இம்மியளவு குறைந்தால் கூட…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,214 
 

ஒரு அழகிய சின்னஞ்சிறு கிராமம்.

அந்தக் கிராமத்தைச் சுற்றி பச்சைப் பசேலென்ற வயல்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழை மற்றும் தென்னந் தோப்புகள்…

இம்மியளவு குறைந்தால் கூடஅந்த ஊரின் செழிப்புக்குக் காரணம், ஊரை உரசிக் கொண்டு, கரைபுரண்டு ஓடும் நீல நதி.

அந்த நதிக்கரையோரம் ஒரு சிறிய ஓட்டு வீட்டில், தேவகி என்ற யாதவ குலப் பெண் வசித்து வந்தாள் – பார்வையை இழந்த வயதான தந்தையோடு.

தேவகிக்கு வயது இருபதுக்குள் இருக்கும். பள்ளிக்கூடம் பார்க்காதவள். நாலைந்து கறவைப் பசுக்கள் வளர்த்து, பால் கறந்து ஊருக்குள் விநியோகம் செய்து கிடைத்த சொற்ப வருமானத்தில் தந்தையைக் காப்பாற்றி வந்தாள்.

பசுக்களுக்கு தேவகி, பச்சரிசி அல்லது அகத்திக் கீரையை ஊட்டுவாள். காகம் போன்ற பறவைகளுக்கு சமைத்த உணவைப் படைப்பாள். வாசலுக்கு வரும் ஏழைக்கு உணவளிப்பாள். அனைவரிடமும், புன்னகை தவழ, இனிய மொழியிலேயே பேசிப் பழகுவாள்.

அவளுக்கு ஒரு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதே அவள் தந்தையின் அன்றாடப் பிரார்த்தனை.

தேவகியின் வீட்டருகே, நதிக் கரையில் ஒரு படகுத்துறை இருந்தது. அங்கே ஒரு படகு இருந்தது. நதியைக் கடக்க விரும்புகிறவர்கள் அந்தப் படகைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

தேவகி ஒவ்வொரு நாளும், கறந்த பாலை ஒரு சிறிய குடத்தில் எடுத்துக் கொண்டு, படகில் ஏறி மறுகரைக்குச் செல்வாள். அங்கே இருக்கும் கோயிலில் துளசியால் அர்ச்சனை செய்துவிட்டு, குருக்கள் வைத்திருக்கும் பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டுத் திரும்புவாள்.

ஒருநாள் அவள் மிகவும் தாமதமாக பால் எடுத்துச் செல்லவே, குருக்கள் காரணம் கேட்டார். அதற்குத் தேவகி –

“”ஐயா, நான் அதிகாலையிலேயே உங்களுக்கான பாலை எடுத்துக் கொண்டு வந்தேன். ஆனால் படகோட்டி தாமதமாகப் படகைக் கொண்டு வந்தான்” என்றாள்.

இன்னொரு நாள் படகுத்துறைக்குப் படகே வராததால், குருக்களுக்கு பால் கொண்டு செல்ல தேவகியால் முடியாமல் போய்விட்டது.

மறுநாள், அவள் பால்குடத்துடன் சென்றபோது, குருக்கள் தனது கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “”நேற்று ஏன் பால் கொண்டு வரவில்லை?” என்று கேட்டார்.

“”படகே வரவில்லை. அதனால்தான்…” என்றாள் தேவகி.

அதற்கு குருக்கள், “”என்னம்மா, இது! ஒரு சின்ன ஆறு. இதைக் கடந்து வருவது அவ்வளவு கஷ்டமா? கடவுள் நாமத்தை உச்சரித்துக் கொண்டே எங்களைப் போன்றவர்கள் சம்சாரம் என்கிற பெருங்கடலையே தாண்டி இறைப் பணிக்கு வந்திருக்கிறோம். உன்னால் இந்தச் சிறிய ஆற்றைக்கூடக் கடக்க முடியவில்லை என்கிறாயே?” என்றார்.

பாலை வாங்கிக் கொண்டு அவளைப் போகச் சொல்லிவிட்டார்.

மறுநாள், வழக்கத்துக்கு மாறாக, விடியற்காலையிலேயே தேவகி பால் குடத்தோடு குருக்களின் இருப்பிடம் வந்தாள்.

கோயிலிலிருந்து வந்த குருக்கள், தேவகியை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, “”எப்படி உன்னால் இவ்வளவு சீக்கிரமாக வர முடிந்தது?” என்று கேட்டார்.

“”இன்றும் படகோட்டி வரவில்லைதான். ஆனால் ஐயா சொன்ன வழியைப் பின்பற்றினேன். இக்கரைக்கு வந்துவிட்டேன்!” என்றாள் தேவகி.

குருக்கள் குழப்பத்தோடு பார்த்தார்.

“”ஆம் ஐயா, தாங்கள் சொன்னபடி பகவான் மேல் பாரத்தைப் போட்டு, அவர் நாமத்தை உச்சரித்துக் கொண்டே தண்ணீர் மேல் நடந்து வந்துவிட்டேன்…” என்றாள் தேவகி.

“”கேலிப் பேச்செல்லாம் வேண்டாம். படகோட்டி சீக்கிரமாக வந்துவிட்டானா?” என்று குருக்கள் சற்றுக் கோபமாகவே கேட்டார்.

“”அவன் வரவேயில்லை என்று நான் சொன்னதை நீங்கள் நம்பவில்லையா?”

“”தண்ணீர் மேல நடந்து வந்ததாக நீ சொல்லுவதையும் என்னால் நம்ப முடியவில்லை” என்றார் குருக்கள்.

“”தெய்வ நாமத்தை உச்சரித்தால் வாழ்க்கைங்கற பெருங்கடலையே கடக்க முடியும்னு நேத்து சொன்னீங்க. இப்ப நான் சொல்றதை நம்ப மாட்டேங்கறீங்களே சாமி. நீங்க என்கூட வந்து நான் எப்படித் திரும்பிப் போறேன்னு பாருங்க. உங்களுக்கு இஷ்டம்னா, நீங்களும் கடவுளை தியானித்தபடி அவர் நாமத்தை உச்சரித்தபடி என்கூட நீர் மேல் நடந்து வரலாம்!”

குருக்களுக்கு ஆர்வம் பிறந்தது. அவள் சொல்வது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள விரும்பியவர், அவள் பின்னே நடந்தார்.

நதிக்கரை வந்தது.

முந்தின நாள் பெய்த மழையால் கலங்கலாகக் காவி நிறம் பெற்றிருந்த நதி, சிற்றலைகளைப் பரப்பியவண்ணம் மௌனமாக ஓடிக் கொண்டிருந்தது.

குருக்களுக்குப் பயம் வந்துவிட்டது. சற்றுத் தயங்கிப் பின்வாங்கினார்.

“”பயப்படாம, என் பின்னால வாங்க ஐயா” என்ற தேவகி காலிக்குடத்தை இடுப்பில் இடுக்கிக் கொண்டு, தெய்வத்தை தியானித்தபடி கட்டாந்தரையில் நடக்கிற மாதிரி அந்த நீரின் மேல் பாதங்களைப் பதித்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

குருக்களும் தெய்வ நாமத்தை உச்சரித்தபடி, நீரின் மேல் முதல் அடியை எடுத்து வைக்க, “தொபுக்கடீர்’ என்று ஆற்றுக்குள் விழுந்தார்.

சிறிது தூரம் சென்றிருந்த தேவகி திரும்பிப் பார்த்தாள்.

குருக்கள் கரையிலேயே முழங்கால் அளவு நீரில், தனது பஞ்சகச்சத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு, “”ஐயா! என்ன அங்கேயே நின்னுட்டீங்க?” என்று கேட்டாள்.

“”உன்னை மாதிரி என்னால ஜலத்தின் மேல நடக்க முடியலேம்மா…” என்றார் குருக்கள்.

“”தெய்வத்தை தியானித்து அவர் நாமத்தை உச்சரித்தீர்களா?” என்று தேவகி கேட்டாள்.

“”செஞ்சேனே…” என்றார் குருக்கள்.

“”இல்லே…”

“”இல்லையா! எப்படிச் சொல்றே?”

“”நீங்க செய்யல ஐயா, உங்க வாய் தெய்வநாமத்தை உச்சரித்தது. ஆனா…”

“”ஆனா..?”

“”உங்க கைக்கு உங்க வேட்டி மேலதான் கவலை. அது நனைஞ்சிடக்கூடாதுங்கற கவலை.

அதனாலதான் நீங்க வேட்டிய ஜாக்கிரதையாத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு ஆற்றில் கால் வெச்சீங்க. கடவுளை நீங்க முழுசா தியானித்து, முழுசா உங்களை அவர்கிட்டே ஒப்படைச்சு, முழுசா அவரை நீங்க நம்பியிருந்தா நீங்களும் என்ன மாதிரி நீர் மேல நடந்திருக்க முடியும். தண்ணீருக்குள்ளே விழுந்திருக்க மாட்டீங்க…” என்றாள் தேவகி.

குருக்களுக்கு அப்போதுதான் ஞானம் பிறந்தது.

தெய்வ நம்பிக்கையில் இம்மியளவு குறைந்தால்கூட இம்சைதான் என்பதையும் தியானத்தின் மூலமாக இறைவனுடன் இரண்டறக் கலந்து, தன்னையே முழுமையாகப் பகவானுக்கு அர்ப்பணித்துக் கொள்ளுகிறவன் வாழ்க்கையில்தான் எல்லா அற்புதங்களும் நிகழும் என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

– சுமந்திரன் (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *