அரசன் உயிர்காத்த புலவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 21,168 
 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டி நாட்டுக்குத் தலை நகராக விளங்குவது மதுரை. இம்மதுரை வழி ஓடும் பெரிய ஆறு வைகையாகும். இவ்வாற்றின் நீர்ப் பெருக்கால் பல ஊர்கள் வளம் பெற்றுச் செழித்திருந்தன. அவற்றுள் மோசிகுடி என்பது ஒன்று.

நல்லோர் வாழும் ஊரே சிறந்த புகழைப் பெறுவதாகும். “எவ்வழி நல்லார் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்றார் தமிழ் மூதாட்டியார். அறிவற்றோர் வாழ்கின்ற இடம் பாழிடமே அன்றி ஊரிடமாகாது. மோசி குடி, புலவர் பலர் பிறந்து சிறத்தற்கு இடமாக இருந்தமையால் புகழ் நிறைந்து விளங்கிற்று. மோசி சாத்தனூர், மோசி கண்ணத்தனர், மோசி கீரனார் முதலிய பல புலவர் அவ்வூரில் தோன்றி வளர்ந்தார்கள். முடமோசியார் என்பவரும் அங்குப் பிறந்தவரே.

மோசியார், நற்றமிழறிவு பெற்றவர். இவர் பிறக்கும்போதே உடல் முடம்பட்டிருந்தார். ஆகவே, அவர் முடமோசியார் என்று அழைக் கப்பட்டார்.

பாண்டி நாட்டில் பிறந்த புலவர், பிறநாட்டு மன்னரிடமும் சென்று தம் அறிவுத் திறமையை அறிவிக்க விரும்பினார். சோழ நாட்டை அடைந்தார். அப்பொழுது சோழ நாட்டை ஆண்டுகொண்டிருந்தவன், சோழன் முடித்தலைக் கோப் பெருநற் கிள்ளி என்பவனாவான். அவன் பாண்டி நாட்டுப் புலவரை மகிழ்ச்சியுடன் எதிர் கொண்டனன். புலவரின் புலமையை அறிந்தான்; தக்க பரிசுகள் தந்தான்.

சேர நாட்டிற்கும் செல்ல வேண்டும் என்பது புலவரின் எண்ணம். ஆதலின், சோழ மன்னனிடத்துப் பிரியா விடை பெற்றுச் சேர நாடு அடைந்தார்.

சேரமான் அந்துவஞ் சேர லிரும்பொறை சேர நாட்டை ஆண்டுகொண்டிருந்தனன். சேரமான் மோசியார் பெருமையை முன்னரே நன்றாக அறிந்திருந்தான். ஆதலின் மிக்க அன்புடன் புலவரை வரவேற்றான். தன் மனையில் கிடைத்த பொன்னையும், மணியையும் புலவருக்குப் பரிசிலாக வாரி வழங்கினன்.

அரசன் அன்புள்ளம் புலவரைப் பிணித் தது. புலவரின் அருந்தமிழ்ப் புலமையில் மன்னன் உள்ளமும் அழுந்தியது. புலவரைத் தன்னாட்டில் பன்னாள் தங்குமாறு மன்னன் வேண்டினன். தமிழ் மொழியைத் “தேருந் தோறும் இனிதாம் தமிழ்” என்றார் பொய்யா மொழிப் புலவர். ஆராயுந்தோறும் இனிமை யைப் பெருக்கும் இயல்பு தமிழ் மொழிக்கு உண்டு. தீந்தமிழ் மொழியைப் புலவருட னிருந்து ஆய்ந்து இன்புற அரசன் எண்ணங் கொண்டான். அரசனின் சிறந்த எண்ணத்தை அறிந்த புலவர், வேறு ஒன்றுஞ் சொல்லாது சேர நாட்டில் தங்கினார்.

சேரல், புலவர்பால் தமிழ் பயிலத் தொடங்கி னான். படித்தற்குத் தனியிடம் உரியது. கருவூர் சேரநாட்டின் தலைநகரம். இதற்குக் கிழக்கே சோழநாடு இருக்கின்றது. இரு நாடுகளின் எல்லைக்கருகில் சேர நாட்டில், சேரமன்னனின் வேண்மாடம் என்ற பெரியதோர் இல்லம் உண்டு. அக்கட்டிடமே தனித்துப் படித்து இனித்து மகிழ்தற்கேற்ற இடம் என்று கொண்டனர். அங்குச் சென்று தங்கி இருந்தமிழை அருந்தினர்.

ஒரு நாள், அரசரும் புலவரும் வேண்மாடத் தமர்ந்து இருக்கின்றனர். அவர்கள் ஒரு காட்சியைக் காண்கின்றனர். யானை ஒன்று, கருவூரை நோக்கி விரைந்தோடி வருகின்றது. யானையின் மீது ஒருவன் அமர்ந்து இருக்கின்றான் ; மறவர் பலர், ஈட்டியுடனும் வாளுடனும் உடன் ஓடி வருகின்றனர்.

இதனைக் காணும் சேரலுக்கு ஐயம் உண்டா கின்றது. “யானையின்மே லிருப்போன் அரசனைப் போல் காணப்படுகின்றான். என் நாட்டின் எல்லைக்குக் கிழக்கே இருக்கும் நாடு சோழநாடு அத்திசையிலிருந்தே யானையும், வீரரும் ஓடி வருகின்றனர்; ஆதலின் யானைமீ தமர்ந்திருப் போன் சோழமன்னனாகவே இருத்தல் வேண்டும். எவனாயினும், உடனே சேனைத் தலைவனை அழைத்து, வருவோனை எதிர்த்துப் போர் செய் யும் வண்ணம் சொல்லுவோம்” என்று எண்ணினான். ஆனால், அடுத்து மற்றோர் எண்ணம் தோன்றுகின்றது.”தமிழ்நாடு முழுவதும், எங்கும் சென்று புகழ்பெற்றவர் நம் அருகிலிருக்கும் புலவர். இவரை வினாவின், ‘இவன் இன்னான்’ என்று நமக்கு அறிவிப்பார். அவரைக் கேட்டறிந்தபின் நாம் எண்ணியதைச் செய்வோம்” என்று நினைத்தான். வருகின்ற அக் கூட்டத்திலேயே தம் நாட்டம் முழுவதையும் சேர்த்து நின்ற புலவரை நோக்கி, ” அருந்தமிழ்ப் புலவரீர்! யானையின்மீது அமர்ந்து மறவர்சூழ நம் நாட்டின் மேல் வரும் இவனை அறிவீரோ? அறிந்திருப்பின் கூறுமாறு வேண்டுகின்றேன்,” என்று பணிவுடன் வினவினான்.

அரசன் முகத்தைக் கண்டு அவன் அகத்தில் தோன்றும் எண்ணங்களைப் புலவர் அறிந்தார். முகத்தைவிட அறிவு நிறைந்த தொன்றும் உண்டோ? இல்லை. ஏன்? தன்னை உடையான் மகிழ்ந்தாலும், வெகுண்டாலும் அவற்றை அது வெளிப்படையாகக் காட்டுகின்றது. “முகத்தில் முதுகுறைந்த துண்டோ உவப்பினும், காயினும் தான் முந்துறும்” என்பது நம் பெருமொழி.

சேரன் முகத்தில் சினக் கனற் பொறி பறத்தலைப் புலவர் கண்டார். யானையின் மீது அமர்ந்து வருவோனையும் இன்னான் என்று புலவர் அறிந்திருந்தார். சேரல் எண்ணம் தவறானது. வருகின்றவன் குற்றம் நிறைந்த மனத்தவனல்லன் என்பதைப் புலவர் உணர்ந்தார். ஆதலால் எவ்வகை இன்னலும் அன்னவனுக்கு வாரா திருக்கச்செய்தல் வேண்டும் என்ற கருத்தின ராயினார். பின்வருமாறு கூறுகின்றார்.

“சேரர்வேந்தே! நீ நீடூழி வாழ்க. களிறு ஊர்ந்துவரும் இவன் யார்? என்று வினவுகின்றாய். இவனை நான் அறிவேன். பகைவர் அம்புகளைத் தாங்கினமையால் வடுக்களுடன் இவன்மார்பு விளங்குகின்றது. இவ் வீரன் சோழ நாட்டு மன்னன். மயில்கள் உதிர்த்த பீலிகளைத் தனியே எடுத்துச் சேமிக்காமல், இவன் நாட்டு உழவர் நெல்லரிகளுடன் அவற்றையும் திரட்டிக் கட்டுவர். அவ்வாறு வளம் சிறந்தது, இவன் நாடு. இம்மன்னன், இன்று நின்னோடு போர் செய்ய வரவில்லை. அவ்வாறு நீ எண்ணி யிருந்தால், அவ்வெண்ணத்தை இப்போதே மாற்றிக்கொள். இச்சொற்களை, யானே படைத்துக் கூறவில்லை. வெகுளி என்ற தீக்குணத்தை அறவே விடுத்து, நடு நிலைமையிலிருந்து, ஊன்றிக் கவனி. அவ்வாறு கவனிப் பாயாயின் நினக்கே உண்மை வெளியாகும்.

இவன் ஏறிவரும் யானை, ஊர்ந்துவரும் இவன் ஏவலுக்கு அடங்குவதாகக் காணப்படவில்லை ; மதம்பட்டுக் காண்கிறது. இவன் நாட்டில், இவன் அவையிலும் நான் சில நாட்கள் தங்கி இருந்திருக்கின்றேன். எல்லைப் புறத்தி லுள்ள ஊர்களில் அடிக்கடி கலகம் நிகழ்வது இயல்பு. அவ்வாறு உண்டாகாத வண்ணம் நீக்குதற்காக எல்லைப்புறத்தில் உள்ள ஊர்களை அடிக்கடி சென்று காண்பான். அவ்வாறே இவன் இன்றும் வந்திருப்பான். வருகின்றபோது இவன் யானை மதம்பட்டிருக்கும். அதனை – அடக்கி, அதன் மேல் இருக்கும் அரசனைக் காப்பாற்றுவதற்கே மறவர் பலர் ஓடிவருகின்றனர். நீ விரும்பினால் இவனைச் சிறைச்சாலைக் கனுப்ப லாம் ; கொல்லவும் முற்படலாம். நல்ல மன முடையவன் இவன்; ஆதலின் இவன் வாழ, இவனுடன் நட்புரிமை பூண்டு இருப்பாயானால் அது நினக்கு நல்லதையே தரும். ஆதலின், எவ்வகைத் தொல்லையுமின்றி இச் சோழ மன்னன் செல்வானாக.”

சூரியன் முன் இருள் ஓடி ஒழிவதுபோல, புலவர் சொற்களின் முன் மன்னன் வெகுளி ஒழிந்தது. புலவர் சொற்களின் சிறப்பால் சோழமன்னனது யானையின் மதமும் அடங்கியது. சோழன், எவ்வகை இன்னலுமின்றித் தன் நாட்டை அடைந்தான்.

மாணவர்களே! புலவர்களிடத்தில் அரசர்கள் வைத்திருந்த நன்மதிப்பைக் காணுங்கள் தன்னாட்டுக்கு அடுத்த சோழ நாட்டைத் தான் கைக்கொள்ளச் சேரன் எண்ணியிருந்தால், சோழனைக் கொன்றிருக்கலாம். அவ்வாறு அவன் எண்ணவில்லை. புலவரால் அரசன் உயிர் பெற்றான்; சேரலும், அறிஞர் சொல்வழி நின்று பெருமையுற்றான்.

“நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே”

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *