ஒரு நாட்டில் இராஜா ஒருவன் தன்னுடைய மக்களுக்கு நல்லாச்சியைக் கொடுத்து வந்தான். திடிரென்று சில மாதங்களாக அந்த நாட்டில் மழைவளம் குன்றி போயிருந்தது. என்னவாயிருக்கும் என்று யோசனை செய்தபோது, அந்த நாட்டில் உள்ள காளிக்கோயில் அடைப்பட்டுக் கிடந்ததை அறிந்தான்.
அந்தக் கோவிலைத் திறந்து தினமும் இராஜாவே குதிரையில் வந்து விளக்குப் போட்டுவிட்டுச் சென்றான். வீட்டில் செக்கு ஆட்டிய எண்ணெயை ஊற்றாமல், அதை அதிக விலையில் விற்கும்படிச் சொல்லிவிட்டு வரும்வழியில் உள்ள கடையில் வாங்கிய எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்றினான். ஒருமாதம் இருமாதம் ஆறுமாதம் ஒரு வருடமாகியும் நாட்டில் மழையே பெய்யாமல் காய்ந்துபோய் மக்கள் அனைவரும் தண்ணீருக்காகத் துன்பப்பட்டார்கள்.
காளிக்கோவிலில் விளக்குப் போடுவது என்பது எந்தவொரு பலனையும் தரப்போவதில்லை என்று நினைத்தான் மன்னன். அதனால் மீண்டும் கோவிலை இழுத்து மூட உத்தரவு பிரபித்தான்.
அப்போது அந்த ஊரில் கணவனும் மனைவியும் துணிமணிகள் விற்றுக்கொண்டு வந்தனர். மாலை நேரம் ஆனவுடன் கோவிலின் வாசலில் உள்ள மருதமரத்தின் கீழ்ச்சென்று அமர்ந்து ஓய்வு எடுத்தனர். கோவில் ஏன் இப்படி இருட்டாக இருக்கிறது என்று அவர்கள் இருவரும் தன்னுடைய துணிகைளில் ஒன்றைக் கிழித்து எண்ணெய் ஊற்றி விளக்கு பற்ற வைத்தார்கள்.
இரவு நேரத்தில் மாடத்திற்கு வந்த மன்னன், “நாம் மூடிவிட்டு வந்த கோவிலில் யார் மீண்டும் விளக்கு ஏற்றினார்கள்” என்று கோபப்பட்டான்.
“விளக்கு ஏற்றியவர்களைத் தலை வெட்டப்பட்டு துண்டாக்குங்கள்” என்றும் கட்டளை இட்டான்.
மன்னனின் ஆணைக்கிணங்க துணி விற்பவர்களின் தலைகளானது துண்டிக்கப்பட்டது. அவர்களின் இரத்தம் ஆறாக கோவில் வாசலில் ஓடியது. இதனால் கோபமுற்ற காளி தெய்வமானது, கணவனை விளக்காகவும் மனைவியைத் திரியாகவும் படைத்து என்றும் அணையாத விளக்கை உண்டுபண்ணியது.
மன்னன் தன்னுடைய தவறை உணர்ந்தான். செய்வதறியாது தவித்தான். காளிக்கோவிலுக்கு ஓடி வந்தான். காளியைக் கும்பிட்டு அங்கிருந்த அருவாளால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் நீத்தான். மன்னனின் இரத்தமும் துணிவிற்பவர்களின் இரத்தமோடு கலந்தது.
அந்த நாட்டில் விடிவதற்குமுன் மழை கொட்டோ கோட்டோ என்று கொட்டியது.
ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன.
கதை மிகவும் நன்றாக இருக்கிறது,
Hi.Which temple is this.The name .The story is interesting so I want to know pls reply ASAP