இளந் துறவியும் முதிய துறவியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,036 
 
 

முதிய துறவி ஒருவர், இளந்துறவி ஒருவருடன் பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டுத் தன் ஆசிரமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

வழியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது, இவர்களுக்கு முன்னே இளம்பெண் ஒருத்தி, இரண்டுமாதக் கைக்குழந்தையுடன், செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தாள். அவள் ஆற்றைக் கடந்து அக்கரை போகாவிட்டால், கணவனும் மாமியாரும் சண்டையிடுவார்கள். திரும்பித் தாய் வீட்டுக்குப் போகலாம் என்றாலோ ஒரே இருட்டு; காட்டு வழிப்பாதை. ஆற்றைக் கடக்கவும் முடியாமல் திரும்பிச் செல்லவும் வழியில்லாமல் அவள் துடித்துக் கொண்டிருந்தாள்.

இந்தத் துறவிகள் இருவரையும் அந்த நேரத்தில் அங்கே கண்டதும், அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. நிச்சயம் அவர்கள் உதவி செய்வார்கள் என்று, நம்பினாள்.

முதிய துறவியோ, இளம்பெண்ணைப் பார்த்ததும் பார்க்காத மாதிரி ஆற்றிலே இறங்கி நடக்கத் தொடங்கி விட்டார். இதைக் கண்டதும், அவளுக்கு ஒரே நடுக்கமாகப் போய்விட்டது.

அவளது துயரத்தைக் கண்ட இளம்துறவி, அவள்மீது இரக்கம்கொண்டு, ‘அம்மா குழந்தையை நீ உன் தோளில் பத்திரமாக வைத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு, அப்படியே அவளைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்து, அக்கரை போய்ச் சேர்ந்த உடன் அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் ஆசிரமம் போய்ச் சேர்ந்தார்.

இதைக் கண்ட முதிய துறவிக்கு, இளந்துறவிமேல் கோபமோ கோபம்! அன்று முழுவதும் அவருடன் பேசவேயில்லை. அடுத்த நாள் மாலைக் கூட்டத்தில் ‘மாசற்ற மனம்’ என்ற தலைப்பில் முதிய துறவி பேச விருந்தார். அப்போது முன்வரிசையில் இளந்துறவியைக் கண்ட அவருக்கு ஆத்திரம் பொங்கியது.

அவரைப் பார்த்து, “நீ எழுந்திரு. இந்த இடத்தில் உனக்கு வேலையில்லை. நீ ஒரு இளம் பெண்ணைத் தொட்டுத் தோளில் சுமந்தது பெரிய தவறு. சந்நியாசத்துக்கு இழுக்கு. துறவுக்குப் பழி. ஆசிரமத்திற்கே மானக் கேடு” என்று இரைந்தார்.

இவையனைத்தையும், சற்றும் படபடப்புக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டு, நிதானமாக எழுந்து நின்று, இளந்துறவி சொன்னார் :

“சுவாமி, நான் அப்போதே ஆற்றங்கரையிலேயே அவளை இறக்கி விட்டுவிட்டேனே! இரண்டு நாளாக்ச் கவாமிகள் அப்பெண்ணை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்களே! – ஏன்?” என்று கேட்டார். அவ்வளவுதான்!

முதிய துறவி இதற்குப் பதில் கூற முடியாமலும், மாசற்ற மனத்தைப் பற்றிப் பேச முடியாமலும், அவ்விடத்தை விட்டு எழுந்து போய்விட்டார்.

எப்படி இந்த மாசற்ற மனம்?

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *