மணலூரில் மாரிசாமி என்பவன் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தான். அவன் மிகவும் நேர்மையானவன். அதனால் உள்ளதைச் சொல்லி சாமான்களை விற்று வந்ததால் அவனுக்கு நிறைய
லாபம் கிடைக்கவில்லை. கிடைக்கும் லாபமோ குடும்பத்தை நடத்தக் கூடப்போதுமானதாக இருக்கவில்லை. அவன் தன் கடையில் வேலையாள் யாரையும் அமர்த்திக் கொள்ள முடியாமல் தன் மகன்
தங்கப்பனையே உதவிக்கு வைத்துக் கொண்டான்.
தங்கப்பன் தன் தந்தையிடம் “என்னப்பா இது! வியாபாரம் சரியாக. நடப்பது இல்லையே. நம் குடும்பச் செலவுக்குக் கூடப் பணம் கிடைப்பது இல்லையே” என்ற போதெல்லாம் மாரிசாமி “இது என் ஜாதகக் கோளாறு. எதுவும் கைகூடி வரவிடாமல் துஷ்ட கிரகங்கள் செய்து விடுகின்றன. அதனால்தான் வியாபாரம் நன்றாக நடக்கவில்லை போலிருக்கிறது” என்று கூறிவந்தான்.
ஒரு நாள் மாரிசாமியின் மைத்துனன் தன் ஊரிலிருந்து அவனைக் காண வந்தான். பேச்சு வாக்கில் மாரிசாமி அவனிடம் தன் வியாபாரம் பற்றிக் கூறினான். அவனது மைத்துனன் மாதவனும் “அத்தான்!
உங்கள் போக்கில் வியாபாரம் நடந்தால் இலாபம் நிறையக் கிடைக்காது. என்னோடு தங்கப்பனை அனுப்புங்கள். எங்கள் ஊர் பசுபதியின் கடையில் சேர்ந்து அவன் பயிற்சி பெற்று வியாபாரச் சுளுவு
நெளிவுகளை அறிந்து கொள்ளட்டும்” என்றான்.
தங்கப்பனும் “மாமா சொல்வது சரி. நான் அவரது ஊருக்குப் போய் அவர் கூறும் கடையில் வேலை செய்துவிட்டு வருகிறேன்” என்றான். எனவே. மாரிசாமி தன் மகனை மாதவனுடன் அனுப்பி
வைத்தான். மாதவனும் தன் ஊரை அடைந்ததும் தங்கப்பனைப் பசுபதியிடம் அழைத்துச் சென்று “பசுபதி! இவன் என் மருமகன், இவனது ஊரில் இவன் தகப்பனார் ஒரு மளிகைக் கடையை நடத்தி
வருகிறார். இவனுக்கு வியாபாரத்தின் நெளிவு சுளுவுகள் எல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காக உன்னிடம் பயிற்சி பெறட்டும்” என்றான். பசுபதியும் தங்கப்பனுக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறி
தன் கடையில் வேலை செய்யுமாறு கூறினான்.
ஒரு நாள் பசுபதியின் கடைக்கு கந்தசாமி என்பவன் வந்து உயர் தர உளுத்தம் பருப்பு வேண்டும் என்று கேட்டான். தங்கப்பனும் ஒரு மூட்டையிலிருந்து கொஞ்சம் உளுத்தம். பருப்பைக் கொண்டு வந்து காட்டினான். கந்தசாமி அதை விட நல்ல பருப்பைக் கொண்டு வந்து காட்டும் படிச் சொல்லவே தங்கப்பன் “இதுதான் இந்தக் கடையில் உள்ள உயர்தரப் பருப்பு. வேண்டுமானால் வாங்கிக் கொண்டு போங்கள்” என்றான்.
அப்போது பசுபதி “தங்கப்பா! அந்த மூலையில் நேற்றிரவு வந்த புதிய மூட்டை இருக்கிறது. அதைப் பிரித்து அந்தப் பருப்பை எடுத்து வந்து அய்யாவிடம் காட்டு” என்றான்.
தங்கப்பனும் அந்தப் பருப்பைக் கொண்டு வரவே கந்தசாமி அதைப் பார்த்து விட்டு “பேஷ். இதில் இரண்டு கிலோ கொடு” என்று கூறி வாங்கிக் கொண்டு போனான்.
அவன் போனதும் தங்கப்பன் பசுபதியிடம் “ஐயா! இரண்டு மூட்டைகளிலும் ஓரே ரகப் பருப்பு தானே இருந்தது!?” எனவே பசுபதியும் “சில வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் கடைக்காரன் முதலில் காட்டும் பொருள் உயர்ந்ததாக இராது என்று ஒரு எண்ணம் உள்ளது. அதனால் அதே பொருளை வேறு விதமாகக் கூறிக் காட்டினால் திருப்தி அடைந்து வாங்கிச் சென்றுவிடுவார்கள். கந்தசாமி இந்த
ரகத்தைச் சேர்ந்தவன்” என்றான் சிரித்துக் கொண்டே.
வேறொரு முறை கணபதி என்பவன் கடைக்கு சாமான் வாங்க வந்த போது கடையில் ஒரே கூட்டமாக இருந்தது. கணபதியோதான் எழுதி வந்த பட்டியலைத் தங்கப்பனிடம் நீட்டித் தனக்கு முதலில் மளிகைச் சாமான்களைக் கொடுக்கும் படிக் கூறினான். தங்கப்பனோ “உங்களுக்கு முன்னால் வந்தவர்களை கவனித்து விட்டுத்தான் வருவேன்” என்றான்.
அது கேட்டு கணபதி “விர்” ரென்று சடையை விட்டுக் கிளம்பவே பசுபதி அவனைக் கூப்பிட்டு “அந்தப் பட்டியலை இப்படிக் கொடு. உனக்கு முதலில் சாமான்களைக் கட்டிக் கொடுக்கச் சொல்கிறேன். இப்படி இந்த நாற்காலியில் உட்கார்” என்று ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான். பட்டியலை தங்கப்பனிடம் கொடுத்து விட்டு கணபதியின் குடும்ப நலன் பற்றி விசாரித்தான்.
இப்படியே நேரம் போனது கணபதிக்குத் தெரியவில்லை. தங்கப்பனும் எல்லோர் சாமான்களைக் கொடுத்த பிறகே கணபதிக்கு வேண்டியவற்றைக் கட்டிக் கொடுத்தான். கணபதியும் திருப்தியுடன் சென்றான்.
தங்கப்பன் பசுபதியிடம் ‘*இவர் போக்கு விசித்திரமாக இருக்கிறதே” எனவே பசுபதியும். “ஒரு சிலர் தாம் மற்றவர்களைவிட அதிகச் சலுகை பெற வேண்டும் என விரும்புவார்கள். அவர்களுக்கு நாம் சலுகைக் கொடுப்பது போல நடிக்கவே உண்மையில் சலுகை அளித்து விடக்கூடாது” என்றான்.
சில மாதங்கள் கழிந்தன. அப்போது பசுபதி தங்கப்பனிடம் “இவ்வளவு காலம் உனக்கு வியாபாரத்தின் நெளிவு சுளுவுகளை யெல்லாம் அறியச் செய்தேன். இனி கடன் பாக்கியை எப்படி வசூலிப்பது என்று தெரிந்து கொள். நம் கடைக்கு வேலப்பன் என்பவன் கடன் பாக்கி உள்ளது.அவனிடமிருந்து பணம் வசூலித்து வா பார்க்கலாம்” என்றார்.
தங்கப்பனும் இரண்டு மூன்று முறை வேலப்பனைக் கண்டு பாக்கியைக் கொடுக்கும்படி கேட்டான். ஆனால் அவன் சாக்குப் போக்கு காட்டிக் கொண்டே இருந்தான். ஒரு நாள் அவன் வந்து மேலும்
சில சாமான்களைக் கடனுக்குக் கேட்டான். அப்போது தங்கப்பன் “நீ கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதைத் தீர்த்தாலே உனக்குப் புதிதாகக் கடன் கொடுக்க முடியும்” என்றான்.
அப்போது பசுபதி ‘*வேலப்பா்!உனக்கு வேண்டியதை வாங்கிப் போ. உன் செளகரியம் போலப் பணம் கொடு. அவசரமில்லை.உன் பணம் எங்கே போய்விடப் போகிறது? நீ ஊரை விட்டா ஓடி விடப் போகிறாய்? உன் மூத்த மகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் கல்யாணம் வேறு நடக்க வேண்டும் அதற்கும் நானே கடனாக கொடுக்கிறேன். அதற்கு முன் உன் பாக்கியைத் தீர்த்து விடு. உன் நேர்மை எனக்குத் தெரியாதா? வியாபாரத்தில் போட்டுப் புரட்ட எனக்கும் கொஞ்சம் பணம் கிடைத்துக் கொண்டிருந்தால்தானே நல்லது. இந்தத் தடவை வாங்கியதையும் சேர்த்து கொடுத்து விடு. கல்யாணத்திற்கு
நிறைய வாங்க வேண்டி இருக்கும். சுவலைப்படாதே நான் அப்போது உனக்கு வேண்டியதைக் கடனாகக் கொடுக்கிறேன்” என்றான்.
அன்று மாலையே வேலப்பன் பசுபதியின் கடைக்கு வந்து அவன் அதுவரை கொடுக்க வேண்டிய பணத்தைப் பைசா பாக்கி இல்லாமல் கொடுத்து விட்டான். பிறகு அவன் “அடுத்த மாதம் வந்து கல்யாணத்திற்கு வேண்டிய மளிகை சாமான்களை வாங்கிப் போகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றான். பசுபதியும் அவனுக்கு வணக்கம் போட்டு அனுப்பி வைத்தான்.
தங்கப்பன் ஆச்சரியப்பட்டுப் போனான். வேலப்பன் அவ்வளவு விரைவில் பாக்கியைத் தீர்த்து விட்டது கண்டு அதற்கு என்ன காரணம் என்று யோசிக்கலானான்.
அப்போது பசுபதி “இவனிடம் பணம் இல்லாமல் இல்லை. ஆனால் நம்மை ஏமாற்ற பார்த்தான். அவனிடம் நயமாய்ப் பேசி கறக்கிற விதத்தில் கறந்து விட்டேன், பார்த்தாயா?” என்றான்.
அடுத்த மாதம் வேலப்பன் ஒரு நீண்ட பட்டிலை எடுத்துக் கொண்டு பசுபதியின் கடைக்கு வந்தான்.
அவன் அந்த பட்டியலை பசுபதி யிடம் கொடுக்கவே அவனும் அதை வாங்கிப் பார்த்து விட்டு “அடடா! இதிலுள்ள பல சாமான்கள் என்னிடம் இல்லையே, மேலும் இப்போது எனக்கும் கொஞ்சம் பணமுடை. சரக்குகள் வாங்கக் கூடப் பணம் இல்லாது தவிக்கிறேன். சமயத்தில் உனக்கு உதவ முடியாமல் போவது பற்றி வருந்துகிறேன். இந்தத் தடவை வேறு யார் கடையிலாவது வாங்கிக் கொள். கோபித்துக் கொள்ளாதே: எள் நிலை இன்று அப்படிப்பட்டது” என்றான்.
வேலப்பனுக்கு பசுபதியின் உள்நோக்கம் புரிந்து விட்டது. அவன் ஏமாற்றம் அடைந்தவனாய் அங்கிருந்து சென்றான். தங்கப்பனுக்கு பசுபதியின் வியாபார தந்திரம் நன்கு புரிந்தது.
சில நாட்களானதும் பசுபதி தங்கப்பனிடம் ‘*வியாபாரத்தில் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீ போதிய அளவிற்குப் பார்த்துத் தெரிந்து கொண்டு விட்டாய். இனி நீ உன் ஊருக்குப் போய் வியாயாரத்தைக் கவனி” என்றான்.
தங்கப்பனும் பசுபதியை வணங்கி நன்றி செலுத்திவிட்டுத் தன் ஊருக்குச் சென்றான். அவன் பசுபதியைப் போலவே தன் கடையையும் நடத்தி வரவே நல்ல லாபம் கிடைக்கலாயிற்று. மாரிசாமியும் அது சுண்டு மகிழ்ந்து போனான்.
– டிசம்பர் 1991