சிறுகதையாற்றுப்படை – வைரமுத்து

 

வைரமுத்து

நம் மனவெளிகள் விரிவானால் தமிழ் என்ற குறுவட்டம் தாண்டி எல்லா மொழிகளின் மீதும் தமிழ் இலக்கியம் பாயும்

கதைசொல்லல் என்பது உலகின் எல்லா இனக்குழுக் களுக்குமான பொதுப் பண்புதான். ஆனால் படைப்பாளுமையால் கட்டமைக்கப்பட்ட சிறுகதை என்பது அமெரிக்க ஐரோப்பிய மேதைகளால் உலக மொழிகளுக்குப் பரவிய ஒரு கலைவடிவம். அது மொழிவழி வந்த பெருங்கலைகளின் அடியாகப் பிறந்த ஒரு நுண்கலை.

ஆயின் கலை என்பது யாது?

மனம் என்னும் நுண்பொருளை ஓர் ஊடகத்தின் வழியே மலர்த்துகின்ற உத்தியா?

இயற்கை பூட்டி வைத்திருக்கும் அல்லது மனிதன் மறைத்துவைத்திருக்கும் ஜீவ ரகசியங்களை அவிழ்த்துக் காட்டும் அற்புதமா?

தன் உடலைத் திருப்தி செய்வதிலேயே வாழ்வு கழிக்கும் மனிதக் கூட்டத்துக்கு உடலுக்கு வெளியே உள்ள உலகத்தின் வலியையும் வலிமையையும் எடுத்துச் சொல்லும் ஏற்பாடா?

எப்போதும் வெளிப்பயணம் செய்துகொண்டிருக்கும் புலன்களை உள்முகப் பயணத்துக்கு ஆற்றுப்படுத்தும் மடைமாற்றமா?

பெளதிகரீதியாய் எல்லாமுமாக இயங்க முடியாத மனிதனை உளவியல்ரீதியாக எல்லா உலகங்களிலும் இயங்க வைக்கும் ரகசிய ரசவாதமா?

கலை என்பதை இவற்றுள் ஏதேனும் ஒன்று என்று சொல்லலாம்; இவை எல்லாமென்றும் கொள்ளலாம். இக்கூறுகளைத் தாண்டிய ஒரு மேலான காரணமும் கலையாகலாம்.

இந்தச் சிறுகதைக் கலையின் தோற்றம் குறித்துத் தெலுங்கு மொழியின் மகாகவி ஸ்ரீஸ்ரீ சொன்னது மனம் கொள்ளத்தக்கது. “சிறுகதை என்பது நவீன இலக்கிய வடிவம். எட்கர் ஆலன்போ தொடங்கி ஆற்றல்மிக்க மேதைகளால் உருவம் தந்து செழுமைப்படுத்தப்பட்டது”

இன்று சிறுகதை என்பது எல்லாக் கோட்பாடுகளின் கோடுகளையும் திமிறிக் கிழித்து வெளியேறிவிட்டது என்ற போதிலும் எட்கர் ஆலன் போ வகுத்த சிறுகதை இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகள் முற்றிலும் அழிந்தொழியவில்லை.

முப்பது நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரத்துக்குள் வாசித்து முடிக்கத் தக்கது. தன்னளவில் முழுமையுற்றது. அகத்தே புறத்தே எவ்வித இடையூறுமின்றி வாசகனின் புலன் முழுவதையும் கதாசிரியன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. இதுதான் உலகச் சிறுகதையின் பிதாமகன் எட்கர் ஆலன் போ கூட்டுவித்த சிறுகதை இலக்கணம். ஆலன்போவை அடியொற்றிய பிராண்டர் மாத்யூஸ் அதில் இன்னும் சில நுட்பம் நுழைக்கிறார். ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கை அல்லது ஒரு தனிச்சம்பவம் ஒரு தனி உணர்ச்சியின் விளைவு என்று சிறுகதையின் பக்கச் சிம்புகளையும் பார்க்கிறார் பிராண்டர் மாத்யூஸ். மேற்சொன்ன இலக்கண அடிப்படையில் ஒரு சிறுகதை கட்டியெழுப்பப்படுவது புனைவின் மீதா? உண்மையின் மீதா?

“பொருள்மர பில்லாப் பொய்மொழி யானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்” (தொல்காப்பியம் : செய்யுளியல் – நூற்பா 475)

என்ற தொல்காப்பியரின் பழங்கூற்றினைப்போல் உண்மையில்லாத புனைகதை உண்மையின் மீது இயங்கும் கற்பனை என்ற இரு நிலைகளிலும் சிறுகதை நிகழவே நிகழ்கிறது.

ஆனால், எனது எழுதுகோளின்படி சத்தியம் தேடுவதே கதையின் பெருவேட்கையாக இருக்க வேண்டும். புனைவுகூடச் சத்தியம் தன் பயணத்துக்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒரு வாகனம்தான். மெய்யடியாகக் கட்டப்பட்ட புனைவுதான் மானுடக் கதை வரலாற்றின் ஆதிச்சுடரை அணையாமல் காக்கிறது.

கவிதைகளிலும் – பாடல்களிலும் – நாவல்களிலும் கரைந்து கிடந்த நான் என் அறுபத்தோராவது வயதில்தான் சிறுகதை என்ற வடிவத்தைக் கையிலெடுத்தேன். ‘புதுமைப்பித்தன் இறந்த ஆண்டில்தான் சிறுகதை எழுத வந்தேன்’என்ற ஜெயகாந்தன் வாக்குமூலத்தைப் போல ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன். எவரையும் பின்பற்றாத, எவரும் பின்பற்றத் துணியாத ஒரு பிரத்யேக மொழியை என் சிறுகதைகளுக்கு நான் சிற்பித்துக்கொண்டேன். கவிதைக் கலையின் சிறுகூறுகளை இடம் பொருள் பார்த்து என் உரைநடைக்குள் ஊடாடவிட்டேன். நல்ல பாம்பின் உடல்போன்றது எனது உரைநடை. அதில் தொப்பையோ தொங்குசதையோ இல்லை. எனக்கு முன்னால் விரிந்துகிடந்த உலகும் அதில்நான் கண்டதும் கொண்டதுமான வாழ்வும் இந்தச் சிறுகதைகள் பலவற்றில் சூல்கொண்டுள்ளன.

ஒரு சிறுகதைக்கு உருவம் உடல் போன்றது எனில், அதன் உள்ளடக்கம்தான் உயிராகிறது. உருவத்தைக் கொடுப்பது படைப்பாளியின் திறம். உள்ளடக்கம் என்பதெல்லாம் சமூகம் கொடுத்த வரம்.

தன்னை மறந்த லயம்தன்னில் ஒரு படைப்பு உருவாகி ஒழுகும்பொழுது படைப்பாளியின் மொழியாண் மைக்கேற்பத் தன் சொற்களை அதுதானே கண்டடைந்துவிடுகிறது. உழுத புழுதியில் பொன் கிடந்தால் கலப்பை என்ன செய்யும் கலப்பை? நான் கலப்பை. மலையாள இலக்கியத்தின் விரிந்த மனநிலை தமிழ்ச் சமூகத்துக்குப் பெரிதும் கைவரவில்லை. “தகழி சிவசங்கரன்பிள்ளை – கேசவதேவ் போன்ற முன்னோடிகள் வாழ்வின் துடிப்பைத்தான் பிரதானப்படுத்தினார்களே தவிர, சொல்லழகு பார்க்கவில்லை. அதில் ஒரு கவிதா கானம் பாயவைத்து மெருகூட்டியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். வாசுதேவன் நாயரையும் தாண்டியவர் அடுத்த தலைமுறையின் மோகனன்” என்று மலையாளப் படைப்பாளி முகுந்தன் புதிய தலைமுறை, பழைய தலைமுறையைத் தாண்டுகிறது என்று ஒப்புக்கொள்வது மாதிரி தமிழ்நாட்டு விமர்சனப் பூசாரிகள் ஒப்புக்கொள்வதில்லை.

திராவிட இயக்கத்தின் இலக்கிய வெளியில் அறிஞர் அண்ணாவும், கலைஞரும் படைத்துக் காட்டியவற்றுள் சிறந்த சிறுகதைகளையும் திட்டமிட்டுப் புறந்தள்ளுவதை ‘விமர்சன மோசடி’என்றே கண்டிக்கிறேன். முதலில் நம் மனவெளிகள் விரிவானால் தமிழ் என்ற குறுவட்டம் தாண்டி எல்லா மொழிகளின் மீதும் தமிழ் இலக்கியம் பாயும். அதற்கான மதிநுட்பமும் தொழில்நுட்பமும் கனிந்திருக்கும் காலமாகவே இதை நான் கருதுகிறேன்.

நல்ல படைப்பாளிகள் அவர்களின் ஒரு சிறந்த கலைக்கூறு கருதியே கொண்டாடப்படுகிறார்கள்.

கதைகளின் இயல்பான வெளிப்பாட்டுக்காக ‘புஷ்கின்’, ஒரு கதையின் தொடக்கம், முடிவு இரண்டுக்குமான செய்திறனுக்காக ‘செக்காவ்’, வாழ்க்கையின் யதார்த்தம் போலவே வார்த்தையின் யதார்த்தத்துக்காக ‘மாக்சிம் கார்க்கி’கதையின் கடைசி வாக்கியத்தில் ஒட்டுமொத்தக் கதையையும் ஊற்றிவைக்கும் உத்திக்காக ‘ஓ ஹென்றி’கதைகளில் ஏற்படுத்திய கலாச்சார அதிர்ச்சிக் காக ‘மாப்பசான்’… என் கதைகளில் இப்படி ஏதேனும் உண்டா என்பதை அடுத்த நூற்றாண்டு அறிவிக்கக்கூடும்.

ஒரு படைப்பில் விதைத்ததெல்லாம் நாளைக்கே முளைக்கும் என்ற பேராசை நமக்கில்லை. ஆனால், காலவெளிகளில் இந்த விதைகள் என்றேனும் முளைக்காமற் போகா. அறமென்னும் பெரும்பொருளை அழியாமற் காக்கும் பெருங்கொண்ட வேலையை ஓரேர் உழவனைப் போல் பதறாமற் செய்துகொண்டேயிருக்கும் படைப்புக்கலை; அது விளைவுகள் பற்றிக் கவலையுறாது. “இருள் இருந்தால்தானே ஒளி. ஒளி வராமல் போய்விடுமா…? அதுவரை காத்திருக்க வேண்டியதுதான் எத்தனை காலமோ…? ஒளிவரும்போது நான் இருக்க வேண்டும் என்ற அவசியம் உண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்” புதுமைப்பித்தன் முன்மொழிந்ததை வைரமுத்து என்னும் நான் வழிமொழிகிறேன்!

(‘வைரமுத்து சிறுகதைகள்’ நூலில் வைரமுத்து எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி)

நன்றி: http://tamil.thehindu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *