கதைக்கு இரண்டு கால்கள் – பெ.தூரன்

 

கதைக்குக் காலில்லை என்று கூறுவார்கள். நான் இதை ஒப்புக்கொள்ளுவதில்லை. கதைக்கு நல்ல உறுதியான இரண்டு கால்கள் இருக்கவேண்டும். கவர்ச்சியான சம்பவம் அல்லது உணர்ச்சி, சொல்லும் திறமை ஆகிய இவ்விரு கால்களும் இல்லாமல் மக்களின் உள்ளத்திலே கதை நிலைத்து நிற்க முடியாது.

கதைக்கு வேறு இலக்கணங்கள் வேண்டாமா? நான் வேண்டாமென்று சொல்லவில்லை; நிச்சயமாக வேண்டும்; ஆனால் அவற்றை வரையறுக்கும்போதுதான் பல சங்கடங்கள் தோன்றுகின்றன.

சிறுகதை இலக்கணம்பற்றிய ஓர் ஆங்கில நூலைச் சமீபத் திலே நான் படித்துக்கொண்டிருந்தேன். அதிலே சிறுகதையின் இலக்கணத்தை ஆசிரிபர் மிக அழகாக வகுத்துக் கூறுகிறார். அவருக்குத் தெரிந்தது போல அவ்வளவு தெளிவாக வேறு யாருக் கும் சிறுகதையின் இலக்கணம் தெரியாதென்றே சொல்லிவிட லாம். கதையை எப்படி ஆரம்பிப்பது, படிப்பவரின் ஆர்வம் ஓங்கும் படி எப்படிச் சொல்லுவது, எப்படி முடிப்பது என்பன போன்ற கலைத் திறமைகளைப்பற்றி யெல்லாம் மிக நன்றாக விளக்கியிருக்கிறார். இருந்தாலும் அந்த ஆசிரியர் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லை. எப்பொழுதாவது சிறுகதை எழுத முயன்றாரோ என்று கூடத் தெரியாது. அப்படி எழுத முயன்றிருந்தாலும் அதில் வெற்றி பெற்றிருப்பாரோ என்பதும் சந்தேகந்தான். இலக்கணம் வகுப்பது ஒருவகைத் திறமை; சிறுகதை எழுதுவது மற்றொருவகைத் திறமை. இவ்வாறே மற்ற கலைகளைப் பற்றியும் கூறலாம்.

இன்னும் ஒரு விஷயம். பண்டிதர்களும், ரஸிகர்களும் கூடிப் பல சிறந்த சிறுகதைகளை ஆராய்ந்து சிறுகதைக்கு இலக்கணம் வகுப்பார்கள். அடுத்த நாளிலே புதிதாக ஒருவன் எங்கிருந்தோ தோன்றுவான். அவன் இவர்கள் வகுத்த இலக் கணத்திற்கு நேர்மாறான முறையிலே அற்புதமான ஒரு சிறுகதை உண்டாக்கி விடுவான். எல்லாக் கலைகளிலும் இவ்வாறு நேரிடுகிறது.

இதனாலேதான் இலக்கணத்தை முடிவாக வரையறுப்பதில் பல சங்கடங்கள் தோன்றுகின்றன என்று கூறினேன். இருந் தாலும் சிறந்த கலைஞர்களின் சிருஷ்டிகளை ஆய்ந்து இலக் கணத்தை அமைத்துக் கொண்டே செல்வது அவசியந்தான்.

சிறுகதையின் கண், காது, மூக்கு என்றிப்படிப்பட்ட உறுப் . புக்களின் இலக்கணத்தை அறுதியிட்டுக் கூறுவதிலே சங்கடங்கள் இருந்தாலும் அதன் கால்களைப்பற்றி நிச்சயமாகக் கூறிவிடலாம். அதனால் தான் கதைக்குக் காலில்லை என்ற பேச்சை நான் ஒப்புக் கொள்ளுவதில்லை.

வாழ்க்கையின் சில அம்சங்களைப்பற்றியே திருப்பித் திருப்பிக் கதை எழுதுகிறார்களென்று சிலர் குறைகூறுகிறார்கள். அப்படிப் புதிய துறைகள் வேண்டுமென்பவர்களுக்கு இந்தத் தொகுப்பிலே கிராம மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதைகள், விலங்குக் கதைகள், அடிமனக் கோளாறுகள் பற்றிய கதைகள் என்றிப்படிப் பல சிறுகதைகள் இருக்கின்றன.

மனம் என்பது நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான கொடை. அதன் அமைப்பை முற்றிலும் அறிந்து கொள்வது மிகவும் சிரமமென்றாலும் பொதுவாக அதை இரண்டு பாகங் களாகப் பிரிக்கலாம். மேலே உள்ள பாகம் சாதாரணமாக வாழ்க்கையிலே தொழில்படுவது. அதன் இயக்கத்தின்படியே நமது செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால் அதையும் பிடித்து ஆட்டிவைப்பது மனத்தின் மற்றொரு பாகமாகிய அடிமனம். அது மகா பொல்லாதது: அதன் கோளாறுகளை இன்று பல மனத் தத்துவர்கள் அறிந்து கூற முயன்று கொண்டிருக்கிறார்கள். அடி மனத்தின் சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு புதிய இலக்கியமும் மற்றக் கலைகளும் இன்று வளரத் தொடங்கியுள்ளன.

முகவுரை எழுதவந்த இடத்திலே இவற்றைப்பற்றியெல்லாம் விரித்துச் சொல்லி உங்களுடைய பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை. உண்மையில் இந்த முகவுரையை நீங்கள் படிக்க வேண்டியதே இல்லை. கதைகள் தாமாகவே பேசும்; பேச வேண்டும். அவற்றிற்கு முகவுரை எதற்கு? புதிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பல கதைகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும், உரிமைப் பெண்ணின் கதையைக் கூறுகிற அந்தக் கற்பனை எழுத்தாளன் சிறுகதை இலக்கணம் பற்றி எல்லோரையும் சிந்திக்கும்படி செய்கிறான் என்பதையும் குறிப்பாகக் காட்டவே இதை எழுதுகிறேன். ‘

பிள்ளைவரம் என்ற தலைப்புடன் எனது சிறுகதைத் தொகுதி ஒன்று முன்பு வெளிவந்துள்ளது. அதற்கு நல்ல பாராட்டும் ஆதரவும் கிடைத்ததால் உண்டான உற்சாகத்தோடு இத்தொகுதி யையும் வாசகர்களுக்கு அளிக்கிறேன். வணக்கம்,

சென்னை,
(28-3-52)
பெ.தூரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *