சிறுகதை, இலக்கியத்தின் இளையது, கடைக்குட்டி – நீர்வை பொன்னையன்

 

சிறுகதை, இலக்கியத்தின் இளையது, கடைக்குட்டி. கடைக்குட்டி எப்பொழுதும் காரமானதாகவும் வீச்சானதாகவும் இருக்கும். 

எழுத்து இலக்கியத்தில் முதன்முதலாக ஜனித்தது கவிதை. மனிதன் தனது உள்ளுணர்வுகளை கவிதை மூலந்தான் வெளிப்படுத்தினான். இக்கால கட்டத்தில் பழம்பெரும் காப்பியங்கள் புனையப்பட்டன. ஹோமரின் ‘இலியட்’, ‘ஒடிசி’, மில்ரனின் ‘இழந்த சொர்க்கம்’, ‘மீண்ட சொர்க்கம்’ போன்றவை படைக்கப்பட்டன. தமிழில் உன்னத காப்பியங்களான கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை தோன்றின. இப்படைப்புக்கள் ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக எழுதப்பட்டன. இச் சகாப்தத்தில் மனிதருக்குப் போதிய கால அவகாசம் இருந்தது. எனவே இப்படைப்புக்களை அவர்கள் நீண்டநேரத்தைச் செலவழித்துச் சுவைத்தார்கள். 

கவிதையை அடுத்து நாவல் இலக்கியம் தோன்றியது. இக்காலகட்டம், ‘மறுமலர்ச்சிக் காலம்’ என்று அழைக்கப்பட்டது. இச் சகாப்தத்தில் விக்ரர் ஹியூகோ, எமிலி ஜோலோ, சார்ல்ஸ் டிக்கின்ஸ், தோமஸ் ஹாடி, றொமெயின் றோலன்ட் முதலிய பிரபல நாவலாசிரியர்கள் உன்னத படைப்புக்களைப் புனைந்தார்கள். இப்படைப்புக்களும் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டவையாக இருந்தன. 

மறுமலர்ச்சிச் சகாப்தத்தைத் தொடர்ந்து கைத்தொழிற் புரட்சிக் காலம் தோன்றியது. இக்கால கட்டத்தில் மக்கள் இயந்திர வேகத்தில் உழைக்க வேண்டிய அவசியமிருந்தது. எனவே குறுகிய நேரத்தில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்கால கட்டத்திலேயே சிறுகதை இலக்கியம் தோன்றி வளர்ந்தது. 

கதைகளில் பலவிதம். நாட்டார் கதைகள், பாட்டிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், திகிலூட்டும் கதைகள், தேவதைக் கதைகள், தென்னாலிராமன், முல்லா, ஈசாப்பு போன்றவர்களின் விகடக் கதைகள் முதலிய பலவகைக் கதைகளுண்டு. ஆனால் இவை அனைத்தையும் விட உருவத்திலும், உள்ளடக்கத்திலும் முற்றிலும் வேறுபட்டதாகவே சிறுகதையின் வடிவம் அமைந்துள்ளது. இவ்வடிவம் முதலில் ஐரோப்பாவில்தான் தோன்றியது. பின்னர் தமிழுக்கு வந்து சேர்ந்தது. இந்தவகையில் தமிழ்ச் சிறுகதையின் தந்தையாக தமிழ் நாட்டைச் சேர்ந்த புதுமைப்பித்தன் உருவாகிறார். 

சிறுகதை என்பது எதுவித நீதியையோ, தர்மத்தையோ போதிப்பதில்லை. அது நாவலைப் போல ஒரு மனிதனின் காலகட்டத்தையோ, சகாப்தத்தையோ உள்ளடக்குவதில்லை. சிறுகதை என்பது, ஒரு சிறு சம்பவத்தை அல்லது செயலைக் கூறுவதாகவும், குறுகிய நேரத்துக்குள் நடந்து முடிந்ததாகவும் அமைந்திருத்தல் வேண்டும். 

சிறுகதையைப் பொறுத்தவரை, கதையின் கரு, உரு, கதையை நகர்த்திச் செல்லும் உத்தி, பாத்திர வார்ப்பு, கதையின் ஆரம்பமும் முடிவும், களம், காலம் ஆகியவற்றில் போதிய கவனம் வெலுத்த வேண்டும். இவை ஒன்றிணைகையிலேயே ஒரு சிறந்த படைப்பு உருவாகும். 

சிறுகதை என்றால் என்ன? அதற்கு ஒரு குறிப்பிட்ட வரைவிலக்கணம் கிடையாது. ஆனால் சில எழுத்தாளர்கள் தமக்கேயுரிய பாணியில் சிறுகதை பற்றிக் கூறுகின்றார்கள். 

சிறுகதைக்குத் தொடக்கமோ முடிவோ இருத்தல் கூடாது, அது வாழ்வின் ஒரு பகுதி அல்லது துண்டாக அமைய வேண்டும் என்று அன்ரன் செக்கோவ் கூறுகிறார். 

சிறுகதை முடிவிலியானதாகவும் பத்துப் பதினைந்து நிமிடங்களில் உரத்து வாசித்து முடிக்கக் கூடியதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்கிறார் எம்.ஈ. பாற்ஸ் (BATS). 

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் மனித மனம் படும்பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறையைக் குறிப்பதுவே சிறுகதை என்கின்றார் பேராசிரியர் கா. சிவத்தம்பி. 

சிறுகதை ஒரு குதிரைப் பந்தயம். தொடக்கமும் முடிவுமே மிக முக்கியம் என்கின்றார், எறிக் செச்விக் என்பவர். 

எட்கார் அலன்போவும், ஹர்தோனும் சொல்திறத்தையும், வினைப் பயனையும் வலியுறுத்துகின்றனர். 

சிறந்ததோர் சிறுகதையில் ஓர் உணர்வு அல்லது உணர்வுகள், தொடர் என்பன குறித்ததோர் சுற்றுச்சார்பு நிலையில் கூறப்பட வேண்டும். வாழ்வின் உச்ச நிலைகளை மிகச்சிறந்த எல்லைக்குள் செறிவாக்கி வழங்கல் அவசியம். 

சிறந்த சிறுகதையில் ஒரு பாத்திரத்தின் பரிமாணத்தை அல்லது முப்பரிமாணத்தை அல்லது அதன் வளர்ச்சியைக் காணமுடியாது. பாத்திரத்தைச் சந்திப்பது மிகச்சில நிமிடங்களே. அத்துடன் அதன் உறவுநிலை, தொடர்பு, சுற்றுச் சூழல், பின்புலம் என்பன வரம்புக்கு உட்பட்டனவாகவே அமையும். 

பாத்திரங்களின் எண்ணிக்கை, கதையின் அளவு என்பன மாறுபட்டாலும் சம்பவம் ஒன்றாகத்தானிருக்க வேண்டும். நிகழுமிடமும் காலநேரமும் ஒரு வரையறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு எம். ஸ்டேன்லி என்ற ஆங்கில எழுத்தாளர், உலகின் அதிநவீனச் சிறுகதை ஒன்றைப் புனைந்துள்ளார். ‘கரடி வேஷம் போட்டவன் வாழ்வில் ஒருநாள்’ என்பது அதன் தலைப்பு. ‘என்னைச் சுடாதே’ என்ற இரண்டே இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டது இச்சிறுகதை. 

றிச்சாட் பிராட்டிங்கன் என்ற ஆங்கில சிறுகதை ஆசிரியன் ‘கொடுமை’ என்ற மகுடத்தில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கதை இது. “வயலின் கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடன் சான் ஜோஸ் நகரிலுள்ள ஓர் அறையில் வாழ்வது என்பது மிகக் கடினம் என்று குண்டுகள் பயன்படுத்திய பிறகான துப்பாக்கியை பொலீசிடம் ஒப்படைத்த அவன் சொன்னான். 

அகஸ்டோ மான்டிலோ என்ற சிறுகதை ஆசிரியர் ஸ்பானிஷ் மொழியில் உலகத்து அதிநவீன சிறுகதையைப் புனைந்துள்ளார் அத்தலைப்பு ‘டைனோசர்’. கதை ‘அவன் விழித்தெழுந்த போது அந்த டைனோசர் இன்னமும் அங்கே இருந்தது’. ஒன்றரை வரிகளை மாத்திரம் தான் இந்தக் கதை கொண்டுள்ளது. 

புதுமைப்பித்தன் என்ற தமிழ் சிறுகதை மன்னன் இருபத்தாறு பக்கங்களைக் கொண்ட துன்பக்கேணி, மூன்று பக்கங்களைக் கொண்ட ‘பொன்னகரம்’, இரண்டரைப் பக்கங்களைக் கொண்ட ‘கட்டில் பேசுகிறது’ என்று பல்வேறு அளவுகளிலான உன்னதமான தமிழ் சிறுகதைகளைச் சிருஷ்டித்துள்ளார். சிறுகதையின் பாத்திரங்கள் ஒன்றாகவோ, இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்கலாம். ஆனால் பிரதானமானதாக ஒரு பாத்திரம் மட்டும் இருப்பதே நன்று. ஏனைய துணைப் பாத்திரங்களும் உயிர்த்துடிப்புடன் இருக்க வேண்டும். 

சிறுகதையை வீச்சாக நகர்த்திச் செல்வதற்கு மொழிவளம் அவசியம். புதுமைப்பித்தனுடைய நடையை ‘தவளைப் பாய்ச்சல் நடை’ என்பார்கள். கதையுடன் வாசகனை இழுத்துச் செல்லும் ஆற்றல், கதை முடிவில் வாசகனைச் சிந்திக்கத் தூண்டும் தன்மை என்பன நல்ல சிறுகதையின் இயல்புகள். கதையின் முடிவு வேறு ஒரு கதையின் தொடக்கமாக இருப்பதும் நல்ல சிறுகதையின் அம்சம். 

சிறுகதை ஆசிரியனுக்கு ஆழமான, தொடர்ச்சியான வாசிப்பு அவசியம். அத்துடன் அவனுக்கு இடைவிடாத தேடலும் இருக்க வேண்டும். பரந்த அனுபவமும் அவசியம். அந்த அனுபவ அருட்டலில் நல்ல உயிர்த்துடிப்புள்ள படைப்பு ஜனிக்கிறது. 

‘எனக்கு எழுதுவதில் எதுவித சிரமமும் இல்லை. ஏனென்றால் நான் எனக்குத் தெரியாதன பற்றி எழுதுவதில்லை. தெரிந்தவற்றைத்தான் நான் எழுதுகிறேன்’ என்று மார்க்சிம் கார்க்கி கூறுகின்றார். எனவே, ஒவ்வொரு எழுத்தாளனும் தனது அனுபவங்களின் உந்துதலால் எழுதினால் அவை சிறந்த படைப்புகளாக, ஜீவத் துடிப்புள்ளவையாக அமையும், நிலைத்து நிற்கும். 

ஈழத்தில் நவீன எழுத்தாளரில் பெண் படைப்பாளிகள் குறைவு. மூத்த தலைமுறை எழுத்தாளர்களாக, குறமகள், பவானி ஆழ்வாப்பிள்ளை, சசிதேவி ஆள்வாப்பிள்ளை, அன்னலட்சுமி இராசதுரை ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் சிலர் ஒரு சிறுகதைத் தொகுதியுடன் தமது படைப்பாற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களாக தாமரைச் செல்வி, மண்டூர் அசோகா, பவானி சிவகுமாரன், பவானி முகுந்தன், ஒளவை, மதுபாஷினி, அனார், பத்மா சோமகாந்தன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், கெக்கிராவ சஹானா போன்றோர் எழுதி வருகிறார்கள். மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த தாட்சாயணி, சாரங்கா, சந்திரகாந்தா முருகானந்தன், மாதுமை சிவசுப்பிரமணியம், பிரமீளா செல்வராசா, வெலிகம ரிம்ஸா முஹம்மத், கார்த்திகாயினி சுபேஸ், வசந்தி தயாபரன் போன்றோர் தரமான ஆக்கங்களை எழுதி வருகின்றனர். அவர்களுடன் தியத்தலாவ. எச்.எஃப். ரிஸ்னாவும் இணைகிறார். 

முஸ்லீம் பெண் படைப்பாளிகளில் பலர், ஒருசில சிறுகதைகள் அல்லது கவிதைத் தொகுதிகளுடன் படைப்புத் துறையிலிருந்து காணாமல் போய்விடுகின்றனர். குறிப்பாக, இவர்களில் பெரும்பான்மையானோர் தமது திருமணத்திற்குப்பின் படைப்புலகிலிருந்து மறைந்துவிடுகின்றமை துரதிஷ்டமாகும். தியத்தலாவ ரிஸ்னா, இந்த வரிசையிலிருந்து தப்பிப் பிழைத்துவிடுவார் என நம்புகிறோம். 

இயற்கை வளமும், வனப்பும் அலைபாயும் தியத்தலாவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ரிஸ்னா. பச்சைப்பசேலென்ற தேயிலைச் செடிகள் அடர்ந்த குன்றுகள், வானத்தைத் தாங்கி நிற்கின்ற மலைத்தொடர்கள், சலசலத்து ஓடுகின்ற குளிர்ந்த நீரோடைகளும் அருவிகளும், ரிஸ்னாவின் கற்பனைத் திறனுக்குக் கைகொடுக்கும் இயற்கை அன்னை. மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும் மலையகத் தோட்டத்தொழிலாளர்கள், அவர் தம் உழைப்பை உறிஞ்சும் முதலாளித்துவப் பெருச்சாளிகள், ஒரு சில பணக்கார முஸ்லீம்களும், ஏழை முஸ்லீம்களும் எனப் பலரை உள்ளடக்கிய தியத்தலாவைப் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர், செல்வி எச்.எஃப். ரிஸ்னா. இவரது படைப்புலகிற்கு செழுமையான அனுபவத்தைப் பெறக்கூடிய பின்புலத்தில் வாழ்கின்றார். இந்தக்களத்தில் நின்று தான் இவர் தமது கவிதைகளையும், சிறுகதைகளையும் புனைந்துள்ளார். 

செல்வி ரிஸ்னாவின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கற்பனா உலகிலிருந்து ஆக்கப்பட்டவை. ஒரு பகுதி ஆக்கங்கள், அவரது அனுபவங்களின் அருட்டலால் புனையப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமானவை. இச்சிறுகதைகள் வாசகர்கள் இலகுவாகப் படித்து இரசிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் அநேகமானவை கற்பனாரசக் கதைகள். செல்வி ரிஸ்னா தனது கதைகளை இலாவகமாக நகர்த்திச் செல்கின்றார். இதற்கு அவரது மொழிவளம் துணைபுரிகின்றது. இவரது பாத்திரப் படைப்பு இயல்பாக உள்ளது. பாத்திரங்கள் கதைசொல்லல், ஆசிரியர் கதைகூறல், பின்னோக்கிக் கதைநகர்த்தல் போன்ற உத்திகளைக் கையாண்டு கதைகூறுகிறார். 

செல்வி ரிஸ்னாவின் ‘வைகறை’ என்ற இந்தத் தொகுப்பில் காதல்கதைகளும், முஸ்லீம் சமூகம் சார்ந்த கதைகளும், மலையகம் சார்ந்த சில கதைகளும் அடங்கியுள்ளன. மலையகத்தின் முதுகெலும்பாகத் திகழும் தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலை சார்ந்த ஒருசில கதைகளாவது இத்தொகுதியில் உள்ளடக்கப்படாதது ஏனோ? மலையகப் பிரதேச மொழிநடை ஆசிரியரால் தவிர்க்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேச வாசகர்களும் இக்கதைகளை இலகுவாகப் படித்து இரசிக்கட்டும் என்ற நோக்கத்திலா? 

இத்தொகுதியிலுள்ள முதல்கதை அழகன். இரண்டே இரண்டு பக்கங்களை மாத்திரமே இக்கதை கொண்டுள்ளது. சிறுகதைக்குரிய கட்டமைப்பைக் கொண்டதாக, தொடக்கமும் முடிவும் ஒரு நல்ல சிறுகதைக்கேற்றபடி அமைந்துள்ளன. மூன்று பாத்திரங்களைக் கொண்ட இக்கதையில் சிறுவன் ஒருவனே கதாநாயகன். இப்பாத்திரப் படைப்பு அற்புதமானது. செல்வி ரிஸ்னா எதிர்காலத்தில் சிறந்ததொரு சிறுகதைப் படைப்பாளியாக வளர்ந்து வருவார் எனக் கட்டியங் கூறுவது, இக்கதை. 

உறவுகள், தவிப்பு, தொலைந்த கவிதை, சிட்டுக்குருவி, ஓயாத நினைவலைகள் ஆகிய கதைகள் மனதைத் தொடும் ஆக்கங்களாக உள்ளன. 

ஆசிரியரிடம் மொழிவளம், கதையை இலாவகமாக நகர்த்தும் ஆற்றல், பாத்திரப் படைப்பு போன்ற சிறுகதைக்குரிய பண்புகளுண்டு. இவற்றை இன்னும் செழுமைப்படுத்தி, ஒரு சிறந்த சிறுகதைப் படைப்பாளியாக வளர்வதற்கு ஏற்ற சிரத்தையை மேற்கொள்வார் ரிஸ்னா என எதிர்பார்க்கிறோம்!!! 

– நீர்வை பொன்னையன், வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்