இளங் குமணன் தன் அண்ணன் குமணனை விரட்டி விட்டு, அரசுக்கட்டில் ஏறினான். கொடை வள்ளலாகிய குமணன் காட்டிற் சென்று, தலை மறைவாய் வாழ்ந்து வந்தான்.
பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், காட்டிற்குச் சென்றார். குமணனைக் கண்டு பாடினார். அப்பொழுது குமணன் கையிற் பொருள் இல்லை! அவன் தன் வாளை உருவி புலவரிடம் கொடுத்துத் தன் தலையை அரிந்து எடுத்துக்கொள்ளுமாறு கூறினான்.
“என் தலையை எடுத்துக்கொண்டு போய் என் தம்பியிடம் கொடுத்தால் அவன் பொன் கொடுப்பான் என் தலைக்கு, அவன் விலை கூறியுள்ளான்” என்றான் குமணன்,
புலவர், கை நடுங்க வாளை எடுத்துக் கொண்டு ஓடினார். இளங் குமணனைக் கண்டார்.
“நிலையற்ற உலகின் தன்மையை அறிந்து, புகழால் தன்மையை நிலைநிறுத்திக் கொண்டோருள், குமணனே உயர்ந்தவன். அவனைப் பாடி நின்றேன். அவன் தலை கொய்ய வாள் கொடுத்தான் உவகையுடன் ஓடி வருகிறேன்” என்றார்.
இளங்குமணனை இரத்த பாசம் பற்றியது. பதை பதைத்தான். மயங்கினான். மயக்கம் தெளிந்தபின் உண்மை உணர்ந்தான். அண்ணன் காலடியில்
விழவேண்டிக் காட்டிற்கு ஓடினான்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்