(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரில் ஓர் ஏழைப் பிராமணன் இருந்தான். அவன் ஆசிரியர் வேலை பார்த்து வந்தான். அவனுடைய மாணவர்களில் ஒருவன் புடவைக் கடைக்காரன்.
ஒரு நாள் அந்தப் பிராமணன் புதுப் பாகவதப் புத்தகம் ஒன்று வாங்கினான். அதன் அட்டைக்குத் துணியுறை ஒன்று தைத்துப் போட்டால் அது நெடுநாட்கள் கெடாமல் இருக்குமே என்று எண்ணினான்.
துணிக் கடைகளில் துண்டுத் துணிகள் மிஞ்சிக் கிடக்கும். தன் மாணவனுடைய கடையிலும் ஏதாவது துண்டுத் துணியிருக்கலாம். கேட்டு வாங்க வேண்டுமென்று பிராமணன் நினைத்தான்.
அப்பொழுதே கடைக்குச் சென்று, தன் மாணவனிடம்” “தம்பீ, பாகவதப் புத்தகத்துக்கு உறைபோட ஒரு துண்டுத் துணி வேண்டும். ஏதாவது துண்டு விழுந்திருந்தால் ஒன்று கொடுக்கிறாயா?” என்று கேட்டான்.
துணிக்கடைக்காரன் பெருங்கஞ்சன். அந் தத் துண்டுத் துணிகூடத் தன் ஆசிரியனுக்கு விலையில்லாமல் கொடுக்க அவன் விரும்ப வில்லை.
“ஐயா, தங்களுக்கு இல்லை என்று சொல்ல எனக்குமிகவும் வருத்தமாயிருக்கிறது. சற்று முன்னால் வந்திருக்கக் கூடாதா? இருந்த துண்டுத்துணிகளையெல்லாம் சற்று முன்தான் ஒருவன் வந்து விலைக்கு வாங்கிக் கொண்டு போகிறான். இப்போது என் கையில் ஒன்றும் இல்லை. என்றாலும் அடுத்தாற்போல் துண்டு விழும்போது, நான் உங்களுக்கு அதைத் தந்து விடுகிறேன். நீங்களும் தயவு செய்து எனக்கு அடிக்கடி நினைவுபடுத்துங்கள்” என்று திறமை யாகப் பதில் சொல்லி அனுப்பினான்.
பிராமணன் ஏமாற்றத்தோடு வீடு திரும்பினான்.
துணிக்கடைகாரனுடைய மனைவி இதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். உடனே, ஒரு வேலைக்காரனை அழைத்து, அந்தப் பிராமணனை வீட்டுக்குப் பின் பக்கமாகக் கூட்டி வரும்படி சொல்லியனுப்பினாள்.
அந்த வேலைக்காரன் வேகமாகச் சென்று வழியில் பிராமணனைப் பார்த்து உடனே வீட்டுக்குப் பின்பக்கமாகக் கூட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். பிராமணனை அந்தப் பெண் வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.
‘ஐயா, என் கணவரிடம் தாங்கள் என்ன, கேட்டீர்கள்?” என்று அந்தப் பெண் கேட்டாள்.
பிராமணன் நடந்ததைக் கூறினான்.
“ஐயா, வருத்தப்படாதீர்கள். அமைதியாகத் தங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். நாளைக் காலையில் உங்கள் வீட்டுக்கு நான் துணியனுப்பி வைக்கிறேன்” என்றாள்.
பிராமணன் மனநிறைவோடு வீடு திரும்பினான்.
பொழுது சாய்ந்தது. வாணிபம் முடிந்து கடையைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் துணிக்கடைகாரன்.
“கடை மூடிவிட்டீர்களா?” என்று அவன் உள்ளே நுழைந்தவுடனேயே கேட்டாள் மனைவி.
“ஆமாம். மூடிவிட்டேன்! ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டான் கடைகாரன்.
“எனக்கு விலையுயர்ந்த ஒரு துணி வேண்டும்” என்றாள் மனைவி.
“உனக்கில்லாமலா? காலையில் எடுத்துத் தருகிறேன்” என்றான் கடைகாரன்.
“எனக்கு இப்பொழுதே வேண்டும்!” என்றாள் அவள் உறுதியுடன்.
“என்ன அவசரம் வந்துவிட்டது. நாளைக் காலையில் கடை திறந்ததும் எடுத்துத் தருகிறேனே!” என்றான் கடைகாரன்,
“தர விரும்பினால் இப்பொழுதே தாருங்கள். இல்லா விட்டால், எப்பொழுதுமே வேண்டாம்” என்று சிறிது கோபத்துடன் கூறினாள் அவள்.
கடைகாரன் அவள் கோபத்துக்கு அஞ்சி விட்டான். வேறு ஆட்களிடம் சொல்லுகிறபடி அவளிடம் பதில் சொல்லமுடியுமா? அவள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தால், அவனால் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? ஆகவே, அப்பொழுது மிகவும் களைப்பாக இருந்துங்கூட-வயிற்றுப் பசிக்கு உணவுண்ணாமலே உடனே கடைக்குப் போய் மிகவும் சிறந்த ஒரு துணியை எடுத்து வந்தான். மனைவியிடம் கொடுத்து அவள் விருப்பத்தை நிறைவேற்றினான்.
அந்தப் பெண், மறுநாள் காலையில் பிராமண ஆசிரியனுக்கு ஒரு வேலைக்காரனிடம் அந்தத் துணியைக் கொடுத்தனுப்பினாள். துண்டுத் துணி கேட்ட ஆசிரியனுக்கு முழுத்துணி – அதுவும் விலையுயர்ந்த துணி கிடைத்தது. அதுமட்டுமன்று, மேற்கொண்டு எது தேவைப்பட்டாலும், தன்னிடம் வந்து கேட்கும் படியாகவும் அந்தப் பெண் சொல்லியனுப்பி யிருந்தாள்.
அந்தப் பெண்ணிடம் அருள் இருந்தது போல, உலக அன்னையிடம் அளவற்ற அருள் நிரம்பியிருக்கிறது. அத்தெய்வத் திருத்தாயினை உள்ளன்போடு வணங்கி வேண்டுவோர்க்கு எண்ணியது கிட்டும்.
– ஏழாவது வாசல், பகவான் இராமகிருஷ்ணா பரமஹம்சர் சொன்ன கதைகள், முதற் பதிப்பு: 1980, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.