அஞ்சல் பெட்டியில் அலர்ந்த மலர்கள்..

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,799 
 

வாசலில் தபால்காரப் பெண் வந்திருந்தாள். நஸ்தியா வாசலுக்குச் சென்று தபால்காரப் பெண்ணிடம் அன்றையப் பத்திரிகையை வாங்கினாள். அந்தத் தபால்காரப் பெண்ணுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியிருந்தது. அவள் புருவப் பகுதியைத் துடைத்துவிட்டுக் கொண்டாள்.

நஸ்தியா கேட்டாள், “”மரீனா அத்தை அவர்களே, நீங்கள் ரொம்பப் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு வருகிறீர்களே, இது உங்களுக்குச் சுமையாக இல்லையா?”

“”இதுவா? அப்படியொன்றும் பெரிய சுமையாக இல்லையே, இதோ நீயே பார்” என்று தபால்கார மரீனா அத்தை நஸ்தியாவிடம் தனது பெரிய பையைக் காட்டினாள்.

“”அது சரி, ஏன் நீங்கள் இவ்வளவு செய்திப் பத்திரிகைகளையும் தூக்கிக் கொண்டு வரவேண்டும்?” என்றாள் நஸ்தியா.

“”நமது மக்கள் ரொம்பப் பேர், நிறைய செய்திப் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்தியிருக்கிறார்கள்…ரொம்பவும் படிக்கிறார்கள்; ரொம்பவும் செய்திகளைத் தெரிந்து கொள்கிறார்கள்; அதனால்தான் செய்திப் பத்திரிகைகள் வந்துவிடுகின்றன” என்றார் தபால்கார அத்தை.

“”சரி, நான் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு உதவி செய்யட்டுமா?” என்றாள் நஸ்தியா.

“”அன்புப் பெண்ணே, நீ எப்படி எனக்கு உதவிகரமாக இருக்கப் போகிறாய்? இந்தப் பை ரொம்பப் பெரிதாக இருக்கிறது… உன் தோள்பட்டை தாங்காதே..!” என்றார் அத்தை.

“”வீதியில் உங்களோடு நானும் சேர்ந்து நடந்து வருவேன்; நீங்க ஒரு வீட்டுக்கு பத்திரிகை கொடுங்க; ஒரு பத்திரிகையை எடுத்து, அடுத்த வீட்டுக்கு நான் கொடுக்கிறேன்; நீங்க ஒரு வீட்டுக்கு, நான் ஒரு வீட்டுக்கு… என்று மாற்றி, மாற்றிக் கொடுத்திட்டே வந்தோம்னா, பத்திரிகை கொடுக்கிற வேலையை ரொம்ப வேகமாகவும் செய்திடலாம்; வேலையும் சுமையே இல்லாம எளிமையாக இருக்கும்” என்றாள் நஸ்தியா.

“”அப்படியெல்லாம் நீ ரொம்பவும் சிரமப்பட வேண்டாம். நீ வேலை செய்தால் உனக்குக் கால்கள் வலி எடுக்க ஆரம்பித்துவிடும்” என்று மறுத்தார் தபால்கார அத்தை.

நஸ்தியா சம்மதிக்கவில்லை. “”அப்படியெல்லாம் எனக்கு ஆகிவிடாது. உங்களோடு நடந்து நானும் வேலை செய்வேன்” என்றாள் நஸ்தியா.

இருவரும் சேர்ந்து தெருவில் நடந்தார்கள். தபால்கார அத்தை ஒரு வீட்டில் தபாலைக் கொடுத்தாள். நஸ்தியா அடுத்த வீட்டில் கொடுத்தாள். இப்படி மாறி,மாறி இருவரும் சந்தாதாரர்களுக்குப் பத்திரிகைகளைக் கொடுத்தார்கள்.

இருவரும் கொடுத்ததால் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளாகவே நகர்ப்பகுதி முழுவதிலும் கொடுத்து முடித்துவிட்டார்கள். அவர்களது வேலை விறுவிறுப்பாகவும் விரைவாகவும் நடந்து முடிந்தது. ஆனால் ஒரு பிரச்னை.

அவர்கள் தபால் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்த மூன்று வீடுகளில் தபால் பெட்டிகள் மிகவும் உயரத்தில் இருந்தன. சிறுமி நஸ்தியாவுக்குத் தபால்களை, பத்திரிகைகளைப் பெட்டிக்குள் எட்டிப் போடுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்தது.

அன்றைய தபால்களைப் பட்டுவாடா செய்து முடித்தபோது அத்தை சொன்னார்,””நீ மிகவும் உதவியாக இருந்தேம்மா. என்னுடைய அருமை உதவியாளரே உனக்கு ரொம்ப ரொம்ப நன்றிம்மா!”

அன்றைய தினத்திலிருந்து நஸ்தியா ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட பாலத்தின் அருகே தபால்கார அத்தையைத் தவறாமல் சந்தித்துவிடுவாள். தபால்கார அத்தைக்கு தினம்தினம் உதவி செய்தாள். தபால்கார அத்தையுடன் சேர்ந்து தபால்களையும் பத்திரிகைகளையும் நஸ்தியா பட்டுவாடா செய்வதைப் பார்த்த மக்கள்,””ஏ! தபால்காரப் பெண்ணே” என்று நஸ்தியாவை அழைக்க ஆரம்பித்தனர். மக்கள் தன்னை அவ்வாறு அழைப்பதை நஸ்தியா மிகவும் விரும்பினாள்.

நஸ்தியா ஒருநாள் ஒரு செய்திப் பத்திரிகையை ஒரு வீட்டில் பட்டுவாடா செய்யும்போது அந்த வீட்டில் இருந்தவர்கள், “”இன்றைக்கு எங்களுக்கு வெறும் செய்திப் பத்திரிகை மட்டும்தானா? வேறு தபால்கள் இல்லையா?” என்று

கேட்டார்கள்.

“”ஆமாம் வெறும் செய்திப் பத்திரிகை மட்டும்தான் உங்களுக்கு வந்திருக்கிறது. செய்திப் பத்திரிகை என்றால் சும்மாவா? அது எவ்வளவு ருசிகரமான சமாசாரம்!” என்றாள் சிறுமி நஸ்தியா.

அடுத்த வீட்டிலும் அதே மாதிரி கேட்டார்கள் – “”நஸ்தியா எங்களுக்குக் கடிதம் ஏதும் இல்லையா?”

“”கடிதங்களா? உங்களுக்கா? உங்களுடைய உறவுக்காரர்கள் இப்பொழுதான் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்களாம்! எழுதி முடித்துப் பெட்டியில் போட்டால் வந்து சேரும்…” என்று நகைச்சுவையாகப் பதில் சொன்னாள் நஸ்தியா.

தபால்கார அத்தையும் இப்படித்தான். பல நேரங்களில் கேலியாய், விளையாட்டாய் பேசுவாள். அந்தப் பழக்கம் இப்போது சிறுமி நஸ்தியாவுக்கும் வந்து

விட்டது.

அவர்கள் தபால் பட்டுவாடா செய்யும் ஒரு தெருவில் வயது முதிர்ந்த ஆசிரியை ஒருவர் இருந்தார். அவருக்கு நஸ்தியாவை ரொம்பவும் பிடிக்கும். அந்த ஆசிரியைக்குத் தபால் கொண்டுபோய்க் கொடுப்பதென்றால் நஸ்தியாவுக்கும் ரொம்பப் பிடிக்கும்.

ஒருநாள், திங்கள்கிழமையன்று, வயது முதிர்ந்த அந்த ஆசிரியைக்கு ஒரு தபாலும் வரவில்லை.

நஸ்தியா கேட்டாள், “”மரீனா அத்தை, பார்த்தீர்களா? அந்த வயது முதிர்ந்த ஆசிரியைக்கு இன்று ஒரு தபாலும் வரவில்லை போலிருக்கிறதே?”

“”ஆமாம், ஆமாம். இன்றைக்கு அவருக்கு எந்தத் தபாலும் வரவில்லை. அவர்களுக்கு வர வேண்டிய மாதப் பத்திரிகையும் வரவில்லை. தினம் வருகின்ற செய்திப் பத்திரிகையும் வரவில்லை” என்றாள் அத்தை.

நஸ்தியாவுக்கு ரொம்பவும் ஏமாற்றமாகிவிட்டது. “”அந்த வயது முதிர்ந்த ஆசிரியைக்கு இன்றைக்குப் பார்த்து ஒரு தபாலும் இல்லை. மாதப்பத்திரிகையும் இல்லை. தினம் வரும் செய்திப் பத்திரிகையும் இல்லை” என்று நினைத்து நஸ்தியா ரொம்பவும் வருத்தப்பட்டாள். “”அந்த ஆசிரியை இப்போது மிகவும் எதிர்பார்த்து ஏக்கத்துடன் உட்கார்ந்திருப்பார்களே! “அந்தத் தபால்காரச் சிறுமி இன்னும் வரவில்லையே. சோம்பறித்தனமாக இருந்துவிட்டாளோ’ என்றெல்லாம் நினைத்துவிடுவார்களோ” என்று நஸ்தியா நினைத்து மேலும் வருத்தப்பட்டாள்.

இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? என்று நஸ்தியா சிந்திக்கத் தொடங்கினாள்.

அன்றைய தபால் பட்டுவாடா வேலைகள் முடிந்தன. மரீனா அத்தை புறப்பட்டுப் போய்விட்டார்.

உடனே நஸ்தியா மனத்துக்குள் ஒரு திட்டத்தைத் தீட்டிக்கொண்டாள். நகர்ப்பகுதிக்கு ஓட்டமாய் ஓடினாள். சணலும் கோதுமையும் அடர்ந்து கிடந்த வயல்பகுதியை நோக்கி ஓடினாள். வயல் வெளியின் பக்கத்தில் தோட்டங்களில், பறித்துக் கொள்ளத்தக்க பருவத்தில் ஏராளமாய் வண்ண வண்ணமாய்ப் பூக்கள் பூத்துக்கிடந்தன. சின்னஞ்சிறு காட்டுப் பூக்களையும், நீல வண்ண மலர்களையும் பறித்த நஸ்தியா, அவற்றைச் சேர்த்து ஓர் அழகிய பூச்செண்டு போலக் கட்டினாள். அந்த வயது முதிர்ந்த ஆசிரியையின் வீடு நோக்கி ஒரே ஓட்டம். வீட்டுக்கு முன் வந்து அந்தத் தபால் பெட்டியில் அழகிய பூச்செண்டு, அழகாய் நிற்குமாறு சொருகி வைத்தாள் நஸ்தியா.

தபால் அல்லது பத்திரிகை ஏதும் இன்றைக்கு இருக்காதோ என்று சற்று ஏமாற்ற உணர்வுடன், கவலை தோய்ந்த முகத்துடன் வந்து தபால் பெட்டியைப் பார்த்த அந்த ஆசிரியைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “”இது என்ன தபால் பெட்டியில் அழகிய பூச்செண்டு!” என்று மகிழ்ச்சியால் பூரித்துப் போனார்.

அந்தப் பூச்செண்டுக் கொத்தை எடுத்து தன் முகத்துக்கு நேரே தூக்கிப் பார்த்து அகம் மகிழ்ந்தார். அந்தச் சந்தோஷ நேரத்தில், முகமலர்ச்சியில், அவரது வயோதிக ரேகைகள் மறைந்துபோயின. எங்கிருந்தோ ஒரு புதிய இளமை அவரிடம் பளிச்சிட்டது. முகமெல்லாம் ஒரு மகிழ்ச்சி மிக்க புன்னகை மிளிர்ந்தது!

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *