(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு வேப்பமரம். நடுத்தர வயதையுடையது. அனைத் துத் திசைகளிலும், கிளை பரப்பியிருந்தது. ஆனால், இலைகள் அடர்த்தியின் றிக்காணப்பட்டது.
இளம் காக்கைகள் இரண்டு, தம்பதியாக இருக்க வேண்டும். அவை இலைகளுக்குள்ளே புகுந்தும் கிளைகளிலே அமர்ந்தும் அந்த வேப்ப மரத்தை முற்றாகவே நோட்ட மிட்டுக் கொண்டிருக்கின்றன. சற்று நேரத்தின் பின்பு அவை இரண்டும் அதே மரத்தின் கீழ்க் கிளை ஒன்றிலே வந்தமர்ந்து ஓய்வு கொள்கின்றன. அப்போது, பக்கத்துக் கிளையிலே உட்கார்ந்திருந்த வயது முதிர்ந்த ஒரு காக்கை அவற்றை நோக்கிப் பின் வருமாறு பகர்ந்தது:
“இளசுகாள்…. இருவரும் இந்த மரத்துக்குள்ளேயே சுற்றிக்கொண்டு திரிகிறீர்கள்.. என்ன விஷயம்.?”
அந்த இளம் காக்கைகள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. அவற்றிலே பெண் காகம் ஆண் காக்கையிடம் “அன்பே…. நீதான் என்னை விட நிதானமாகவும், சரி யாகவும் பேசுவாய். ஆகையினால் இவருடன் நீயே பேசு” என்றது. ஆண் காகமும் தலைசாய்த்து அதனை ஏற்றுக் கொண்டது.
”பெரியவரே வித்தியாசமாக ஒன்றுமில்லை. இந்த மரத்திலே நாங்கள் கூடு கட்டப் போகிறோம். அதற்காக ஓரிடத்தைப் பார்த்தோம்” ஆண் காகம் வயது முதிர்ந்த அந்தக் காக்கையின் வினாவுக்கு இவ்வாறு விடையளித்தது.
“இந்த மரத்தைப்பற்றி நான் நன்கு அறிந்து வைத் திருக்கிறேன். உங்களால் இந்த மரத்திலே ஏத்த இடத்திலுமே கூடு கட்ட முடியாது.”
“பெரியவரே… விஷயம் தெரியாத பழைய காலத்து இளசுகளல்ல நாங்கள்… இந்த நவ யுகத்தின் இளசுகள். நாங்கள் நிறையவே விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஆகையினாலே நாங்கள் இந்த மரத்திலே, கூடு கட்டுகிறோமா இல்லையா என்பதைச் சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள்'”
“இளசுகளே…நான் திரும்பவும் கூறுகிறேன்… உங்களால் இந்த மரத்திலே கூடு கட்ட இயலாது” மீண்டும் உறுதியாகக் கூறியது வயது முதிர்ந்த காக்கை.
“சரி… பார்ப்போம்…” கம்பீரமாகக் காட்சியளித்தது இளைஞனான அந்த ஆண்காக்கை
வயது முதிர்ந்த காகம் அங்கிருந்து பறந்து போனது. ஆனால், அந்த இளம் காக்கைகள் இரண்டும் கூடு கட்டுவதற்கான பொருட்களைத் தேடப் புறப்பட்டன.
அந்த வேப்ப மரத்திலே ஒரு கிளை. கிழக்கு நோக்கி வளர்ந்து சிறிது தூரத்துக்கு அப்பால் அது மூன்று கிளைகளாக உருமாறியிருந்தது. அம்மூன்று கிளைகளுக்கும் மத்தியிலேதான் அந்த இளம் காக்கைகள் இரண்டும், உலர்ந்த தாள்றோசாக் கம்புகள், வேறு மரச்சுள்ளிகள், ஈர்க்குகள், கம்பிகள், தும்புகள், இறகுகள் ஆகியவற்றை எடுத்து வந்து ஒரு கூட்டை ஆக்கிக்கொள்வதற்குப் பெரிதுமே முயன்றன.
அந்த இளம் காக்கைகள் தங்கள் நோக்கத்தை நிறை வேற்றிக் கொள்வதற்காக அம்மரக் கிளைகளுக்கு மத்தியிலே, அப்பொருள்களை எடுத்துவந்து வைக்கும். சிறிது நேரத்தில், அவை ஒவ்வொன்றாக நழுவிக்கீழே விழுந்து விடும். மீண்டும், அக்காக்கைகள் அப்பொருட்களை, அதே இடத்திலே கொண்டுவந்து சேர்க்கும். திரும்பவும் அப்பொருட்கள் அவ்வாறே கீழே விழுந்துவிடும். இவ்வாறு இருபத்தைந்து இருபத்தாறு தினங்கள் பெரும் போராட்டமே நிகழ்ந்தது. என்றாலும், ஒரு கூட்டை அவ்விளங்காக்கைகளால் அங்கே உருவாக்கிக் கொள்ளவே இயலாமற்போய் விட்டது. இவ்வளவு முயன்றதற்குப்பயனாய், அம்மரக்கிளைகளுக்கு மத்தியிலே நாலைந்து சுள்ளிகளும், சிறிது தும்பும், இரண்டோர் இறகுகளுமே ஒட்டிக்கொண்டு கிடந்தன.
அதன்பின் … அவ்வேப்ப மரத்தில் கூடுகட்டும் நம்பிக்கையை இழந்த அந்த இளம் காக்கைகள். அத்தோடு அப்பணியிலே ஈடுபடுவதையும் நிறுத்திக் கொண்டன. அந் நாட்களிலே ஒருதினம்… அவை அந்த மரத்தின் வடபுறக்கிளை ஒன்றிலே மிக்க சோர்வோடு உட்கார்ந்திருந்தன. அவ்வேளை தற்செயலாய், அம்மரத்தின் அதேகிளையிலே வந்தமர்ந்த வயது முதிர்ந்த காக்கை, அந்த இளம் காக்கைகளைக் கண்டது; பக்கத்தே நெருங்கிச் சென்றது.
“என்ன ஒரு மாதிரியாக விருக்கிறீர்கள், கூடெல்லாம் கட்டி முடித்து விட்டீர்களா..?” என்றது.
“நாங்கள் இத்தனை நாட்களாக முயன்று பார்த்தோம். எங்களுக்கு இயலுமான தந்திரங்களையும் செய்து பார்த்தோம். இயலாமற் போய்விட்டது. சீச்சீ… இதிலே கூடுகட்ட முடியாது…” ஆண்காகம் அலுத்துக் கொண்டது.
“நான் சொன்னேனே கேட்டீர்களில்லையே… இப்போது பார்த்தீர்களா? சும்மா… அநியாயமாக நேரத்தையும், சக்தியையும் வீண்விரயம் செய்து விட்டீர்களே.”
“…” அந்த இளம் காக்கைகள் இரண்டுமே மௌனமாகவிருந்தன.
“வாருங்கள் கூடுகட்டுவதற்கு நல்ல வாய்ப்பான இடம் நான் காட்டுகிறேன்” வயது முதிர்ந்த காக்கை மேற்கு நோக்கிச் சிறகை விரித்தது. இளம் காக்கைகளும் அதனைத் தொடர்ந்தன.
சற்றுத் தொலைவில், ஓங்கி வளர்ந்திருந்த ஒரு தென்னையில் சென்றமர்ந்தது வயது முதிர்ந்த காக்கை. இளம் காக்கைகளும் அதன் பக்கமாகச் சென்று உட்கார்ந்து கொண்டன.
‘இங்கே வாருங்கள்… ” ஓலைகளின் நடுவிலே அழைத்துச் சென்றது இளம் காக்கைகளை.
“இந்த வட்டுக்குள் வேண்டிய அளவிலே வேண்டிய வகையில் உங்களுக்கு வேண்டிய கூட்டைக் கட்டிக் கொள்ளலாம். இனி உங்கள் பணியை ஆரம்பியுங்கள்.” என்று விட்டு வயது முதிர்ந்த காக்கை எங்கோ பறந்து சென்றது. ஆனால் இளம் காக்கைகளோ கூடு கட்டும் பணியிலே குதித்தன.
வயது முதிர்ந்த காக்கை காட்டிய அதே இடத்திலே, முன்பு தாங்கள் வேப்ப மரத்திலே கூடு கட்டுவதற்காக எடுத்துச் சென்றும் பயன்படாமற்போன அதே பொருட் களையும், அதே போன்ற இன்னும் சில பொருட்களையும் கொண்டுவந்து பத்துப் பன்னிரண்டு நாட்களில், ஓர் அழகான கூட்டைக் கட்டிவிட்டன.
அவ்வாறு கூட்டை ஆக்கிக் கொண்ட புதிதிலே ஒரு நாள்… இளம் காக்கைகள் இரண்டும் கூட்டுக்கு எதிரிலே ஓர் ஓலையில் சாவகாசமாய் அமர்ந்திருந்தன. அவ்வேளை யிலேதான் அவற்றின் நிலைமையை அறிவதற்காக வயது முதிர்ந்த காக்கையும் அங்கே வந்தது. இளங் காக்கைகளின் எதிரே, அவற்றின் பக்கமாகவுள்ள இன்னுமோர் ஓலை யிலே சென்றமர்ந்தது.
“என்ன கூடு கட்டி விட்டீர்களா?'” வயது முதிர்ந்த காக்கை பேச்சை ஆரம்பித்தது.
“ஆம்…ஆம்… கட்டி விட்டோம் அதோ பாருங்கள்” இளைஞனான அந்த ஆண் காக்கை கூட்டைச் சுட்டிக் காட்டியது. வயது முதிர்ந்த காக்கையோ தலையை உயர்த்தி கூட்டை ஒரு முறை முற்றாக நோட்டமிட்டுக் கொண்டது.
“இளசுகாள்… இப்போது பார்த்தீர்களா…? நான் சொன்னதைக் கேட்டதனால், குறுகிய காலத்துக்குள் சக்தியையும் அதிகம் விரயம் செய்யாமல், ஓர் அழகான கூட்டையும் கட்டிக் கொண்டீர்கள்… உங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும் நாங்கள் எண்ணவில்லை… நீங்களும் பல விஷயங்களை அறிந்து வைத்திருக்கலாம்… ஆனால், எல்லா விஷயங்களையும் நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்றும் கூறமுடியாது. அதே போல் தான் நானும். என்றாலும் நான் தங்களைவிட மிகவும் வயது முதிர்ந்தவன் என்ற காரணத்தினால், கூடுதலாகவே அநுபவப்பட்டிருக்கிறேன். அவ்வாறு ஏற்பட்ட அநுபவம் காரணமாகத்தான் தங்களுக்கு இவ்விடயத்தில் கூட என்னால் உதவமுடிந்தது.”
“சரிதான்… சரிதான்…” என்றது அந்த ஆண்காக்கை. பெண்காகமும் தன்னையறியாமலேயே தலையை அசைத்து தனது இணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டது.
வயது முதிர்ந்த காக்கை தனது உரையைத் தொடர்ந்தது; “எப்படியிருந்தாலும் இளசுகள் இளசுகள்தான்… ஆகையினாலே இளசுகளாகிய நீங்கள், பொதுவாக எல்லா விடயங்களிலும் என்னை என்றில்லை, வயது முதிர்ந்தோர் யாராகவிருந்தாலும், அவரின் ஆலோசனையையும் பெற்றுக் கொண்டு செயற்படுங்கள். உங்களுக்கு அனைத்துமே ஜெயமாக முடியும்”. வயது முதிர்ந்த காக்கை அலகால் இறகைக் கோதிவிட்டுக் கொண்டது.
“நாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற மமதை கொண்டு நடந்தமையினாலேயே, ஆரம்பத்தில் இவ்விடயம் தோல்வியைத் தழுவிக் கொண்டது. இனிமேல் நிச்சயமாக, எந்த விடயமாக இருந்தாலும், வயது முதிர்ந்தோரின் ஆலோசனையையும் பெற்றுக்கொண்டே செயற்படுவோம்'” இவ்வாறு ஆண்காகம் இயம்பியது. பெண்காக்கையோ, தன் இறக்கைகளை உலுக்கிவிட்டுக்கொண்டு தலை நிமிர்ந்தது.
இளம் காக்கைகளையே பார்த்தவண்ணம் உட்கார்ந்திருந்த வயது முதிர்ந்த காக்கையின் வதனத்திலோ, இப்போது பூரிப்பும், புளகாங்கிதமும் பூத்துக் குலுங்கின.
– தினகரன் வார மஞ்சரி, 1988-03-28.
– நாங்கள் மனித இனம் (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1991, கல்முனை ஸாஹிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியீடு.