(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு காட்டில் ஒரு சிங்கம் அரசு புரிந்து வந்தது. அதன் அமைச்சனாக ஒரு நரி இருந்து வந்தது. ஒரு நாள் அந்தச் சிங்கத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலிக்குக் கழுதை ஈரல் சாப்பிட்டால் நல்ல தென்று யாரோ அதற்குச் சொன்னார்கள். அதனால் அது நரியைக் கூப்பிட்டு, “அமைச்சனே, நல்ல கழுதை ஈரலாகப் பார்த்துக் கொண்டு வா!” என்று கூறியது.
கழுதை எங்கே சிடைக்கும் என்று தேடிக் கொண்டு நரி ஓர் ஊருக்கு வந்தது. அங்கு ஒரு சுனையின் பக்கம் சேர்ந்த போது ஒரு வண்ணான் ஒரு கழுதையை ஓட்டிக் கொண் வந்தான். சுனையை நெருங்கியவுடன், வண்ணான் கழுதை யின் மேலிருந்த பொதியைக் கீழே தள்ளிவிட்டு, அதன் கால்கள் இரண்டைச் சேர்த்துக் கட்டி’ எங்காவது மேயும்படி ஓட்டினான்.
கழுதை சிறிது தூரம் சென்றவுடன், நரி அதன் அருகில் சென்று தனியாகப் பேசியது.
“ஐயோ! பாவம்! உன் உடம்பு என்ன இப்படி இளைத்துப் போய்விட்டது?’ என்று கேட்டது.
“என்ன செய்வேன்?” எப்பொழுது கோபம் வந்தாலும் இந்த வண்ணான் என்னை அடிக் கிறான். சரியாகத் தீனி போடுவதே இல்லை. என் முதுகில் அவன் ஏறிக்கொள்வது மட்டு மல்லாமல், பெரிய பெரிய பொதிகளை வேறு ஏற்றிச் சுமக்கச் செய்கிறான். பொதி சுமக்காத நேரத்திலும் என்னைச் சும்மா விடுவதில்லை மாறுகால் பிணைத்துக் கட்டித்தான் விடுகிறான். இப்படி இடைவிடாமல் துன்பம் அனுபவித்தால் என் உடம்பு ளைக்காதா?” என்று துயரத்துடன் கூறியது கழுதை.
“உன் கதை கேட்கக் கேட்கப் பரிதாபமாக இருக்கிறது. இந்தத் துன்பம் தீர நான் ஓர் யோசனை சொல்கிறேன். கேள். என்னோடு வா. நம் காட்டரசன் சிங்கத்திடம் உன்னைக் கொண்டு போய் விடுகிறேன். அவனிடம் நீ ஓர் அமைச்சனாக இருக்கலாம். அதிகார பதவியோடு நலமாக வாழும் பேறு கிடைக்கும்” என்று இச்சகம் பேசியது நரி.
‘சிங்கமா? வேண்டாம். அது மற்ற மிருகங் களையெல்லாம் அடித்துத் தின்றுவிடும். எனக்குப் பயமாயிருக்கிறது” என்றது கழுதை.
“வீணாகப் பயப்படாதே! நாங்கள் எல்லாம் இல்லையா? எங்களையெல்லாம் அடித்தா தின்று விட்டது? ஆண் யானையைத் தவிர வேறு எந்த மிருகத்தையும் திரும்பிக் கூடப் பார்க்காது. உன் உயிருக்கு ஆபத்தில்லை என்பதற்கு நான் பொறுப்பு. என்ன சொல்கிறாய்?” என்று நரி கழுதையைக் கேட்டது.
அப்படியானால் சரி,” என்று கழுதை ஒப்புக் கொண்டது.
உடனே நரி அதன் கால்களில் கட்டியிருந்த கயிற்றைத் தன் பல்லினால் கடித்து அறுத்து விட்டது. பிறகு வண்ணானுக்குத் தெரியாமல், அதை அழைத்து கொண்டு காட்டுக்குள் சென்றது.
கழுதையைக் கண்டவுடனே சிங்கம் அதைப் பிடிக்கப் பாய்ந்தது. கழுதை பயந்து கதறிக் கொண்டு ஓட்டம் பிடித்து விட்டது. வயிற்று வலி அதிகமாக இருந்ததால் சிங்கம் அதைத் தொடர்ந்து ஓட முடியாமல் நின்று கொண்டிருந்தது. நரி அதைப் பார்த்து, “அரசே, என்ன இப்படி அவசரப் பட்டு விட்டீர்கள். இப்போது நான் போய் அதைத் திரும்ப அழைத்து வருகிறேன். உங்கள் கையில் கொடுத்தவுடன் அதைக் கொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு கழுதையைத் தொடர்ந்து ஓடியது.
கழுதையின் அருகில் சென்றதும் நரி “என்ன? இப்படி ஓடி வந்துவிட்டாய்?” என்று கேட்டது.
”போ, போ, உன் பேச்சை நம்பி வந்தேன். அந்த சிங்கம் அருகில் போவதற்கு முன்னாலேயே பாய்ந்து கொல்ல வந்தது. நல்லவேளை! தப்பி ஓடி வந்து விட்டேன். மறுபடி நீ எதற்கு வந்தாய்?” என்று சினத்துடன் கேட்டது கழுதை.
”ஐயையோ! பாவம்,பாவம்! சிங்க மன்னனைப் பற்றி அப்படிச் சொல்லாதே. சிங்க மன்னன் இது வரை சொன்ன வாக்குப் பொய்த்ததில்லை. உலகம் புகழும் அந்த உத்தமனைப் பற்றி இப்படிப் புத்தி யில்லாமல் பேசாதே.
“முன் பிறப்பில் என்ன பாவம் செய்தாயோ? கழுதையாய்ப் பிறந்து வண்ணானிடம் அடிபட்டுப் பொதி சுமக்கின்றாய். உன் பாவம் தொலைய நான் ஒரு நல்ல செயல் செய்தேன். அதைப் புரிந்துகொள்ளாமல் மூடத்தனமாக ஓடி வந்து விட்டாய், நல்ல நண்பன் ஒருவன் அமைச்சனாகக் கிடைத்தானே என்ற மகிழ்ச்சியால் உன்னைக் கட்டித் தழுவிக் கொள்ள வந்தான் சிங்க மன்னன். நீ பயந்தோடி விட்டாய். தானாக வரும் செல்வத்தை யாராவது தள்ளி வைப்பார்களா? உன் தலைவிதி இப்படியா இருக்க வேண்டும். உடனே புறப்படு. நான் சொல்வதைக் கேள். நலம் வரும்” என்று கூறியது நரி
கழுதை இப்போது நரியை முற்றிலும் நம்பி விட்டது. அதைத் தொடர்ந்து சென்றது. நரி அதைக் கூட்டிக் கொண்டு வந்து சிங்கத்தின் முன் விட்டது.
கழுதையைக் கண்டதும் சிங்கம் மறுபடி எழுந்து பாய்ந்து கட்டித் தழுவிக்கொண்டது. அப்படியே கட்டிப் பிடித்தவாறே அதன் கழுத்தை முறித்துப் போட்டது.
“நரியமைச்சனே, இப்பொழுது கழுதையைக் கொன்ற பாவம் தீரச் சந்தியாவந்தனம் செய்துவிட்டு வருகிறேன். வந்தபின் வயிற்று நோய்தீர நல்ல மருந்தான அதன் ஈரலை எடுத்துக் கொள்கிறேன். அதுவரை நீ இந்தக் கழுதைக்குக் காவலாக இரு” என்று சிங்கம் கூறியது.
நரி காவல் இருந்தது. சிங்கம் சந்தியாவந்தனம் செய்ய ஒரு நீர் நிலைக்குச் சென்றது.
சிங்கம் அங்கே சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்க இங்கே செத்துக் கிடந்த கழுதையின் கண்களையும் காதுகளையும் நரி தின்று முடித்தது.
திரும்பி வந்த சிங்கம், ”இந்தக் கழுதையின் கண்காதெல்லாம் எங்கே?” என்று கேட்டது,
“கண்ணும் காதும் இருந்தால் ஒருமுறை அகப் பட்டுத் தப்பிய கழுதை திரும்பவும் வந்தா சாகும்?” என்று கேட்டது நரி.
ஊனப்பட்ட மிருகங்களைச் சிங்கம் தின்பது கிடையாது. ஆகவே, அது கழுதையின் ஈரலைத் தின்னாமலே போட்டு விட்டுப் போய்விட்டது. நரி அந்தக் கழுதையை இழுத்துக் கொண்டு போய்த் தன் கூட்டத்துடன் அதன் உடலைப் பிய்த்துத் தின்றது.
பட்டனுபவித்து மீண்டும் தவறு செய்பவர்களை என்னவென்று சொல்வது? அறிவில்லாமல் அகப் பட்டிறந்த கழுதையைப் போலத்தான் அவர்களும் துன்பப்படுவார்கள்.
– பஞ்சதந்திரக் கதைகள், பகுதி 4 – பெற்றதை இழக்கச் செய்தல், முதற் பதிப்பு: மார்ச் 1996, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.