ஆயிரம் ரூபாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 18, 2023
பார்வையிட்டோர்: 930 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டாக்சி நின்றது. மீட்டரைப் பார்த்த வண்ணம் கதவைத் திறந்தான் சந்திரன். சேது மறுபக்கமாக இறங்கினான். பணத்தைக் கொடுத்துவிட்டு இருவரும் நகர்ந்தார்கள். டாக்சி விரைந்தது.

அந்தக் காலனி சுறுசுறுப்பான பகுதி. டாக்சி, மோட்டார் கார், ஸ்கூட்டர் இவைகளுக்குப் பஞ்சமே இல்லை. விமானத்திடல் இல்லாததுதான் குறை. பெரிய பெரிய உத்தியோகஸ்தர்கள் வாழும் இடம். அழகழகான பங்களாக்கள். எல்லாமே தனி அழகுதான்! வறுமைக் கோலத்தைப் பார்க்கவே முடியாது. சொல்லப் போனால், ரிக்ஷாக்கள் எட்டிப் பார்க்க முடியாத இடம்!

சந்திரனும் சேதுவும் வீட்டினுள் நுழைந்தார்கள். அடக்கமாக, வனப்பாக இருந்தது வீடு. செடியும் கொடியும் வாசல் புறத்தை அழகு செய்தன. சந்திரனின் அப்பா கை நிறையச் சம்பாதிக்கும் ‘ஆபீஸர்’ பெரிய இடத்துப் பையன் சந்திரன். பஞ்சமில்லாத மினுமினுப்பு படர்ந்த முகம் அதைச் சொல்லியது.

சேது வீட்டிற்குப் புதியவன். சந்திரனின் பேனா நண்பன். இப்பொழுதுதான் சந்திரன் வீட்டுக்கு அவன் வந்திருக்கிறான். இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. சேதுவின் அப்பாவுக்குத் தெரிந்த வியாபாரிகள் சென்னையில் பலர் இருந்தார்கள். ஒரு வியாபாரியைப் பார்த்துவிட்டுத்தான் இப்பொழுது அவர்கள் திரும்பினார்கள்.

மின் விசிறியைச் சுழற்றினான் சந்திரன்.

சேதுவின் பார்வை அறை முழுவதும் சுழன்றது. அறையை அழகாக வைத்திருந்தான் சந்திரன். ஒருபுறம் சேதுவின் புகைப்படம் இருந்தது. சுற்றும்முற்றும் பார்த்த சேது ஒருகணம் திடுக்கிட்டான். மின்னல் வெட்டியது போன்ற விரைவு: படபடப்பு! அதிர்ந்து போய் எழுந்தான்.

“சந்திரன்.. !” என்ற குரலில் நடுக்கம்.

“என்ன, சேது!”

“பணம் கொண்டு வந்த ‘ஹாண்ட் பாக்’…”

“அதற்கென்ன?”

“எங்கேயோ தொலைந்துவிட்டது. சந்திரன்!”

“உண்மையாகவா?”

“ஆமாம்.” இருண்டு விட்டிருந்தது முகம். கண்கள் தவித்தன. சந்திரன் துள்ளிக் குதித்தான் பதற்றத்தால், மருண்டது மனம்.

கைப்பையைக் காணவில்லை. எங்கே தவறியிருக்கும்? வெறும் பையாயிருந்தால் ஒன்றுமில்லை. ஆயிரம் ரூபாய் இருந்தது. சற்று முன் வியாபாரி ஒருவரிடம் வாங்கி வந்த பணம் சேதுவின் அப்பாதான் வாங்கிக் கொள்ளச் சொல்லி எழுதியிருந்தார். கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டதா? சந்திரனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தன் வீட்டிற்கு வந்திருக்கும் நேரத்தில்தானா நண்பனுக்கு இப்படி நேர வேண்டும்? வழி தவறிய வானம்பாடி மாதிரி மனம் நினைப்பில் வட்டமிட்டது.

“எங்கே தவறியிருக்கும் என்று நினைக்கிறாய், சேது?”

“டாக்சி …! நாம் வந்த டாக்சியில்தான் விட்டிருப்பேன். வேறு வழியேயில்லை!”

ஒரு கணம் சந்திரனின் முகம் மலர்ந்தது. மீண்டும் கூம்பியது. டாக்சி! எந்த டாக்சி என்று சொல்லுவது? அவர்கள் ஏறி வந்த வண்டி இந்நேரம் எங்கே போயிருக்குமோ? சந்திரனுக்கு ஒரே தவிப்பு! ஒரு நினைப்பு! பரபரப்படைந்தான். அவனால் சேதுவைப் பார்க்கப் பொறுக்கவில்லை.

“சேது, டாக்சி நம்பர் தெரியுமா? கவனித்தாயா?”

“இல்லை, சந்திரன்!” என்ற இரக்கமான குரல்!

டாக்சி டிரைவர் நல்லவனாக இருந்தால் பணத்திற்குப் பங்கம் இல்லை. இதை எதிர்பார்க்க முடியுமா?

பானுமதி மெல்லத் தலை நீட்டினாள். அறையில் நிலவிய அமைதி அவளுக்குப் புரியவில்லை. ‘அண்ணன் ஏன் இப்படிச் சிலையாகச் சமைந்திருக்கிறான்? சேதுவுக்கு என்ன வந்தது?’

அவர்களின் கோலம் அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. சிரிப்பு வந்துவிட்டது. குறும்புச் சுபாவம் அவளுக்கு அண்ணனைக் கேலி செய்வது பழக்கம். அவனும் அப்படியே! சில்லறைச் சண்டைகள் அடிக்கடி வரும். சேது வந்ததிலிருந்து சந்திரனிடம் அதிகமாகப் பேச முடியவில்லை. இருவரும் எப்பொழுதும் வெளியே போய்ச் சுற்றி வந்தார்கள். பானுவை சந்திரன் கூப்பிட்டுக் கொள்ளவில்லை. அதற்காக அவளுக்கு வருத்தம் இல்லை. என்ன இருந்தாலும் அவன் அண்ணன்; பானு தங்கை. சேது அவளுக்கு இன்னொரு அண்ணன் மாதிரி!

உள்ளே வந்தாள் பானுமதி இருவர் முகத்திலும் கலகலப்பு இல்லை. காரணம் தெரியவில்லை பானுவுக்கு. இரண்டு பேரும் அவளை ஏறிட்டுப் பார்க்கவில்லை. சந்திரன் பக்கம் வந்தாள். வழக்கமான குறும்புச் சிரிப்பு!

“ஏன் இப்படிப் புயலில் அடிபட்டவன் மாதிரி உட்கார்ந்திருக்கிறாய்?” என்று மெல்லக் கேட்டாள்.

பதில் இல்லை.

“ரிசல்ட் வருகிற காலம்கூட அல்லவே… பெயிலான வருத்தத்துக்கு…?”

சந்திரன் அசையவில்லை.

“முகத்தில் மேகக்கூட்டம்… மழை கொட்டப் போகிறதோ?”

நிமிர்ந்தான் சந்திரன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தான். மழை வரவில்லை. இடியோடு நின்றுவிட்டது. சேது பானுவைப் பார்த்தான். பார்வையில் மின்னல் பளிச்சிட்டது. கலங்கவில்லை பானுமதி.

“சேது!”

“ஏன் இப்படி அமைதி?’

அவனால் பேச முடியவில்லை. கண்ணில் கலக்கத்தின் திரை!

“சொல்லக்கூடாதா, சேது?’

“பணம் தொலைந்து விட்டது. பானு!”

“எங்கே? எப்படி?” குரலில் படபடப்பு.

“டாக்சியில் வந்தோம். அல்லவா? இறங்கும்போது பையை எடுக்க மறந்து விட்டேன்?”

தெரிந்து கொண்டாள் பானுமதி.

***

பானுமதியின் முகத்தில் குறுகுறுப்புக் குன்றவில்லை. வேகமாக மனம் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது என்பதை முகம் சுட்டிக் கொண்டிருந்தது. துடிப்போடு ஒரு நிமிடம் நின்றாள் பானு. புன்னகையை வரவழைத்துக் கொண்டாள். தொலைபேசி அருகே போனாள். எண்ணைச் சுழற்றினாள். இரண்டு நிமிடங்கூட இருக்காது. பேசிவிட்டு ரிஸீவரை வைத்தாள்.

பானுமதிக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆயிரம் ரூபாய் தொலைந்து விட்டதென்றால் கலங்காமல் இருக்க முடியுமா? வெளியூரிலிருந்து வந்திருக்கும் நண்பன் பணத்தைப் பறி கொடுத்துவிட்டுப் போகத்தானா வந்தான்? சேதுவின் மனம் மலர ஏதேனும் நடவாதா? எண்ணிப் பார்க்க இதயம் கூறியது. பானுமதிக்குச் சந்திரன் மீது கோபம் கோபமாக வந்தது. பணத்தோடு டாக்சியில் வருகிறோம் என்ற எண்ணம் வேண்டாமா? முன் யோசனை என்பதே அண்ணனிடம் இல்லை என்று குறைபட்டது பானுவின் மனம். பானுமதி அப்படி யில்லை. காரியத்தில் எப்பொழுதும் கண் உண்டு அவளுக்கு. துடியான நெஞ்சம். அவளும் அவர்களோடு போயிருந்தால், கண்டிப்பாக அந்த மாதிரி இழப்பு நேர்ந்திருக்காது என்று நம்பினாள். நினைத்து என்ன ஆகப் போகிறது?

பானு மீண்டும் சந்திரனின் அறைப்பக்கம் போனாள்.

“சேது…!” என்று மெல்ல அழைத்தாள்.

“என்ன பானு…?”

“இப்படியே உட்கார்ந்திருந்தால் என்ன செய்வது?”

“ஒன்றுமே தோன்றவில்லை… விபரீதம் எப்படியோ நடந்து விட்டது!”

“அப்படியொன்றும் நடந்துவிடவில்லை. மனம் தளர வேண்டாம். சேது… நல்லபடியாக ஏதாவது நடக்கும்…”

சேது மருள மருள விழித்தான். மயக்கம் அகலவில்லை. சந்திரனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அண்ணன் மீது இரக்கம் ஏற்பட்டது பானுவுக்கு. நண்பனின் துன்பம் அவன் துன்பந்தானே!

பானுமதி வெளியே நழுவினாள். தங்கை தெருவில் போவதைச் சன்னல் வழியே பார்த்தான் சந்திரன். பானுமதியின் சுறுசுறுப்பும் துடிப்பான செய்கையும் அவனுக்கு நன்றாகத் தெரியும். எங்கே போகிறாள்? விடை கிடைக்கவில்லை.

***

சந்திரன் அறையை அளந்து கொண்டிருந்தான். ஆமாம்! குறுக்கும் நெடுக்குமாக நடை பழகியவாறு இருந்தான். சேது ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தான். பானுமதி புறப்பட்டு ஒரு மணிக்குமேல் ஆகியிருக்கும். பானுமதி எங்கே போயிருப்பாள்? அவள் ஒரு புதிர் மாதிரி. துறுதுறுவென்று ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பொழுது போகாது.

“வேறு வழியில்லை. இப்படிக் காய்ச்சல் கண்ட மாதிரி உட்கார்ந்திருந்தால் இழந்த பணம் கைக்கு வந்துவிடுமா? போலீஸுக்குப் புகார் செய்ய வேண்டும்’ என்று நினைத்தது சந்திரனின் மனம். இந்த யோசனை முன்பே வந்திருக்கக் கூடாதா? சற்று நின்றான்.

தொலைபேசி மணி கிணுகிணுத்தது. அவனுக்கு யார் ‘போன்’ செய்யப் போகிறார்கள்? அருகே போய் எடுத்தான். குரல் கேட்டது. பேசுவது யார்? பானு. பானுமதியின் ஒலிதானா? எங்கிருந்து பேசுகிறாள்?

சேதுவை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டுமாம்… பானுமதிதான் சொல்லுகிறாளா? ஏன் வரச் சொல்லுகிறாள்? நெஞ்சு. நினைப்பு வலை பின்னியது.

“சேது” என்றான் புதிய வேகத்தோடு

“என்ன சந்திரன்?”

“சீக்கிரம் புறப்படு. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போக வேண்டும்!”

அவன் பேசவில்லை. எழுந்தான். இருவரும் நடந்தார்கள்.

***

பானுமதி சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தாள். சந்திரனையும் சேதுவையும் புன்னகையோடு நோக்கினாள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்திருந்தார்.

“இவன்தான் சேது!” என்று அவனைச் சுட்டிக் காட்டினாள் பானு. இருவரையும் அமரச் செய்தார் இன்ஸ்பெக்டர். இரண்டு பேருமே விழித்தார்கள்.

“பையில் பணம் எவ்வளவு இருந்தது?” என்றார் அவர். சேது சொன்னான்.

“டாக்சியில்தான் தவற விட்டீர்களா?”

தலையசைத்தான்.

“டாக்சி நம்பர் தெரியாது. இல்லையா?”

ஒத்துக் கொண்டான்.

அப்புறம் அவர் ஏதேதோ கேட்டார். பானுமதி புன்னகையோடு எல்லோரையும் பார்த்தாள்.

“டாக்சி நம்பர் கிடைத்து விட்டது” என்றார் இன்ஸ்பெக்டர்

“எப்படி?” என்பதற்கு அறிகுறியாக வாயைப் பிளந்தார்கள் இருவரும்.

“எல்லாம் இந்தச் பானுமதியால்தான்…”

“உண்மையாகவா?” என்றான் சந்திரன்!

“இதோ பாருங்கள்…” என்றவாறு ஒரு காகிதத்தைக் காட்டினார். பானுமதியின் எழுத்துக்கள்தாம்! அந்த வெள்ளைக் காகிதத்தில் பல எண்கள் இருந்தன. டாக்சி. மோட்டார் கார் எண்கள்! ஏன் இப்படிக் கிறுக்கி வைத்திருக்கிறாள்? எண் இருந்தது. அருகே நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது பானுமதிக்கு இது பொழுதுபோக்கு, காலனி சுறுசுறுப்பான பகுதி. பஞ்சமில்லாமல் நேரத்திற்கு நேரம் டாக்சி வந்து போய்க் கொண் டிருக்கும். பால்கனியில் உட்கார்ந்து ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருப்பாள் பானுமதி. எல்லாவற்றையும் நேரத்தோடு குறித்துக் கொள்வாள். வெறும் பொழுது போக்குதான். குறும்பு மனம் அல்லவா? இன்றைக்கும் அப்படிச் செய்திருக்கிறாள். கடைசியாக அவள் குறிப்பிட்ட டாக்சி சந்திரனும் சேதுவும் வந்தது தான். எண் பிடிபட்டுப் போன பிறகு என்ன கவலை?

சந்திரனுக்கு வெட்கமாக இருந்தது. பானுமதி சமர்த்துப் பெண்தான். நன்றியுணர்வோடு பானுவைப் பார்த்தான் சேது.

டாக்சி வந்தது அதே எண்… அதே டிரைவர்! அவன் முகத்தில் பீதி படர்ந்திருந்தது. ஐந்தே நிமிடங்கள்! எல்லாம் நடந்து முடிந்தன. மன்னிப்பு கேட்டுக் கொண்டான் டிரைவர். இரண்டு பேருமே இரக்கப் பட்டார்கள். பணம் கிடைத்துவிட்டது

பானுமதியைப் பாராட்டினார் இன்ஸ்பெக்டர். சந்திரன், சேது, பானுமதி மூவரும் புறப்பட்டார்கள்.

“டாக்சியை எடு, டிரைவர்” என்றாள் பானுமதி. மூவரும் ஏறிக் கொண்டார்கள். வீட்டை நோக்கி டாக்சி விரைந்து கொண்டிருந்தது.

– 1959 – ‘கண்ணன்’ இதழில் பிரசுரமான சிறுகதை, ஜே.எம்.சாலியின் சிறுவர் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *