தி.ஜ.ரங்கநாதன்

 

எழுத்துக்கலை பற்றி இவர்கள்….தி.ஜ.ரங்கநாதன்

1. எழுதுவது நீந்துகிறமாதிரி. தண்ணீர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். குதி. குதித்துவிடு.

2.கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கருப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச்சூடு இவை எல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறென்ன?

3. ஒரு கதையில் உள்ள ஓர் அம்சம் அதற்குப் பலமா, பலவீனமா என்று நிர்ணயிக்கச் சோதனை அதைப் படிப்பதில் உள்ள சுவாரஸ்யத்தின் அளவுதான்.

4. கதைகளையெல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம்.; மற்றது அமானுஷ்யக் கற்பனை. மேதைகள்தாம் சுவைக்குறைவு இல்லாத அமானுஷ்யக் கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றவர்களுக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்க¨ளைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்தப் போட்டோவுக்கு மெருகு கொடுத்திருக்கும். எங்களுக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால் அவற்றில் ‘மண்’ வாசனை வீசும்; சுகந்தமான வாசனைதான். அஜந்தா ஓவியங்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள், போட்டோப் படங்கள ¢ல் கலைச் சுவையைக் காண முடியாது என்று நினைப்பது சகஜம். மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு – தண்ணீர். அதில் வியப்பென்ன? போட்டோப் படங்களிலும் ஒருவிதக் கலைச் சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். எனவே, என் கதைகள் அத்தனையும் பெரும்பாலும், முழுவதுமோ அல்லது பெரும் பகுதியோ பிரத்தியட்ச நிகழ்ச்சிகள்.

5. கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப் படுத்தியும் விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள்; அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.

6. கலையிலே பிரச்சாரம் இருக்கலாமா கூடாதா? இதைப் பற்றி ஒரு பெரிய விவகாரம்! இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.; இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலை கலையாகவே இருப்பது மாத்திரம் அவசியம்.

7. நாம் எழுதும் கதை, கதையாயிருக்க வேண்டும்; அதாவது சுவாரஸ்யம் நிறைந்திருக்க வேண்டும். இப்படி எழுதப் படாததால்தான், அநேகம் கதைகளை, ஜனங்கள் ரசிக்காமல் தள்ளுகிறார்கள். கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க ரசமாக இருந்ததா என்ற ஒரே பரீட்சைதான், நல்ல கதைக்கு முக்கியமாகும். மற்ற லட்சணங்கள் எல்லாம், அதற்கு உதவுபவையே ஆகும்.

8. கதையின் ஒவ்வோர் அம்சமும், ஆரம்பம் நடு முடிவு ஒவ்வொர் அமைப்பும் , ஒவ்வொரு சொல்லும், கதையிந் சுவாரஸ்யத்துக்கு, திட்டத்துக்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்த பின், ‘பூ! இவ்வளவுதானா? இதை ஏன் படித்தோம்?’ என்ற உணர்ச்சி, படிப்பவருக்கு ஏற்படக் கூடாது. கதையின் முடிவு ஏமாற்றமாயிருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாயிருக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

தொகுத்தவர்: வே.சபாநாயகம்.
நன்றி: http://ninaivu.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *