(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அன்பானமொழிகளைப் பேசுதல்
பெருஞ் சித்திரனார் தம் வறுமை நீங்க இள வெளிமானைக்கண்டு பரிசில் கேட்டனர். அவன் வெறுப்பு முகத்துடன் சிறிது பொருள் கொடுத் தான். “நேரில் வந்து குறைசொல்லியும் மதியாமல் மனம் வேறுபட்டு வெறுப்பு முகத்துடன் தரும் பொருள் வேண்டாம்” என்று அதை வாங்காமல், மலர்ந்த முகத்துடன் மனங்கனிந்து அன்பு மொழி பேசினால் அதுவே இப்பொருள் கொடுத்தலைக் காட்டிலும் மேலானது என்று சொல்லிச் சென்றார். இக்குறளும் இக்கருத்தையே விளக்குகிறது.
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
முகன் அமர்ந்து = (ஒருவரைக் கண்டபொழுதே) முகம் மலர்ந்து
இன்சொலன் = (அதனோடு) அன்பு மொழியையும்
ஆகப்பெறின் = உடையவனாகப் பெற்றால் (அது)
அகன் அமர்ந்து = மனம் மகிழ்ந்து
ஈதலின் = (ஒருவருக்கு வேண்டியதைக்) கொடுப்பதைக் காட்டிலும்
நன்று = நன்மையுடையது ஆகும்
கருத்து: மனமகிழ்ந்து ஒருவர் வேண்டியதைக் கொடுப்பதைக் காட்டிலும் முகமலர்ந்து இன்சொல் கூறுதல் நல்லது.
கேள்வி: மனமகிழ்ந்து கொடுத்தலைக் காட்டிலும் நல்லது எது?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.