கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.
அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.
ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.
கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.
ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.
‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’
‘அடுத்த வெள்ளிக்கிழமை!’
’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’
கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.
வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’
கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’
’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’
‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’
’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’
‘சரிம்மா!’
அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.
இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.
இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.
ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.
இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.
அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’
மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.
‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.
‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.
’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.
‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’
இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.
அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!
– 16 02 2012 (http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma – Grandma’s Bag Of Stories – சுதா மூர்த்தி)