இடுக்கணில் சிக்கிய இருவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,429 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடற்கரை ஒன்றிலே ஒரு குன்று இருந்தது. அந்தக் குன்று கடலின் பக்கத்தில் சரிவாக இல்லாமல் நேர் செங்குத்தாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு பெரிய மரப்பெட்டி யொன்று கடல் அலையில் வந்து ஒதுங்கியிருந்தது. மலைக்கும் கடலுக்கும் இடையில் நாலைந்தடி தொலையே இருந்தது.

ஒதுங்கியிருந்த மரப்பெட்டி கவிழ்ந்துபோன கப்பல் ஒன்றிலிருந்து வந்தது. அதற்குள் ஆடைகளும் அணிகலன்களும் இருந்தன. அப்பெட்டி ஒதுங்கியிருந்தவிடத்திற்கு யாரும் செல்ல முடியாது. சுற்றுவழிகளிலும் காடும் பள்ளமுமாகவே யிருந்தன. குன்றின் உச்சிக்கும் பெட்டி கிடந்த அடிவாரத்திற்கும் இரண்டு மூன்று பனைமர உயரமிருக்கலாம்.

ஒருநாள் குன்றின் உச்சிக்குச் சென்ற இருவர் அந்தப் பெட்டியைக் கண்டார்கள். அதிலுள்ள பொருள்கள் இன்னவை என்று அவர்கள் அறியார்களாயினும், அப்பெட்டியை எடுத்துப் பார்க்க எண்ணினார்கள். ஊருக்குள் சென்று நீண்ட கயிறு முதலியன கொண்டு போய் அந்தப் பெட்டியை எடுக்க முயற்சி செய்யவில்லை. சில கொடிகளைப் பிடுங்கி நீளமாக முடிந்து ஒரு மரத்திலே கட்டிவிட்டு அந்தக் கொடியைப் பிடித்துக்கொண்டு இருவரும் இறங்கினார்கள்.

ஒவ்வொருவராக இறங்காமல் இருவரும் ஒன்றாகவே விரைந்து இறங்கி அடிவாரத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். பெட்டி பூட்டப் பெற்றிருந்தபடியால், திறக்க முடியவில்லை. அதனை மேலே கொண்டு போய்த் திறந்து பார்க்கலாமென்று முடிவு செய்து, கொடியில் கட்டிவிட்டு இருவரும் ஒன்றாகவே மேலேறினார்கள். பாதி உயரம் போவதற்குள் கொடியின் முடிச்சு நழுவிக் கழன்று கீழே விழுந்தது. இருவரும் கீழே போய் விழுந்தார்கள். இருவருக்கும் நல்ல காயம் ஏற்பட்டது.

மக்களின் நடமாட்டம் அற்ற அந்த இடத்திலே இரண்டொருநாள் கிடந்து கூச்சலிட்டு இறந்து போனார்கள். ஆராயாமற் செய்கிற காரியங்களால் இத்தகைய பலன் தான் ஏற்படும்.

“தூக்கி வினைசெய்” (இ-ள்.) தூக்கி – முடிக்குஞ் சூழ்ச்சியை ஆராய்ந்தறிந்து; வினைசெய் – அதன் பின் ஒரு காரியத்தைச் செய்வாயாக.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *