ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 4, 2024
பார்வையிட்டோர்: 133 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரில் ஒரு வேதியன் இருந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான் வேதியன் தன் மகனை அடிக்கடி கோபித்துக் கொண்டான். ஒரு நாள் கூட தன் மகனிடத்தில் இன் முகத்தோடு பேசியது கிடையாது. இதனால் வெறுப்படைந்த மகன், தன் தாயிடம் போய், ‘அப்பா எப்பொழுதும் என் மேல் காய்ந்து விழுகிறார், எங்காவது பிற நாட்டிற்குச் சென்று பிழைத்துக் கொள்கிறேன்’ என்று கூறி விட்டுப் போய் விட்டான். நடக்க நடக்க அவனுக்கு ஆத்திரம் அதிகமாகியது. தன் தந்தையைக் கொன்று விட்டால்தான் தன் மனக் கொதிப்பு அடங்கும் என்று நினைத்தான். ஆகவே, ஒரு பாறாங்கல்லைத் தூக்கிக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து, தன் தந்தை படுக்கும் இடத்திற்கு நேராக மேலேயுள்ள பரணில் ஏறி ஒளிந்து கொண்டான். 

வெளியில் சென்றிருந்த வேதியன் பொழுது சாயும் நேரம் வீடு வந்து சேர்ந்தான். சாப்பாடெல் லாம் முடிந்துக் கொண்டு, தன் படுக்கையில் வந்து உட்கார்ந்தான். அவன் மனைவியும் அங்கு வந்தாள். 

“ஏண்டி நம்  பிள்ளையாண்டான் எங்கே காணோம்?’ என்று கேட்டான் வேதியன். 

அவள் கண்ணீருடன். அழுது கொண்டே ‘என்னாங்க, வயது வந்த பிள்ளையை இப்படித் தான் அடிக்கடி கோபித்துக் கொள்வதா? அவன் என்ன சாத்திரம் படிக்கவில்லையா? சதுர்மறை யோத வில்லையா? எல்லாவற்றிலும் கெட்டிக் காரனான அவன் மேல் ஏன் இப்படி எரிந்து எரிந்து விழுந்தீர்கள்? இப்போது அவன் கோபித்துக் கொண்டு அயல் நாடு சென்று விட்டான்! எங்கே போய் எப்படிக் கஷ்டப்படப் போகிறானோ?’ என்று வருத்தத்துடன் கூறினாள். 

‘அடியே, நீ என்ன புரியாமல் அழுகிறாய்! நம் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியாதோ? நாமே புகழ்ந்து சொன்னால் அவனுக்கு ஆங்காரம் வந்து விடாதோ? அதற்காகத் தான் புத்தி மேன் மேலும் வளர வேண்டுமே என்று போதனை சொன் னேன்’ என்று வேதியன் கூறினான். 

பரண் மேல் இதைக் கேட்டு கொண்டிருந்த மகன் அப்போதுதான் தன் தவற்றை யுணர்ந்தான். உடனெ பரணிலிருந்து குதித்துத் தந்தையின் காலடி யில் விழுந்து வணங்கினான். 

தான் அவரைக் கொல்ல நினைத்திருந்ததைக் கூறி, ‘அப்பா, நான் இந்தப் பாவம் தீர என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்’ என்று கசிந் துருகிக் கேட்டான். 

‘மகனே, உன் மாமனார். வீட்டில் போய் சில நாட்கள் இருந்தால் இந்தப் பாவம் தீரும், போ’ என்றான் வேதியன். 

உடனே வேதியர் மகன் தன் மாமனார் வீட்டுக் குப் புறப்பட்டான். மாமனார் வீடு வந்து சேர்ந்த பொழுது அங்குள்ள வேதியர்கள், “எங்கள் மாப்பிள்ளை வந்தான்! மாப்பிள்ளை வந்தான்!” என்று சொல்லிக் கொண்டு அவனை வரவேற்றுப் பலமாக உபசரித்தார்கள். பாகு,பால்,பருப்பு, நெய், தேன், பாயசம் என்று பலவகையான பொருள்கள் படைத்து உவகை ஏற்படும்படி வேதியர் மகனுக்கு விருந்து படைத்தார்கள். அவனும் நன்றாகச் சாப் பிட்டுக் கொண்டு ஆனந்தமாக இருந்தான். 

அவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நீதிப் பாட்டு எழுதித் தன் படுக்கையில் தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டு வந்தான். 

முதலில் பலமாக உபசாரம் செய்த மாமனார் வீட்டில் நாளாக ஆக மாப்பிள்ளையை வெறுத்துப் பேசத் தொடங்கினார்கள். ஒரு நாள் அவன் மனைவியை அழைத்து, ‘உன் கணவனுக்கு நீதான் புத்தி சொல்லக் கூடாதோ?’ என்று கேட்டார்கள். 

‘நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று அவள் அவர்களைக் கேட்டாள், 

‘இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் செல வுக்கு என்ன செய்வது? கையில் பணம் இல்லையே என்று கேள் என்றார்கள். 

அவளும் தன் கணவனிடத்தில் அவ்வாறே கேட்டாள். 

உடனே வேதியன் மகன் தான் எழுதி வைத் திருந்த கவிதைச் சீட்டுக்களில் ஒன்றை எடுத்துக் கொடுத்து, ‘இந்தா, இதை விற்றுப் பணம் பெற்றுக் கொள். இதன் விலை ஆயிரம் பொன்’ என்று சொல்லிக் கொடுத்தான். 

அவள் அந்தச் சீட்டை வாங்கிக் கொண்டு போய்த் தன் அண்ணன் கையில் கொடுத்து ‘இதன் விலை ஆயிரம் பொன்னாம். இதை விற்றுக் கொண்டு வாருங்கள்’ என்று கூறினாள். அவன் அந்தச் சீட்டை வாங்கிப் படித்துப் பார்த்தான். உண்மையில் இது ஆயிரம் பொன்னுக்கு மேலேயே பெறும்’ என்று கூறி அதை விற்கப்பட்டணத்திற்குப் போனான். 

அவன் இந்தப் பாட்டுச் சீட்டை ஒவ்வொருவரிட மும் காட்டி ‘இதன் விலை ஆயிரம் பொன்!’ என்று கூறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொருவரும் வாங்கிப் படித்துப் பார்ந்துவிட்டு, ‘பைத்தியக்காரன், புத்தி யில்லாதவன்’ என்று பழித்துப் பேசி விட்டுச் சென் றார்கள். 

ஒரு தெருவில் அவன் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வணிகர் வீட்டு இளைஞன் எதிரில் வந்தான். 

அந்த இளைஞனுடைய தந்தை ஒரு பெரிய வணிகன். அவனுடைய வாணிபம் கடல் கடந்த நாடுகளிலும் பரவியிருந்தது. அவன் ஒரு முறை அயல் நாடு செல்லும் பொழுது அந்த இளைஞன் சிறுவனாக இருந்தான். சிறுவனாக இருந்த தன் மகனைப் பார்த்துத் தத்தை, ‘மகனே பழம் பொருள் கள் கிடைத்தால் அவற்றை விடாதே. அரிய பொருள்கள் கிடைத்தால் அவற்றை வாங்கத் தவறாதே, ஆயிரம் கழஞ்சு பொன் கொடுத்தாகிலும் அவற்றைப் பெற மறவாதே!’ என்று சொல்லி விட்டுக் கப்பல் ஏறினான். 

அவன் ஏறிச் சென்ற கப்பல் வழியில் புயல் காற்றினால் திசை தடுமாறி விட்டது. குறித்த ஊருக்குப் போகாமல் வேறொரு தீவுக்குப் போய்ச் சேர்ந்தது. வணிகன் அந்தத் தீவிலேயே தங்கி விட்டான். நெடுநாள் வரை தன் நாட்டிற்குத் திரும்பி வரவில்லை. 

அந்த வணிகர் மகனும் சிறு வயதில் தன் தந்தை சொன்ன சொற்கள் நினைவு இருந்ததால் அருமையான அந்தப் பாட்டுச் சீட்டை ஆயிரம் பொன்கொடுத்து வாங்கிக் கொண்டான். அந்தச் சீட்டைக் கொண்டு வந்து தன் வீட்டிலே உள்ள படுக்கைக்கு மேலே பட்டுக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டான். 

திசை மாறி முன்பின் அறியாத தீவுக்குப் போய்ச் சேர்ந்த வணிகன், அங்கு நடத்திய வாணிபத்தில் நிறையப் பொருள் தேடிக் கொண்டு, பத்தாண்டுகள் கழித்துத் தன் நாட்டுக்குத் திரும்பி வந்தான். கப்பலை விட்டிறங்கி ஒரு படகில் ஏறிக் கரைக்கு வந்தான். தான் இல்லாதபோது வீடு எப்படி இருக் கிறது என்று பார்க்க விரும்பினான். ஆகவே, நள்ளிரவில் யாரும் அறியாமல் அவன் தன் வீட்டினுள் நுழைந்தான். தன் மனைவியிருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு படுக்கையறைக்குச் சென்றபோது, அங்கே, அவளோடு ஓர் இளைஞன் படுத்திருக்கக் கண்டான். தன் மகன்தான் அவன் என்பதை அவனால் அப்போது சித்தித்தறித்து கொள்ள முடியவில்லை. யாரோ ஒருவனுடன் தன் மனைவி தூங்குகிறாள் என்று எண்ணி அவர்களை வெட்டுவதற்காகத் தன் வாளை உருவிக் கொண்டு போனான். அப்போது மஞ்சத்தின் மேலே பட்டுக் கயிற்றில் தொங்கிய சீட்டு அவன் கண்ணில் பட்டது அதில் என்ன எழுதியிருக்கிறதென்று அறிய அதை இழுத்து விடிவிளக்கு ஒளியில் படித்துப் பார்த்தான். 

ஒன்றும் விசாரி யாமலே 
நின்று செயல்செய் வோர்களே
பொன்று வார்கள் வீணிலே 
பொன்று வார்கள் வீணிலே! 
நின்று விசாரித் தெதையுமே
நினைத்துப் பார்த்துச் செய்பவர்
ஒன்று செல்வம் கூடியே 
என்றும் இன்பம் காண்பரே! 

இதைப் படித்தவுடன், ‘சரி, விசாரித்துப் பார்த்தே முடிவுக்கு வருவோம்’ என்று உருவிய வாளை உறை யிலே போட்டு விட்டு வந்த வழியே திரும்பினான் வணிகன். 

பொழுது விடிந்தவுடன் காலையில் அவன் தன் வீட்டிற்கு வந்தான். நெடுநாளைக்குப் பின் திரும்பி வந்த கணவனைக் கண்டதும் அயன் 

அபன் மனைவி, அவனைப் பணிந்தெழுந்து வரவேற்றாள். அவர்கள் மகனான அந்த இளைஞனும் அவன் காலடியில் விழுந்து வணங்கினான். வணிகன் தன் மனைவியை நோக்கி, ‘இவன் யார்?’ என்று கேட்டான். 

‘தெரியவில்லையா? நம் மகன்! நீங்கள் போகும் போது சிறுவனாயிருந்தான். இப்போது வளர்ந்து விட்டான்’ என்றாள் அவள். 

உடனே வணிகன் தன் அருமை மகனைக் கட்டித் தழுவிக் கொண்டான். பிறகு தான் புத்தி கெட்டதன் மாக நடந்து கொள்ள இருந்தது பற்றிக் கூறி, இந்த நல்ல பாட்டுச் சீட்டினால் இவன் பிழைத்தான்’ என்று குறிப்பிட்டு, தன் மகனை நோக்கி, ‘இந்தச் சீட்டு உனக்கு எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டான். 

‘சிறு வயதில் தாங்கள் வெளி நாட்டுக்குப் புறப் பட்டுப் போகும் போது, அரிய பொருள்களை ஆயிரம் பொன் கொடுத்தேனும் வாங்கிவிட வேண்டுமென்று சொன்ன நீதி என்னுள்ளத்தில் பதிந்திருந்தது, அதனால்தான் அந்தப் பாட்டுச் சீட்டை ஆயிரம் பொன் கொடுத்து வாங்கினேன்’ என்றான். 

‘நல்ல காரியம் செய்தாய்! கோடிப்பொன்னுக் குச் சமமான உன்னை நான் இழவாமல் செய்தது அந்தச் சீட்டு’ என்று அவனைத் தழுவிக் கொண் டான் வணிகன், அவர்கள் பல நாட்கள் அன்பாகவும் இன்பமாகவும் வாழ்ந்தார்கள்.

– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 5 – ஆராயாத செயல் தவிர்த்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

நாரா. நாச்சியப்பன் (நாராயணன் நாச்சியப்பன்; பாவலர் நாரா. நாச்சியப்பன்) (ஜூலை 13, 1927 - 2000-த்திற்குப் பின்) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், அச்சக உரிமையாளர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர். திராவிட இயக்கம் சார்ந்த பல படைப்புகளை, சிறார்களுக்கான பல நூல்களை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. நாரா. நாச்சியப்பன், அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்குடியை அடுத்த முத்துப்பட்டணத்தில், சித. நாரா. நாராயணன் செட்டியார்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *