மகாகவி பாரதியார்

 

எழுத்துக்கலைபற்றி இவர்கள்…மகாகவி பாரதியார்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.

2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும், வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.

3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல், தனக்கும் அதிகம் பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும், சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.

4. சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடித்த வசனங்களையே எழுதுவது நன்று.

5. உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டி மாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.

6. வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமானது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை.

7. நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்தில் தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ்நடை எழுதும்.

தொகுத்தவர்: வே.சபாநாயகம்.
நன்றி: http://ninaivu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *