புனைகதை: ஐரோப்பிய மரபும் இன்றைய புதிய சாத்தியங்களும் – எஸ்.ராமகிருஷ்ணன்

 

புனைகதைகளுக்கு என்று திட்டமான வரையறைகள், இலக்கணங்கள், விதிமுறைகள் இருக்கின்றனவா என்ன? நாவல், குறுநாவல், சிறுகதை, குறுங்கதை என்று இன்று நாம் பிரித்துவைத்துள்ள அத்தனையும் ஐரோப்பிய இலக்கியமரபில் இருந்து உருவானவையே. இவை பக்க அளவிலும், கதை குறித்த மேற்குலகின் பார்வையிலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவர்களே இன்று அந்த விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறார்கள். கைவிட்டு வெகு தூரம் முன் நகர்ந்து போய்விட்டிருக்கிறார்கள். ஆகவே நாம் அந்த வரையறைகளை நமது சொந்த விதிகளாக எடுத்துக் கொள்ள முடியாது, எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.

கதை சொல்வதில் நமக்கு நீண்ட மரபிருக்கிறது. அந்த மரபில் கதை என்பது வாழ்வோடு நெருக்கமான ஒரு மக்கள் கலையாகக் கருதப்படுகிறது. விடுகதைகள், அழிப்பான்கதைகள், சமயம்சார்ந்த கதைகள், தொன்மக்கதைகள், அமானுஷ்ய கதைகள். வேடிக்கை கதைகள், நம்பிக்கை சார்ந்த கதைகள், இதிகாசக் கதைகள் என்று இந்திய நாட்டார் கதைகள் பல்வேறுவிதமான கதைமரபைக் கொண்டிருக்கின்றன. இந்த மரபிலிருந்து நமது நவீனப் புனைகதை எழுத்து உருவாக்கப் படவில்லை. ஆகவே இந்த ஐரோப்பியக் கதை சொல்லும் முறையை மாற்றித் தனக்கான ஒரு தமிழ்ப் புனைவியலை உருவாக்க முயல்வதே இன்று புனைகதைகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை.

கதை என்றால் என்ன? கேள்வி எளிதாகயிருக்கிறது. ஆனால் இதற்கு முடிவான பதில் என்று ஒன்றுமேயில்லை. நூற்றுக்கணக்கான வரையறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கலாச்சாரமும் கதை பற்றி ஒருவித எண்ணம் கொண்டிருக்கிறது. கதை என்பதைக் கற்பனையும் யதார்த்தமும் இணைந்து உருவாக்கும் ஒரு புனைவு என்ற கருதுகோளை எல்லாக் கலாச் சாரங்களும் ஒத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரையறையை நாமும் எடுத்துக் கொள்ளலாம்.

இன்றைய புனைகதைப்பரப்பில் கதைகள் குறித்து நீண்ட விவாதங்கள், ஆய்வுகள் நடைபெறுகின்றன. கதையாடல்களை எப்படி புரிந்துகொள்வது என்பதற்குக் கோட்பாடுகள் சார்ந்து விரிவான ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்படுகின்றன. நான் அந்த உலகிற்குப் போக விரும்பவில்லை. அது தனித்து விரிவாக அறிய வேண்டிய ஒன்று.

புனைகதை குறித்த ஐந்து முக்கிய எண்ணங்களை முதலில் இங்கே ஆராய விரும்புகிறேன். இதைச் சொன்னவர்கள் ஐந்து பேரும் மிக முக்கியப் படைப்பாளிகள். அவர்கள் தங்களது எழுத்தின் வழியே இதை அறிந்து சொல்லியிருக்கிறார்கள். இவை கதைகளின் இலக்கணமில்லை. ஆனால் கதைகளின் சூட்சுமத்தை அறிந்து கொள்ள உதவும் வழிகாட்டிகள் என்று சொல்லலாம்.

கதை என்பது முடிவில்லாத ஒரு நடனம் என்கிறார் ரிச்சர்ட் பர்டன். இவர் மிக முக்கிய மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். ஆயிரத்து ஒரு அற்புத இரவுகள் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டவர்.

இந்த எண்ணத்தை அவர் தனது ஆயிரத்து ஒரு அற்புத இரவுகள் நூலின் மொழிபெயர்ப்புக்குப் பிறகு கூறுகிறார். ஏன் இப்படியான ஒரு முடிவிற்கு அவர் வந்திருந்தார் என்றால் நடனம் என்பது ஒரு புள்ளியில் நிலை கொள்ளாமல் அதே நேரம் குறிப்பிட்ட ஒழுங்கிற்குள், குறிப்பிட்ட இசையோடு இணைந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆடும்நபரின் உணர்ச்சிவெளிப்பாடு முக்கியமானதாகயிருக்கிறது. கதைகளும் அப்படியே. கதை மெல்லத் துவங்கி உயர்ந்து பல்வேறு உணர்ச்சிநிலைகளைக் கடந்து ஏதோ ஓர் இடத்தில் நின்று போகிறது என்றால் கதையும் ஒரு நடனம் தானே.

கதையை நடனத்துடன் ஒப்பிடும் போது நாம் அறிந்து கொள்வது, இரண்டுமே சூட்சுமமான ஒன்றினை நேரடியான நிகழ்த்து தளத்தில் உருவாக்கிக் காட்டுகின்றன. அதே நேரம் நடனம் தன் தீவிரத்தால் காண்பவரைத் தானும் சேர்ந்து நடனமாடச் செய்வது போலக் கதைகள் வாசிப்பவரைத் தனது இயல்பிற்குள் இழுத்துக் கொள்கின்றன. வாசகன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கதாபாத்திரங்களில் ஒருவனாகிவிடுகிறான். இது புனைகதைகளின் முக்கிய அம்சம். வாசகர்கள் கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போவதும், அந்த உலகைத் தங்களது வாழ்வியல் உலகோடு பொருத்திப்பார்த்துச் சுயவிசாரணை செய்து கொள்வதும் புனைகதைகளின் முக்கியச் சவாலாகவே எப்போதுமிருக்கிறது.

இது போலவே கதை என்பது மறதிக்கும் நினைவிற்கும் இடையில் ஏற்படும் யுத்தம் என்று மிலன் குந்தேரா கூறுகிறார். இவர் செக் நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர். மறதி என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட ஒன்றில்லை. காலம் நிறைய விசயங்களை உலகிலிருந்து மறைந்து போகச் செய்கிறது. அதனால் மக்கள் கடந்தகாலத்தைப் பெரும்பாலும் மறந்துவிடுகிறார்கள். ஆகவே மறதிக்கு எதிராக எழுத்து நினைவுபடுத்துவதைத் தனது பிரதான வேலையாகச் செய்கிறது. நினைவுபடுத்துதல் என்பது ஒரு முனைப்பான செயல், அது அதிகாரத்திற்கு எதிரான போராட்டம். வரலாறு நிறைய விசயங்களை இருட்டடிப்பு செய்து மறக்க வைத்திருக்கிறது. அதை இன்றைய எழுத்தாளன் அடையாளம் கண்டு நினைவுபடுத்துகிறான். புதிய வெளிச்சமிட்டுக் காட்டுகிறான்.

சமூகம் தனது நினைவுகளாக அதிகாரத்தில் இருந்தவர்களை மட்டுமே அடையாளம் காட்டுகின்றது. அதற்கு மாறாகப் புனைவு இலக்கியங்கள் எளிய மக்களின் நினைவுகளை, வரலாற்றை, சமூகக் காரணங்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வனுபவங்களை முன்வைக்கிறது. ஆகவே நினைவுபடுத்துதல் என்பதை ஓர் அரசியல் செயல்பாடு போலவே இன்றைய புனைவிலக்கியங்கள் முன்வைக்கின்றன .

அதே நேரம் மறதி என்பது திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே, நினைவுபடுத்தப்படல் என்பது வெறும் ஏக்கத்தாலோ, இழந்ததை நினைத்து வெறும்வாயை மெல்லும் நிலையாகவோ கருதப்படுவதில்லை. மாறாக அதன் வழியே சமூகம் தன்னைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவுமே சுட்டிக் காட்டப்படுகிறது.

மனிதர்கள் தங்கள் நினைவிற்கும் அன்றாட உலகிற்கும் இடையில் ஒவ்வொரு நிமிசமும் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறார்கள். அது தான் இன்றைய காலத்தின் முக்கியப் பிரச்சினை என்கிறார் வர்ஜீனியா வுல்ப். அதைத் தான் குந்தேரா சொல்வதும் ஒத்திருக்கிறது.

கதை என்பதை ஒரு விந்தை என்கிறார் போர்ஹே. விந்தை என்றதற்குக் காரணம் அது எவ்வளவு முறை சொல்லப்பட்ட போதும் வசீகரமாகவே இருக்கிறது என்பதால். ஜோர்ஜ் லூயி போர்ஹே அர்ஜென்டினாவின் மிக முக்கிய எழுத்தாளர். பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் நூலகம் என்று சொன்னவர் போர்ஹே. ஆகவே அவர் கதைகளைப் பற்றி அவதானித்துச் சொன்ன வாக்கியம் மிக முக்கியமானது. கதைகள் தமது விந்தையை எப்படி உருவாக்குகின்றன. கதை தனக்குள் வைத்துள்ள மாயத்தாலும், தினசரி வாழ்விற்குள் நாம் கண்டுகொள்ளாமல் போன எத்தனையோ அதிசயங்கள் ஒளிந்திருப்பதை அடையாளம் காட்டுவதாலும், வரலாற்றை ஒரு பெரும்புனைவாகக் கருதி உருமாற்றுவதாலும் விந்தைகள் ஏற்படுவதாகச் சொல்கிறார்.

இன்றைய புனைவிலக்கியத்தில் இந்தப் போக்கின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அவர்கள் புனைவின் வழியே நமது சமகால நிகழ்வுகளை விந்தையான ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இலத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் இதற்கான உதாரணங்கள். இதன் பாதிப்பு சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளிலும் காணமுடிகிறது. இந்த வகைக் கதைப்போக்கில் கதை என்பது நம் தினசரி வாழ்விலிருந்து உருவாகும் ஒரு விந்தை நிலை. ஆகவே அற்புதங்கள், மாயங்கள் தொன்மம், தொல்சடங்குகள், நம்பிக்கைகள் என்று கதை விசித்திரமான உலகமாகக் கட்டமைக்கப்படுகிறது.

இந்த மரபில் கதை என்பதைக் கனவிற்கும் நனவிற்குமான ஊசலாட்டம் எனலாம். எப்படி ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கதைகள் என்பதை விழித்தபடியே காணும் கனவு என்று சொல்கிறார்களோ அதற்கு நிகரானது இந்த வகை எழுத்து.

கதை என்பது உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு விசாரணை என்கிறார் குந்தர்கிராஸ். இவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். ஜெர்மனியின் முக்கிய எழுத்தாளரான இவர் கதை என்பதை உண்மையை அறியும் கலை என்றே வகைப்படுத்துகிறார். அதாவது உண்மை பன்முகங்கள் கொண்டது. அதை அதிகாரமும் அரசும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அதனால் உண்மையின் நிறம் மாறிவிடுகிறது. புனைவிலக் கியங்களே உண்மையை அதன் தீவிரத்தோடு வெளிப் படுத்துகின்றன என்கிறார்,

இந்த வகைக் கதை எழுத்தில் உண்மையை அறிவதும், அதை வெளிப்படுத்துவம் எழுத்தாளனின் முக்கியப்பணி. ஆகவே உண்மை குறித்த தேடுதலும் சிந்தனையும் அக்கறையும் கொண்டவனே எழுத்தாளன் எனக் கருதப்படுகிறான். இன்று இந்தியா முழுவதும் தீவிரமாக உருவாகி வரும் அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சார்ந்த எழுத்துகளும் பெண்ணிய, தலித்திய எழுத்துகளும் இந்த வகையில் தான் உருவாகின்றன. அவை

வெளிப்படுத்தும் உண்மைகள் பல நேரங்களில் நம்மைக் கலங்கச் செய்கின்றன.

கதை என்பது வாழ்வை அதற்குத் தெரியாமல் படம்பிடிப்பது என்கிறார் அமெரிக்க எழுத்தாளரான சால் பெல்லோ. வாழ்க்கையின் சிக்கல்கள், நெருக்கடிகள், தவிப்புகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் மனிதர்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்கே புனைகதைகள் எழுதப்படுகின்றன. வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ள வைப்பதற்கும், வாழ்வின் நெருக்கடிகளின் போது தகர்ந்துபோய்விடும் நம்பிக்கைகளுக்கு மாற்றாகவும் கதைகளே முன்நிற்கின்றன. ஆகவே கதைகள் என்பது மனித வாழ்வினை மேம்படுத்தும் வழிகாட்டி என்கிறார் சால் பெல்லோ. எழுத்தாளன் வாழ்வை நுண்மையாக அணுகிப் பதிவு செய்கிறான். அதனால் அந்த அனுபவம் வாசிப்பவனுக்குச் சொந்த அனுபவம் போல மாற்றப்பட்டுவிடுகிறது. ஆகவே கதை என்பதற்குத் தனியான கருப்பொருள் எதுவும் தேவையில்லை. நமது அன்றாட உலகத்தின் அத்தனை விசயங்களையும் எழுதிவிட முடியும் என்கிறார். இந்தவகைப் போக்கினையும் இன்றைய தமிழ்ப் புனைகதைகளில் காணமுடிகிறது.

பொதுவில் நமது கதைமரபில் ஒரு கதையிலிருந்து மற்றொரு கதைக்கு நீண்டு செல்லும் முறையே காணப்படுகிறது. ஒற்றைக் கதாநாயக மையம் கொண்ட கதைகள் அதிகமில்லை. கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எளிய மனிதர்கள், திருடர்கள் முட்டாள்கள், வழிப்போக்கர்கள், வணிகர்கள் என்று யதார்த்த உலகமே கதைகளின் முக்கிய அம்சமாக இருந்தது. மாயத்தையும் நடப்பு உலகையும் ஒன்றுசேர்த்தே கதைகள் பின்னப்பட்டன. இந்தக் கதை மரபை மீட்டு எடுத்து நவீன வாழ்வின் புதிர்மைகளோடு அதை ஒன்றிணைக்க இன்று தமிழ்ப் புனைகதைகளுக்கு மிகுந்த எத்தனிப்பு தேவைப்படுகிறது. அந்த முயற்சியில் தான் இன்றைய புனைகதை எழுத்து தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

புனைகதைகள் கடந்த நூறு வருசங்களுக்குள் நிறைய மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றன. இந்த மாற்றங்கள் நான்கு முக்கியத் தளங்களில் நடைபெற்றிருக்கின்றன. அவையாவன: 1) கதை சொல்லும் முறை 2) கதைக்களம் 3) கருப்பொருள் 4) மொழி மற்றும் கதையின் வடிவம் போன்றவையாகும்.

புதுமைப்பித்தனிடம் இருந்துதான் நமது தமிழ் மரபிலிருந்து உருவான கதை சொல்லும் முறைகள் நவீனச் சிறுகதைகளாக உருவமாறும் விந்தை துவங்குகிறது. கதை சொல்பவன் யார். அவன் யாருடைய கதையைச் சொல்கிறான். எங்கிருந்து துவங்குகிறான். எங்கே கதை முடிகிறது. யார் வழியாகக் கதை சொல்லப்படுகிறது என்பது கதை சொல்லுதலில் மிக முக்கியமானது. இதில் ஒவ்வொரு சிறுகதை ஆசிரியனும் தனக்கான ஒரு முறையை உருவாக்கிக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார்கள். வெற்றியடைந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஜானகிராமன் கதை சொல்லும் முறை, கி. ராஜநாராயணன் கதை சொல்லும் முறை, ஜீ. நாகராஜனின் கதை சொல்லும் முறை, வண்ணநிலவன் கதை சொல்லும் முறை என்று தனித்துவமான கதை சொல்லும் முறைகள் தமிழில் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு கதை சொல்லும் முறையிலும் மொழியைப் பயன்படுத்தும் விதமும் கதாபாத்திரங்களின் சித்திரிப்பும் மாறுபட்டு உருவாவதைத் தேர்ந்த வாசகன் நன்றாகவே உணர முடியும்.

இதில் எந்த முறை கதை சொல்லுதலில் உயர்ந்தது என்று எதையும் தனித்துக் காட்ட முடியாது. ஆனால் கதை சொல்லுதலில் எழுத்தாளன் அரூபமாகிச் சொல்வதை அதிக வாசகர்கள் இரசிக்கிறார்கள். நேரடியாக எழுத்தாளன் கதைக்குள் வந்து தனது குரலில் பேசி விவாதம் செய்வதை அதிகம் இரசிப்பதில்லை. அது ஒரு சில கதைகளில் மட்டுமே வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பதே கடந்த காலம் காட்டும் உண்மை .

அடுத்தது கதைக்களம். பொதுவாகத் தமிழ்க்கதைகள் தமிழ்நாட்டின் நிலவியலுக்கு வெளியில் நடைபெறும் நிகழ்வுகள் சார்ந்து அதிகம் எழுதப்படுவதில்லை . கிராமம் நகரம் என்று எதுவாகயிருந்தாலும் கதையின் களம் தமிழக எல்லையே. இது சமீபமாகவே கலைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எழுதும் கதைகளின் வழியாகவும், பிழைப்பிற்காகப் பல்வேறுநாடுகளுக்குச் சென்ற மக்களின் முயற்சியாலும், ஒரே உலகமாக இன்று சுருங்கிக் கொண்டு வரும் புறச்சூழல் காரணமாகவும் கதைக்களம் என்பது இன்று உலகின் எந்த இடமாகவும் இருக்கச் சாத்தியமிருக்கிறது. கதைக்களம் என்பது கதைகளில் நம்பகத்தன்மையை உருவாக்கக் கூடிய முக்கிய அம்சம். ஆகவே கதைக்களம் மாறுபடும்போது அனுபவம் உருமாறுகிறது. நேரடியான இந்த உலகியல் தளங்களைப் போலவே புனைவால் உருவான கதைத்தளங்களும் இன்று சிறுகதைகளில் காணப்படுகின்றன.

கதையின் கருவாகச் சுய அனுபவங்களே அதிகம் முன்வைக்கப்படுகின்றன. சிலவேளைகளில் இது ஒருவன் தான் கண்டறிந்த, கேட்டறிந்த அனுபவமாகக் கூட இருக்கக்கூடும். அனுபவத்தை முன்வைப்பதே கதை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் அனுபவம் என்பது பல உண்மைகளின் தொகுப்பு. ஓர் அனுபவத்தில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதை வைத்தே அது உங்களை எவ்வளவு பாதிக்கிறது. எப்படி அதை அணுகுகிறீர்கள் என்று சொல்ல முடியும்.

உதாரணத்திற்கு, திருட்டுக் கொடுத்த ஒரு வீட்டினைச் சார்ந்தவன் ஒரு மனநிலையிலும், திருடன் ஒரு மனநிலையிலும், அதை வேடிக்கை பார்ப்பவர்கள் மற்றொரு நிலையிலும், விசாரணைக்கு வரும் காவலர்களுக்கு அது வேறு அனுபவமாகவும் இருக்கின்றன. ஆகவே அனுபவம் என்பதைப் பொதுமைப்படுத்த முடியாது. அனுபவத்தின் எந்தப் பக்கத்தை நாம் கவனிக்கிறோம் என்பதையே கதைகள் முதன்மைப் படுத்துகின்றன. முந்தைய கதைகள் அனுபவத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே முன்வைத்தன. இன்றுள்ள கதைகளோ அனுபவத்தின் பல்வேறு சாத்தியப்பாடுகளைப் பேசுகின்றன. இதுவரை கவனம் கொள்ளாமல் போன பகுதிகளை அடையாளம் காட்டுகின்றன.

ஆகவே வாழ்க்கையைப் புரிந்து கொள்ளப் புனைவைப் பயன்படுத்துவது அல்லது வாழ்வின் புதிர்மையைப் புனைவின் வழியாக அவிழ்ப்பது என்று கதைகள் வாழ்வின் மீதான ஒரு முடிவற்ற விசாரணையைப் போல அமைகின்றன.

சிறுகதையின் நடை எனப்படும் மொழியும் மாறியிருக்கிறது. எளிய பேச்சுமொழியில் துவங்கிய கவித்துவமான உருவக மொழிவரை பல்வேறு விதமான மொழிநுட்பம் கதைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தீர்மானம் செய்வது எழுத்தாளரும் அவர் எடுத்துக் கொண்ட விசயமும் மட்டுமே. இந்திய மொழிகளில் வேறு எதிலும் இவ்வளவு மாறுபட்ட கதை மொழிகள் இருப்பதாக நான் அறியவில்லை. கவிதைக்கு மிக நெருக்கமாகச் சிறுகதைகள் தமிழில் தான் காணப்படுகின்றன. அது போலவே பின் நவீனத்துவச் சிந்தனைகள் போன்ற கோட்பாடுகளின் வருகையும் சிந்தனைப் பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் கதையின் வடிவத்தைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. இன்றைய சிறுகதை ஒரு துவக்கம் நடுப்பகுதி முடிவு என்ற மூன்று அடுக்குக் கட்டுமானத்திலிருந்து உருமாறிச் சிதறடிக்கப்பட்ட ஒன்றாக எழுதப்படுகிறது. ஆகவே இன்றைய சிறுகதையின் வடிவம் முந்தைய கதைகளில் இருந்து நிறைய வேறுபட்டிருக்கிறது.

புனைகதைகள் முக்கியமாகக் கவனிக்கவேண்டியதாக நான் நினைப்பது அவை என்ன கதையைச் சொல்கின்றன. அதை எப்படி வெளிப்படுத்துகின்றன. அதில் எவ்வளவு சாத்தியங்கள், பன்முகத்தளங்கள் இருக்கின்றன, பல்குரல்தன்மை உள்ளதா? உண்மையை அது எப்படி எதிர்கொள்கிறது? வெளிப்படுத்துகிறது? புனைவின் மூலம் அது எதை உருவாக்குகிறது? எதைக் கண்டுகொள்ளாமல் போகிறது என்பதையே. ஆகவே எழுத்தின் வரையறை என்பதை ஓர் இலக்கண வரம்பாகக் கொள்ளாமல் எழுத்திற்கான ஆதாரத் தேடுதல் என்று உருமாற்றிக் கொண்டால் நாம் புனைகதைகள் உருவாக்கத்தில் நிறையச் சாதிக்க முடியும். அது தான் உலகெங்கும் நடந்தேறியிருக்கிறது.

– படைப்பு நெறிமுறைகள், முதற் பதிப்பு: 2010, பதிப்பாசிரியர்:முனைவர் கரு.அழ.குணசேகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *