த.ஜெயகாந்தன்

 

எழுத்துக்கலைபற்றி இவர்கள்….த.ஜெயகாந்தன்

1. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனித வாழ்வின் பிரச்சினைகளே. சமுதாயத்தின் தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இண்டென்ஸ் ஸெல்·ப்பீலிங்) இல்லை என்பேன். ஆனால் எழுத்தாளனுக்கு இது இன்றியமையாதது. அவனுடைய படைப்புகளில் சமுதாய நோக்கமே முதலிடம் பெறவேண்டும். உருவம், உத்தி முதலிய நுணுக்கங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. சமுத்தாயத்தின் வாழ்க்கைமுறையினால், ஏற்றத்தாழ்வுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி எழுதுவது அவசியம் என்பேன்.

2. சும்மாவானும் ‘கிளி ‘கீகீ’ என்று கத்தியது, நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது, காற்று மந்தஹாசமாக வீசிக் கொண்டிருந்தது’ என்று எழுதிக் கதை பண்ணிக் கொண்டிருப்பதைவிட, எங்கெங்கே இதயங்கள் எப்படி எப்படியெல்லாம் பற்றிக் கொண்டு எரிகிறது என்று எடுத்துக் காட்டி, நமது சமூகத்தின் பெரிய பீடங்களை அச்சுறுத்தி எச்சரிக்கவேண்டுவது இக்கால இலக்கியத்தின் தவிர்க்கவொண்ணாத கடமையாகும்.

3. வாழ்க்கை என்பது காதல் மட்டுமே அல்ல; ஏனென்றால் இங்கு நம்மில் பலர் வாழவே இல்லை. காதலென்பது நமது இளைஞர்களைப் பொறுத்தவரை வெறும் மனப் பிரமைதான். சமூகத்தில் ‘வாழாதவர்களி’ன் வாழ்வுக்கு இலக்கியத்தில்கூட இடமே இல்லை. காதலித்தவர்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் காதலிக்க முடியாதவனைப் பற்றி யார் எழுதுவது? பூர்ண சந்திரனைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் அமாவாசை இருளில் அக்கம்பக்கத்தாருக்குத் தெரியாமல் சோரம்போகும் கைம்பெண்களைப் பற்றி யார் எழுதுவது?

4. கவிமனம் கொண்டவனுக்கு வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவிலும் கவிதை தென்படும். அதுபோலவே, நீண்ட நெடிய இவ்வாழ்க்கைக்காதை சிறுகதை மனம் கொண்டவனுக்கு கதைகதைகளாய்ப் பூத்துச் சொரியும். காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள்.

5. ஓர் ஒலி, ஒரு சொல், யாரோ யாரிடமோ எதற்கோ சொன்ன அசரீரி போன்றதொரு வாக்கு, வேகமாய்ப் போகிற ஒரு வாகனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிற போது, ஒரு நொடியில் கண்ணில் பட்டு மறைந்த காட்சி இவையாவும் ஒரு கவியின் உள்ளத்தில் பட்டுப் பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒரு வடிவமே நவீனகாலச் சிறுகதை ஆயிற்று; ஆகிவிடமுடியும்.

6. ஒரு நல்ல நோக்கமில்லாமல் எந்த நல்ல கலை வடிவமும் வர முடியாது. சிறுகதை எழுதவேண்டும் என்ற ஆசையினால் எழுதப்படுவது சிறுகதை ஆகாது. வடிவ அமைப்பில் அது சிறுகதை என்று என்னதான் எழுதுபவனாலும், பத்திரிக்காரனாலும் நிறுவப்படினும், அது திரும்பவும் படிக்கத்தக்க சிறப்புடைய சிறுகதை ஆகாது. ஏன்? அதில் ஒரு நன்னோக்கமில்லை. அதன் நோக்கமே அது அதுவாக இருப்பது என்று அமைந்துவிட்டால், அது செயல் திறனற்ற சிறுகதையின் சிதைந்த வடிவமாகவே எஞ்சி நிற்கும்.

7. ‘காட்டும் வையப் பொருள்களில் உண்மை கண்டு’ சேர்க்கும் சாத்திரம் சிறுகதை ஆகும்.இதில் கற்பனைக்கு இடமே இல்லை.

தொகுத்தவர்: வே.சபாநாயகம்.
நன்றி: http://ninaivu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)