி வந்தா, இந்தக் கண்டுபிடிப்பை இன்னும் மெருகேத்தி, அடுத்த வருஷம் வைக்கலாம். நான் சொல்றது சரிதானே மிச்சு!” என்றாள் பிந்து.