(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த மாட்டுவண்டி ஊரைக் கிழித்துக் கொண்டு வந்த கிறவல் பாதையிலிருந்து பிரதான வீதியில் ஏறி, தெற்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தது. வண்டி நிறைய நெல் மூடைகள் அடுக்கப்பட்டிருந்தன.
வாட்ட சாட்டமான ஓர் இளைஞன் வண்டியின் மேல் தனது வழமையான இருக்கையில் உட்கார்ந்திருந்தான். அவ்வண்டியில் பிணிக்கப்பட்டிருந்த இரண்டு மாடுகளின் கழுத்துகளிலுமிருந்து ஓடிவந்த இரு கயிறுகளின் முனை களும், அவனது இடது கைக்குள் சிக்கிக் கிடந்தன.
வண்டியின் வேகம் தணிந்த போது அக்கயிறுகளை இழுத்து உலுக்கி விட்டுக் கொண்டான்.
“இந்தாப்… படி… இந்தாப்… படி…” என்று கத்தினான்.
“சுள்… சுள்…” என்று அவனது வலது கரத்திலே இருந்த, ‘கேட்டிக்கம்பு’ அம்மாடுகளின் முதுகுகளைப் பதம் பார்த்து மீண்டது.
இவ்வாறு அந்த இளைஞன் பாதையிலே வண்டியை வெகு சுறு சுறுப்போடு செலுத்திக் கொண்டிருந்தான்.
வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் அவனது நாயும் வண்டியோடு இழுபட்டுக் கொண்டிருந்தது.
வெள்ளை நிறமான அந்த நாய், சிறிது நேரம் வண்டியின் கீழே விரைவதும், சற்று நேரம் வண்டியின் முன்னால் குதித்துக் கொண்டு செல்வதுமாக விருந்தது.
பள்ளிவாசல், கடைத் தெரு, புளியோட்டான் குளம், கோயில், பிரதான சந்தி ஆகியவற்றைத் தாண்டி. இப்போது தெற்கு நோக்கிச் செல்லும் அதே பிரதான பாதை யில், இரு மருங்கும் பற்றைக் காடுகளும், ஆங்காங்கே மருத மரங்களும் நிறைந்த ஓர் இடத்தினூடாக வண்டி விரைந்து கொண்டிருந்தது. அப்போது, வண்டியின் முன்னே குறுகிய தூர ஓட்டப் பந்தயத்தில் வெற்றி வாகை சூட விரையும் விளையாட்டு வீரனைப் போல விரைந்து கொண் டிருந்த அந்த வெள்ளை நாய், பாதைக் கரையிலே நின் றிருந்த, தனக்குத் தெரிந்த ஒரு தவிட்டு நிற நாயைக் கண்டதும் திடுதிப் பென்று நின்றது; அதன் பக்கமாகச் சென்றது.
தவிட்டு நிற நாய், அதனை அன்பாகப் பார்த்து,
“எங்கே இந்தப் பக்கமாக…” என்றது.
“இங்கே… ஓரிடத்திற்குப் போகிறோம்…” பதி லளித்தது வெள்ளை நாய்.
“ஆ… அப்படியா… அது சரி… நானும் உன்னைப் பல முறை பார்த்திருக்கிறேன். ஒரேயே இந்த மாட்டு வண்டியோடுதான் திரிகிறாய்… என்ன விசயம்…”
“நானில்லா விட்டால் எந்த விடயமும் நடக்காது… இந்த மாட்டுவண்டி இயங்குவதற்குப் பிரதான காரணம் நான்தான்…” ஒரு பெரும் நிருவாகி போல் முகத்தை வைத்துக் கொண்டது வெள்ளை நாய்.
“ஹா… அப்படியென்றால் நீங்கள் பெரும் ஆள் என்று சொல்லுங்கள். நான் உங்கள் நண்பன் என்ற வகையிலே அது எனக்கும் பெருமைதான்…” என்று விட்டு மிகவும் பூரிப்போடு தலை நிமிர்ந்தது.
“நண்பா… அதோ… வண்டி தனியாகப் போகிறது. நான் வருகிறேன்” விடை பெற்றுக் கொண்டு வண்டியை நோக்கிப் பறக்கிறது அந்த வெள்ளை நாய்.
இருபது இருபத்தொரு நாட்களின் பின் ஒரு நாள்… அந்த வெள்ளை நாய் தனது வாசஸ்தலமான மாட்டுக் கொட்டிலிலே மிகவும் அசதியோடு படுத்துக் கிடந்தது.
கால்களில் பட்ட காயங்கள் பருமட்டாக ஆறிவிட்ட போதிலும் வழமை போல நன்கு நடமாட முடியாமை யினால், பெரும் பொழுதைப் படுக்கையிலேயே கழித்து வந்தது.
இவ் வேளையிலேதான் அந்தத் தவிட்டு நிற நாய் மாட்டுக் கொட்டிலிலே அதனைச் சந்தித்தது.
“என்ன ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்… கால்களில் ஏதோ காயங்கள் ஏற்பட்ட மாதிரியும் தெரிகிறது” என்றது,
“நண்பா… நான் இற்றைக்கு பதினெட்டு பத்தொன் பது நாட்களுக்கு முன்பு, ஒரு தினம்… எனது எஜமானது மாட்டு வண்டியுடன் பிரதானமான ஒரு பிரயாணத்திலே பங்கு கொண்டிருந்தேன். அப்போது ஓரிடத்தில் வைத்து கார் ஒன்றினால் மோதப் பட்டு படு காயப் பட்டேன். எனது எஜமானது உதவியினால் பருமட்டான காயங்கள் விரைவிலேயே குணமாகி விட்டன. இன்னும் ஓரிரு நாட் களில் வழமை போல எழுந்து நடமாடலாம்”
“ஆ… அப்படியா… இந்த விடயம்… எனக்குத் தெரியாது. சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்றுதான் நான் வந்தேன்…”
“ஹா… அப்படியா..” அந்த வெள்ளை நாயின் வதனத்தில் புன்னகையொன்று மலர்ந்து மறைந்தது.
“அது சரி… எட்டு, ஒன்பது நாட்களாக, இந்த மாட்டுவண்டி நீங்களின்றித் தனியாகப் போய் வந்ததை நான் அவதானித்தேன். கால்களில் ஏற்பட்ட காயங்களி னாற்றான் நீங்கள் வண்டியோடு வரவில்லை என்பதை நான் இப்போதுதான் உணர்கிறேன்… சரி… அதிருக் கட்டும்… விசயத்திற்கு வருவோம்… இந்த எட்டு, ஒன்பது நாட்களும் நீங்களின்றித் தனியாக, வண்டிக்காரனின் வழி காட்டலிலே இந்த மாட்டுவண்டி எப்போதும் போல் வெகு சுறு சுறுப்பாகவே இயங்கி வந்தது. ஆனால், முன்பு நீங்களோ, நானில்லாவிட்டால் எந்த விடயமும் நடக்காது… இந்த மாட்டுவண்டி இயங்குவதற்குப் பிரதான காரணம் நான் தான் என்று கூறினீர்கள்… இப்போது என்ன சொல்லுகிறீர்கள்…?”
வகையாக மாட்டிக் கொண்ட வெள்ளை நாய் திக்கு முக்காடியது. உண்மையைச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தது. நிதானத்தோடு தவிட்டு நிற நாயை நோக்கி இவ்வாறு கூறியது:
“நான் இன்னும் விசயங்களை மறைத்துக் கொண்டு போக விரும்பவில்லை. எனது உண்மையான நிலையினை அப்படியே தங்களிடம் கூறிவிடுகிறேன்.
நண்பா… நான் மிக இளமைக் காலத்திலேயே இந்த வண்டிக் காரரிடம் வந்து சேர்ந்தேன். அவர் ஆரம்பத்தி லேயே, தனக்கு உதவிக்காக அதாவது, இந்த மாட்டுக் கொட்டிலிலே படுத்துக் கொள்ளுவதற்கும், வண்டி வெளி யிலே கிளம்பிச் செல்லும் போது கூடவே போய் வருவதற்கு மாக என்னை நன்கு பழக்கி எடுத்துக் கொண்டார். பின்னர், நான் அவர் பழக்கி விட்டபடி நடந்து கொள்ளத் தொடங்கினேன்.
அவர் மிகவும் அடக்கங் கொண்டவராகத் திகழ்ந்த மையினாலும், கட்டுப்பாடு, கண்டிப்பு ஆகியவற்றை என் மேல் கட்டவிழ்த்து விடாமையினாலும் நான் அப்பணி களிலே என்னை வெகு சுதந்திரமாக ஈடுபடுத்தியும் வந்தேன். நான் இவ்வாறு செயற்பட்டு வருகையில் என்னுள் ஒரு போலிப் பெருமை முளை விடவும் ஆரம்பித்தது. அதன் காரணமாக, ‘தான் இல்லாவிட்டால் இந்த மாட்டுவண்டி இயங்காது. அவ்வியக்கத்திற்கு தான்தான் பிரதான கார ணம்’ என்று பாவனை மூலம் வெளிப்படுத்தியது மட்டு மல்லாது, மற்றவருடன் குசு குசுக்கவும் தொடங்கினேன். திறந்து சொல்வதாக விருந்தால் நான் நல்லவன் என்பதால் எனது எஜமானனான இந்த வண்டிக்காரர், தனது வாழ்க்கை வட்டத்திற்குள் எனக்கு ஒரு சிறிய இடந்தந்தார். என்னைச் சும்மா விட்டுவிடுதல் நன்றன்று என்பதற்காக, சற்றுப் பயன் படுத்தியும் வந்தார். இதைத் தவிர, இந்த மாட்டுவண்டி நிர்வாகத்திலே எனது பங்களிப்பு துளிதானும் இல்லை. ஆனால்,நானோ, நிஜமாகவே நிருவாகம் செலுத்தி வந்தவரான இந்த வண்டிக்காரரை அப்படியே மறைத்து விட்டு என்னை அந்த இடத்திலே வைத்துக் காட்ட முயன்றேன். இவ்வாறு நான் என்னை ஒரு பெரிய ஆள் போல் காட்டிக் கொள்ள முயன்ற சந்தர்ப்பத்திலேதான் தங்களிடமும், வீண் பெருமையடித்துக் கொண்டேன் ஆனால், இன்றோ நான் இங்கு எனது பிற்காலத்தில் காட்டிய அந்தப் போலிப் பாவனைகளும், நடத்தைகளும் மிகவும் பிழையானவை என்பதை நன்கு உணர்கிறேன்.
நான் அறியாமையில் தடுமாறிய அவ்வேளையிலே எனது நண்பரான தங்களிடமும் பிழையாக நடந்து கொண்டேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்- இனி நான் தங்களிடம் மட்டு மல்ல மற்றைய எவரிடமும் இவ்வா றெல்லாம் தவறாக நடந்து கொள்ளவே மாட்டேன்” என்றுவிட்டு நெடு மூச்சொன்றை உதிர்த்து விட்டுக் கொண்டது அந்த வெள்ளை நாய்.
ஓரிரு வினாடிகளில் மீண்டும் அதுவே தனது உரை யைத் தொடர்ந்தது:
“இச் சந்தர்ப்பத்திலே இன்னுமொரு உண்மையை வெளிப்படுத்துவது நன்று என்று கருதுகிறேன்.
நண்பா… நான் திருந்தி விட்டதால் என்னோடு போலி என்னும் அந்தச் சரித்திரமும் முடிந்துவிட்டது என்றும் நாம் கூறிவிடமுடியாது. தற்போது இங்கு நிலவு கின்ற வேறு சில நிருவாகங்களிலும் நான் முன்பு நடந்து கொண்டது போல் செயற்படுகின்ற சில போலிகள் இருக் சுவே செய்கின்றனர். என்றாலும் அவர்களும் என்றோ ஒரு நாள் என்னைப் போல் வகையாக மாட்டிக் கொண்டு தலை குனிய வேண்டியே வரும்” என்று விட்டு தனது மேனியை மெல்ல உலுக்கி விட்டுக் கொண்டது வெள்ளை நாய்.
“நான் சரியான சந்தர்ப்பத்திலே தங்களைச் சரி யாகப் பிடித்துக் கொண்டதனாற்றான் தாங்கள் இவ்வாறு உண்மையைக் கக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டதோடு, தாங்கள் திருந்துவதற்கான ஓர் உணர்வையும் தங்களுள் தோற்று வித்தது. அதுமட்டு மல்ல ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய ஒரு தன்மையையும் ஏற்படுத்தியது. அந்த வகையில் நான் மிகவும் சந்தோசப் படுகிறேன்’” இது தவிட்டு நிற நாய்.
இப்போது வெள்ளை நாயோ, தனது பார்வையைத் தரையிலே புதைத்து விட்டிருந்தது. அதே வேளை அதன் வதனமோ சாந்தியின் வாசஸ்தலமாக விளங்கியது.
– தொகுதிக்காக – 1990.09.15.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.