தேவன்

 

எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்….தேவன்

1. எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். பேனாவைச் சற்று ஒதுக்குப் புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக் கொண்டு போவது சிரமம். பேனாவும் கனக்கும். அதைக் காகிதத்தில் ஓட்டுவது தேர் இழுக்கிறமாதிரி இருக்கும். படிக்கிற பேருக்கு உலுக்கு மரம் போடுகிறமாதிரி தோன்றும். பேனா ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், அப்போதுதான் எழுத்தாளனுக்கும் எளிது. வாசகனுக்கும் சுகம்.

2. எழுதுவது என்றால் ஒரு ஆவேசம் வேண்டி இருகிறதே! அப்படி வந்தால் தான் எழுத்து ஜீவனுடன் இருக்கிறது.

3. எழுத எழுதத்தான் மெருகு ஏறும். வார்த்தைப் பிரயொகம் சுபாவமாக வரும் உங்களிடம் எழுத்துக்கலைக்கு வேண்டிய விஷயம் இருக்கிறது. அதை சரியானபடி பயன் படுத்த வேண்டும். பேனாவுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

4 எழுதி எழுதித்தான் கை பண்பட வேண்டும். மனதில் அற்புதமான ‘ஐடியா’ உருவாகும். அதையே எழுத்தில் பார்க்கும்போது ஜீவன் இல்லாமல் போய்விடும்..மூளையும் கையும் ஒத்துழைக்க வேண்டும். பாஷை அனுகுணமாக வேலை செய்ய வேண்டும். மூன்றும் ஒத்துக் கொண்டால்தான் ‘மார்க்’ வாங்கலாம்.
எழுத்து என்பது சாமான்யம் இல்லை.

5. எழுதுவத் மிகவும் சிரமமான, சங்கடமான தொழில். ”அழகாக வார்த்தைகளைக் கோத்துக் கொடுத்து விட்டேனே!” என்றால் பிரயோசனமில்லை. எத்தனையோ பொறுமை, எத்தனையொ உழைப்பு, வாழ்க்கையை ஊன்றிக் கவனித்து ஏற்பட்ட
பக்குவம், பொது ஜனங்கள் எதை விரும்புவார்கள் என்ற சரியான ஊகம், எப்படி எழுதினால் சிறப்பாக அமையும் என்று கண்டு கொள்கிற ஞானம் – இத்தனையும் ஒரே ஆசாமியிடம் வேண்டும். இது ஒரு நாளில் வருகிற வித்தை இல்லை. பல வருஷங்கள் உழைத்தே இந்தத் தேர்ச்சியை அடைய முடியும்.

6. மனித சுபாவங்களில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பெரும்பாலானவை ஒரே திசையை நோக்குபவை. ஒரு சின்னக் காரியம் செய்து விட்டுப் பெரும் புகழைப்பெற விரும்புகிறவர்கள், அதைப்பற்றி அடிக்கடிப் பேசுகிறவர்கள், ஒரு சில இடங்களில் தலையைக் காட்டிவிட்டுப் புகைப் படத்திலும் புகுந்து கொள்பவர்கள், தன் அருமையை இன்னும் உலகம் கண்டு கௌரவிக்கவில்லை என்று நிரந்தரமாகக் குறைசொல்பவர்கள் – இந்த மாதிரி ரகங்களைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மைக் கட்சியை அலங்கரிப்பவர்கள். ஹாஸ்யமாக எழுதுவதற்கு இவர்கள் தருகிற விஷயம் வேறு யாருமே கொடுக்க மாட்டார்கள்.

7. எழுதுகிற கதை தமிழ்நாட்டுக் கதையாக இருக்க வேண்டும். கதைப் பாத்திரங் களைப் படிக்கும் போது ”எங்கேயோ பார்த்திருக்கிறோமே” என்று பிரமை தட்ட வேண்டும். அதுதான் எழுத்திலே காட்டும் ஜாலம்.

8. ஒரு மனிதனைக் கவனித்து, குணாதிசயங்களை உணர்ந்து, பேனா முனையில் அதைக் கொணர்ந்து பிறர் அந்த மனிதரை மனக்கண் முன் பார்க்கும்படி செய்வது எத்தனை கடினமான காரியம்! அதற்கு எத்தனையோ சாமர்த்தியம் வேண்டும். வார்த்தைக்கட்டு வேண்டும்.

9. எழுத்தாளன் கண்ணால் ஒன்றைக் கண்டுவிட்டு சும்மா இருந்து விடுவானா? தான் கண்ட அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லாவிட்டால் அப்புறம் என்ன எழுத்தாளன் என்று பெயர்?

10. வாசகர்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்களுக்கு யாரிடத்திலும் மனதில் எள்ளளவும் துவேஷம் கிடையாது. நன்றாக இருகிறதை உடனே தயங்காமல் குறைக்காமல் சொல்லுவார்கள். அதில் நம்பிக்கை யுடன் எழுதிவிட்டால் யாரும் அசைக்க முடியாது.

தொகுத்தவர்: வே.சபாநாயகம்.
நன்றி: http://ninaivu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)