(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அயர்லாந்தின் ஹெர்க்குலிஸ் என்று புகழப்பெற்ற மாமல்லனாகிய ஃபின் மக்கௌல் என்பவனைப்பற்றிக் கேள்விப்பட்டிராத ஆணோ பெண்ணோ குழந்தையோ நாட்டில் கிடையாது. கிளீயர் முனையிலிருந்து அசுரன் தாம்போதிவரை எல்லா மக்களும் அவனைப்பற்றித் தெரிந்திருந்தனர். அசுரன் தாம்போதியிலிருந்துதான் நமது கதையும் தொடங்குகின்றது. வல்லமை மிக்க மக்கௌலும் அவனுடைய உறவினர்களும் அந்தத் தாம்போதியை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சமயம் மக்கௌல் ஊருக்குப் போய்த் தன் மனைவி ஊனாக் என்பவளைப் பார்த்துவர விரும்பினான். அவளிடம் அவனுக்குப் பிரியம் அதிகம். இரவு நேரத்தில் அவளுக்கு அடிக்கடி. மயக்கம் ஏற்படுவதுண்டு; ஆகையால், அவளுடைய உடல் நிலையை அறிந்துவர அவன் புறப்பட்டான். நடக்கும் பொழுது கையிலே பிடித்து ஊன்றிக்கொள்வதற்காக, அவன் ஒரு தேவதாரு மரத்தை வேரோடு பிடுங்கி, கிளைகளை ஒடித்தெறிந்துவிட்டு, அதையே கழியாக எடுத்துக்கொண்டான்.
மக்கௌலின் வீடு நாக்மேனி என்ற குன்றின் உச்சியில் அமைந்திருந்தது. அங்கிருந்து நோக்கினால் குல்லமோர் மலை முழுதும் தெரியும்.
மக்கௌல், மனைவியைப் பார்க்கத்தான் புறப்பட்டுச் செல்வதாக எல்லோரும் எண்ணினார்கள். அதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் உண்டு. அந்தக் காலத்தில் குகுல்லின் என்று வேறு ஒரு மல்லனும் இருந்தான். அவனை மல்லன் என்பதைவிட அசுரன் என்று சொல்வது பொருந்தும். அவன் உருவமும் ஆற்றலும் அப்படிப் பட்டவை. சிலர் அவனை ஐரிஷ்காரன் என்பார்கள். வேறு சிலர் அவன் ஸ்காட்லாந்து நாட்டான் என்றும் சொல்வார்கள். அந்தக் காலத்தில் அவன் கிளம்பிவிட்டால், அவனை எதிர்த்து நிற்க ஆளே கிடையாது. அவனுக்குக் கோபம் வந்தால், ஒரு காலால் தரையைத் தட்டுவானாம்; உடனே சுற்றியுள்ள பூமியே கிடுகிடுத்து ஆடுமாம்! அவன் அசுரப் பிறவியாயிருந்ததால், சாதாரண மனித இனத்தைச் சேர்ந்த எவனும் அவனை எதிர்த்து நிற்க முடியாதென்று மக்கள் தெரிந்திருந்தனர். ஒரு சமயம் இடியிடிக்கும் பொழுது, அவன் ஒரே கையால் ஓங்கியடித்து, இடியிலே தோன்றிய வச்சிராயுதத்தைச் சப்பையாக்கிச் சட்டைப் பையிலே தூக்கிப் போட்டுக்கொண்டான் என்று கூறுவதுண்டு. அது உண்மைதானா என்பது தெளிவாய்த் தெரியாது.
அயர்லாந்திலிருந்த பயில்வான்கள், மல்லர்கள் பலரையும் அவன் மட்டம் தட்டிவிட்டான். ஆனால், மல்லன் மக்கௌல் மட்டும் அவனிடம் சிக்கவேயில்லை. மக்கௌலையும் எங்காவது கண்டுபிடித்து, அவன் முதுகிலும் மண் புரட்டிக்காட்ட வேண்டுமென்பது அவனுடைய ஆசை. கோழி, குப்பை மேட்டில் ஏறி அமர்வது போல, மக்கௌல் குன்றின் மேல் வசித்து வந்த போதிலும், அசுரன் அவனை விடுவதாயில்லை; அவனைத் தேடிக்கொண்டேயிருந்தான். ஆனால், ஒரே காலால் பூகம்பம் விளைவிப்பவனும், ஒற்றைக் கையால் வச்சிரா யுதத்தைச் சப்பையாக்குபவனுமான அசுரனை அவன் எப்படி எதிர்த்து நிற்க முடியும்? குகுல்லின் தாம்போதிக்கே வந்து தன்னைச் சந்திக்கப்போவதாகக் கேள்விப்பட்டுத்தான் மக்கௌல் அங்கிருந்து கிளம்பிவிட்டான். திடீரென்று மனைவியிடமும் பாசமும் பெருகிவிட்டது. உடனே ஊரை நோக்கிக் கிளம்பிவிட்டான். முன் சொன்னது போல் முழுத் தேவதாரு மரம் அவனுக்கு ஊன்றுகோலாக அமைந்திருந்தது.
நாச்மேனிக் குன்றின் மேல் குடிசை கட்டிக் குடியிருப்பது பற்றிப் பலர் மக்கௌலிடமே கேட்டிருக்கின் றனர். “ஏனப்பா, மக்கள் இருக்கும் இடங்களை விட்டுவிட்டு, அவ்வளவு உயரே வீடு வைத்துக்கொண்டிருக்கிறாய்? பெரும்பாலும் நீ வீட்டிலிருப்பதில்லை. குன்றின் மேலே மழையும் பனியும் அதிகம். மேலும், அங்கே குடிக்க நல்ல தண்ணீர் கூடக் கிடையாதே!” என்று அவர்கள் கேட்பதுண்டு. குன்றின் உச்சியிலிருந்தால்தான் சுற்றியுள்ள காட்சிகளைக் கண்டுகளிக்க முடியுமென்றும், எந்த நேரமும் இளந்தென்றல் வீசுமென்றும், தாம்போதி வேலை முடிந்த பிறகு குன்றிலே தான் குழாய் வைக்கப்போவதாகவும் அவன் பதிலுரைப்பது வழக்கம்.
ஆனால், உண்மையில் குகுல்லினுக்காகவே அவன் குன்றின் மேல் குடியிருந்தான். அங்கிருந்து அவன் குகுல்லின் என்று வந்தாலும் எளிதில் கண்டுகொள்ள முடியும்.
மக்கௌல் தன் வீட்டுக்குள்ளே நுழைந்ததும் மனைவியின் உடல்நலம்பற்றி விசாரித்தான். சிறிது நேரத்திற்குப் பின் அவள், “நீங்கள் என்ன விரைவிலே வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டீர்கள்?” என்று கேட்டாள்.
“உன்மீதுள்ள அன்பினால்தான். இது உனக்கே தெரியுமே!” என்றான், கணவன்.
ஊனாக்குடன் அவன் இரண்டு மூன்று நாள்களை இன்பமாகக் கழித்தான். ஆனால், அவன் மனத்தில் குகுல்லினைப்பற்றிய சிந்தனை அகலவேயில்லை. அவனுடைய கவலை என்ன என்பது தெரியாமல் அவன் மனைவி அதனைக் கண்டுபிடிக்கப் பலவாறு முயன்று பார்த்தாள்.
கடைசியாக அவனே தன் கவலையைக் கூறிவிட்டான்: “இந்தக் குகுல்லின் நினைவுதான் என்னை வருத்தி வருகிறது. அவனுக்குக் கோபம் வந்தால் நிலமே ஆடும்படி மிதிப்பானாம், இடியை நிறுத்தி விடுவானாம், வச்சிரா யுதத்தைச் சப்பையாக்கிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு திரிகிறானாம்!”
அவன் ஆத்திரத்துடன் பேசும் பொழுது வலக்கைக் கட்டைவிரலால் வாயைத் தட்டிக்கொள்வது வழக்கம். அதே போல அப்பொழுதும் செய்தான். அதைக் கண்டு ஊனாக், “என் பேரில் ஒன்றும் கோபமில்லையே?” என்று கேட்டாள்.
“இல்லை, இல்லை. விரலைக் கடித்துக்கொள்வது என் வழக்கந்தானே!”
“கடித்துக் கடித்து இரத்தம் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!”
இறுமாப்புள்ள இளவரசி மக்கௌல் வெகுதூரத்திற்கு அப்பால் எதையோ கவனித்துவிட்டு, அவன் வருகிறான்! டங்கன்னான் அருகில் அவன் உருவம் தெரிகிறது!” என்றான்.
“யாரவன்? கடவுள்தான் நம்மைக் காக்க வேண்டும்!”
“அவன்தான் குகுல்லின்! எப்படிச் சமாளிப்பது என்று ஒன்றும் புரியவில்லையே! நான் ஓடிப் போய்விட்டால் கேவலம்; என்றாவது ஒரு நாள் அவனைச் சந்திக்காமலும் முடியாது!”
“அவன் இங்கே எப்பொழுது வந்து சேருவான்?” “நாளை, சுமார் இரண்டு மணிக்கு.”
“நாதா, கவலைப்பட வேண்டா! என்னை நம்புங்கள். இந்தச் சிக்கலில் என்னால் முடிந்ததைச் செய்து நாம் தப்பித்துக்கொள்ள வழி செய்கிறேன். நீங்கள் வழக்கம் போல் விரலைக் கடித்துக்கொண்டு தனியாக இதிலே வெற்றி பெறுவது கடினம்!”
மனைவியின் சொற்கள் மக்கௌலுக்குச் சற்றே ஆறுதலளித்தன. ஊனாக் கெட்டிக்காரி. அவளுக்கு வன தேவதைகள் எல்லாம் பழக்கம். ஒரு வேளை, அவளே ஒரு தேவதைதானோ என்றுகூட அவளுடைய கணவன் ஐயுறுவதுண்டு. அவள் தேவதையானாலும் நல்ல தேவதை என்பது அவன் எண்ணம்.
ஊனாக்குக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் கிரானுவா. அவள் எதிர்ப்புறமிருந்த குல்லமோர் மலையின் உச்சியில் குடியிருந்து வந்தாள். இந்த மலையைப்பற்றி முன்னரே கூறப்பட்டிருக்கிறது. நாக்மேனிக் குன்றுக்கும் அதற்கும் இடையிலுள்ள அழகான பள்ளத்தாக்கு சுமார் மூன்று அல்லது நான்கு மைல் நீளம் இருக்கும். ஊனாக்கும் அவள் சகோதரியும் தங்கள் மலைகளின் உச்சியிலிருந்து பேசிக்கொள்வது வழக்கம்.
இந்தச் சமயத்திலும் ஊனாக், சகோதரியின் பெயரைச் சொல்லிக் கூவினாள். கிரானுவா தான் அடிவாரத்தில் கனிகள் பறித்துக்கொண்டிருப்பதாகக் கூறினாள். உடனே அவளை மலை உச்சியில் ஏறும்படி ஊனாக் வேண்டினாள். அந்தப்படியே அவளும் ஏறி நின்றாள்.
“அக்காள்! சுற்றிலும் பார்த்து உன் கண்ணுக்கு ஏதாவது புலப்படுகிறதா என்று சொல்லு!” என்று கேட்டாள், ஊனாக்.
“அட, பாவமே! மிகப்பெரிய அசுரன் ஒருவன் அல்லவா டங்கன்னாலிருந்து வருகிறான் !” என்றாள், கிரானுவா.
“அதுதான் விஷயம்! அந்த அசுரன்தான் குகுல்லின்! அவன் என் கணவன் மக்கௌலின் உடலைப் பதம் பார்க்க வருகிறான். நாம் என்ன செய்யலாம்?”
“நான் அவனைக் குல்லமோருக்கு அழைத்து இங்கே சிறிது நேரம் தங்கும்படி செய்கிறேன். அதற்குள் நீங்கள் வேண்டும் யோசனை செய்து திட்டம் தயாரியுங்கள் ! என்னால் முடிந்தவரை நான் அந்த அசுரனைக் கவனித்துக் கொள்கிறேன்.”
பிறகு அவள் மலையின் உச்சியில் பெருந்தீயை வளர்த்துப் புகை உயரே கிளம்பிச் செல்லும்படி செய்தாள். அங்கிருந்துகொண்டே வாயால் மூன்று முறை சீட்டியடித்தாள். அந்த ஒலியைக் கேட்டு குகுல்லின் தன்னைக் குல்லமோருக்கு யாரோ அழைப்பதாகத் தெரிந்து கொண்டான். பழங்காலத்தில் விருந்தினர் வந்து தங்கலா மென்பதற்கு அடையாளமாக மூன்று முறை சீழ்க்கையடிப்பது வழக்கம்.
இடையில் மக்கௌல் என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் கவலையடைந்தான். அவன் வீரன்தான். ஆனால், அசுரனுக்கு எதிராக அவனுடைய வீரமும் பலமும் என்ன செய்ய முடியும்? பூகம்பமுண்டாக்கி, இடியை எட்டிப் பிடித்து நிறுத்துபவனை மற்போரில் எப்படித் தோற்கடிக்க முடியும்? அவனை எப்படித் தாக்குவது என்பதும் தெரியவில்லை. ஆகவே, அவனை எதிர்த்து நிற்காமலே காரியத்தை முடிக்க வேண்டுமென்று மக்கௌல் முடிவு செய்தான்.
அவன், மனைவியைப் பார்த்து, “ஊனாக், ஊனாக், நீதான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும். உன்னுடைய கற்பனா சக்தியெல்லாம் எங்கே போய்விட்டது? முயலை அடிப்பது போல அவன் உன் கண்முன்பே என்னை அடித்துத் தள்ளிவிடுவானே! அவன் உடலே மலை போலிருக்கிறதே!” என்று சொன்னான்.
“நாதா, நீங்கள் நடுங்குவதைப் பார்த்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது! நடுக்கமில்லாமல் நிலையாக நில்லுங்கள்! அவனுடைய இடி, பூகம்பம் எல்லாம் இங்கே என்னிடம் பலிக்காது. அவன் இதுவரை எங்குமே கண்டிராத சாப்பாடெல்லாம் கொடுத்து அவனை அனுப்பாவிட்டால் நான் ஊனாக்கில்லை! அவனை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் மட்டும் நான் சொல்கிறபடி நடந்தாற்போதும்!” என்று ஊனாக் அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
இது போல் முன்பு எத்தனையோ ஆபத்தான சமயங்களில் அவள் அவனைக் காப்பாற்றியிருக்கிறாள். ஆகையால், அவன் அவளை முற்றிலும் நம்பினான். இப்பொழுது வந்துள்ள மாபெரும் ஆபத்தையும் கடப்பதற்கு, அவள் யுக்தி செய்து ஏதாவது தந்திரம் சொல்லுவாளென்று அவன் எண்ணியதில் வியப்பில்லை. எனவே, அவன் கவலை நீங்கி, சமைத்து வைத்திருந்த உணவை உண்டான்.
ஊனாக் ஒன்பது கம்பளி நூல்களை எடுத்து, மூன்று நூல்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரித்து வைத்தாள். ஒவ்வொரு பிரிவிலும் நூல்கள் மூன்று வர்ணங்களில் இருந்தன. ஒவ்வொரு பிரிவையும் நன்றாக முறுக்கி மூன்று கயிறுகள் தயாரித்து, ஒன்றைத் தன் வலக்கையின் மணிக்கட்டிலும், ஒன்றை வலக்கால் கணுக்கட்டிலும், ஒன்றை மார்பில் இதயத்தைச் சுற்றியும் கட்டிக்கொண்டாள். அவள் முக்கியமான எந்த வேலையைத் தொடங்கினாலும், இப்படிச் செய்து கொள்வது வழக்கம். இப்படிக் காப்புகள் கட்டிக் கொண்டால்தான் அவள் எடுத்த காரியம் வெற்றியடையும்!
பிறகு, அவள் வெளியே சென்று, அக்கம்பக்கத்தில் தனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து இருபத்தோர் இரும்புத் தோசைக் கற்களை இரவலாக வாங்கி வந்தாள். வீட்டிலே ரொட்டிக்கு வேண்டிய மாவைப் பிசைந்து, ஒவ்வொரு ரொட்டிக்குள்ளும் ஒரு தோசைக் கல்லை வைத்து, அப்படி இருபத்தொரு ரொட்டிகளைச் சுட்டு அடுக்கி வைத்தாள். அடுத்தாற்போல், இரண்டு பெரிய பானைகளில் தயிரும் மோரும் ஊற்றி வைத்தாள். குகுல்லின் வந்தால் தயிரை என்ன செய்யவேண்டுமென்று அவள் மக்கௌலுக்குச் சொல்லி வைத்தாள். வேலைகளை முடித்துவிட்டு அவள் நிம்மதியாக அமர்ந்திருந்தாள். மறுநாள் இரண்டு மணிக்குத்தான் விருந்தினன் வருவானென்று கணவன் சொல்லியிருந்ததால், அதுவரை அவள் பேசாமலிருந்தாள்.
மக்கௌல் வலக்கைக் கட்டைவிரலை அடிக்கடி கடித்துப் பார்த்துக்கொண்டான். அந்த விரலிலிருந்து அவனுக்கு எதிரி நிச்சயமாக எப்பொழுது வருவானென்பது தெரிந்துவிடும். மேலும், அவனுடைய வல்லமையெல்லாம் அந்த விரலைப் பொறுத்தே அமைந்திருந்தது. இதே போலக் குகுல்லினுக்கு முக்கியமான விரல் அவனுடைய வலக்கை நடுவிரல். எக்காரணத்திலாவது அந்த விரலுக்கு ஆபத்து நேர்ந்தால், பிறகு அந்தச் சிங்கத்தைச் சுண்டெலிகூட விரட்டியடிக்க முடியும். இந்த மர்மம் மக்கௌலுக்கும் தெரியும்.
மறுநாள் இரண்டு மணி அடித்ததும் குகுல்லின் பள்ளத்தாக்கில் ஏறி வந்துகொண்டிருந்தான். ஊனாக் உடனே தன் வேலைகளைத் தொடங்கிவிட்டாள். கூடத்திலே ஒரு பெரிய தொட்டிலை மாட்டினாள். மக்கௌலை அதில் ஏறிப் படுத்துக்கொள்ளச் சொன்னாள். இது அவனுக்கு மிகவும் கேவலமாகத் தோன்றியது. நாடு முழுதும் புகழ் பெற்ற மல்லனாகிய தான், கோழைத்தன மாகக் குழந்தை போல் தொட்டிலில் படுப்பதை அவன் விரும்பவில்லை. ஆனால், வேறு வழியுமில்லை. தேவியின் கட்டளைப்படி அவன் நடக்க வேண்டியிருந்தது. தொட்டிலில் அவன்மீது துணிகளை எடுத்துப்போட்டுப் போர்த்தினாள், ஊனாக்.
“இனி, நீங்கள் மக்கௌல் இல்லை, அவருடைய குழந்தை என்று எண்ணிக்கொண்டு நடிக்கவேண்டும் வாயை மூடிக்கொண்டு, நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும்!” என்று அவள் கூறினாள்.
உடனே குகுல்லின் வந்துவிட்டான். வீட்டினுள் நுழையும் போதே, “எல்லோரையும் கடவுள் காப்பாராக!
இறுமாப்புள்ள இளவரசி மாபெரும் மல்வீரன் மக்கௌலின் வீடு இதுதானே?’ என்று அவன் கேட்டான்.
“இதுதான், இதுதான், பெரியவரே! ஆண்டவன் உமக்கு அருள் புரியட்டும்! இந்தப் பலகையிலே அமருங்கள்!
“வந்தனம், அம்மா! நீதான் மக்கௌலின் மனைவியோ?”
“ஆமாம், என் கணவரால் எனக்கும் பெருமைதான்!”
“அது என்ன பெருமை! அயர்லாந்திலேயே மகாவல்லவன், மகாவீரன் என்று அவன் பெயர் பெற்றிருக் கிறான். ஆயினும், அவனையும் ஆட்டி வைக்கக்கூடிய வேறொருவன் இருக்கிறான். அவன்தான் இப்பொழுது உங்களுடைய வீடு தேடி வந்திருக்கிறான்! உன் கணவன் வீட்டிலிருக்கிறானா?”
“அவர் இங்கில்லையே! யாரோ ஒருவன் வந்து, குகுல்லின் என்ற அசுர பயில்வான் அவரைத் தேடித் தாம்போதிக்கு வருவதாகச் சொன்னான். அவ்வளவுதான், ஒரே கோபத்துடன் வீட்டை விட்டு அந்தப் பயில்வானைத் தேடிப் போனவர் இன்னும் திரும்பி வரவில்லை. அவனை அவர் கண்டிருந்தால், இதற்குள் அவன் சட்டினியாகி யிருப்பான்! கடவுள் அருளால் அசுரனை அவர் சந்திக்காமலிருக்க வேண்டும்!”
“அப்படியா! நான்தான் அந்தக் குகுல்லின்! நான் பன்னிரண்டு மாதங்களாக அவனைத் தேடிக்கொண்டு அலைகிறேன்; அவன் என் கையிலே சிக்காமல் எப்படியோ நழுவிப் போய்விடுகிறான். இரவிலோ பகலிலோ, எங்காவது அவனைப் பிடிக்காமல் விடமாட்டேன்!”
இதைக் கேட்டவுடன் ஊனாக், எள்ளி நகையாடி, உரக்கச் சிரித்துவிட்டு, அவனை அலட்சியமாகத் திரும்பிப் பார்த்தாள்.
உடனே, அவள் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு, “நீங்கள் எப்பொழுதாவது மக்கௌலைப் பார்த்திருக்கிறீர் களா?” என்று வினவினாள்.
“நான் எப்படிப் பார்க்கமுடியும்? நான் வந்தவுடனேயே அவன் எங்காவது கம்பியை நீட்டிவிடுகிறானே!”
“நானும் அப்படித்தான் எண்ணினேன் ! நீங்கள் அவரைப் பார்க்காமலிருப்பதே நலம். இரவும் பகலும் ஆண்டவனைப் பிரார்த்தனை செய்துகொண்டேயிருங்கள் – அவரைச் சந்திக்காமலிருக்க வேண்டுமென்று. என்றாவது சந்திக்க நேர்ந்தால், அந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக இராது. அது கிடக்கட்டும். இப்பொழுது காற்று வீட்டினுள் பலமாக வீசுகிறதே! அவர் இருந்தால், இந்த வீட்டைக் காற்றில்லாத பக்கம் திருப்பி வைத்துவிடுவார். இப்பொழுது விருந்தாளியை வேலை வாங்க வேண்டியிருக்கிறது. நீங்கள் வீட்டைச் சற்றே திருப்பி வையுங்களேன்!”
வீடு மரக்கட்டைகளால் அமைக்கப்பெற்றதுதான். ஆயினும், வீட்டையே திருப்ப வேண்டும் என்றதும் குகுல்லினுக்கே அச்சம் தோன்றியது. அவன் எழுந்திருந்து, தன் வலக்கை நடுவிரலை மூன்று முறை சொடக்கிட்டுச் சரிப்படுத்திக்கொண்டு, வெளியே சென்று, வீட்டின் அடிப்பகுதியில் கைகளை வைத்து அதைத் திருப்பி வைத்தான். தொட்டிலிலே கிடந்த மக்கௌல் வீடு ஆடியதைக் கண்டு திகிலடைந்தான். அவன் உடல் முழுதும் வியர்வையால் நனைந்துவிட்டது. ஆனால், அவனுடைய மனைவி, சிறிதும் துளங்காமல், பெண்மைக்குரிய தன் கூரிய புத்தியை நம்பிக்கொண்டிருந்தாள்.
குகுல்லின் உள்ளே வந்ததும் அவள், “நீங்கள் நல்ல உபகாரியாயிருக்கிறீர்கள். இன்னும் ஒரு சிறு வேலை இருக்கிறது. இங்கே தண்ணீர் இல்லை. அவர் இங்கிருக்கும் பொழுதே அருகிலுள்ள பாறையைப் பெயர்த்து நீர் எடுத்துத் தருவதாகச் சொன்னார். அதற்குள் தாம்போதியை நோக்கிப் போய்விட்டாரே! தாங்கள் கொஞ்சம் சிரமத்தைப் பாராமல் வந்து பாறையைப் பெயர்க்க முடியுமோ?” என்று விநயமாகக் கேட்டாள்.
அவனை அழைத்துக்கொண்டு வெளியே சென்று, மாபெரும் பாறை ஒன்றை அவள் அவனிடம் காட்டினாள். அவன் சிறிது நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்து விட்டுத் தன் நடுவிரலைச் சொடக்கிடத் தொடங்கினான். ஒன்பது முறை சொடக்குப் போட்ட பின்பு, மெதுவாகச் சென்று, பாறையில் கைகளை வைத்து அழுத்தினான்; சிறிது நேரத்திற்குள் பாறையை அடியோடு பெயர்த்தெடுத்து வெளியே வைத்தான். அதன் உயரம் 400 அடி, நீளமும் அகலமும் 1320 அடி இருக்கும்! இதைக் கண்டு ஊனாக்கே திடுக்கிட்டாள். இருந்தாலும் பெண்களின் உறுதியாலும் சாதுரியத்தாலும் எதைத்தான் சாதிக்க முடியாது?
“சரி, இனித் தாங்கள் உள்ளே வந்து சற்றுப் பசியாறிக் கொள்ளுங்கள் ! ஏதோ எங்களுக்குரிய அற்பமான உணவைத் தங்களுக்கும் அளிக்கிறேன். என் கணவர் இருந்திருந்தால், நீங்கள் இருவரும் எதிரிகளாயிருந்த போதிலும், உங்களை உபசரிக்காமல் அனுப்பச் சம்மதிப்பாரா? அவர் இல்லாவிட்டால் என்ன? அவர் கடமையை நான் செய்கிறேன்!” என்று சொல்லி, அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.
அவள் முன்பே தயாரித்து வைத்திருந்த இருபத்தொரு பெரிய ரொட்டிகளுள் ஆறும், இரண்டு மூன்று அடுக்குகளில் வெண்ணெயும், ஏராளமான இறைச்சியும், கீரையும் கொண்டுவந்து அவன் முன்பு வைத்து, அமுது செய்யும்படி வேண்டினாள். குகுல்லின் சாப்பாட்டிலும் பெரிய வீரனானதால், உடனே உண்ணத் தொடங்கினான். முதலாவது ஒரு முழு ரொட்டியைத் தூக்கி அப்படியே வாய்க்குள் போட்டு மென்றான், அவன் ஒரு கடி கடித்தானோ இல்லையோ, ஏதோ விலங்கு ஊளையிடுவது போல் கத்தத் தொடங்கினான். “பாழாய்ப்போக! ஐயோ, போய்விட்டதே! இதென்ன இது? என் பற்களுள் இரண்டு தெறித்து விழுந்துவிட்டனவே! நீ கொடுத்த இந்த ரொட்டி என்ன ரொட்டி?” என்று அவன் உரக்கக் கூவினான்.
“என்ன விஷயம்?” என்று ஊனாக் அமைதியாகக் கேட்டாள்.
“விஷயமா? என் வாயிலுள்ள பற்களுள் முதல் தரமான இரண்டு பற்கள் உடைந்துவிட்டன!’ என்று அவன் மீண்டும் ஆவேசத்துடன் கத்தினான்.
“என்ன இது! இதுதானே மக்கௌல் இங்கிருக்கும் பொழுது நாள்தோறும் உண்ணும் ரொட்டி! ஆனால், நான் உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன். அவரைத் தவிர வேறு யாரும் இதை மென்று தின்ன முடியாது. அவரைப் போலவே, அதோ தொட்டிலில் படுத்திருக்கிறானே அவர் பிள்ளை அவனும் தின்பான்! நீங்களும் பெரிய பயில்வானாயிற்றே – மக்கெளலையே எதிர்க்கத் துணிந்து வந்தவராயிற்றே – என்று அந்தக் கடினமான ரொட்டியை உங்களுக்கும் படைத்தேன். அந்த ரொட்டிகள் கிடக்கட்டும், இதைத் தின்று பாருங்கள். இது ஒருவேளை சற்று மென்மையாயிருக்கும்!” என்று அவள் வேறொரு ரொட்டியை எடுத்து வந்து படைத்தாள்.
அசுரனுக்குப் பசி அதிகம். எதையாவது கொஞ்சம் புசிக்க வேண்டுமேயென்று அதை வாயிலிட்டுக் கடித்தான். உடனே முன்னைவிட இரண்டு மடங்கு உரத்த குரலில் “ஓ!ஓ!” என்று ஓலமிடத் தொடங்கினான். “இடிதான் விழவேண்டும்! உன் ரொட்டிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போ! இவைகளைத் தின்றால், இனி என் வாயில் ஒரு பல்கூட மிஞ்சியிராது, அடுத்த இரண்டு பற்களும் உடைந்துவிட்டனவே!” என்று அவன் கூவினான்.
“பெரியவரே! உங்களால் ரொட்டியைத் தின்ன முடிய வில்லை என்றால், அதை மெதுவாய்ச் சொன்னாலென்ன? தொட்டிற்பிள்ளையை எழுப்பிவிடுவீர்கள் போலிருக் கிறதே! அதோ விழித்துவிட்டானே!” என்று கவலைப் படுவது போல் பேசினாள், ஊனாக்.
மக்கௌல், தூங்கி விழிப்பது போல் பாவனை செய்து கொண்டு, தொட்டிலிலிருந்தபடியே குரல் கொடுத்து முனகினான். அது குகுல்லினுக்குக் குழந்தைக் குரலாகத் தோன்றவில்லை, குட்டி யானை பிளிறுவது போலிருந்தது. “அம்மா, பசிக்கிறது! ஏதாவது கொடு” என்று மக்கௌல் கேட்டான். உடனே ஊனாக் ஓடிச்சென்று, தோசைக்கல் வைக்காத பெரிய ரொட்டி ஒன்றை எடுத்து வந்து, அவன் கையிலே கொடுத்தாள். அங்கே நடப்பவைகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்ததில் அவனுக்குப் பசி அதிகமா யிருந்தது. அதனால் கையிலிருந்த ரொட்டியை விரைவிலே கடித்துத் தின்றுவிட்டான், இதைக் கண்ட குகுல்லின் பிரமிப்படைந்தான். தன் பற்களுள் நான்கைப் பதம் பார்த்த ரொட்டியை மக்கௌலின் குழந்தை ஒரு நொடியில் காலி செய்துவிட்டதேயென்று அவன் வியப்புற்று, மல்லன் மக்கௌலைத் தான் சந்திக்காமற்போனதே நல்லதென்று எண்ணினான். இந்த மாதிரி ரொட்டியைத் தின்னும் மனிதனையே. நான் இதுவரை பார்த்ததில்லை; இங்கே தொட்டிலிலே கிடக்கும் குழந்தை என் கண்ணெதிரிலேயே அதை மென்று தின்று தீர்த்துவிட்டதே!’ என்று அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
“இந்த அற்புதக் குழந்தையின் முகத்தை நான் பார்க்க விரும்புகிறேன். இத்தகைய உணவை உண்ணும் பையன் சாதாரணமானவன் அல்லன்!” என்றான், குகுல்லின்.
“நீங்கள் குழந்தையைப் பார்க்க நான் கொடுத்து வைத்தவள்தான்! வந்து பாருங்களேன்!– பாப்பா, இங்கே ஒரு சின்ன மனிதர் வந்திருக்கிறார். அவரிடம் நீ யார் மகன் என்பதைக் கொஞ்சம் காட்டு, பாப்பா!” என்று ஊனாக் கூறினாள்.
மக்கௌல் குழந்தையைப் போல் அலங்கரிக்கப் பெற்றிருந்தானல்லவா? குழந்தையைப் போலவே அவன் உடலை வளைத்துக்கொண்டு எழுந்திருந்து, அமர்ந்து, “உனக்குப் பலம் இருக்கிறதா?” என்று குகுல்லினைப் பார்த்துக் கேட்டான்.
“இதென்னடா அதிசயம்! சின்னக் குழந்தையா இப்படி உறுமுவது போல் பேசுகிறது!” என்று குகுல்லின் கூறினான்.
மக்கௌல் மறுபடி, “உனக்குப் பலம் இருக்கிறதா? இருந்தால், இந்தச் சிறு வெள்ளைக் கல்லைப் பிழிந்து தண்ணீர் எடுக்கவேண்டும்!” என்று சொல்லி, ஒரு கல்லை அவனிடம் கொடுத்தான்.
குகுல்லின் கல்லைக் கைகளுக்கிடையில் வைத்துக் கொண்டு பன்முறை அமுக்கியும் நசுக்கியும் பார்த்தான். அவன் படுகிற பாடுகளைக் கண்டு தொட்டிற்பயில்வான் ஏளனமாக நகையாடிக்கொண்டிருந்தான். குகுல்லின் கல்லைப் பிசைய முயன்று முயன்று கைகளைப் புண்ணாக்கிக்கொண்டதைத் தவிர வேறு பயனில்லை.
அவன் முகம் கறுத்துவிட்டது.
“இவ்வளவுதானா உனது வல்லமை! நீயா பெரிய அசுரன்? அந்தக் கல்லை என்னிடம் கொடு, மக்கௌலின் மகன் என்ன செய்ய முடியுமென்று காட்டுகிறேன்!”
மக்கௌல் கல்லை வாங்கிக்கொண்டான்; கண்மூடித் திறப்பதற்குள் அதை மாற்றி, அதற்குப் பதிலாகத் தான் தயாராக வைத்திருந்த தயிர்க்கட்டியைக் கைக்குள் வைத்துக் கொண்டு பிழிந்தான். உடனே கல்லிலிருந்து நீர் வழிந்து விட்டது! “இந்தக் கல்லை நசுக்க முடியாத உன்னை , அப்பா வந்தால், ஒரு நிமிடத்தில் பச்சடியாக்கிவிடுவார்!” என்று சொல்லிவிட்டு, அவன் மீண்டும் தொட்டிலில் படுத்துக் கொண்டான்.
குகுல்லினும் அப்படியே எண்ணினான். மக்கௌலை எண்ணியதும் அவன் கால்கள் நடுங்கத் தொடங்கின. விரைவிலே ஊனாக்கிடம் விடை பெற்றுக்கொண்டு, அந்த இடத்தை விட்டு அகல்வதே நலமென்று அவன் தீர்மானித்தான். “நான் மக்கௌலுக்கு ஈடானவனல்லன்! இனி அவனுடன் பொருதும் ஆசையும் எனக்கில்லை. இனி என் ஆயுட்காலத்தில் இந்தப் பகுதிக்கே வரமாட்டேன் என்பதை உன் க்ணவனிடம் சொல்லிவிடு!” என்று அவன் ஊனாக்கிடம் கூறினான்.
தங்கள் தந்திரங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அந்த அசுரன் வெளியேறப்போவதை எண்ணி மகிழ்ந்து கொண்டே மக்கௌல் தொட்டிலில் மௌனமாகப் படுத்திருந்தான்.
“ஏதோ நீங்கள் வந்த சமயம் அவர் வீட்டிலில்லாமற் போனதும் நல்லதுதான்!” என்றாள், ஊனாக்,
ஆம், நல்லதுதான்! ஆனால், நான் புறப்பட்டுப் போகு முன்னால், இந்தத் தோசைக்கல்-ரொட்டியைத் தின்னக்கூடிய உன் குழந்தையின் பற்களை ஒருமுறை பார்க்கத் தோன்றுகின்றது!” என்று அவன் கூறினான்.
“அதற்கென்ன, பாருங்கள்! அவன் பற்கள் வாய்க்குள் தள்ளி இருப்பதால் விரலை ஆழமாக வைத்துப் பார்த்தால் தான் தெரியும்!” என்றாள், ஊனாக்.
குகுல்லின் குழந்தையின் வாய்க்குள் கையை வைத்துப் பார்த்தான். குழந்தையின் பற்கள் அப்படி வரிசையாகவும் உறுதியாகவும் இருக்குமா என்று வியந்துகொண்டே அவன் கையை வெளியே எடுத்தான். இடையில் பற்களைவிட வியப்பான ஒரு வேலை நடந்துவிட்டது. அவனுடைய நடு விரலைக் காணவில்லை! அந்த விரல்தான் அவனுக்கு உயிர்நாடி போன்றது. அந்த விரலைத்தான் குழந்தை கடித்துத் துண்டித்துவிட்டது.
உடனே குகுல்லின் வேதனையால் குமுறிக்கொண்டே தரையில் சாய்ந்தான்.
இறுமாப்புள்ள இளவரசி கொடிய பகைவன் தொலைந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியுடன் மக்கௌல் தொட்டிலை விட்டுக் கீழே குதித்தான். சில நிமிடங்களுக்குப்பின் குகுல்லின் பிணமாகி விட்டான்.
இவ்வாறு, உடல் வலிமையால் வெல்ல முடியாத பகைவனை மக்கௌல் தன் மனைவியின் அறிவைக் கொண்டு வென்றுவிட்டான். பொதுவாகப் பெண்கள் பல சமயங்களில் சங்கடமான நிலையில் ஆடவர்களைக் கொண்டுபோய் மாட்டிவைத்த போதிலும், சில சமயங்களில் அவர்களே அத்தகைய நிலையிலிருந்து விடுதலை பெறவும் உதவுகிறார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகின்றது.
– இறுமாப்புள்ள இளவரசி (அயர்லாந்து நாட்டுக்கு கதைகள்), முதற் பதிப்பு: 14-11-1979 (குழந்தைகள் தின வெளியீடு), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.