(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருநாள் பல மாணவர்கள் நீர் விளையாடுவதற்கு எண்ணினார்கள். ஒரு பெரிய குளத்துக்குச் சென்றார்கள். பலவாறு நீந்தி விளையாடினார்கள். ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு நீந்திச் செல்வதென்று அந்த மாணவர்கள் பந்தயம் போட்டுக் கொண்டு நீந்திச் சென்றார்கள்.
அந்தக் குளத்திள் அகல நீளம் ஏறக்குறைய ஒரு பர்லாங்கு இருக்கும். மாணவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்குப் போய்விட்டு வருவதற்குள் கால்கைகள் ஓய்ந்து போயின. நடுக்குளத்தில் வரும்போது ஒரு மாணவனுக்குக் கைகால்களை அசைக்க முடியவில்லை. அவனுக்கு அகவை பதினான்கு. அவன் தான் தளர்ந்துபோய் இக்கட்டில் மாட்டிக் கொண்டதைக் குறிப்பாலும், கூச்சலாலும், நீரில் அமிழ்ந்து மேலெழுவதாலும் புலப்படுத்தினான்.
கரையில் நின்ற ஒரு மாணவன் நீரில் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கும் மாணவனுடைய நிலைமையை உணர்ந்தான். விரைந்து நீரில் பாய்ந்து நீந்திச் சென்றான். உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்த மாணவன் உதவிக்குச் சென்ற மாணவனைக் கெட்டியாகக் கட்டிப் பிடித்துக்கொண்டான். உதவிக்குச் சென்ற மாணவனால் நீந்த முடியவில்லை. அவனுந் தொல்லைக்குள் சிக்கிக்கொண்டு தண்ணீரில் மூழ்கத் தொடங்கினான். இரண்டுபேரும் இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டதைக் கண்டு, மூன்றாம் மாணவன் ஒருவன் விரைந்து உதவிக்குச் சென்றான். நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களும் மூன்றாம் மாணவனைக் கட்டிப்பிடித்தார்கள். மறுகணம் மூன்று மாணவர்களும் தண்ணீருக்குள் அமிழ்ந்துவிட்டனர்.
கரையில் நின்ற சிலர் இந்தச் செய்தியைப் பலருக்குந் தெரியப்படுத்தினர். குளத்தின் கரையில் பெரிய கூட்டம் கூடிவிட்டது. நீரில் அகப்பட்டுக் கொண்ட மாணவர்களோ கால் மணி வரையில் தத்தளித்து இறந்துபோனார்கள். அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தபடியால், பிணங்கள் மேலே மிதக்காமல் தண்ணீருக்குள் அமிழ்ந்துவிட்டன. பிறகு செம்படவர்களைக் கொண்டு வந்து வலைபோட்டு மாணவர்களுடைய உயிர் நீங்கிய உடல்களை வெளியே எடுத்தார்கள்.
அன்று முதல் மற்றைய மாணவர்கள், “ஒளவைப் பிராட்டியார் ‘நீர் விளையாடேல்’ என்று கூறியுள்ளதை ஒரு பொருட்படுத்தாதபடியால் மூவர் இறந்து போனார்கள்; நாம் ஒளவையார் மொழிக்கு மதிப்புக் கொடுத்து அம்மொழியைப் பொன் போலப் போற்றவேண்டும்,” என்று முடிவுசெய்து நீர் விளையாடலை விட்டொழித் தார்கள். பெரியோர்கள் கூறியுள்ள மொழிகளை ஒரு பொருட்படுத்தாமல் இகழ்ந்தால், இவ்வாறுதான் தீமை நேரிடும்.
“நீர் விளையாடேல்” (இ – ள்.) நீர் – தண்ணீரிலே; விளையாடேல் – நீந்தி விளையாடாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,