அவசரத்தின் விளைவு!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,440 
 
 

புங்க நாட்டுத் தலைநகரில் புங்கதத்தின் என்ற சோம்பேறி இருந்தான். நல்ல வாலிபன். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் எப்படி எத்திப் பிழைக்கலாம் என்பதிலேயே குறியாய் இருப்பான்.

என்ன செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையுடன் ஒருநாள் அந்த நாட்டின் காட்டுப் பகுதி ஓரம் உள்ள புளிய மரத்தின் அடியில் அமர்ந்து யோசிக்கலானான்.

அவசரத்தின் விளைவுதலையில் திடீரென்று ஒரு புளியங்கொட்டை விழுந்தது. திடுக்கிட்டு எழுந்தவன், மேலே அண்ணாந்து பார்த்தான்…

அங்கு ஒரு பச்சைக்கிளி புளியம்பழத்தை ருசித்துத் தின்று கொண்டிருந்தது.

அதைப் பார்த்தவுடன் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. நாம் ஏன் இந்தக் கிளியை வைத்தே பிழைப்பு நடத்தக்கூடாது என்று நினைத்தவன் மெல்ல மெல்ல அந்த மரத்தில் ஏறினான். தன் தோளில் இருந்த துண்டை, கிளி இருந்த பக்கமாக லாகவமாக வலை போல வீசி, கிளியை துண்டில் சிக்குமாறு செய்தான். துண்டில் அகப்பட்ட கிளி கிரீச்சென்று கத்திக் கொண்டே துண்டுக்குள் சிக்கிக் கொண்டது.

மகிழ்ச்சியுடன் புங்கதத்தன் மரத்திலிருந்து கீழே இறங்கினான். உடனே ஒரு மரக்கூண்டை தயார் செய்தான். கூண்டுக்குள் கிளியை அடைத்தான். தானியம் கொஞ்சம் கொடுத்தான். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அதற்குப் பேசக் கற்றுக் கொடுத்தான்.

இனி, நாம் இதை வைத்து கிளி ஜோஸ்யம் பார்த்துப் பெரும் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்று மனக்கோட்டை கட்டினான்.

அதற்கென பிரத்யேகமாக பல வண்ணப் படங்களை வரைந்து அட்டைகளைத் தயார் செய்தான். தான் எந்த அட்டையை எடுக்கச் சொல்கிறோமோ அதைக் கிளி எடுக்கும்படி, கால் கட்டை விரலை அசைத்து அசைத்து கிளிக்கு பழகிக் கொடுத்தான். இப்போது ஒரு பலகையையும் தயார் செய்தான்.

“புளியமர ஜோதிட வித்வான் புங்கதத்தன்’ என்று அதில் எழுதி மரத்தில் தொங்கவிட்டான். அந்த மரத்தினடியிலேயே அமர்ந்து கிளி ஜோதிடம் சொல்ல ஆரம்பித்தான்.

ஒருநாள் ஒரு முதியவர் அந்தப் பக்கமாக வந்தார். அவருடைய ஆடைகள் கிழிந்திருந்தன. வருபவரை வைத்தே அவர் நிலையை எடை போட்டான் புங்கதத்தன். அவர் ஜோதிடம் பார்க்கத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்தான். அவர் வந்து அமர்ந்தும், “கிளி நண்பா, நம்மிடம் வந்திருக்கும் பெரியவருக்கு ஒரு நல்ல சீட்டாக எடுத்துப் போடு’ என்றபடி கால்கட்டை விரலை ஆட்டி சைகை செய்தான்.

கிளியும் அவன் கால் விரல் சைகையைப் பார்த்து, ஒரு சீட்டை வாயால் கவ்வி எடுத்து, அவன் முன் போட்டது.

அதை எடுத்துப் பார்த்தான். அதில் ஒரு பிச்சைக்காரன் படம் வரையப்பட்டிருந்தது. ஆகவே, அந்தப் பெரியவர் எவ்வளவுதான் மாடாய் உழைத்துச் சம்பாதித்தாலும் அவருக்கு வீட்டில் ஒரு பிச்சைக்காரனுக்கு உரிய மரியாதைதான் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறினான்.

இதைக் கேட்டதும் பெரியவர் பொக்கைவாய் பிளக்க கலகலவென்று சிரித்தார்.

“ஆமாம்பா, உன் கிளி சொன்னது சரிதான். நிலம், நீச்சு எவ்வளவு இருந்து என்ன? எவ்வளவு உழைச்சு என்ன? ஒரு பிரயோசனமுமில்லை. பெண்டாட்டி இல்லாத என்னை என் மகனும் கவனிக்கிறதில்லை; மருமகளும் ஒருவேளை சோறு போடறதுக்கே ஒரு பிச்சைக்காரனுக்குப் போடாத குறையாத்தான் போடுது. என் நிலையைத்தான் இந்தக் கிளி அழகாச் சொல்லிடுச்சே! இனி அது மாறவா போகுது…’ என்றவர் தன் வேட்டியின் முடிச்சில் இருந்த காசுகளை அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

ஆகா, இன்று முதல் போணியே நன்றாக இருக்கு! இனிமே நமக்கு எப்பவும் யோகம்தான் என்று அவன் நினைத்து மகிழும்போதே அடுத்த ஓர் அம்மா அங்கே வந்தாள்.

“தம்பி, என் மகனுக்கு ரொம்ப ஜுரம் அடிக்குது. நாலு நாளா நோயில் படுத்தவன் கண்ணை விழிக்கவே இல்லை. அவன் நல்லா ஆயிடுவானா? கவலைப்பட ஒண்ணுமில்லையே! உன் கிளிகிட்டே கேட்டு எனக்கு நல்ல பதிலைச் சொல்லுப்பா’ என்று அவசரத்துடன் கேட்டாள்.

அவள் நிலையை அறிந்து கொண்ட புங்கதத்தன், கிளிக் கூண்டைத் திறந்தான். கால் கட்டை விரலை ஆட்டிக் கொண்டே இருந்தான். அவனுக்குத் தெரிந்த சரியான அட்டையிடம் கிளி வந்தவுடன் கால் விரலை ஆட்டுவதை நிறுத்தினான். அதைப் புரிந்து கொண்ட கிளி, அந்த அட்டையை எடுத்து அவன் முன் போட்டது.

அந்த அட்டையைப் பிரித்துப் பார்த்தான். அதில் ஒரு சிறுவன் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல படம் வரையப்பட்டிருந்தது.

“தாயே, கவலை வேண்டாம்… இந்தப் படத்தைப் பார்! இதில் இருப்பது போல உன் மகனும் ஜுரம் தணிந்து எழுவான். பின்னர் எப்போதும் போல மாறி ஒரு பந்தயக்காரனைப் போல ஓட ஆரம்பித்து விடுவான். கிளியே சொல்லிடுச்சு! கவலை வேண்டாம்!’ என்று கூறினான்.

இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த அந்தப் பெண், தன்னிடம் இருந்த காசுகள் முழுவதையும் மனநிறைவோடு அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

அவனது உற்சாகத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.

“என்ன முதலாளி? இன்னைக்கு நல்ல வருமானமா?’ கிளி கேட்டது.

“ஆமாம், ஆமாம்! எல்லாம் என் சாமர்த்தியம்தான். நீ, உன்னால் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்’ என்றான் திமிராக.

“முதலாளி, என்ன இருந்தாலும் நீங்கள் என் பெயரைச் சொல்லித்தானே சம்பாதிக்கிறீர்கள்! நானும் உங்கள் கால்விரல் அசைவைப் புரிந்துகொண்டு சரியாக நடக்கிறேன் அல்லாவா? அதனால் உங்கள் சம்பாத்தியத்தில் எனக்கும் ஒரு பங்கு உண்டல்லவா?’ என்று பவ்யமாகக் கூறியது கிளி.

“ஓஹோ, உனக்கு அவ்வளவு திமிரா? உன் பெருமையை என்னிடமே காட்டுகிறாயா? இரு.. இரு… உனக்குச் சரியான தண்டனை கொடுக்கிறேன். ஆம், இன்று முழுவதும் உனக்குத் தீவனம் கிடையாது. முழுப்பட்டினியோடு கிட..’ என்றவன் கோபத்தில், அருகிலிருந்த சிறு குச்சியை எடுத்து கிளியை லேசாக அடித்து விட்டான். அவ்வளவுதான்… பயந்து போன கிளி, “முதலாளி, என்னை மன்னிச்சிடுங்க…’ என்று கதறிவிட்டுக் கூண்டுக்குள் போய் முடங்கிக் கொண்டு, தனது விதியை நொந்து அழுதது.

நாட்கள் ஓடின. ஒருநாள் மாலை நேரம் மேகக்கூட்டங்கள் ஒன்று கூடி வானம் இருட்டிக் கொண்டு வந்தது. கிளி ஜோஸ்யத்தை முடித்துவிட்டுக் கூண்டை தூக்கிக் கொண்டு கிளம்பத் தயாரானான் புங்கதத்தன்.

“அய்யா, ஜோதிடரே, நில்லுங்கள்’ என்று குரல் கேட்டுத் திரும்பினான்.

கிழிந்த உடை, நரைத்த தலை, கருத்த உடல், சுருங்கிய முகம் ஆகியவற்றுடன் ஒருவன் வேகமாக வந்தான். ச்சீச்சீ… இவனிடம் என்ன காசு இருக்கப் போகிறது என்று நினைத்த புங்கதத்தன் பெட்டியுடன் கிளம்பியபோது, அந்த மனிதன் அருகே வந்துவிட்டான்.

“தம்பி, ரொம்ப சிக்கல்ல சிக்கியிருக்கேம்பா, காசு கொடுத்துடறேன். எனக்கு உடனே ஜோசியம் பாருப்பா’ என்று அவன் கைகளைப் பிடித்துக் கெஞ்சினார் பெரியவர்.

புங்கதத்தன் வேண்டாவெறுப்பாக உட்கார்ந்தான். கூண்டினுள் இருந்த கிளியைத் திறந்துவிட்டான். பின் வழக்கம்போல கால்கட்டை விரலை ஆட்டி ஜாடை செய்ய ஆரம்பித்தான்.

கிளி ஒவ்வொரு படமாக எடுத்துப் போட்டபடி இருந்தது. இடுகாடு என்ற படம் வந்ததும் அவன் ஜாடையை நிறுத்தினான். ஆனால், கிளி அவன் சொன்னதைக் கேட்கவில்லை. இன்னும் சில அட்டைகளை எடுத்துக் கொண்டே வந்து கடைசியில் ஒரு அட்டையை எடுத்தது. அதில் “ராஜயோகம்’ என்று போட்டிருந்தது. புங்கதத்தனுக்கோ பெரும் கோபம்!

கட்டையில் போகும் நிலையில் இருக்கும் இந்தக் கிழவனுக்கு ராஜயோகமா? இந்தக் கிளிக்கு என்ன பைத்தியமா பிடித்துவிட்டது. நான் ஒரு ஜாடை காட்டினால் அதை அலட்சியப்படுத்திவிட்டு வேறு படத்தையல்லவா எடுக்கிறது? இன்னொரு முறை பார்ப்போம் என்று யோசித்தவன், “அய்யா, கிளிக்கும் உம்மைப் போல வயதாகிவிட்டது. இருட்டிக் கொண்டு வருகிறதா? கண்ணும் தெரியவில்லை போலும். இன்னும் ஒருமுறை எடுக்கச் சொல்கிறேன்’ என்றவன் மீண்டும் அட்டைகளை அடுக்கிவைத்தான். கிளியை வேறு ஒரு அட்டையை எடுக்கும்படி சொன்னான்.

இம்முறை கால் கட்டைவிரலை வேகமாக ஆட்டினான். சரியாக இடுகாடு படம் வந்ததும், விரலை ஆட்டுவதை நிறுத்தினான்.

ஆனால், கிளியோ ஒவ்வொன்றாகத் தேடி, கடைசியில் ராஜயோகம் என்று வரையப்பட்ட அட்டையையே மீண்டும் எடுத்துப் போட்டது.

“அட, பொல்லாத கிளியே, இம்முறையும் என் கட்டளையை மீறி என்னை அவமானப்படுத்தி விட்டாய். இருக்கட்டும்… இந்தக் கிழவன் போனதும், என் கச்சேரியை வைத்துக் கொள்கிறேன்’ என்று நினைத்தவன் அந்தப் பெரியவரிடம் ஒருவழியாகப் பேசி, அவரிடம் காசுகளையும் வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தான்.

அவர் சென்றவுடன், “பொல்லாத கிளியே, என் கட்டளையை மீறியது என்னை அவமானப்படுத்தியதாகும். இனி நீ எனக்குக் கீழ்ப்படிய மாட்டாய் என்று தெரிந்து கொண்டுவிட்டேன். அதனால் நான் வேறு ஒரு கிளியைப் பிடித்து என் தொழிலுக்குப் பழக்கிக் கொள்கிறேன். நீ ஒழிந்து போ!’

என்றபடியே பக்கத்திலிருந்த குச்சியை எடுத்து கிளியின் தலையில் ஓங்கி அடித்தான். கிளி இறந்து போனது.

மறுநாள், புளிய மரத்தில் ஏதாவது கிளி கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தபோது, “மன்னர் வாழ்க!’ என்ற கோஷம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

பெரிய யானை ஒன்றின் மீது மன்னர் கம்பீரமாக அமர்ந்திருக்க, வீரர்கள் புடைசூழ, ஒரு அழகிய பணிப்பெண் பொற்காசுகள் நிறைந்த தங்கத்தட்டு ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். புளிய மரத்தினருகில் வந்ததும் மன்னர் யானையை நிறுத்தினார். அதிலிருந்து கீழே இறங்கினார். சுற்றிலும் வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

மன்னர், “அடே, புங்கதத்தா இங்கே வா!’ என்றார். இதைக் கேட்டதும் அவன் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆடிப்போய்விட்டான்.

“மன்னா…’ என்றழைத்தபடி அவரருகில் சென்றான்.

மன்னர் பணிப்பெண்னிடம் சைகை செய்தார். அவள் பொற்காசுகளை நிறைந்த தங்கத் தட்டை புங்கதத்தனிடம் நீட்டினாள்.

அவன் விவரம் புரியாமல் மன்னரைப் பார்த்து,”மன்னா, எனக்கா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆம்! உனக்குத்தான்… ஆனால் உன் செயலுக்காக அல்ல! மாறாக உன் பேசும் கிளியின் புத்திசாலித்தனத்துக்காக. ஆம், உன் கிளியை நான் பல நாட்கள் மாறு வேடத்தில் நகர சோதனைக்கு வந்தபோது பார்த்திருக்கிறேன்.

ஒருநாள், நீ அசந்து தூங்கிக் கொண்டிருந்தாய். அந்தக் கிளியோ எப்போதும் போல அல்லாமல் சோர்ந்து காணப்பட்டது. நான் உடனே, அதனிடம் சென்றேன். ஏன் கிளியே சோகமாகவும் சோர்வாகவும் இருக்கிறாய் என்று கேட்டேன். என் எஜமானுக்கு என்மீது இன்று கோபம். அதனால் தீனி தராமல் பட்டினி போட்டுவிட்டார் என்றது. மனம் வருந்திய நான் அருகிலிருந்த தானியங்களைப் போட்டேன். அது சாப்பிட மறுத்துவிட்டது. அப்படி நான் செய்தால் அது எஜமானத் துரோகம் ஆகிவிடும் என்று கூறிய கிளி என் எஜமான் எப்போது தீனி கொடுக்கிறாரோ அப்போதுதான் நான் சாப்பிடுவேன் என்று உறுதியாகக் கூறியது.

அத்துடன் நில்லாமல் நான் எடுத்துப் போட்ட தானியங்களை எல்லாம் எடுத்துவிடும்படியும் கண்டிப்புடன் கூறியது. நான் அதன் எஜமான விசுவாசத்தைப் பாராட்டினேன். ஏன் கிளியே நீ என்னுடன் அரண்மனைக்கு வந்துவிடுகிறாயா? என்று ஆசையுடன் கேட்டேன்.

மன்னா, நீங்கள் இந்த நாட்டு மக்களுக்கு அதிபதியாக இருந்தாலும் என்னைத் தனிப்பட்ட முறையில் பேணிக் காப்பவர் என் எஜமான்தான். அதனால் என்னைப் பொருத்தமட்டில் நான் உங்களை விட என் எஜமானையே அதிகம் நேசிக்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.

நீ இந்த அருமையான கிளியை வைத்து ஜோசியம் பார்த்துப் பிழைப்பவன் என்பதைப் புரிந்து கொண்டேன். உன்னை சோதிப்பதற்காகவே, நேற்று நான் வயதான ஏழ்மை நிறைந்த கிழவன் தோற்றத்தில் வந்தேன். அவரவர் தோற்றத்தை வைத்து அதற்கான படங்களை எடுப்பதில் நீ வல்லவன்தான். அதானால்தான் நான் ஒரு முடிந்த கதை என்று நினைத்து எனக்குரிய படத்தை எடுக்க உன் கால் விரல் அசைவைக் காட்டி அந்தக் கிளியை நிர்பந்தித்தாய். ஆனால் நான் யார் என்பதை அறிந்த அந்தக் கிளியோ எனக்கான படத்தைத் தேடித் தேடி ராஜயோகம் என்ற படத்தையே இரண்டு முறையும் எடுத்துப் போட்டது. உன்னைவிட உன் கிளி புத்திசாலி!

அதனால் மனம் மகிழ்ந்த நான் அந்தக் கிளிக்காக ஒரு தங்கக் கூண்டையே கொண்டு வந்திருக்கிறேன். மேலும் அந்தக் கிளியை நீ பழக்கிக் காத்து வரும் ஒரே காரணத்துக்காக உனக்கு இந்தப் பொற்காசுகளையும் பரிசாகத் தருகிறேன். எடுத்துக் கொள்!’ என்றார்.

இதைக் கேட்டதும் புங்கதத்தன் ஓவென்று கதறி அழுது மன்னரின் பாதங்களில் விழுந்தான்.

“மன்னா, நான் மோசம் போய்விட்டேன். நீங்கள் யார் என்பதை நான் அறியேன். நான் சொன்ன கட்டளையை இரண்டு முறை மீறியதால் கோபம் கொண்ட, நான் இனி இந்தக் கிளி நம் பேச்சைக் கேட்காது என்று நினைத்து ஆத்திரத்தில் மதிமயங்கி, அதை அடித்தே கொன்றுவிட்டேன். இந்தப் பாவியை மன்னியுங்கள்’ என்று கூறி மீண்டும் அழுதான் புங்கதத்தன்.

“அடே, கொடியவனே, உன்னை வாழவைத்த கிளியை அடித்தா கொன்றாய்! அதற்கு உனக்குத் தண்டனையாக பத்து கசையடிகள். மேலும் நன்றியும் மனிதாபிமானமும் இல்லாத நீ, இனி இந்த நாட்டில் இருக்கத் தகுதி இல்லாதவன். அதனால் உடனே நீ இந்த நாட்டைவிட்டு ஓடிபோ…’ என்று ஆத்திரத்துடன் கத்தினார் மன்னர்.

உடனே மன்னரின் கட்டளை நிறைவேற்றப்பட்டது. புங்கதத்தனுக்குப் பத்து கசையடிகள் கொடுக்கப்பட்டன.

“எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்…’ என்று அழுது புலம்பியபடி நாட்டைவிட்டு வெளியேறினான் புங்கதத்தன்.

– ஜி.சுப்பிரமணியன் (டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *