(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நீண்டு வளர்ந்திருந்த ஓர் அழகான தென்னை மரத்திலே வாழ்க்கையின் இறுதிப் படியில் நின்று கொண் டிருந்தது ஒரு பழுத்த ஓலை. அதே மரத்தில்தான் கர்வம் பிடித்த இக்காலத்து ஒரு சில இளைஞர்களைப் போல் தலை நிமிர்ந்து நின்ற குருத்தோலை யொன்றும் இருந்தது. மற்றவரை மதியாது நின்ற குருத்தோலையைக் கண்ட காற்றுக்கு கடுங் கோபம் ஏற்பட்டு விட்டது. எனவே, அது பெரும் புயலாக மாறி அக் குருத்தோலையைத் தலை கவிழ வைத்தது. அதனால் குருத்தோலை, பல போர்க் களங்களில் கலந்து வெற்றி கண்ட ஒரு மா வீரன் ஒரு சிறு போர்க் களத்தில் கலந்து தோல்வி கண்டால் எவ்வளவு துன்பம் அடைவானோ அதேயளவு துன்பத்தை அடைந்தது. துன்பத்தை அநுபவித்துப் பழக்க மில்லாத அது சோர்ந்து போய் நிற்பதைக் கண்டு நல்ல அநுபவமுள்ள பழுத்த ஓலை அதற்கு ஆறுதல் கூறியது.
அனைத்தையும் கேட்ட குருத்தோலை அலட்சிய மாகச் சிரித்துவிட்டு, “நீ கூட எனக்கு ஆறுதல் கூற வந்து விட்டாய். உன்னைப் பிடித்த சனியன்தான் என்னை யும் பிடித்தாட்டுகிறது. நீ முதலில் செத்துத் தொலை. அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி யேற்படும்” என்று பொரிந்து தள்ளியது.
“நல்லதுக்குக் காலமில்லை. நான் இனிமேல் உன் விஷயத்தில் தலையிடவே மாட்டேன். கடைசியாக ஒன்று கூறுகிறேன், ஆறிலும் சாவு நூறிலும் சாவு. யாரையுமே காலன் விட்டு வைப்பதில்லை” என்று வேதாந்த தோர ணையில் கூறி விட்டு பழுத்த ஓலை தன் வேலையைக் கவனிக்க முற்பட்ட போதே விரைந்து வந்த காற்று யமனாக மாறி பழுத்த ஓலையின் உயிரைக் குடித்தது. உயி ரற்ற அது, தடாரெனக் கீழே விழுந்தது. இதனைக் கண்ட குருத்தோலை தான் சற்று முன் அடைந்த அவமானத்தைக் கூட மறந்து சந்தோச மிகுதியினால் துள்ளிக் குதித்தது.
சிறிது நேரத்தின் பின் தன்னையே நோக்கி கத்தி யொன்று வருவதைக் கண்ட குருத்தோலை பயத்தினால் நடுங்க ஆரம்பித்தது. மன உறுதியை இழந்து விட்ட அது கத்தியையும், கத்தி வைத்திருப்பவனையும் மாறி மாறிப் பார்த்தது. அதன் பார்வை தன்னை விட்டு விடச் சொல்லிக் கெஞ்சுவது போல இருந்தது. தன் எஜமானுக்குக் கட்டுப் பட்டு நடக்கின்ற அவன் அவரின் உத்தரவைத் தட்ட விரும்ப வில்லையோ என்னவோ அவன் தன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு குருத்தோலையை வெட்டி வீழ்த்தி னான். பழுத்த ஓலையின் வார்த்தை பலித்ததைக் கண்ட கடலலைகள் மகிழ்ச்சி ஆரவாரஞ் செய்தன. உயிரற்று மண்ணிலே கிடந்த குருத்தோலையோ, மணப்பந்தல் அழகு படுத்த எடுத்துச் செல்லப் பட்டது.
– வீரகேசரி வார வெளியீடு.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.