பழங்கால மன்னர் அறப்போர் செய்தனர். போருக்கு முன்னர் விடுக்கும் எச்சரிக்கை இது:
“எம் அம்பு புறப்படுகிறது, எச்சரிக்கை !
பசுவையும், பசுவைப் போன்ற பிராமணரும் பெண்டிரும், பிணியாளரும், பொன் போன்ற புதல்வரைப் பெறாதவரும், விரைந்து அரண் சேர்க!” என்று அறஞ்சாற்றி மறம் போற்றும் முதுகுடுமிப் பெருவழுதி வாழ்க!
அவன் படை யானைகள் மேற் பறக்கும் கொடிகள் விண்ணை மூடுகின்றன, கதிரவன் கண்ணையும் மூடுகின்றன!
கூத்தர்க்குப் பொன் வழங்கிக் கடல் தெய்வத்திற்கு விழாக் கண்ட நெடியோன் யார்? அவன் முதுகுடுமியின் முன்னோன்!
அவன் வெட்டிய பஃறுளி யாற்று மணற் பரப்பைப் பாரும்!
அம்மணலிலும் பற்பலவாய்க் குடுமியின் வாழ்நாட்கள் பெருகுக!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்