எழுத்து க்கலை பற்றி இவர்கள்….வாசந்தி
1. சுவாரஸ்யமகச் சொல்லப்படும் எந்தக் கதையும் நல்ல கதைதான். பார்த்த ஒரு சம்பவத்தை, மனதில் நச்சரிக்கும் ஒரு உணர்வை, அல்லது அனுபவித்த ஒருஅனுபவத்தை, அதை சொல்லிவிடவேண்டும் என்று நம்முள் தகிக்கும் ஆதங்கத்தை சுவாரஸ்யமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பது மட்டும் போதாது – நீங்கள் சொல்வதை வாசகர்கள் நம்ப வேண்டும் – உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். – அவர்களிடையே இத்தகைய பாதிப்பை உங்கள் கதை ஏற்படுத்தவில்லையானால், தவறு உங்கள் அனுபவத்தில் இல்லை – அதை நீங்கள் சொன்ன விதத்தில்.
2. வார்த்தைகளைப் பொறுக்குவதிலும், அவற்றை வாக்கியமாய்க் கோர்ப்பதிலும் ஒரு பொற்கொல்லனின் பொறுமையும் கவனமும் நமக்கிருக்க வேண்டும். அவன் அலுக்காமல் செய்யும் நகாசு வேலையைப்போல் நாமும் நமக்குத் திருப்தி அளிக்கும்வரை கதையைப் பாலிஷ் செய்ய வேண்டும். வெற்றிக்குக் குறுக்கு வழிகள் கிடையா.
3. கதையைச் சொல்லும் பாணி ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். சொல்லப் போகிற விஷயத்துக்குத் தகுந்தமாதிரி மாறுபடும். கதையை ஆரம்பிக்கும் விதமே வாசகர்களின் கவனத்தைக் கவர வேண்டும். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கிரமப்படுத்தி எழுத முற்பட்டீர்களானால், நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டைப் போல் ஆகிவிடும் – start with bang – எடுத்த எடுப்பிலேயே வாசகரின் பார்வையைக் கட்டிப் போட வேண்டும். நேராக விஷயத்துக்கு வந்து கதையைப் பின்னுங்கள்.
4. அனாவசிய, சுவாரஸ்யமற்ற சம்பாஷணைகள் அலுப்புத் தட்டுவதுபோல். சம்பஷணையே இல்லாத கதை ஓட்டமும் அலுப்புத் தட்டும்.
5. உங்களுடைய கருத்துக்களை, (தீர்மானமான கொள்கைகளைக் கூட) மண்டையில் அடிக்கிற மாதிரி ‘ஆகையால் வாசகர்களே’ என்று உபதேசிக்கிற தினுசில் புகுத்தாதீர்கள். அதை அப்படியே ஏற்கும் பாமரத்தனம் இப்போது எந்த வாசகருக்கும் இல்லை. உங்களுடைய நல்ல எண்ணங்கள் கதையில் ஒரு சுகந்தம்போல் வரவேண்டும்.
அதைக் கதாபாத்திரங்கள் மூலம் அல்லது சம்பவங்கள் மூலம் நாசூக்காகத் தெரிவிக்கலாம். அநேகம் சிறுகதைகள் சப்பென்று போவதற்கும், லேசாக எரிச்சலூட்டுவதற்கும், இந்த நாசூக்குத் தெரியாமல், எழுத்தாளர்கள் தங்களைக் கதைகளுக்குள் ‘ப்ரொஜெக்ட்’ செய்வதுதான் காரணம்.
6. கதையில் ஒருஆச்சரியம் காத்திருக்க வேண்டும். நம்பும்படியான ஆச்சரியம் – அது அதிர்ச்சி தரலாம் அல்லது சிரிக்க வைக்கலாம் – எதுவாக இருந்தாலும் ‘பூ, இவ்வளவுதானா!’ என்று வாசகர் அலுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
7. என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையின் கடைசி பாராதான் மிகக் கடினமானது. அதிகம் கவனம் கொடுக்கப்பட வேண்டியது. ஏனென்றால் நமது நோக்கம் வாசகரின் பார்வையை ஈர்ப்பது மட்டுமல்லை – அவருடைய நினைவுப் பெட்டகத்தில் இடத்தைப் பிடிப்பதும்கூட – நமது கடைசிப் பாராவைப் பொறுத்திருக்கிறது, நமது கதையின் ஆயுள