ஆரோன் சுற்றுச்சூழலை அதிகமாக நேசிக்கும் சிறுவன். அவன் பெற்றோர் வாங்கித்தரும் புத்தகங்கள், பெரும்பாலும் இயற்கை சார்ந்தவையே. அன்றும் அப்படியொரு புத்தகம் அவனுக்குக் கிடைத்தது. ஆனால், அதைப் பெற்றோர் வாங்கித் தரவில்லை.
அன்று மாலை ஆரோன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது, இரண்டு தெருநாய்கள் ஓர் அணிலைத் துரத்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த ஆரோன், போராடி அணிலைக் காப்பாற்றினான். தன் உயிரைக் காப்பாற்றிய ஆரோனுக்கு, தானே எழுதிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தது. ஓர் அணிலின் கைகளில் தவழும் புத்தகம் எவ்வளவு பெரிதாக இருந்துவிடும்?
ஆம், இரண்டு சென்டிமீட்டரே இருந்தது அந்தப் புத்தகம். பனை இலைகளைக் காகிதமாகப் பயன்படுத்தி எழுதப்பட்டது. அதை ஒரு மரப்பட்டைக்குள் வைத்து அவனிடம் கொடுத்தது. அந்தக் குட்டிப் புத்தகத்துடன் வீடு திரும்பினான் ஆரோன். அதைச் சீக்கிரமே படித்துவிடும் ஆர்வம்.
புத்தகத்தைச் சுற்றியிருந்த மரப்பட்டைகளை ஜாக்கிரதையாகப் பிரித்தான். லென்ஸ் வைத்துப் பார்த்தால் தெரியும் வகையில் புத்தகத்தின் மேலே, ‘என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு என் நன்றிகள்’ என்று எழுதப்பட்டிருந்தது.
ஆரோனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, ‘காப்பாற்றியதுமே இதை என்னிடம் கொடுத்தது. அதற்குள் எப்படி எழுதியது?’
குழம்பியவாறு திருப்பினான். இரண்டாவது பக்கத்தில், ‘நான் மரத்துக்கு மரம் தாவுபவன். பழங்களைத் தேடித் தேடி ருசிப்பேன். என்னைப்போலவே வாழ நீயும் ஆசைப்படுகிறாயா?’ என்றிருந்தது. அதற்குக் கீழே, ‘பதில்:….’ என்று இடமும் விடப்பட்டிருந்தது.
‘இது ஏதோ புதிர் மாதிரி இருக்கே. சரி எழுதிவைப்போம்’ என்றபடி, ‘ஆம்’ என்று குண்டூசியால் புத்தகம் சேதாரம் ஆகாதவாறு ஜாக்கிரதையாக எழுதினான்.
உள்ளங்கைக்குள் சின்னதாக இருந்த அந்தப் புத்தகம், அடுத்த நிமிடமே இரண்டு கைகளில் ஏந்தும் வகையில் பெரியதாகிவிட்டது.
‘அட… புத்தகம் எப்படி இவ்வளவு பெருசா வளர்ந்துச்சு?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தபோதுதான் புரிந்தது, புத்தகம் பெரிதாகவில்லை; ஆரோன் சிறிதாகிவிட்டான். ஓர் அணிலின் உயரத்துக்கு.
அந்த நேரம் பார்த்து, “ஆரோன்…! ஆரோ கண்ணா..!” என்றபடி அம்மா வந்தார்.
அவருக்கு ஆரோன் இருப்பது தெரியவில்லை, “சொல்லாமல் விளையாட போக மாட்டானே” என்றவாறு அறையிலிருந்து வெளியேறப் பார்த்தார்.
‘அம்மா…’ என ஆரோன் கூப்பிட முயன்றான். ஆனால், ‘கீச்… கீச்…’ என்றுதான் வந்தது. திரும்பிய அம்மா, ஜன்னலுக்கு வெளியே இருந்த அணிலைப் பார்த்துவிட்டுப் சென்றுவிட்டார். அதே இடத்தை ஆரோனும் பார்த்தான். அங்கிருந்த அணில், “பயப்படாதே என்னோடு வா” என்று அழைத்தது.
“அணில் பேசுமா?” என வியந்தான் ஆரோன்.
“எங்க பேச்சு உனக்குப் புரியும். ஏன்னா, நீதான் இப்போ அணிலா மாறிட்டியே” என்றது அணில்.
ஆரோன் உறைந்துபோனான். “பயப்படாதே. நீ என்னைக் காப்பாற்றியதால் கொஞ்ச நேரம் எங்களை மாதிரி வாழ வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்றது.-
ஆசுவாசமடைந்த ஆரோன், அணிலுடன் வெளியேறி, மரங்களில் தாவித்தாவிச் சென்றான். நம்பவே முடியவில்லை. அவனால் உயரத்திலிருந்து எளிதாகத் தாவமுடிகிறது. குதித்தான், தாவினான், தாண்டினான். சந்தோஷம் தாங்காமல் அங்குமிங்கும் ஓடி ஓடி களைப்படைந்தான். “எனக்குப் பசிக்குது. நீ பழங்களைச் சாப்பிடுவேன்னு சொன்னியே. என்னையும் கூட்டிட்டு போறியா?” எனக் கேட்டான்.
“போலாமே… உனக்கு என்ன பழம் வேண்டும்?” – அணில்
“நீ எந்தப் பழங்களை விரும்பிச் சாப்பிடுவே?” – ஆரோன்
“கொய்யாப்பழத்தை ஆசையா சாப்பிடுவேன்.”
“நானும் அதையே சாப்பிடுறேன். எனக்கும் கொய்யப்பழம் ரொம்ப பிடிக்கும். ஆனா, கடையில் வாங்கித்தான் சாப்பிட்டிருக்கேன். மரத்திலிருந்து பறிச்சு சாப்பிட்டதில்லே” என்றான் ஆசையும் ஏக்கமும் கலந்த குரலில்.
அவர்கள் வெளியே வந்தார்கள். பெரிய சாலையில்… பெரிய பெரிய சக்கரங்களுடன் ஓடும் வாகனங்கள் அவர்களைப் பாடாய்ப்படுத்தின. “அய்யோ… சத்தம் காது கிழிக்குதே!” என ஆரோன் அலறினான்.
“மனிதர்களைவிட அதிகமான, நுணுக்கமான ஒலிகளை நம்மால் கேட்க முடியும். அதனால்தான் பெருசா கேட்டு அதிர்ச்சி அடையறே. எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்துச்சு. இப்பவும் அப்படித்தான் இருக்கு. வலியுடன் வாழப் பழகிட்டோம்” என்றது அணில்.
தூரத்தில் வண்டி வருவதைப் பார்த்த ஆரோன், “அங்கேதானே வருது வா நாம போயிடலாம்” என்று சாலையில் ஊடுருவினான். ஆனால், அவன் எதிர்பார்த்ததைவிட வேகமாக நெருங்கிவிட்டன. ஆரோனை சட்டென பிடித்து இழுத்துவிட்டது அணில்.
ஒருவழியாக நகரத்தைவிட்டுக் கொஞ்சம் தள்ளிவந்தார்கள். அங்கிருந்த மரங்களில் தேடி, கொய்யா மரத்தைக் கண்டுபிடித்தது அணில். இருவரும் ஆசைதீரச் சாப்பிட்டார்கள். “ஒரு கொய்யாப்பழம் சாப்பிட இவ்வளோ தூரம் வரணுமா?” எனக் கேட்டான் ஆரோன்.
“நகரத்தில் இப்படி எங்கோ ஒன்றிரண்டு மரங்களே இருக்கு. பார்க்க அழகா இருக்குன்னு பயனில்லாத மரங்களையே வளர்க்கறீங்க. அதில் காயும் காய்க்கிறது இல்லே, பூவும் பூக்கிறது இல்லே. இப்படி ஒன்றிரண்டு மரங்கள் இருக்கிறதால் நாங்க பொழைச்சோம். இந்த மாதிரி மரத்தை நிறைய வளர்த்தியிருந்தா கஷ்டப்பட்டு இவ்வளோ தூரம் ஏன் வரப்போறோம்?” என்று வேதனைப்பட்டது அணில்.
நாட்டு மரங்களை வளர்க்கவேண்டிய அவசியத்தை உணர்ந்தான் ஆரோன். மீண்டும் பல சாகசங்கள் செய்து தங்கள் இடத்துக்குத் திரும்பிவந்தார்கள். அணிலின் குடும்பத்துக்கும் கொய்யாப்பழங்களைப் பறித்துவந்தனர். அதனால், சாலையைக் கடப்பது இன்னும் சிரமமாக இருந்தது.
அணிலின் மனைவி மற்றும் 5 குழந்தைகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பும்போது, ஆரோன் மனிதனாக மாறியிருந்தான்.
அடுத்த நாளே வீட்டின் பின்பக்கம் பயனுள்ள நாட்டு மரக்கன்றுகளை நட்டான். எங்கு சென்றாலும் மற்றவர்களையும் பயனுள்ள மரங்களை வளர்க்க ஊக்குவிக்க ஆரம்பித்தான். அப்போதுதானே இங்கு வாழும் அணில், பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களும் ஆனந்தமாகப் பிரச்னை இல்லாமல் வாழமுடியும்.
– ஜனவரி 2019