(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதர்வண நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்நாட்டைப் பேய்நாகன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பேய்நாகன் ஆட்சியில் நாளொரு கொலை யும் பொழுதொரு கொள்ளையும் என்று துன்பங்கள் மக்களை ஆட்கொண்டன.
கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் கட்டவிழ்த்துவிட்டது போல் ஒவ்வொரு நாளும் மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.
அரசாங்க அதிகாரிகளோ , நீதிமுறையில்லாமல் மக்களிடம் பணம் வசூல் செய்வதும், தர மறுப்பவர் களைச் சிறையில் அடைப்பதுமாக , கொடுமையாக நடந்து வந்தார்கள்.
நீதி கேட்டு வரும் மக்களை அரசன் நடத்திய விதமோ மிகக் கேவலமாக இருந்தது.
நீதி கேட்டு அரசனுடைய அத்தாணி மண்டபத் துக்கு வருவோரிடம் நீ என்ன சாதி என்று கேட்பான் அரசன்.
மேல் சாதிக்காரனாய் இருந்தால் அவனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு செய்து, தீர்ப்பு வரி என்று நிறையப் பணம் பிடுங்கிக் கொள்வான்.
கீழ்ச் சாதிக்காரனாய் இருந்தால் அவனுக்கு அங்கு நீதியே கிடைக்காது. சிறையும், கசையடியும், மற்ற தண்டனைகளும் தான் மிஞ்சும்.
இப்படிப்பட்ட பேய் நாகனை, அவனுடய அரச சபையில் இருந்த புலவர்கள், மனுநீதி தவறாமல் அரசாளுகிறான் என்று பாராட்டிப் பாடுவார்கள்.
இந்த மனு நீதியின் கொடுமையை அந்த அதர்வண நாட்டு மக்கள் நிறையவே அனுபவித்தார்கள்.
அரசாட்சியின் கொடுமை தாங்காமல் நாட்டை விட்டு அகதிகளாய் ஓடிப் போனவர்கள் வேறு நாடு களில் நன்றாக வாழ்ந்தார்கள்.
சொந்த நாடு என்று அங்கேயே இருந்தவர்கள் பெருந் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இருந்தார்கள்.
மக்களைக் கொள்ளையடிக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் மட்டுமே அங்கே தாய் நாட்டுப் பற்று உள்ளவர்களாய் இருந்தார்கள்.
நீதி கேட்டவர்கள் நாட்டுத் துரோகிகள் என்று பழிக்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட அதர்வண நாட்டின் மீது பக்கத்து நாடான கஞ்சபுரி அரசன் ஒரு முறை படையெடுத்து வந்தான்.
ஒற்றர்கள் மூலம் கஞ்சபுரி அரசன் பஞ்சமுகன் படை எடுத்து வரும் செய்தியறிந்தான் பேய்நாகன்,
உடனே தன் அமைச்சர்களையும் தளபதிகளையும் அழைத்தான்.
கஞ்சபுரி அரசனை மூன்று நாட்களுக்குள் துரத்தி அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அனை வரையும் என் வாளால் கொன்று போடுவேன் என்றான்.
அமைச்சர்கள் அஞ்சினர். படைத் தலைவர்கள் பயந்தனர்.
கஞ்சபுரி அரசன் பஞ்சமுகனிடம் படைகள் அதிகம். அத்துடன் போர்த்தந்திரங்கள் அறிந்தவன். நிறைய ஆயுதங்கள் அவனிடம் உள்ளன. அவன் சுற்றிலும் உள்ள நாடுகளை ஒவ்வொன்றாக அடிமைப் படுத்தி வருகிறான்.
அவனிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்ட அரசர்களை , அவன் மன்னித்து விடுவான். நிறைய கப்பப் பணம் வாங்கிக் கொண்டு, போரிடாமல் திரும்பிப் போய்விடுவான். எதிர்த்துப் போரிட்ட நாட்டை, அடிமைப் படுத்தி, அரசர்களையும் அமைச்சர்களையும் கழுவில் ஏற்றிக் கொல்வான். மக்களைக் கொள்ளையிட்டுப் பொருள்களை வாரி எடுத்துக் கொண்டு போய்விடுவான்.
அவனுடன் சமாதானமாகப் போவது நல்லது என்று ஓர் அமைச்சர் கூறினார்.
அந்த நொடியிலேயே அவருடைய தலையைச் சீவி எறிந்தான் பேய்நாகன்.
இதைக் கண்டு மற்ற அமைச்சர்கள் பயந்து விட்டனர். படைத்தலைவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர்.
தங்கள் அரசன் கையில் சாவதா எதிரி அரசன் கையில் சாவதா என்று அவர்களுக்குப் புரியவில்லை.
கஞ்சபுரிப் படைகள் நெருங்கிவிட்டன. கோட்டை யைச் சுற்றி வளைத்துக் கொண்டன.
அவனை மூன்று நாட்களுக்குள் முறியடித்து விரட்டிவிட வேண்டும் என்று கட்டளையிட்ட பேய் நாகன், கோட்டைக்குள் இருந்த ஒரு இரகசிய அறைக்குள் தன் குடும்பத்துடன் ஓடி ஒளிந்து கொண்டான்.
கோட்டைக்குள் இருந்தவர்கள், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தனர்.
கோட்டை வாசலில் காவல் பார்க்கும் வீரன் ஒருவன் இருந்தான். அவனுடைய தந்தையார் வயது முதிர்ந்த ஒரு கிழவர்.
தன் மகன் மூலம் நாட்டுக்கு வந்த ஆபத்தை அறிந்த அவர், “மகனே ! எதிரியை முறியடிக்க என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. என்னைத் தலைமை அமைச்சரிடம் கூட்டிக் கொண்டு போ என்றார்.
அவ்வாறே அந்த வீரன் அவரைத் தலைமை அமைச்சரிடம் அழைத்துச் சென்றான்.
“அமைச்சர் அவர்களே. உங்களுக்கு நான் உதவி செய்யலாமா?” என்று கேட்டார் கிழவர்.
“ஆ ஆ” என்று சிரித்தார் தலைமை அமைச்சர் .
“புல் தடுக்கினாலும் விழுந்துவிடக் கூடிய கிழவன் நீ. நீ எனக்கு உதவி செய்யப் போகிறாயா? வேடிக்கைதான்’ என்று அலட்சியமாகப் பேசினார் தலைமை அமைச்சர்.
அருகில் இருந்த அமைச்சர் , “கிழவர் உடலில் வலு இருக்காது. மூளையில் ஏதாவது திட்டம் இருக்க லாம். கேட்டுத்தான் பார்ப்போமோம்’ என்றார்.
“எனக்கு நம்பிக்கையில்லை. நமக்கெல்லாம் இல்லாத மூளையா இந்தக் கிழவனிடம் இருக்கப் போகிறது” என்றார் முதலமைச்சர்.
“எதற்கும் கேட்டுப் பார்ப்போம். சரியான வழி சொல்லாவிட்டால், இப்போதே இந்தக் கிழவனை இந்திரலோகத்துக்கு அனுப்பிவிடலாம்” என்றார் படைத் தளபதி.
“சரி , உன் திட்டம் என்ன சொல். உன் திட்டம் சரியில்லை என்றால் இப்போதே தலையைச் சீவி விடுவேன்”என்றார் தலைமை அமைச்சர்.
“அமைச்சரே, எனக்கு நிறைய ஆட்கள் கொடுங்கள். ஒரு சுரங்கப்பாதை அமைக்கிறேன். சுரங்கப் பாதைக் கதவின் சாவியை என்னிடம் கொடுங்கள். சுரங்கம் அமைத்த பிறகு என்னைக் கோட்டைக்கு வெளியே தள்ளிவிடுங்கள். நான் சுரங்கப்பாதை வழியாக எதிரிப் படைகளை உள்ளே வரச் சொல்கிறேன். அப்போது ஒருவர் பின் ஒருவராக நுழையும் எதிரி வீரர்களை நம் வீரர்கள் வெட்டி வீழ்த்தட்டும்”என்றார் அந்தக் கிழவர்.
இது நல்ல சூழ்ச்சி என்று அமைச்சர்களும் படைத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
கிழவர் ஆட்களை வைத்துச் சிறிய சுரங்கப் பாதை ஒன்றை அமைத்தார். சுரங்கக் கதவைப் பூட்டி அதன் சாவியைத் தன் இடுப்பில் செருகிக் கொண் டார். அவர் திட்டப்படியே கிழவரைக் கோட்டைக்கு வெளியே தள்ளி விட்டார்கள்.
வெளியில் வந்து விழுந்த கிழவரைக் கஞ்சபுரி வீரர்கள் சூழ்ந்து கொண்டனர்.
“என்னை உங்கள் அரசரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்று கிழவர் கேட்டுக் கொண்டார்.
அவ்வாறே அவர்கள் பஞ்சமுகனிடம் அவரை அழைத்துச் சென்றார்கள்.
“ஏய் கிழவா ‘நீ யார்? உன்னை ஏன் அவர்கள் வெளியே தள்ளி விட்டார்கள்?” என்று கஞ்சபுரி மன்னன் பஞ்சமுகன் கேட்டான்.
“அரசே, நான் ஒரு தவறும் செய்யவில்லை . நாட்டுப் பற்றின் காரணமாக சில நல்ல கருத்துக் களைச் சொன்னேன். கஞ்புரி அரசன் பஞ்சமுகனிடம் படைகள் அதிகம். எதிர்த்து நின்று தோற்பதைவிட சமாதானமாகப் போய் விடலாம். பொருள்கள் நாசமா காமல், உயிர்கள் வீணாகக் கொல்லப்படாமல் காப்பாற்றி விடலாம். நம்மால் வெற்றிபெற முடியாத போது, சமாதானமாகப் போவது நல்லது என்று சொன்னேன். அவர்கள் என்னைத் துரோகி என்று பிடித்துத் தள்ளிவிட்டார்கள்”‘ என்று சொன்னார் கிழவர்.
“சரி, இப்போது என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான் கஞ்சபுரி அரசன் பஞ்சமுகன்.
“அரசே. ஆட்சி செய்பவர்களின் மூடத்தனத்தினால் நாட்டு மக்கள் வீணாக அழிவதையோ கொள்ளையடிக்கப்படுவதையோ நான் விரும்ப வில்லை.
நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கிறேன். புதிதாக ஒரு இரகசியச் சுரங்கம் அமைத்திருக் கிறார்கள். அதன் சாவி என்னிடம் தான் இருக்கிறது. நீங்கள் பொது மக்கள் வீடுகளில் சூறையிடுவதில்லை என்று எனக்கு வாக்குக் கொடுங்கள். நான் சுரங்கப் பாதையின் சாவியைத் தருகிறேன்”.
அதன் வழியாகச் சென்று அரசரையும் அமைச்சர் களையும் அதிகாரிகளையும் கைது செய்து விடுங்கள். ஆட்சி எவ்வித போராட்டமும் இல்லாமல் உங்கள் கைக்கு வந்து விடும் என்றான் கிழவன்.
“கிழவா, சுரங்கப் பாதை எங்கே இருக்கிறது?”
“அரசே, நான் இப்போதே தங்களை அழைத் துச்சென்று சுரங்கப் பாதையைத் திறந்து விடுகிறேன். எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்றான் கிழவன்.
“சரி, சரி நீ சுரங்கப் பாதை இருக்கும் இடத் திற்கு எங்களை அழைத்துக் கொண்டு செல்” என்றான் பஞ்சமுகன்.
கிழவன் அழைத்துச் சென்றான். சுரங்கப் பாதையைத் திறந்து விட்டான். அந்தச் சிறிய சுரங்கப் பாதையினுள் முதலில் பஞ்சமுகன் சென்றான். அவனைத் தொடர்ந்து படைத் தளபதிகள் சென் றார்கள். தொடர்ந்து படைவீரர்கள் சென்றார்கள். ஒருவர் பின் ஒருவராகச் சென்று, சுரங்கப் பாதையை விட்டு வெளியில் வந்தவுடன், அங்கு தயாராகக் காத்திருந்த அதர்வண நாட்டு வீரர்கள் அவர்களை இழுத்துப் போட்டு வெட்டிக் கொன்று விட்டார்கள். இவ்வாறு கஞ்சபுரி நாட்டு வீரர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்று வெட்டுப்பட்டு இறந்தார்கள்.
கிழவனின் தந்திரத்தால் கஞ்சபுரி அரசனும் அரசனுடைய படை வீரர்களும் ஒருவர்கூட மிஞ்சாமல் வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.
அதர்வண நாட்டில் பேய் நாகன் ஆட்சி நீடித்தது.
மறுநாள் கிழவன் அரசவைக்கு வந்தான்.
அரசன் பேய்நாகன் வெற்றி தேடித்தந்த அமைச்சர்களுக்கும், படைவீரர்களுக்கும் பரிசுகள் கொடுத்துக் கொண்டிருந்தான்.
தலைமை அமைச்சர் கிழவன் மண்டபத்திற்குள் நுழைவதைப் பார்த்தார்.
அவர் தான் தான் எதிரிகளை முறியடித்ததாகக் கூறி மன்னன் பேய்நாகனிடம் பெரிய பரிசுகளை வாங்கிக் கொண்டிருந்தார்.
கிழவன் வந்தால் தன் சூழ்ச்சி தெரிந்து விடும் என்று அஞ்சினார்.
இரண்டு காவல் வீரர்களை அழைத்தார்.
“அந்தக் கிழவனை இழுத்துச் சென்று அடித்துக் கோட்டைக்கு வெளியே தள்ளிவிட்டு வாருங்கள்” என்று ஆணையிட்டார்.
அவ்வாறே அந்தக் காவல் வீரர்கள் அவரைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். கோட்டைக்கு வெளியே கொண்டு சென்றார்கள். உடல் முழுவதும் காயம் ஏற்படுபடி நையப் புடைத்தார்கள்.
ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டுச் சென்றார்கள். கிழவர் மயக்கம் அடைந்துவிட்டார்.
மயக்கம் தெளிந்து அவர் கண் விழித்துப் பார்த்த போது, அந்த வழியாகச் செல்லும் மக்களைப் பார்த்து ,
“எதிரிகளைக் கொல்ல நான் தான் வழி செய்தேன். என்னை அடித்துப் போட்டுவிட்டார்கள். நான் தான் இந்த நாட்டைக் காப்பாற்றினேன்” என்று கூவினார்.
கிழவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்று கூறிக்கொண்டே அந்த மக்கள் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தனர்.
இந்தப் பைத்தியக்காரக் கிழவன் நாட்டைக் காப்பாற்றினானாம். நல்ல வேடிக்கை! என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே சென்றனர்.
“ஏழை அறிவாளியாக இருப்பதே பைத்தியக்காரத்தனம்!” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார் கிழவர்.
தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமைக்கே வித்தாகும்.
– ஒரு ஈயின் ஆசை, சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.