ஒரு பிராமணன் புதிதாகத் தோட்டம் ஒன்று அமைத்தான். இரவு, பகலாக அதைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றி வந்தான். ஒருநாள் அந்தத் தோட்டத்தில் பசு ஒன்று புகுந்தது. அந்த பிராமணன் மிகுந்த கவனத்தோடு அருமையாக வளர்த்த மாஞ்செடி ஒன்றை மேய்ந்து விட்டது. பிராமணன் இதைக் கண்டான். அவனுக்கு அந்தப் பசுவின் மேல் ஏற்பட்ட ஆத்திரத்திற்கு அளவே இல்லை. கோபத்துடன் பசுவை அடி அடியென்று பலமாக அடித்தான். அந்த அடி பொறுக்க மாட்டாமல் பசு இறந்து விட்டது. பிராமணன் பசுவைக் கொன்று விட்டான் என்ற செய்தி காட்டுத் தீ போல ஊர் முழுவதும் பரவியது. மற்றவர்கள் முன், தன்னை பண்டிதனாகக் காட்டிக் கொண்டவன் இந்த பிராமணன். ஆகையால், அவன் எதற்கும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து பதில் சொல்லி விடுவான்.யாராவது அவனிடம், “பிராமணராகிய நீங்கள் பசுவைக் கொன்றது மகாபாவம்’ என்று சொன்னபோது அதைதான் செய்த குற்றமாக அவன் ஒப்புக் கொள்ளவில்லை. அவன்தான் பெரிய பண்டிதன் அல்லவா?
“”நான் பசுவைக் கொல்லவில்லை. என் கையே பசுவைக் கொன்றது. இந்திரன்தான் கைக்கு அதிதேவதையாக இருப்பவன். ஆகவே, பசுவைக் கொன்ற பாவம் இந்திரனையே சேரும். நான் அதற்குப் பொறுப்பாளி அல்ல. குற்றம் இந்திரனையே சேர்ந்தது!” என்று சொல்லி விட்டான். தான் ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போலவும் தர்மவானைப் போலவும் நடித்து இந்திரன்மேல் பழியைச் சுமத்தினான். பிராமணன் இப்படிச் சொல்லித் திரிவதை இந்திரன் கேள்விப்பட்டான். அவன் ஒரு கிழப் பிராமணனாக உருவம் மாறி, தோட்டத்துக்குச் சொந்தக்காரனாகிய பிராமணனிடம் சென்றான்.
“”சுவாமி! இந்தத் தோட்டம் யாருடையது?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பிராமணன், “”எனக்குத்தான் சொந்தம்!” என்றான்.
“”இந்தத் தோட்டம் மிக மிக அழகாக இருக்கிறது. இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. உங்கள் தோட்டக்காரன் நல்ல திறமைசாலியாக இருக்க வேண்டும். அதனால்தான், இந்த மரங்களை இவ்வளவு அழகாகவும், வரிசை வரிசையாகவும் சிறப்பாகவும் நட்டிருக்கிறான்…” என்றான் இந்திரன்.
“”மகிழ்ச்சி. இது நான் செய்த வேலையாகும். மரங்கள் எல்லாவற்றையும் எனது யோசனைப்படி, என் மேற்பார்வையில் என் உத்தரவுப்படிதான் தோட்டக்காரன் நட்டான்…” என்றான் பிராமணன்.
அதற்கு இந்திரன், “”அப்படியா? சரிதான். உண்மையிலேயே நீங்கள் வெகு அழகாகத்தான் செய்திருக்கிறீர்கள். இதோ இருக்கிறதே, இந்தப் பாதையை யார் போட்டனர்? இதுவும் வெகு நேர்த்தியாகப் போடப்பட்டு இருக்கிறது…” என்றான்.
“”இதையும் நான்தான் செய்தேன்.”
இதை எல்லாம் கேட்ட இந்திரன், கூப்பிய கையோடு, “”பிராமணரே! இவை எல்லாமே உங்களுடையவை என்று சொல்கிறீர்கள். இந்தத் தோட்டத்தில் நடைபெற்றிருக்கும் வேலைகள் அனைத்தையும் நீரே செய்ததாகவும், அவற்றுக்கு உரிய பெருமை எல்லாம் உங்களுக்கே சேர வேண்டும் என்று சொல்கிறீர்கள். பசுவைக் கொன்ற பாவத்திற்கு மட்டும் இந்திரனைச் சொல்லி இருக்கிறீர்களே. இது நியாயமாகுமா?” என்று கேட்டுவிட்டு மறைந்து போனான்.
பிராமணன் முதல் முறையாக தன் தவறை உணர்ந்தான்!
– ஜூலை 23,2010