(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு பெரிய கிராமம். அங்கே அதிகமான கல்வீடு களும், குறைந்த அளவு குடிசைகளும் அழகுற அமைந் திருந்தன. ஒவ்வோர் இல்லத்தின் சூழலிலும் தென்னை, கமுகு, மா, வாழை ஆகிய மரங்களும், தெருக்கரைகளின் சில இடங்களிலே பெரிய நிழல் மரங்களும் செழித்து வளர்ந்து நின்றன. எங்கும் அழகின் ஆட்சி.
“ஹஹ்…ஹஹ் .. ஹா…; ஹஹ்… ஹஹ் ஹா…” அழகு வாய்விட்டுச்சிரித்தது. அதனைச் செவிமடுத்த பூமி, “அழகே! என்ன சிரிக்கின்றாய்?” என்றது.
அதற்கு அழகு. “நானே வல்லவன். இக்கிராமத்தில் எங்கும் எனது ஆட்சியே. என்றும் எனது ஆட்சியே. இவ்வாட்சியினை யாராலும் அசைக்க முடியாது. இதனை நிலைக்க நினைக்க எனக்குக் களிப்புத்தாங்க முடியவில்லை. அதுதான் நான் சிரிக்கிறேன்.” என்றது. அதனிடம், தோல்வியே காணாது ஒன்றன்பின் ஒன்றாய்ப் பல நாடு களை வெற்றி கொண்டு அங்கெல்லாம் தனது ஆட்சியைப் படரவிட்ட ஒரு மாவீரனிடம் காணப்பட்ட மமதை இழையோடியது.
அழகின் அவ்வார்த்தைகளைக் கேட்ட பூமி ஆத்திரம் கொள்ளாது ஒர் அறிஞரின் நிலையிலிருந்து வெகு நிதானமாக அதனை நோக்கிப் பின்வருமாறு கூறியது:
“தம்பி அழகு! உனது எண்ணம் தவறானது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு. ஒரு நாள் அப்படியான ஒருவன் தோன்றி உனது ஆட்சியை அழித்து விடவும் கூடும். எனவே, வீணாக அலட்டிக் கொள்ளாமல் நிதானமாக நடந்து கொள்”
பூமியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அழகு சற்றுச் சூடாக அதனை நோக்கி, “அக்கா! உங்களது கூற்றை நான் ஒரு காலமும் ஏற்க மாட்டேன். இதை விட்டு விட்டு நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்றது.
அதன் பின்பு பூமி, ‘நமக்கேன் இந்த வீண் வம்பு காலம் வந்ததும் அது தானாகவே உணர்ந்து கொள்ளட்டும்’ என்று எண்ணி தான் அழகுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டது.
சில வினாடிகளின் பிறகு அக்கிராமத்தில், மெல்லத் தவழ்ந்து கொண்டிருந்த காற்று பெரும் சூறாவளியாக மாறிப் பேரிரைச்சலுடன் பல மணித்தியாலங்கள் வீசி ஓய்ந்தது. அதன் பின் அக்கிராமத்தில் அதிகமான வீடுகள். கூரைகள், வேலிகள் விழுந்தும், உடைந்தும் காணப்பட்டன. எங்கு நோக்கினாலும் தென்னை, கமுகு, மா, வாழை மற்றும் பெரிய மரங்கள் முறிந்தும், சாய்ந்தும் கிடந்தன. அங்கு மிங்குமாகத் தகடுகள், அஸ்பெஸ்டாஸ் தகடுகள். கிடுகுகள், ஓடுகள் ஆகியன தூக்கி எறியப்பட்டுக் கிடந்தன. பாதைகள் யாவும் போக்கு வரத்துச் செய்ய முடியாத நிலையிலிருந்தன. பொதுவாக அக்கிராமம் பெரும் போர் நடந்து முடிந்த ஓர் இடம் போலக் காட்சியளித்தது.
இந்த நிலையிலே பூமி, அழகினைக் கூர்ந்து நோக் கியது. அழகோ, அந்தக் கிராமத்திலே தனது ஆட்சியை இழந்து கண்ணீர் வடித்து நின்றது.
பூமி, ‘நான் முன்பே சொன்னேன் ஏற்கவில்லை. இப்போது என்ன சொல்லப் போகிறீர்’ என்று அழகினை நோக்கிக் கேட்க வேண்டுமென்று எண்ணியது. இருந்தும் அது, இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்து கொள்வது பண்பல்ல என்பதை உணர்ந்து மௌனத்தில் மூழ்கியது. ஆனால், அழகு தானாகவே பூமியை நோக்கி சும்:மிய குரலில், “நீங்கள் முன்பே சொன்னது பேருண்மை என் பதனை நான் இப்பொழுதுதான் உணர்கிறேன்” என்றது. அதற்குப் பூமி குறுஞ் சிரிப்பொன்றை உதிர்த்தது.
– தினகரன் வார மஞ்சரி – 1979.08.05.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.